4. நவீன ஐரோப்பா சமுதாயம் எவ்வாறு பிறந்தது?
தற்கால அறிவுக்கு எட்டியவரையில் பார்த்தால் மத்திய ஆசியாவும் அரேபியப் பாலைவனங்களுமே அசுரர்களின் முக்கிய இருப்பிடங்களாக இருந்த தாகத் தெரிகிறது. அவர்களின் சந்ததிகளாகிய இந்த இடையர்களும் வேட்டைக்காரர்களும் கூட்டங் கூட்டமாகச் சென்று நாகரீகமடைந்திருந்த தேவர்களைத் துரத்தி உலகெங்கும் சிதறடித்தார்கள்.
ஐரோப்பாவில் ஆதிவாசிகளாக ஒரு கூட்டத்தினர் இருந்தது உண்மை . அவர்கள் மலைக் குகைகளில் வசித்தார்கள். அவர்களுள் சற்று புத்திசாலிகள் தண்ணீரில் அதிக ஆழமில்லாத இடங்களில் கம்பங்களை நட்டு, அவற்றின்மீது மேடைகளை அமைத்து, குடிசை களைக் கட்டி வாழ்ந்தார்கள். நெருப்புக் கற்களால் செய்யப்பட்ட அம்பு, ஈட்டி, கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைச் செய்து வேண்டிய வேலைகளை முடித்துக்கொண்டனர்.
மெல்லமெல்ல ஆசிய இனங்கள் ஐரோப்பாவில் புகுந்தன. அங்கங்கே ஓரளவு நாகரீக சமுதாயங்கள் தோன்றின. ரஷ்யாவில் சில பகுதிகளிலுள்ள மொழி தென்னிந்திய மொழிகளைப்போல் உள்ளது.
ஆனால் இவர்கள் எல்லாமே காட்டுமிராண்டிகள். தனிக் காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்தார்கள். ஆசியாமைனரிலும் அருகிலுள்ள தீவுகளிலுமிருந்து நல்ல நாகரீகம் பெற்ற கூட்டத்தினர் தோன்றி, ஐரோப்பாவின் சுற்றுப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்தனர். தங்கள் புத்தியாலும், பண்டைய எகிப்தியர்களின் உதவியுடனும் அவர்கள் ஓர் அற்புத நாகரீகத்தை உருவாக்கினர். இவர்களே நம்மால் யவனர் என்றும், ஐரோப்பியர்களால் கிரேக்கர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
பின்னர் இத்தாலியில் நாகரீகமற்ற இனமான ரோமர்கள், நாகரீகம் மிக்க எட்ரஸ்கர்களை வென்று, அவர்களின் நாகரீகம், கல்வி இவற்றை ஏற்று பண்பாடு பெற்றனர். படிப்படியாக அவர்கள் நாலா பக்கங்களிலும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டினர். தென்மேற்கு ஐரோப்பாவிலுள்ள அநாகரீக இனங்களை யெல்லாம் தங்கள் குடிமக்களாக்கினர். வடபகுதிக் காடுகளில் வசித்த நாகரீகமற்ற இனங்கள் மட்டுமே சுதந்திரமாக இருந்தன.
நாளடைவில் ரோமர்கள் செல்வத்திலும் சுக போகங்களிலும் மூழ்கி வலிமை இழந்தனர். அப்போது மீண்டும் ஆசியா தன் அசுர சேனைகளை ஐரோப்பாவின்மீது ஏவியது. அசுரர்களின் தாக்குதல் களால் ஓடிய வட ஐரோப்பாவின் நாகரீகமற்ற இனத் தினர் ரோமப் பேரரசின்மீது பாய்ந்தனர்; ரோம் தகர்ந்து வீழ்ந்தது. ஆசியாவின் தாக்குதலின் காரணமாக, ஐரோப்பாவின் எஞ்சிய நாகரீகமற்ற கூட்டத்தினர், எஞ்சிய ரோமர் மற்றும் கிரேக்கர்களின் கலப்பினால் ஒரு புதிய இனம் உருவாயிற்று. இந்தக் காலத்தில் யூதர் களை ரோமர்கள் வென்றனர். யூதர்கள் ஐரோப்பா முழு வதிலும் சிதறடிக்கப்பட்டனர். அவர்களின் புதிய மதமாகிய கிறிஸ்தவ மதமும் அவர்களுடன் ஐரோப்பா முழுவதும் பரவியது. இப்படி பல்வேறு ஜாதி, மத, ஆசாரக் கோட்பாடுகளுடன் கூடிய இந்த அசுர இனங்கள் மகா மாயையின் அறியவொண்ணா சக்தியி னால், இரவும்பகலும் சண்டை , கொலை என்று அடித்துக் கொண்டு கலந்து ஒன்றாயினர். இந்தக் கலப்பிலிருந்து தற்கால ஐரோப்பிய இனம் தோன்றியது.
இவ்வாறு இந்துக்களின்கருமைநிறம்முதல்வடக்கே உள்ளவர்களின் பால்வெண்ணிறம் வரையிலுள்ள எல்லா நிறங்களுமுடைய, நாகரீகமற்ற ஐரோப்பியக் காட்டுமிராண்டி இனம் தோன்றலாயிற்று. இவர்களின் முடி கறுப்பு, பழுப்பு, சிவப்பு, வெண்மையாக இருந்தது. கண்கள் கறுப்பாக, சாம்பல் நிறமாக, நீல நிறமாக இருந்தது. இந்துக்களின் அழகிய முகம் அல்லது சீனர்களின் தட்டை முகம் இருந்தது; மூக்கு, கண்கள் இவையும் இந்துக்களையும் சீனர்களையும் ஒத்திருந்தன. இவர்கள் சில காலம் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்தனர். வடக்கிலிருந்து வந்தவர்கள், தங்களைவிட நாகரீகம் பெற்றவர்களைக் கொலை செய்வதும் கொள்ளையடிப்பதுமாக வாழ்க்கையை நடத்தினர். இதற்குள் கிறிஸ்தவ மதத்தின் இரு தலைவர்களான இத்தாலியின் போப்பும் (பிரெஞ்சு, இத்தாலி மொழிகளில் ‘பாப்’), மேற்கிலுள்ள கான்ஸ்டான்டிநோபிள் சபைத் தலைவரும் இந்தக் கொடிய அநாகரீக மனிதக் கூட்டங்கள் மீதும் அவர்களுடைய அரசர்கள், அரசிகள்மற்றும் மக்கள்மீதும் தங்கள் அதிகாரங்களைச் செலுத்த ஆரம்பித்தனர்.
மறுபக்கம், அரேபியப் பாலைவனங்களிலிருந்து முகமதிய மதம் எழுந்தது. காட்டு மிருகங்களை ஒத்தவர்களான அரேபியர் ஒரு பெரிய மகானின் உபதேசங்களால் எழுச்சிபெற்று, தடுக்க முடியாத வீரத்துடனும் ஆற்றலுடனும் உலகின்மீது பாய்ந்தனர். இந்தப் பெருவெள்ளம் எல்லாவற்றையும் அடித்துப் புரட்டிக் கொண்டு கிழக்கு, மேற்கு இரண்டு திசைகளிலிருந்தும் ஐரோப்பாவினுள் நுழைந்தது. இதனுடன் இந்தியா மற்றும் புராதன கிரீஸின் நாகரீகமும் கல்வியும் ஐரோப்பாவில் நுழைந்தன.
இது என்ன ஐரோப்பா? ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா கண்டங்களில் வாழ்கின்ற கறுப்பு, பழுப்பு, மஞ்சள், சிவப்பு நிற மக்கள் எல்லோரும் ஐரோப்பியர்களின் அடிபணிவதேன்? இந்தக்கலியுகத்தில் அவர்கள் ஏன் தனி ஆதிக்கம் செலுத்துகின்றனர்?
இந்த ஐரோப்பாவை அறிய வேண்டுமானால், அதன் மூலகாரணமான பிரான்சின் வழியாகவே முயல வேண்டும். உலகத்தை ஆள்வது ஐரோப்பா; இந்த ஐரோப்பாவின் மையம் பாரிஸ். மேலை நாகரிகம், பழக்கவழக்கங்கள், ஒளி, இருள், நன்மை , தீமை என்று எல்லாம் இங்குதான் முதிர்ந்து கனிகின்றன.
பண்டையகாலம் முதலே கௌல்கள், ரோமானி யர்கள், பிராங்குகள் போன்றோரின் போர்க்களமாக பிரான்ஸ் விளங்கி வருகிறது. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பிராங்குகள் ஐரோப்பாவை ஒரு குடையின்கீழ் ஆட்சி புரிந்தனர். அவர்களின் மன்னனாகிய சார்லிமன் வாளேந்தி கிறிஸ்தவ மதத்தை ஐரோப்பாவில் புகுத்தினான். பிராங்குகளால்தான் ஆசியா வில் ஐரோப்பா பிரபலமாகியது. அதனால்தான் இன்றும் நாம் ஐரோப்பியரைப் பரங்கி, பலங்கி, பிலிங்கா என்றெல்லாம் அழைக்கிறோம்.
மேலை நாகரீகத்தின் ஊற்றான புராதன கிரீஸ் மறைந்துவிட்டது. காட்டுமிராண்டிகளின் தொடர்ந்த படையெடுப்பால் ரோமப் பேரரசு சின்னாபின்னமாகிச் சிதறியது; ஐரோப்பாவின் ஒளி மறைந்தது. இந்த வேளையில்தான் இன்னொரு காட்டுமிராண்டி இனம் ஆசியாவில் உதித்தது. அவர்கள் அரேபியர். இந்த அரேபிய அலை விசித்திரமான வேகத்தில் உலகெங்கும் பரந்தது. சக்திவாய்ந்த பாரசீகம் அரேபியருக்கு அடிபணிந்து முகமதிய மதத்தை ஏற்க வேண்டியதாயிற்று. இதன் பயனாக முகமதிய மதம் ஒரு புதிய உருவெடுத் தது; அரேபிய மதமும் பாரசீக நாகரீகமும் கலந்தன.
அரேபியரின் வாளின் வழியாக பாரசீக நாகரீகம் எல்லா பக்கங்களிலும் பரவியது. புராதன கிரீசிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கடன் வாங்கியதுதான் அந்தப் பாரசீக நாகரீகம். கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் முகமதிய அலை ஐரோப்பாவின்மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தது; அது ஐரோப்பாவின் இருளையும் காட்டு மிராண்டித் தனத்தையும் அழித்து ஞானதீபத்தை ஏற்றியது. புராதன கிரீசின் அறிவு, கல்வி, கலைகள் எல்லாம் அநாகரீகம் மண்டிக்கிடந்த இத்தாலியில் புகுந்தன. உலகின் தலைநகரமாக விளங்கிய ரோமின் உயிரற்ற உடலில் ஒரு புத்துயிர் தோன்றியது. இந்தப் புத்துணர்ச்சி பிளாரன்ஸ் நகரில் ஒரு வலிமையான உருவெடுத்தது. பழைய இத்தாலி புத்துயிர் பெற் றெழுந்தது. இதுதான் புதிய பிறப்பு-Renaissance. இத்தாலிக்கு இது ஒரு மறு பிறவி; ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு இது முதற்பிறப்பாகும். இந்தியாவில் மொகலாய வல்லரசு நிலைத்து, அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் முதலிய சக்கரவர்த்திகள் ஆண்ட கி. பி. பதினாறாம் நூற்றாண்டில்தான் ஐரோப்பா பிறந்தது.
இத்தாலி ஒரு முதிய நாடு. மறுமலர்ச்சியின் குரல் கேட்டபோது சற்று முனகிவிட்டு, மீண்டும் புரண்டு படுத்து குறட்டைவிடத் தொடங்கிவிட்டது. பல காரணங்களால் அப்போது இந்தியாவும் சிறிது கிளர்ந்தெழுந்தது.
ஐரோப்பாவில் இத்தாலியின் புத்துணர்ச்சி அலை வன்மையுள்ள, இளமைத் துடிப்புடைய பிராங்க் நாட்டைத் தொட்டது. நாகரீகப் பிரவாகம் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து பிளாரன்சில் கலந்து ஒரு புதிய உருவம் எடுத்தது. ஆனால் அந்தப் புதிய மகா சக்தியை வைத்துக்கொள்ள இத்தாலியிடம் வலிமை யில்லை. ஐரோப்பாவின் நல்லவேளை, புதிய பிராங்க் மக்கள் மகிழ்ச்சியுடன் அந்தச் சக்தியை ஏற்றுக் கொள்ளா மலிருந்தால், இந்தியாவில் நிகழ்ந்ததுபோல் அந்தப் புத்துயிர் அங்கேயே மடிந்திருக்கும். புது ரத்தம் பாய்ந்த அந்தப் புதிய இனத்தினர் மிகவும் துணிச்சலுடன் தங்கள் படகை அந்தப் பிரவாகத்தில் மிதக்கவிட்டனர். அந்த ஒரு பிரவாகம் நூறாகப் பிரிந்து பெருகியது. ஐரோப்பாவின் பிற பகுதிகள் மிகுந்த ஆவலோடு பல கால்வாய்களை வெட்டி அவற்றின்மூலம் அந்தப் பிரவாகத்திலிருந்து தண்ணீரைத் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
இந்த பிரான்ஸ் சுதந்திரத்தின் தாயகம். பாரிசி லிருந்து புறப்பட்ட மக்கள் சக்தியின் மகாவேகம் ஐரோப்பாவையே அசைத்தது. அதிலிருந்து ஐரோப்பா ஒரு புதிய வடிவமே கொண்டுவிட்டது. பிறகு ‘ஏகாலிதே, லிபர்த்தே , ப்ரதேர்நிதே’ (Egalite, Liberte, Fraternite, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்) இவை போன்ற குரல்கள் பிரான்சிலிருந்து மறைந்தது. இப்போது அது அன்னிய சிந்தனைகளையும் லட்சியங் களையும் பின்பற்றுகிறது. ஆனால் ஐரோப்பாவின் மற்ற நாடுகளில் இன்னும் பிரெஞ்சுப் புரட்சியின் எதிரொலிதான் கேட்கிறது.