14. உலகிற்கு உதவி புரிதல்
மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்பதன் பொருள், பிறருக்கு நாம் உதவ வேண்டும், உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே. நாம் எதற்காக உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகத்திற்கு உதவுவதற்காக, ஆனால் உண்மையில் நமக்கே உதவுவதற்காக. நாம் எப்போதும் உலகத்திற்கு உதவ முயன்று கொண்டே இருக்க வேண்டும். அது ஒன்றே நமது மிகவுயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும். நாம் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால், உலகிற்கு நம் உதவி சிறிதுகூடத் தேவையில்லை என்பதைக் காணலாம். நீங்களோ நானோ வந்து உதவி செய்வோம் என்பதற்காக இந்த உலகம் படைக்கப்படவில்லை . ‘அழகிய இந்த உலகம் மிகவும் நல்லது. ஏனெனில் நாம் பிறருக்கு உதவி செய்வதற்கான நேரத்தை யும் வாய்ப்பையும் இது தருகிறது’ என்று ஒரு சொற்பொழிவில் படித்தேன். கேட்கும்போது உணர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் உலகத்திற்கு நம் உதவி தேவைப்படுகிறது என்று சொல்வது தெய்வ நிந்தனை ஆகாதா? உலகில் துயரம் மிகுந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. நாம் சென்று பிறருக்கு உதவி செய்வதே செய்யத்தக்கவற்றுள் சிறந்தது. எனினும் பிறருக்கு உதவுவது என்பது நமக்கே நாம் உதவிக் கொள்வதுதான் என்பதை இறுதியில் உணர்வோம்.
என்றாலும் நாம் நல்லதையே செய்ய வேண்டும். பிறருக்கு உதவுவது என்பது ஒரு பேறு என்ற எண்ணம் நமக்கு எப்போ தும் இருக்குமானால், நன்மை செய்வதற் கான ஆசை மிகவும் ஆற்றல் வாய்ந்த தூண்டு சக்தியாகிவிடும். ஐந்து காசுகளைக்கையில் எடுத்துக்கொண்டு, உயரமான மேடையில் நின்று கொண்டு, ‘பிச்சைக்காரா, இதோ’ என்று கூறாதீர்கள். அவன் இருந்ததால் தானே அவனுக்குத் தானம் செய்து, அதன் மூலம் உங்களுக்கு நீங்களே உதவ முடிந் தது என்று அவனிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக் கொள்பவனல்ல, கொடுப்பவனே பேறு பெற்றவன். உங்கள் தானத்திறத்தையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் நீங்கள் தூய்மையும் நிறைநிலையும் அடை வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி உடையவர்களாக இருங்கள்.
“நான்” என்று நீ உணர்கின்ற இந்த உடம்பைப் பிறர் சேவைக்காக ஈடுபடுத் தும்போது ”நான்” என்னும் நினைப்பை மறக்கிறோம். இறுதியில் உடம்பை நாமாகக் கருதாத நிலை வந்து விடும். நீ எவ்வளவு ஒருமைப்பாட்டுடன் பிறரது நன்மையை நாடுகிறாயோ, அவ்வளவிற்கு உன்னை நீ மறப்பாய். இவ்வாறு வேலை யால் படிப்படியாக உன் மனம் தூய்மை அடையும். அப்போது உன் ஆன்மாவே எல்லா உயிர்களிலும் எல்லா பொருட் களிலும் இருப்பதை உணர்வாய். இவ் வாறு பிறருக்கு நன்மை செய்வது உங்கள் ஆன்மாவை நீங்கள் உணர்வதற்கான ஒரு வழியாக அமைகிறது. எனவே செயல் புரிவதும் ஆன்மீகச் சாதனைகளுள் ஒன்று என்பதைத் தெரிந்து கொள். செயலின் லட்சியமும் ஆன்மாவின் வெளிப்பாடு தான்.
நீங்கள் ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து, அதற்குப் பிரதியாக எதையுமே, நன்றியைக்கூட, எதிர்பார்க் காமல் இருந்தீர்களானால் அவன் நன்றி மறந்தாலும் உங்களுக்குத் துன்பம் வராது. ஏனெனில் நீங்கள் எதையும் எதிர்பார்க்க வில்லை , பிரதிபலனாக எதையும் பெறும் உரிமை உங்களுக்கு உண்டென்று ஒரு போதும் நீங்கள் எண்ணவில்லை. அவன் எதைப் பெறுவதற்குத் தகுதி இருந்ததோ அதையே கொடுத்தீர்கள். அவனது வினைப் பயன் அதை அவனுக்குப் பெற்றுத் தந்தது, உங்கள் வினைப்பயன், உங்களை, அவ னிடம் அதைச் சேர்ப்பவர்கள் ஆக்கியது. அப்படியிருக்க, எதையோ கொடுத்து விட்டதாக நீங்கள் ஏன் பெருமை கொள்ள வேண்டும். பணம், மற்ற பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்லும் சுமைதூக்கி மட்டுமே நீங்கள். உலகம் தன் வினைப்பயன் மூலமே அவற்றைப் பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக் கிறது. இதில் நீங்கள் எப்படிப் பெருமை கொள்ள முடியும்? நீங்கள் உலகிற்குக் கொடுப்பதில் பெரிதாகச் சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.
எதையும் வேண்டாதீர்கள். பிரதியாக எதையும் விரும்பாதீர்கள். நீங்கள் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடுங்கள்; அது உங்களுக்கே திரும்பி வரும். ஆனால் அதைப்பற்றி இப்போது நினைக்க வேண்டாம். அது ஆயிரம் மடங்காகத் திரும்பிவரும். கவனத்தை அதன்மீது செலுத்தக் கூடாது. கொடுக்கும் திறன் உடையவர்களாக இருங்கள், கொடுங்கள், அத்துடன் அது முடியட்டும். முழு வாழ்க்கையுமே கொடுத்தல் மயம், நீங்கள் கொடுக்கும்படி இயற்கை வற்புறுத் தும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் முழுமனத்துடன் கொடுங்கள். இன்றோ நாளையோ நீங்கள் அனைத்தை யும் விடத்தான் வேண்டும். சேமிப்பதற் காக நீங்கள் வாழ்க்கையில் புகுந்தீர்கள், கைகளை இறுக மூடிக்கொண்டே எடுக்க விரும்புகிறீர்கள். ஆனால் இயற்கை உங்கள் தொண்டையைக் கையால் அழுத்தி, உங்கள் கைகளை விரியச் செய் கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டா லும் நீங்கள் கொடுத்தேயாக வேண்டும். ‘நான் கொடுக்க மாட்டேன்’ என்று நீங்கள் சொல்லும் அந்தக் கணமே அடி விழுகிறது; நீங்கள் காயம் அடைகிறீர்கள். காலப்போக்கில் எல்லாவற்றையும் விட்டு விடும்படி, கட்டாயப்படுத்தப் பெறாத மனிதன் யாரும் இல்லை. இந்த விதியை எதிர்த்துப் போராடும் அளவிற்கு ஒருவன் துயருறுகிறான். நாம் கொடுக்கத் துணி யாததால்தான், இயற்கையின் இந்த மேலான தேவைக்கு இணங்காததால்தான் துயரப்படுகிறோம். காடு அழிகிறது, ஆனால் அதற்குப் பதிலாக சூடு கிடைக் கிறது. கதிரவன் கடலிலிருந்து நீரை முகந்து கொள்வது, அதனை மழையாகத் திரும்ப அளிப்பதற்கே. கொள்வதற்கும் கொடுப் பதற்கும் ஆனதோர் எந்திரம் மட்டுமே நீங்கள். கொள்வது கொடுப்பதற்கே.
எனவே பிரதிபலனாக எதையும் வேண்டாதீர்கள். ஆனால் கொடுக்கும் அளவு பெருகப்பெருக வருவதும் அதிக மாகும். இந்த அறையிலிருந்து காற்றை வெளியேற்றும் அளவு விரைவாகுந் தோறும் வெளியே உள்ள காற்றால் நிரப்பப்படும். ஒரு துவாரமும் விடாமல் எல்லா கதவுகளையும் மூடினால் உள்ளே இருப்பது அப்படியே இருக்கும். ஆனால் வெளியேயுள்ளது ஒருபோதும் உள்ளே வராது. உள்ளேயிருப்பது தேங்கி நின்று, கெட்டுப்போய், நஞ்சு நிறைந்ததாகி விடும். ஆறு ஓயாமல் கடலிற்குள் பாய்ந்து கொண்டே இருக்கிறது, ஓயாமல் மீண்டும் நிரம்பிக்கொண்டும் உள்ளது. கடலில் புகுவதைத் தடை செய்யாதீர்கள். அப்படிச் செய்கின்ற அந்தக் கணமே மரணம் உங்களைப் பற்றிக்கொள்கிறது.
கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக் குக் கொடுக்கின்ற எல்லாமே பிறருக்குக் கொடுப்பதற்காகத்தான். நாம் இதை அடிக் கடி மறக்கிறோம். நமக்குக் கொடுக்கப் படும் பொருட்களின்மீது, ‘எனக்கு மட்டும் சொந்தம்’ என்ற முத்திரையை இடும் போது நம்முடைய அழிவுக்கு விதையை நாமே விதைக்கிறோம்.