11. முழுப் பொறுப்பும் நமதே
நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மைச் செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது. இப் போதைய நமது நிலைக்கு முன்வினைப் பயன்களே காரணம் என்றால், எதிர் காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது இப்போதைய நமது செயல் களுக்கு ஏற்பவே அமையும் என்பதும் உறுதி. எனவே செயல்புரிவது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். நமக்கு வர வேண்டிய துன்பங்கள் மட்டுமே வருகின்றன. ஆணவத்தை விட்டு இதைத் தெரிந்து கொள்வோம். நமக்கென்றில்லாத எந்த அடியும் ஒருபோதும் நம்மைச் சேராது. நமக்கு நாமே செய்துகொள்கின்ற துன்பத் தைத் தவிர வேறு எந்தத் துன்பமும் நம்மை அணுகாது. இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உங்களையே ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு வந்த துன்பங்கள் எல்லாமே நீங்கள் அதற்காக உங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டதால்தான் வந்தது என்பதை அறிந்து கொள்வீர்கள். ஒரு பாதியை நீங்கள் செய்தீர்கள், புற உலகம் மறுபாதியைச் செய்தது இவ்வாறே துயரம் வந்தது.
இந்த ஆராய்ச்சியிலிருந்து ஒரு நம்பிக்கைக் கிரணமும் வருகிறது. ‘என்னால் புறவுலகை அடக்க முடியாது. ஆனால் என்னுள், எனக்கு அருகில் இருக் கின்ற எனது சொந்த உலகம் என் கட்டுப் பாட்டிற்கு உட்பட்டது. தோல்விக்கு இரண்டும் தேவையானால், என் துயரத் திற்கு இரண்டும் காரணமானால் என் பக்கத்திலிருந்து நான் ஒத்துழைக்க மாட்டேன். அப்போது துயரம் எப்படி வரும்? உண்மையிலேயே என்னை நான் அடக்கினால், துயரம் ஒருபோதும் வராது’ என்பதே அந்த நம்பிக்கை.
எல்லா பொறுப்பையும் நாமே சுமக்க நேர்வதால் நாம் சிறந்த முறையில், நம்முடைய எல்லா சக்தியையும் திரட்டி இயங்குகிறோம். நம்மை இவ்வளவு சிறப்பாகச் செயல்பட வைக்க வேறெந்தக் கருத்தாலும் முடியாது. உங்கள் எல்லோ ருக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். ஒரு சிறு குழந்தையை உங்கள் கையில் கொடுத் தால், நீங்கள் எப்படி நடந்து கொள் வீர்கள்? அந்தக் கண நேரத்திற்கு உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அந்த நேரத்திற்கு, சுயநலமற்றவர்களாக ஆகியே தீர வேண்டும். பொறுப்பு திணிக்கப் பட்டால் உங்கள் தீய எண்ணங்கள் எல்லாம் மறைந்துவிடும், உங்களுடைய குணம் முழுவதுமே மாறிவிடும். பொறுப்பு முழுவதும் நம் தலையில் விழும்போது நமது சிறந்த தன்மைக ளெல்லாம் வெளிப்படத் தொடங்கி விடும். இருட்டில் தடுமாறிக்கொண்டு நாம் தேடிச் செல்வதற்கு ஒருவர் இல்லாத போது, நாம் குற்றம் சாட்டுவதற்கு ஒரு சாத்தான் இல்லாத போது, நம்முடைய சுமைகளைச் சுமப்பதற்கு ஒரு சகுணக் கடவுள் இல்லாதபோது எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பாளியாக இருக்கும் அந்த நிலையில்தான், நாம் மிக உயர்ந்த, மிகச் சிறந்த நிலைக்கு உயரத் தொடங்குவோம். என்னுடைய விதிக்கு நானே காரண மாகிறேன். எனக்கு நன்மையை நானே தான் தேடிக் கொள்ள வேண்டும். எனக்குத் தீமை விளைவித்துக் கொள்பவனும் நானேதான்.
இந்த வாழ்க்கை ஒரு கடினமான உண்மை . அது வலிமை பெற்றதாக இருந் தாலும், அதன்மூலம் வழியைக் கண்டு பிடித்துத் தைரியமாகச் செல்லுங்கள். எதையும் பொருட்படுத்தாதீர்கள். ஆன்மா வலிமை வாய்ந்தது. சாதாரண தெய்வங் களின்மீது அது பொறுப்பைச் சுமத்துவ தில்லை. நம்முடைய அதிர்ஷ்டங்களுக்கு நாமே காரணம். நாமே நம்முடைய துன்பங்களுக்கும் காரணம். நமது நன்மை தீமைகளை நாமே உண்டாக்கிக் கொள் கிறோம். நாமே நம் கைகளால் கண்களை மறைத்துக்கொண்டு, ‘இருட்டாக இருக் கிறதே’ என்று கதறுகிறோம். கைகளை விலக்கிவிட்டு ஒளியைப் பாருங்கள். நீங்கள் ஏற்கனவே முழுமை பெற்றவர்கள், ஒளி பெற்றவர்கள்.
பிரச்சினைக்கு இது ஒன்றுதான் தீர்வு. அந்தோ , பிறர்மீது பழி போடுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக அவர்கள் துன்பப்படுபவர்களாக, நம்பிக்கை இழந்த வர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தவறுகளின் மூலமாகவே இந்தக் கஷ்டத்திற்கு உள்ளாகியிருக் கிறார்கள். ஆனால் பிறர்மீது பழி போடு கிறார்கள். இது அவர்களின் நிலைமையை மாற்றுவதில்லை, அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை . பிறர்மீது பழிபோட முயல்வது அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது. ஆகவே உங்கள் தவறுகளுக்குப் பிறரைப் பழி சொல்லா தீர்கள். சொந்தக் காலிலேயே நில்லுங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
‘நான் அனுபவிக்கும் இந்தத் துன்பத் திற்கு நானே காரணம். ஆகவே நானேதான் இதற்குப் பரிகாரமும் தேடிக் கொள்ள வேண்டும்’ என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நான் படைத்ததை நானே அழிக்க முடியும். மற்றவர்கள் படைத்ததை என்னால் அழிக்க முடியாது. ஆகவே எழுந் திருங்கள், உறுதியுடனும் தைரியத் துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோளிலேயே சுமந்து கொள்ளுங்கள். உங்கள் விதிக்கு நீங்களே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகின்ற வலிமையும் உதவியும் உங்களுள்ளேயே இருக்கின்றன. உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். போனது போகட்டும். எல்லையற்ற எதிர் காலம் உங்கள் முன்னே இருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு செய லும் அதற்கு ஏற்ற பலனை உண்டாக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். தீய செயல்களும் தீய எண்ணங்களும் புலிகளைப்போல் நம்மீது பாயத் தயாராக இருக்கின்றன. அதோடு கூடவே நல் எண்ணங்களும் நற்செயல் களும் பல்லாயிரக்கணக்கான தேவதூதர் களைப் போல் நம்மைக் காப்பாற்ற எப்போதும் தயாராக இருக்கின்றன.