மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளின் சமுதாய நிலைகளில் வேறுபாடு
சமவெளிகளில், பெரிய பெரிய நதிகளின் கரையில், செழிப்புள்ள இடங்களில் கங்கை, யாங்சியாங், யூப்ரடிஸ் நதிகளின் கரைகளில்தான் ஜம்புத்வீபத்தின் அதாவது ஆசியாவின் நாகரீகம் முழுவதும் முதலில் உருவாயிற்று. இந்த நாகரீகங்களின் ஆரம்ப அடிப்படை விவசாயம். இவையெல்லாம் தேவகுணம் மிக்கவை. ஐரோப்பிய நாகரீகம் எல்லாம் பெரும்பாலும் மலைப்பாங்கான இடத்திலோ, கடற்கரையோரத்திலோ தொடங்கியது; கொள்ளையும் கப்பற்சூறையுமே அதன் அடிப்படை. இங்கே அசுரகுணம் மிஞ்சியுள்ளது.
தேவாசுரர்களைப் பற்றிய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். தேவர்கள் ஆத்திகர்கள்; ஆன்மா, கடவுள், மறுமை என்பவற்றில் நம்பிக்கை உடையவர்கள். அசுரர்களோ, ‘இந்த வாழ்வில் இந்த உலகத்தை நன்றாக அனுபவியுங்கள், உடல் சுகங்களை நாடுங்கள்’ என்றனர். தேவர்கள் சிறந்தவர்களா அசுரர்கள் சிறந்தவர்களா என்பதல்ல கேள்வி. புராணங்களைப் படிக்கும்போது அசுரர்கள்தான் மனிதர்களாகத் தெரிகின்றனர், தேவர்கள் பல விஷயங்களிலும் பலவீனர்களாகவே உள்ளார்கள். எனவே இப்போது உங்களை தேவ சந்ததியினராகவும், மேலைநாட்டினரை அசுர சந்ததியாகவும் கொண்டால் இரண்டு நாடுகளையும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.
ஐரோப்பாவில் அரசியல் கொள்கைகள் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றன.
பண்டைய இந்தியாவில் அறிவும் ஆன்மீகமும்தான் தேசிய வாழ்க்கையின் மையங்களாக இருந்தன; அரசியல் ஒருபோதும் மையமாக இருக்கவில்லை . இன்றுபோலவே அன்றும் அரசியல் சக்தியும் சமூக சக்தியும் அறிவு, மற்றும் ஆன்மீக சக்திகளுக்கு அடிபணிந்துதான் இருந்தன. ரிஷிகளும் ஆன்மீக ஆச்சாரியர்களும் இருந்த கல்விக்கூடங்களைச் சுற்றித்தான் தேசிய வாழ்க்கை ஒளி வீசிற்று. ஆகவே பாஞ்சாலர்கள், காசிவாசிகள், மிதிலாவாசிகள் இவர்களுடைய சமிதிகள் ஆன்மீகப் பண்பாட்டிற்கும் தத்துவத்திற்கும் மாபெரும் மையங்களாகத் திகழ்வதை உபநிடதங்களில்கூடப் பார்க்கிறோம். பிறகு இந்த மையங்கள் ஆரியர்களுள் பல பிரிவினர்களின் அரசியல் கேந்திரங்களாக மாறுவதைக் காண்கிறோம்.
வளர்ச்சியின் முதல் நிபந்தனை சுதந்திரம். நமது முன்னோர் ஆன்மீக விஷயங்களுக்கு எல்லா சுதந்திரமும் அளித்தனர், அதன் பயனாக மதம் வளர்ச்சி கண்டது. ஆனால் உடம்பை எல்லாவிதமான பந்தத்திற்கும் உள்ளாக்கி வைத்தார்கள், அதனால் சமூகம் வளராமல் போயிற்று. மேலைநாட்டில் இதற்கு நேர்மாறான நிலைமை இங்கு சமூகத்திற்குச் சகல சுதந்திரமும் உண்டு, மதத்திற்குச் சுதந்திரம் எதுவும் இல்லை . இன்று மேலைநாட்டில் மதத்திற்கும், அதேபோல் கீழை நாட்டில் சமூக அமைப்பிற்கும் உள்ள தளைகள் தளர்ந்து வீழ்ந்து வருகின்றன.
மேலும், மேலைநாடும் கீழைநாடும் தத்தம் போக்கைக் கொண்டுதான் இருக்கும். இந்தியாவின் லட்சியம் மத உணர்வு அல்லது அகநோக்கு. மேலைநாட்டின் லட்சியம் விஞ்ஞானப் போக்கு அல்லது புறநோக்கு. சமூக முன்னேற்றத்தின் மூலமாகவே ஒவ்வொரு துளி ஆன்மீகப் பண்பையும் பெற விரும்புகிறது மேலைநாடு. கீழைநாடோ, ஒவ்வொரு துளிச் சமூக ஆற்றலும் ஆன்மீகத்தின்மூலமாக வந்துசேர வேண்டுமென்று விரும்புகிறது.
மேலை நாட்டவராகிய நீங்கள் தனித்துவ உணர்வு உடையவர்கள்: இதைச் செய்ய விரும்புகிறேன், ஏனெனில் நான் விரும்புகிறேன். முழங்கையால் அனைவரையும் இடித்துத் தள்ளி முன்னேறுவேன், ஏன்? ஏனென்றால் அது என் விருப்பம். எனக்கு என் திருப்தியே முக்கியம். நான் இவளைத் திருமணம் செய்துகொள்வேன். ஏன்? ஏனெனில் நான் இவளை விரும்புகிறேன். அவள் என்னை மணம் செய்கிறாள். ஏன்? ஏனென்றால் அவள் என்னை விரும்புகிறாள். அத்துடன் முடிந்துவிடுகிறது. இந்தப் பரந்த எல்லை யற்ற உலகில் நானும் அவளும் இரண்டே பேர்தான் இருக்கிறோம். நான் அவளை மணக்கிறேன், அவள் என்னை மணக்கிறாள். இதில் வேறு யாருக்கும் துன்பமில்லை; வேறு யாருக்கும் பொறுப்பில்லை. ஆனால் உங்கள் ஜான்களும் ஜேன்களும் காட்டிற்குச் சென்று அப்படி விருப்பம்போல் வாழலாம். அவர்கள் சமுதாயத்தில் வாழும்போது, அவர்களுடைய திருமணம் எங்களுக்கு நன்மையையோ தீமையையோ தந்து பேரள விற்குப் பாதிக்கிறது. அவர்களுடைய குழந்தைகள் தீயவர் களாக, கொலையாளிகளாக, திருடர்களாக, கொள்ளைக் காரர்களாக, குடிகாரர்களாக, அசுரர்களாக இருக்கலாம்.
ஆகவே இந்திய சமுதாயத்தின் அடிப்படை என்ன? அதுதான் ஜாதிநியதி. நான் ஜாதிக்காகப் பிறக்கிறேன், ஜாதிக்காக வாழ்கிறேன்.
ஒரு ஜாதியில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த ஜாதிக் கட்டுப்பாடுகளின்படி நடக்க வேண்டும். இதை வேறு வார்த்தைகளில், அதாவது இன்றைய உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், மேலைநாட்டு மனிதன் தனிப்பட்ட மனிதனாகப் பிறக்கிறான், இந்துவோ சமுதாய மனிதனாகப் பிறக்கிறான். உங்கள் விருப்பப்படி நீங்கள் எந்தப் பெண்ணையும் மணக்கவோ, அல்லது ஒரு பெண் தான் விரும்புபவனை மணக்கவோ அனுமதித்தால் என்ன நடக்கும்?
அங்கவீனர்கள், கூனர்கள், வெறியர்கள், முட்டாள்கள் இவர்களுக்குத் திருமணமே கூடாது, கூடவே கூடாது என்கிறது சட்டம்.
‘நாங்கள் சமுதாயவாதிகள். ஒருவன் அல்லது ஒருத்தி யின் இன்பத்திற்காக நூறுபேரைத் துன்பத்தில் ஆழ்த்த நாங்கள் விரும்பவில்லை’ என்று இந்து கூறுகிறான்.
இந்து வழக்கப்படி, பழங்காலத்திலிருந்தே ஆரம்பக் கல்வி கிராம அமைப்பைச் சேர்ந்ததாக இருந்தது. அனாதி காலத்திலிருந்தே நிலம் தேசிய உடைமை ஆக்கப்பட்டிருந்தது-நீங்கள் சொல்வதுபோல், அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது. நிலத்தில் யாருக்கும் தனிப்பட்ட உரிமை கிடையாது. ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் குறிப்பிட்ட நிலத்தை வைத்திருப்பதால், இந்தியாவில் உள்நாட்டு வருமானம் நிலத்திலிருந்து வருகிறது. இந்த நிலத்தை ஐந்தோ, பத்தோ, இருபதோ, நூறோ குடும்பங்கள் கொண்ட ஒரு சமூகம் பொதுவாக வைத்திருக்கிறது. அந்த நிலம் அவர்களின் கீழ் இருக்கிறது. அவர்கள் அரசாங்கத்திற்கு வரி கொடுத்துவிட்டுத் தங்கள் செலவில் வைத்தியர், கிராம ஆசிரியர் முதலியவர்களை நியமிக்கிறார்கள்.
ஐரோப்பிய நாகரீகத்தை ஒரு துணிக்கு ஒப்பிட லாம். இவைதான் அதற்கு வேண்டிய சாமான்கள்: கடற்கரையோரத்திலுள்ள மிதமான சீதோஷ்ணம் நிலவுகின்ற மலைப் பிரதேசம் அதன் நெசவுத்தறி; போரை நாடுபவர்களும், வலிமைமிக்கவர்களுமான பலாக மக்களின் சேர்க்கையால் ஏற்பட்ட கலப்பினம் அதன் பஞ்சு; தற்காப்புக்காகவும், தன் மதத்தின் பாதுகாப்புக்காகவும் ஏற்பட்ட போர் அதன் நெசவுப் பாவு போர்வாள் கையிலேந்தியவன் பெரியவன், அதில்லாதவன் சுதந்திரமிழந்து, வாளேந்திய போர் வீரனின் நிழலில் வாழ வேண்டும். வியாபாரம் அதன் வடு; அதன் நாகரீகத்தின் உபாயம் போர்வாள்; அதன உதவி வீரம்; அதன் நோக்கம் இம்மையிலும் மறுமையிலும் சுகபோகம்.
மிகப் பரந்த நதிகள் நிறைந்த வெப்ப சமவெளிகள் தான் ஆரிய நாகரீகத்தின் நெசவுத்தறி. பழுத்த நாகரீக மக்கள், நாகரீகமக்கள், காட்டுமிராண்டிகள் இவர்களில் அனேகர் ஆரியர்கள் இவர்களே துணிக்கு வேண்டிய பருசு, வர்ணாசிரம தர்மமே அதன் நெசவுப்பாவு. இயற்கையின் போட்டி, சச்சரவு- இவற்றை ஜெயிப்பது அதன் ஊடு.