கீதைபற்றிய கருத்துக்கள்
கீதை என்று அறியப்படுகின்ற நூல் மகாபாரதத்தில் உள்ளது. கீதையைச் சரியாகப் புரிந்துகொள்ள, பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, அது மகாபாரதத்தில் உள்ளதுதானா? அதாவது, அதை இயற்றியவர் வேத வியாசர் என்பது உண்மையா அல்லது அந்தப் பெரிய இதிகாசத்தினுள் அது திணிக்கப்பட்டதா? இரண்டாவது, கிருஷ்ணர் சரித்திர பூர்வமானவரா? மூன்றாவது, கீதையில் கூறப்பட்டுள்ளதுபோல் குருக்ஷேத்திரப் போர் உண்மையில் நடந்ததா? நான்காவது, அர்ஜுனனும் பிறரும் உண்மையிலேயே வரலாற்றுப் பாத்திரங் கள்தானா? இவற்றையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதன்முதலாக இத்தகைய ஆராய்ச்சிக்கான ஆதாரங் களைக் கவனிப்போம். வேத வியாசர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கின்றனர் என்பது நமக்குத் தெரியும். அவர்களுள் யார் உண்மையில் கீதையை இயற்றியது?–பாதராயண வியாசரா? துவைபாயன வியாசரா? ‘வியாசர்’ என்பது ஒரு பட்டப் பெயர் மட்டுமே. புதிதாக ஒரு புராணத்தை ஒருவர் எழுதினால், அவரை வியாசர் என்று அழைப்பது வழக்கம். அதேபோல்தான் விக்கிரமாதித்தன் என்பதும் ஒரு பொதுப் பெயராக இருந்திருக்கிறது.
மற்றொரு விஷயம் என்னவென்றால் ஆதிசங்கரர் மகத் தான தமது விளக்கவுரையை எழுதிப் பிரபலமாக ஆக்குவதற்கு முன் கீதை பொதுவாக மக்களுக்கு அதிகமாகத் தெரியாம லிருந்தது. அதற்கு நீண்ட காலத்திற்குமுன் போதாயனர் எழுதிய விளக்கவுரை ஒன்று வழக்கில் இருந்ததாகப் பலர் கூறுகின்றனர். இதை நிரூபிக்க முடியுமானால், கீதையின் பழமையையும் அது வியாசர் இயற்றியது என்பதையும் நிலைநாட்ட அது பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. வேதாந்த சூத்திரங்களுக்குப் போதாயனரின் விளக்கவுரையைப் பின்பற்றி ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் எழுதியிருக்கிறார். போதாயனரின் விரிவுரையைப் பற்றி சங்கரரும் தமது விளக்கவுரையில் இங்குமங்கும் குறிப்பிட்டு, அதிலிருந்து மேற்கோள்களும் காட்டுகிறார். அதைப்பற்றி சுவாமி தயானந்தர் பெரிதும் ஆராய்ச்சி செய் கிறார். ஆனால் இந்தியா முழுவதும் யாத்திரை செய்ததில், ஓரிடத்தில்கூட அந்த நூலின் ஒரு பிரதியை என்னால் காண முடியவில்லை . ராமானுஜரும், அவருக்குக் கிடைத்த ஒரு செல்லரித்த சுவடியிலிருந்துதான் தமது விளக்கவுரையைத் தொகுத்ததாகச் சொல்லப்படுகிறது. வேதாந்த சூத்திரத் திற்குப் போதாயனர் எழுதிய மகத்தான விளக்கவுரையே இவ்வளவு சந்தேக இருளால் மூடப்பட்டிருக்கும்போது, அவரது கீதை விளக்கவுரையைப்பற்றித் தீர்மானிக்க முயல்வது வீண் வேலை. சங்கரரே கீதையை இயற்றியவர் என்றும், அவரே அதை மகாபாரதத்தில் திணித்தார் என்றும் கூறுபவர்கள் உண்டு .
இரண்டாவது விஷயத்தைக் கவனிக்கும்போது, கிருஷ்ணரின் வரலாற்றைப்பற்றி மிகுந்த சந்தேகம் இருக்கிறது. சாந்தோக்கிய உபநிடதத்தில் ஓரிடத்தில் கோரர் என்ற யோகி யிடமிருந்து தேவகியின் மகனான கிருஷ்ணர் ஞானோப தேசம் பெற்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் அவர் துவாரகை மன்னன். விஷ்ணுபுராணத்தில் அவர் கோபி யருடன் விளையாடியது சித்தரிக்கப்படுவதைக் காண்கிறோம். பாகவதத்தில் ராசலீலை விரிவாக வர்ணிக்கப்படுகிறது. புராதன காலத்தில் நமது நாட்டில் மன்மத விழா என்ற விழா நடைமுறை யிலிருந்தது. அதுவே கிருஷ்ணருடன் இணைக்கப்பட்டு டோல் பண்டிகை ஆயிற்று. அவரைப்பற்றிக் கூறப்படும் ராசலீலையும் மற்றவையும் அவ்வாறே அவர்மேல் திணிக்கப்பட்டவை அல்ல என்று யார் துணிந்து கூற முடியும்?
வரலாற்று ஆராய்ச்சியின்மூலம் உண்மைகளைக் கண்டு பிடிக்கும் போக்கு பண்டைக் காலத்தில் நமது நாட்டில் மிகக் குறைவாக இருந்தது. ஆகையால் யார் வேண்டுமானாலும், தாம் எது சிறந்ததென்று கருதினாலும், தகுந்த உண்மையோ ஆதாரமோ காட்டாமலேயே அதைக் கூறிவிடலாம். இன் னொன்று: பண்டைக் காலங்களில் மனிதர்களிடம் பெயர் புகழில் ஆசை குறைவாக இருந்தது. எனவே ஒருவர் ஒரு நூலை எழுதி, அதைத் தன் குருவின் பெயரிலோ வேறொருவர் பெயரிலோ வெளியிடுவது அடிக்கடி நிகழ்ந்து வந்தது. அந்த நிலையில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உண்மையைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
பண்டைக் காலங்களில் மக்களுக்குப் புவியியல் அறிவு இருக்கவில்லை, ஆனால் கற்பனை கட்டவிழ்த்து விடப்பட் டிருந்தது. அதனால்தான் இனிப்புக் கடல், பாற்கடல், நெய்க் கடல், தயிர்க்கடல் என்றெல்லாம் அற்புதக் கற்பனைகளை நாம் காண்கிறோம். ஒருவன் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்வதை யும் இன்னொருவன் நூறாயிரம் ஆண்டுகள் வாழ்வதையும் புராணங்களில் நாம் காண முடியும். ஆனால் வேதங்கள் ‘சதா யுர்வை புருஷ:–மனிதன் நூறாண்டு வாழ்பவன்’ என்றே கூறு கின்றன. எதைப் பின்பற்றுவது? ஆகவே கிருஷ்ணரைப் பற்றிச் சரியான முடிவை அடைவது பெரும்பாலும் இயலாத காரியம்.
பெரிய மனிதர் ஒருவரின் உண்மையான இயல்பைச் சுற்றிப் பலவகைப்பட்ட அமானுஷ்யமான கற்பனைகளைப் புனைவது மனித இயற்கை. கிருஷ்ணரைப் பற்றியும் அதுதான் நிகழ்ந் திருக்க வேண்டும். அவர் ஓர் அரசராக இருந்திருப்பார் என்பது மட்டும் பொருத்தமாகத் தோன்றுகிறது. பொருத்தம் என் கிறேன், ஏனென்றால், பண்டைக் காலத்தில் நமது நாட்டில், பிரம்ம ஞானத்தைப் பரப்புவதில் அரசர்களே முக்கிய இடம் வகித்தனர்.
இன்னொரு கருத்தையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். கீதையை இயற்றியவர் யாராக இருந்தாலும், அதி லுள்ள படிப்பினைகள் மகாபாரதம் முழுவதிலும் உள்ள படிப் பினைகளைப் போலவே இருக்கிறது. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாக ஊகிக்கலாம்- மகாபாரத காலத்தில் ஒரு மகான் தோன்றி, அந்தக் காலச் சமுதாயத்திற்காக, பிரம்ம ஞானத்தை இந்தப் புதிய வடிவத்தில் உபதேசித்தார்.
மற்றொரு கருத்தும் நம் முன் வருகிறது: அதாவது, பண் டைய நாட்களில் புதிய இனப் பிரிவுகள் தோன்றியபோது அவர்களிடையே ஒன்றன்பின் ஒன்றாகப் புதிய மத நூல்களும் தோன்றலாயின. நாளடைவில் அந்த இனங்களும் மத நூல்களும் அழிந்து போயின; சிலவேளைகளில் இனம் அழிந்துபோய், மத நூல் எஞ்சி நின்றது. அவ்வாறு கீதையும் ஒரு பிரிவி னரின் மத நூலாக இருந்திருக்கலாம். இப்படிக் கூறுவதும் பொருத்தமே. அவர்கள் உயர்ந்ததும் சிறந்ததுமான தங்கள் எண்ணங்களை இந்தப் புனித நூலில் சேமித்து வைத்திருக்கக் கூடும்.
இனி, மூன்றாவது விஷயமாகிய குருக்ஷேத்திரப் போரைக் கவனிப்போம். போருக்கான ஆதாரமாக, சிறப்பான எந்த நிரூபணமும் கிடைக்கவில்லை. ஆனால் குரு நாட்டினருக்கும் பாஞ்சால நாட்டினருக்கும் இடையே ஒரு போர் நிகழ்ந்தது என்பதில் ஐயமில்லை .
இன்னும் ஒரு விஷயம்: போர்க்களத்தில் இரு பெரும் சேனைகள் அணிவகுத்து, போர் தொடங்க ஆயத்தமாகி, கடைசி உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தநிலையில் ஞானம், பக்தி, யோகம் பற்றிய அவ்வளவு பெரிய உரையாடல் எப்படி நிகழ்ந்திருக்க முடியும்? போரின் அந்த அமளி துமளி யில், கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் ஒவ்வொரு சொல்லையும் எழுதி வைத்துக் கொள்ள அங்குச் சுருக்கெழுத்தாளர் யாராவது இருந்தாரா?
இந்தக் குருக்ஷேத்திரப் போர் என்பது ஓர் உருவகக் கதை என்பது சிலருடைய கருத்து. அதாவது, மனிதனின் உள்ளே நல்ல மற்றும் தீய இயல்புகளுக்கு இடையில் இடைவிடாமல் நிகழும் போரையே இந்தப் போர் குறிக்கிறது என்பதுதான் குருக்ஷேத்திரப் போருடைய உட்கருத்தின் மொத்தமாகும். இந்தக் கருத்து அறிவுபூர்வமானதே.
நான்காவதாக, அர்ஜுனனும் மற்றவர்களும் வரலாற்றுப் பாத்திரங்களா என்பதில் போதிய அளவு சந்தேகத்திற்கு இடமிருக்கிறது. ‘சதபத ப்ராஹ்மணம்’ என்பது புராதன நூல். அதில் ஓரிடத்தில் அசுவமேத யாகம் செய்த எல்லோருடைய பெயர்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதில் அர்ஜுனனின் பேரனும் பரீட்சித்துவின் மைந்தனுமான ஜனமேஜயனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த போதிலும், அர்ஜுனனைப் பற்றியோ பிறரைப் பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை. என்றாலும், மகாபாரதத்திலும் மற்ற நூல்களிலும் யுதிஷ்டிரரும் அர்ஜுன னும் பிறரும் அசுவமேத யாகம் செய்தார்கள் என்பது கூறப் பட்டுள்ளது.
இங்கு ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இந்த வரலாற்று ஆராய்ச்சிக்கும் நமது உண்மையான நோக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நமது நோக்கம் தர்மத்திற்கு வழிகாட்டும் ஞானம். இந்த நூல்கள் வரலாற்று ஆதாரம் சிறிதும் இல்லாதவை என்று இன்று நிரூபிக்கப் பட்டாலும், அதனால் நாம் சிறிதுகூட எதையும் இழக்க மாட் டோம். அப்படியானால், இவ்வளவு வரலாற்று ஆராய்ச்சியால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். பயன் உண்டு. எப்படி யென்றால், நாம் உண்மையைக் கண்டுபிடித்தாக வேண்டும்; அறியாமையால் ஏற்பட்ட தவறான கருத்துக்களில் கட்டுண் டிருப்பது நமக்குத் தகாது. இந்த நாட்டில் அத்தகைய ஆராய்ச்சி களை மக்கள் மதிப்பதில்லை. பலருக்குப் பயன்படக்கூடிய ஒரு நல்ல செய்தியைப் போதிக்க உதவக் கூடியதாயிருந்தால், ஒரு பொய் சொல்வதில் தவறில்லை என்று பல பிரிவினர் கருது கின்றனர். வேறுவிதமாகச் சொல்வதானால், நோக்கம் நல்லதாக இருக்குமானால் வழி எதுவாக இருந்தாலும் அது நியாயமே என்பது அவர்கள் கருத்து. அதனால்தான் நம் தந்திர நூல்கள் பல ‘சிவபெருமான் பார்வதி தேவிக்குச் சொன்னது’ என்று தொடங்குகின்றன. ஆனால் உண்மை இன்னதென்பதைத் தெளி வாக உணர்ந்திருக்க வேண்டுவது, உண்மையை மட்டுமே நம்ப வேண்டுவது நமது கடமை. மூட நம்பிக்கைகள் மனிதர்களைத் தளையில் பிணைக்கின்ற ஆற்றல் உள்ளவை. ஏசுவும் முகமதும் மற்ற மகான்களும்கூட அத்தகைய பல மூட நம்பிக்கைகளை நம்பினர், அவற்றை உதறித் தள்ள முடியாமலிருந்தனர். நீங்கள் உங்கள் பார்வையை எப்போதும் உண்மையின்மீதே நிலையாக வைத்து, மூட நம்பிக்கைகளை முற்றிலுமாக விலக்கிவிடுங்கள்.
இனி, கீதையில் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம். அடந்த பெருங்காட்டில் சென்றுகொண்டிருக்கின்ற யாத்திரி கர்கள், சில இடங்களில் இலைகளும் முட்களும் வேர்களும் பின்னிக்கிடக்க, அவற்றுக்கிடையில் அழகிய ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குவதை எதேச்சையாகக் காண்கிறார்கள். அது போலவே நாம் உபநிடதங்களைப் படிக்கும்போதும், பொருத்த மற்ற பல விஷயங்களைப் பற்றிய விவாதங்களுக்கு இடையில் திடீரென ஒரு பெரிய உண்மையைப் பற்றிய பேச்சு தொடங்கு வதைக் காணலாம். அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கீதை ஓர் அழகிய மலர்மாலையைப் போலவோ, சிறந்த மலர் களாலான செண்டைப் போலவோ விளங்குகிறது என்று கூற லாம். உண்மைகள் அவ்வளவு அழகு மிளிர அங்கே தொடுத்து வைக்கப்பட்டுள்ளன. சிரத்தையைப்பற்றி உபநிடதங்கள் விரி வாகப் பல இடங்களில் கூறுகின்றன. பக்தியைப்பற்றி அதிக மாகக் கூறவில்லை . கீதையில் இதற்கு மாறாக, பக்தி மீண்டும் மீண்டும் விளக்கப்படுவது மட்டுமின்றி, பக்தியுணர்வு அங்கு உச்ச நிலையையும் எய்தியுள்ளது.
இப்போது கீதையில் விளக்கப்படும் சில முக்கியமான கருத்துக்களைக் கவனிப்போம். கீதையை அதற்கு முன்புள்ள சாஸ்திரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற தனித் தன்மை எது? அது இதுதான்: கீதை தோன்றுவதற்கு முன் யோகம், ஞானம், பக்தி முதலியவற்றுள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டு தங்கள் நெறியே சிறந்ததெனக் கூறிவந்தனர். இந்தப் பல்வேறு நெறிகளைச் சமரசப்படுத்த யாரும் முயலவில்லை . முதன் முதலாக இவற்றைச் சமரசப்படுத்த முயன்றவர் கீதாச்சாரியரே. அந்தக் காலத்திலிருந்த ஒவ்வொரு நெறியிலிருந்தும் அவற்றின் சிறந்த பகுதிகளை எடுத்து கீதையில் அவர் தொடுத்தார். எனினும் ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்ட அந்த நெறிகளுக்குள் ஒரு முழுமையான சமரசத்தைக் கொண்டுவர கிருஷ்ணரால் முடியவில்லை. அதனை இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் முற்றிலுமாக நிறைவேற்றினார்.
அடுத்ததாக, நிஷ்காம கர்மம் அல்லது பயன் கருதாப் பணி. தற்காலத்தில் இதனை எத்தனையோ விதங்களில் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். பற்றின்மை என்றால் குறிக் கோளின்மை என்று சிலர் கருதுகின்றனர். இதுதான் அதன் பொருளானால் இதயமற்ற விலங்குகளும் சுவர்களும்தான் நிஷ்காம கர்மத்தின் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழும். வேறு பலர் ஜனகரை எடுத்துக்காட்டாகக் கூறி, தங்களையும் அவரைப்போல் நிஷ்காம கர்ம வீரர்களாக ஏற்க வேண்டுமென விரும்புகின்றனர். ஜனகர் பல குழந்தைகளைப் பெற்று அந்த நிலையை அடையவில்லை; இவர்களோ பல குழந்தைகளைப் பெறும் தகுதியை மட்டுமே கொண்டு ஜனகர்களாகிவிட விரும்புகிறார்கள். உண்மையான நிஷ்காம கர்மம் செய்பவன் விலங்கைப் போலவோ, ஜடத்தைப் போலவோ, உள்ளத்தில் ஈரமில்லாமலோ திகழ மாட்டான். அவன் தமோ குணம் படைத்தவன் அல்ல, சுத்த சத்வ குணம் படைத்தவன். உல கனைத்தையும் தழுவும் அன்பும் கருணையும் அவனது இதயத் தில் நிரம்பியுள்ளது. அந்த அன்பையும் கருணையையும் பொது வாக உலகத்தால் எளிதில் அறிய முடிவதில்லை .
தர்மத்தின் பல்வேறு வழிகளைச் சமரசப்படுத்துவதும், பற்றின்றிப் பணிபுரிவதுமாகிய இந்த இரண்டுமே கீதையின் முக்கியப் பண்புகள்:
இப்போது இரண்டாவது அத்தியாயத்தில் சிறிது வாசிப் போம்
ஸஞ்ஜய உவாச ||
தம் ததா க்ருபயாவிஷ்டம் அச்ருபூர்ணா குலேக்ஷணம் |
விஷீதந்த மிதம் வாக்யம் உவாச மதுஸூதன: || 1 ||
ஸ்ரீபகவானுவாச ||
குதஸ்த்வா கச்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம் |
அனார்யஜுஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்த்திகரம் அர்ஜுன || 2 ||
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்வய்யுப் பத்யதே |
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப் || 3 ||
ஸஞ்ஜயர் கூறியது:
அவ்வாறு இரக்கத்தாலும் துயரத்தாலும் மனம் கரைந்த வனும் கண்ணீரால் மறைந்த பார்வை உடையவனுமான அர்ஜுனனை நோக்கி இந்த வார்த்தைகளை மதுசூதனர் கூறினார்-
ஸ்ரீபகவான் கூறியது:
ஓ அர்ஜுனா, சிக்கலான இந்த நிலையில், மேன்மக்க ளுக்குப் பொருந்தாததும், இழிவானதும் விண்ணக வழியை அடைப்பதுமாகிய மனத்தளர்ச்சி உன்னை எங்கிருந்து வந்து அடைந்தது?
எதிரிகளை எரிப்பவனே! குந்தி மைந்தனே, பேடித்தனத் திற்கு இடம் கொடுக்காதே. இது உனக்குச் சிறிதும் பொருந் தாது. அற்பமான மனத் தளர்ச்சியை ஒழித்து எழுந்திரு.
‘தம் ததா க்ருபயாவிஷ்டம்’ எனத் தொடங்கும் சுலோகங் களில், அர்ஜுனனின் உண்மையான நிலை கவிதைநயத்துடன் எவ்வளவு அழகாக சித்தரிக்கப்படுகிறது!
பிறகு கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அறிவுரை வழங்குகிறார். ‘க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த’ போன்ற சொற்களில் அவர் ஏன் அர்ஜுனனைப் போரில் ஏவுகிறார்? அர்ஜுனன் போர் செய்ய விரும்பாதது சத்வ குணத்தின் மேலீட்டால் அல்ல,
தமோ குணம்தான் அவனைத் தடுத்தது. சத்வ குணம் படைத்த மனிதன் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் அது சாதகமானதாலும் சரி, பாதகமானதாலும் சரி–ஒரேபோல் அமைதியாக இருப்பான். அர்ஜுனன் பயப்பட்டான், இரக்கத்தால் தன்னிலை மறந்தான். போர்புரியும் இயல்பும் விருப்பமும் அவனுக்கு இருந்தன என்பது தெளிவு. ஏனெனில் அவன் போர்க்களத்திற்கு அந்த ஒரே நோக்கத்துடன்தான் வந்தான். ப
நமது வாழ்க்கையிலும் இத்தகைய நேரங்கள் அவ்வப் போது வருவதுண்டு. பலர் தங்களை சத்வ குணம் படைத் தவர்கள் என எண்ணிக் கொள்கின்றனர். உண்மையில் அவர்கள் தமோ குணம் மிக்கவர்களாக இருப்பார்கள். தூய்மையற்ற வாழ்க்கை வாழும் பலர், தங்களைப் பரமஹம்சர்களாக எண்ணிக் கொள்கின்றனர். ஏன்? பரமஹம்சர்கள் ஜடத்தைப் போல், பித்தனைப்போல், பேயைப்போல் இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே!
பரமஹம்சரை ஒரு குழந்தைக்கு ஒப்பிடுவார்கள். இப்படி ஒப்பிடுவதில் ஒரு பக்கம்தான் சரி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பரமஹம்சரும் குழந்தையும் சிறிதும் மாறுபாடில் லாமல் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. இருவரும் இரண்டு எல்லைகளில் இருப்பதால் பார்வைக்கு ஒரேபோல் தோன்று கிறார்கள். ஒருவர் ஞானத்தைக் கடந்த நிலைக்குச் சென்றுவிட் டார்; மற்றவருக்கோ ஞானம் என்பது அரும்பவேயில்லை. அதி வேகமான அதிர்வுகொண்ட ஒளியை நாம் காண முடி யாது; அதுபோலவே மிகக் குறைந்த அதிர்வுகொண்ட ஒளியும் நம் கண்களுக்குப் புலனாகாது. ஒன்றில் அதி உச்சநிலையி லுள்ள அதிர்வு, மற்றதிலோ அதிர்வே இல்லை என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்டவைதான் சத்வ மற்றும் தமோ குணங்கள். சில விஷயங்களில் அவை ஒன்றுபோல் தோன்றுகின்றன. ஆனால் அவற்றின் இடையே மலையளவு வேற்றுமை உள்ளது. சத்வ குணத்தைப்போல் வேடம் புனைய தமோ குணத்திற்கு விருப்பம் அதிகம். இங்கே, சிறந்த போர் வீரனான அர்ஜுனனிடம் அது தயை (இரக்கம்) என்னும் வேடத்தில் வந்துள்ளது.
அர்ஜுனனிடம் எழுந்த இந்த மனமயக்கத்தை அகற்ற பகவான் என்ன அறிவுரை வழங்கினார்? ஒருவனைப் பாவி என்று சொல்லி இழிவுபடுத்தாமல் அவனிடமுள்ள எல்லாம் வல்லதான ஆற்றலை அவனுக்கு நினைவூட்ட வேண்டும் என்று நான் எப்போதும் சொல்லி வந்துள்ளதுபோல், பகவானும் அர்ஜுனனிடம் சொல்கிறார்; ‘நைதத் த்வய்யுப்பத்யதே-இது உனக்குத் தகாது’; ‘அழிவற்ற ஆன்மா நீ’, ‘நீ தீமைகளைக் கடந் தவன். உண்மை இயல்பை மறந்து, உன்னைப் பாவியென எண்ணி, உடல்நோயாலும் மனநோயாலும் உன்னை இப்படிச் செய்துகொண்டுள்ளாய். இது உனக்குத் தகாது’ என்கிறார். ‘க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த-பிருதையின் மகனே, பேடித் தனத்திற்கு இடம் தராதே.’ உலகில் பாவமும் இல்லை , துன்பமும் இல்லை; நோயும் இல்லை, துயரமும் இல்லை. பாவம் என்று சொல்லக்கூடிய ஏதாவதொன்று இருக்குமானால், அது இந்த ‘பயம்’ தான். உன்னிடம் மறைந்திருக்கும் சக்தியை வெளிப் படுத்தும் எந்தச் செயலும் புண்ணியம். எது உடலையும் மனத்தை யும் பலவீனப்படுத்துகிறதோ, அதுதான் உண்மையில் பாவம் என்பதை உணர்ந்துகொள். இந்தப் பலவீனத்தை, மனத் தளர்ச்சியை உதறித் தள்ளு. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த! நீ ஒரு வீரன், இந்த மனத் தளர்ச்சி உனக்குச் சிறிதும் பொருந்தாது. பாடம் படிப்பட்ட
என் மைந்தர்களாகிய நீங்கள் இந்தச் செய்தியை, க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்வய்யுப் பத்யதே என்னும் செய்தியை உலகிற்குப் பறை சாற்றினீர்களானால் எல்லா நோயும் துன்பமும் பாவமும் துயரமும் இந்த உலகத்திலிருந்து மூன்றே நாட்களில் மறைந்து போகும். இந்தப் பலவீன எண்ணங்கள் எங்குமே இல்லாது போய் விடும். பய உணர்வின் பிரவாகம் இப்போது எல்லா இடங் களிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதன் போக்கை எதிர்த் திசையில் திருப்புங்கள்; எதிர் உணர்வைக் கொண்டு வாருங்கள். பிறகு ஏற்படும் மாறுதலின் மாய சக்தியைப் பாருங்கள்! எல்லாம் வல்லவர்கள் நீங்கள் செல்லுங்கள், பீரங்கிவாயிலும் போக அஞ்சாதீர்கள்!
மிக இழிந்த பாவியையும் வெறுக்காதே, அவனது வெளிப் புறத்தைப் பார்க்காதே! பார்வையை உள்ளே செலுத்து. அங்கே பரமாத்மா உறைகிறார். ‘உன்னிடம் பாவமில்லை; துன்ப மில்லை. நீ ஆற்றலுக்கெல்லாம் உறைவிடம். எழுந்திரு, விழித் துக் கொள். உன்னிடமுள்ள தெய்வீகத் தன்மையை வெளியே கொண்டு வா’ என்று கம்பீரமான பேரிடிக் குரலில் உலகெங்கும் முழங்கு!
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுப் பத்யதே |
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த் வோத்திஷ்ட பரந்தப ||
இந்த ஒரு சுலோகத்தை ஒருவன் படித்தால் அவன் கீதை முழுவதையும் படித்த பயனைப் பெறுகிறான்: ஏனெனில் இந்த ஒரு சுலோகத்தில் கீதையின் முழுச் செய்தியும் அடங்கியுள்ளது.
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 13. கீதைபற்றிய கருத்துக்கள் |