13. முதலாளியைப் போல் வேலை செய்தல்
எஜமானனைப்போல் வேலை செய்ய வேண்டும், அடிமையைப் போல் அல்ல என்பதே இந்த உபதேசத்தின் சுருக்கம். இடைவிடாமல் வேலை செய். ஆனால் அடிமையைப்போல் வேலை செய்யாதே. மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை நீ பார்த்ததில்லையா? முற்றிலும் ஓய்ந்திருக்க யாராலும் முடிவதில்லை நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் அடிமைகளைப்போல் வேலை செய்கிறார் கள். பலன் துன்பம்தான். இவையெல்லாம் சுயநலம் சார்ந்த வேலை. சுதந்திரத்தின் மூலமாகச் செயல்புரி, அன்பின் வழியாக வேலை செய்!
‘அன்பு’ என்ற வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். சுதந்திரம் இல்லாதவரையில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையிடம் உண்மையான அன்பு இருக்க முடியாது. நீங்கள் ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, சங்கிலியில் கட்டி, உங்களுக்காக வேலை செய்யச் சொல்லுங்கள்; அவன் மாடு போல் வேலை செய்வான். ஆனால் அவனிடம் அன்பு இருக்காது. நாமும் உலகப் பொருட்களுக்காக அடிமைபோல் வேலை செய்தோமானால், நம்மிடம் அன்பு இருக்க முடியாது; நாம் செய்யும் வேலையும் உண்மையான வேலையா காது. உறவினர்களுக்காகவும் நண்பர் களுக்காகவும் செய்யப்படுகின்ற வேலை களும் சரி, நமக்காகவே செய்யப்படுகின்ற வேலையும் சரி, இது உண்மையே. சுய நலத்துடன் செய்யும் வேலை அடிமை வேலை. இதோ ஒரு சோதனை: அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வரும். அமைதியையும் ஆசிகளையும் விளைவாகக் கொண்டு வராத அன்புச் செயல்கள் எதுவுமே இல்லை.
சுதந்திர உணர்வுடனும் அன்புடனும் உழைக்கின்ற ஒருவன் பலனைப்பற்றிக் கவலைப்படவே மாட்டான். அடிமையோ சவுக்கடி வேண்டுகிறான்; சேவகன் கூலி கேட்கிறான். வாழ்க்கை முழுவதிலும் இப்படித்தான் நிகழ்கிறது.
பொது வாழ்வை எடுத்துக்கொள் ளுங்கள். சொற்பொழிவாற்றும் ஒருவன் கைதட்டலை வேண்டுகிறான்; சிறிது கூச்சலையும் குழப்பத்தையும் விரும்புகி றான். அவனை ஒரு மூலையில் உட்கார வைத்தால் அது அவனைக் கொல்வதற்கு ஒப்பாகிவிடும். அவனுக்கு இவை தேவை யாக உள்ளன. இது அடிமைத்தனம். இத்தகைய நிலையில் வேலைக்கு ஏதோ ஒரு பலனை விரும்புவது அவர்களின் இயல்பாகிவிடுகிறது.
அடுத்ததாக, தொழில் செய்து உயிர் வாழ்பவன். இவனுக்குச் சம்பளம் வேண் டும்; ‘நான் உழைப்பைக் கொடுக்கிறேன், நீ சம்பளத்தைக் கொடு’ என்னும் பேரம் இது.
‘வேலைக்காகவே நான் வேலை செய்கிறேன்’ என்று சொல்வது சுலபம்.
நாம் வேலை செய்ய வேண்டும். பொய்யான ஆசைகளால் அலைக்கழிக்கப் படுகின்ற சாதாரண மனித குலத்திற்கு செயல் என்பது பற்றி என்ன தெரியும்? உணர்ச்சிகளாலும் புலன்களாலும் ஆட்டி வைக்கப்படுகின்ற மனிதனுக்குச் செயல் என்பது பற்றி என்ன தெரியும்? சொந்த ஆசைகளால் தூண்டப்படாதவன்தான், சுயநலம் துளியும் இல்லாதவன்தான் செயல்புரிய முடியும். தனக்கென்று சுய நோக்கம் எதுவும் இல்லாதவன்தான் வேலை செய்ய முடியும். லாபம் கருதாதவன்தான் வேலை செய்ய முடியும்.