தேவி வழிபாடு 2
நியூயார்க், 25 ஜூன் 1900; சொற்பொழிவுக் குறிப்பு
ஒவ்வொரு மதத்திலும் இன-தெய்வ நிலையிலிருந்து படிப்படி யாக உயர்ந்து, இறுதியில் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான ஒருவரை அடைகிறான் மனிதன்.
நீதிநெறி பற்றிய ஒரு நிரந்தரக் கருத்தை வெளியிட்டவர் கன்ஃபூசியஸ் ஒருவரே. மனு தேவர், அஹ்ரிமானாக மாற்றப் பட்டிருக்கிறார். இந்தியாவில் புராண விளக்கம் மறைக்கப் பட்டிருக்கிறது; ஆனால் அதன் கருத்து நிலைத்திருந்தது. ‘வாழ் கின்ற அனைத்திற்கும் மகாராணி நானே, ஒவ்வொன்றிலும் உறையும் சக்தி நானே என்ற மந்திரம் ஒரு பழைய வேதத்தில் இருக்கிறது.
தேவி வழிபாடு என்பது ஒரு தனித் தத்துவப் பிரிவு. நம் கருத்துக்களுள் முதன்மையாக இருப்பது சக்தியே. ஒவ்வொரு படியிலும் அது மனிதனை ஊடுருவி நிற்கிறது. நாம் நம்முள் உணர்கின்ற சக்தி ஆன்மா; வெளியே உணர்கின்ற சக்தி இயற்கை. இந்த இரண்டிற்கும் இடையே நிகழ்கின்ற போராட்டமே மனித வாழ்க்கையை உருவாக்குகிறது. நாம் அறிகின்ற அல்லது உணர்கின்ற எல்லாம் இந்த இரண்டு சக்திகளின் விளைவே. சூரியன் நல்லோர்மீதும் தீயோர்மீதும் ஒரே விதமாகவே ஒளிர் வதை மனிதன் கண்டான். இதிலிருந்து ஒரு புதிய கருத்து உருவாகியது -கடவுளே எல்லாவற்றிற்கும் பின்னால் நிற்கின்ற உலகம்தழுவிய சக்தி; அதாவது இறைவனைப் பற்றிய தாய்கருத்து தோன்றியது.
செயல் என்பது பிரகிருதியைச் சேர்ந்தது, புருஷனை அல்லது ஆன்மாவைச் சேர்ந்தது அல்ல என்று சாங்கிய நெறி கூறுகிறது. பெண்மை நிலைகள் அனைத்திலும் தாய்மை நிலை தான் மிகச் சிறந்ததாக இந்தியாவில் கொள்ளப்படுகிறது. எல்லா நிலைகளிலும் தாய் குழந்தையின் அருகில் இருக்கிறாள். ஒரு வேளை மனைவியும் மக்களும் ஒருவனைத் துறந்துவிடக் கூடும்; ஆனால் தாய் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டாள். இந்தப் பிரபஞ்சத்தின் பாரபட்சமற்ற சக்தியாகவும் தாய் விளங்கு கிறாள். ஏனெனில் அவளது தூய அன்பு பிரதியாக எதையும் கேட்பதில்லை, பிரதியாக எதையும் விரும்புவதில்லை; குழந்தை யிடம் உள்ள குற்றங்குறைகளைப் பொருட்படுத்துவதில்லை; குறை இருந்தாலும் குழந்தையை மேன்மேலும் நேசிக்கிறது. இன்று மேல்வகுப்பு இந்துக்கள் அனைவருக்கும் தேவி வழி பாடே முக்கிய வழிபாட்டு முறை.
லட்சியம் என்பது அடைய வேண்டிய ஒன்றைக் காட்டு கிறது. இங்கே லட்சியம் என்பதே இல்லை . இந்த உலகம் ஒரு போலவே தேவியின் லீலை. ஆனால் நாம் இதனை மறந்துவிடு கிறோம். சுயநலம் இல்லாவிட்டால், நாம் சாட்சியாக இருந்து நம் வாழ்க்கையையே காண முடியுமானால் துன்பத்தையும் இன்பமாகவே அனுபவிக்க முடியும். இந்தத் தத்துவத்தின் சிந்தனையாளர் எல்லா வெளிப்பாடுகளுக்கும் பின்னால் ஒரு சக்தி நிற்கிறது என்ற கருத்தினால் மலைத்துவிட்டார். நமது கருத்தில் இறைவன் மனிதனைப் போன்றே எல்லைக்கு உட் பட்டவர், உருவம் உடையவர். ஆனால் சக்தி என்ற கருத்தில் பிரபஞ்சம்தழுவிய ஓர் ஆற்றல் என்ற அர்த்தம் உள்ளது. ‘ருத்திரன் கொல்ல விரும்பும்போது, அவனது வில்லை எடுத்து நீட்டுபவள் நான்’ என்கிறாள் சக்தி. உபநிடதங்கள் இந்தக் கருத்தை வளர்க்கவில்லை. ஏனெனில் வேதாந்தம் கடவுள்கருத்தைப் பெரிதாகக் கருதவில்லை. ஆனால், ‘நானே உண்மை , உண்மையற்றதும் நானே. நானே நல்லதைக் கொண்டு வருகிறேன்; தீயதையும் கொண்டுவருகிறேன்’ என்று அர்ஜுனனுக்குச் சொன்ன குறிப்பிடத்தக்க போதனை கீதையில் இருக்கிறது.
மீண்டும் இந்தக் கருத்து வளர்ச்சியற்றுவிட்டது. பின்பு புதிய தத்துவம் தோன்றியது: நல்லதும் தீயதும் கலந்ததே இந்தப் பிரபஞ்சம்; இந்த இரண்டின் வாயிலாக வெளிப்படுவது ஒரே சக்திதான். ‘முடமான ஒற்றைக்கால் பிரபஞ்சம் முடமான ஒற்றைக்கால் கடவுளைத்தான் படைக்கும்.” இந்தக் கருத்து இறுதியில் நம்மை இரக்கம் அற்றவர்களாக, மிருகங்களாக ஆக்கிவிடும். இத்தகைய கருத்தை அடிப்படையாகக்கொண்டு வகுக்கப்படுகின்ற நீதிநெறி மிருகத்தனமானதாகவே இருக்கும். புண்ணியவான் பாவியை வெறுக்கிறான், பாவி புண்ணிய வானை எதிர்த்துப் போராடுகிறான். இருப்பினும் இந்தப் போராட்டமும் மேல்நிலைக்கே கொண்டு செல்கிறது. சுயநலம் கொண்ட தீய மனமும் தொடர்ந்து வருகின்ற அடிகளால் தாக்குண்டு நசுங்கிப்போய் இறுதியில் செத்துவிடும். அப்போது நாம் விழிப்படைந்து தேவியை அறிவோம்.
தேவியிடம் நாம் கொள்கின்ற முழுச் சரணாகதி ஒன்றே நமக்கு அமைதியைத் தரும். பயம் இல்லாமலும், எதையும் பெற விரும்பாமலும் அவளுக்காகவே அவளை அன்புசெய். நீ அவளுடைய பிள்ளை , எனவே அவளை நேசி. நல்லது, கெட்டது அனைத்திலும் அவளை ஒரேபோல் காண். அவளை இப்படிக் காணும்போதுதான் நித்தியப் பேரின்பமான தேவியின் வடிவான ‘சமத்துவம்’ என்பதை நாம் அடைவோம். அதுவரை துன்பம் நம்மைத் தொடரவே செய்யும். தேவியிடம் ஓய்வு கொண்டால்தான் நாம் பாதுகாப்பாக இருப்போம்.
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 11. தேவி வழிபாடு 2 |