10. தேவி வழிபாடு 1

தேவி வழிபாடு 1

நியூயார்க், 25 ஜூன் 1900; சொற்பொழிவுக் குறிப்பு

இன்பமும் துன்பமும் எப்போதும் இணைந்தே இருப்பவை; நமக்கு வேதனையைத் தருகின்ற அதே பொருட்கள் இன்பத்தை யும் கொண்டுவரும். இந்த இரட்டைகளை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. நமது உலகம் இந்த இரண்டும் கொண்டது. இவற்றை அகற்ற முடியாது. வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும் இவை இருக்கின்றன. ஒன்றுக்கொன்று எதிரான இந்த இரண் டிற்கும் ஒரு சமரசம் காண உலகம் ஓயாது முயன்று கொண் டிருக்கிறது; ஒரு தீர்வு காண மகான்கள் முயன்று கொண்டிருக் கிறார்கள். சுட்டெரிக்கின்ற துயருக்கிடையே அவ்வப்போது சிறிது இன்பம் கிடைக்கிறது; இருளை விலக்கி ஒளி தருகின்ற இந்த மின்னல் கீற்றுகள் அந்த இருளை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன.

பிறப்பிலிருந்தே குழந்தைகள் இன்பநோக்கு உடையன வாக இருக்கின்றன. ஆனால் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஒரே ஏமாற்றத் தொடர்தான். ஒரு லட்சியத்தைக் கூடப் பூரணமாக அவர்கள் அடைய முடிவதில்லை ; ஒரு தாகத்தைக்கூடப் பூரணமாகத் தீர்த்துக்கொள்ள முடிவதில்லை. புதிருக்கு விடைகாண்பதில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடு கிறார்கள். இந்தப் பொறுப்பை மதம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

துவைத அம்சமுள்ள பாரசீக மதங்களில் ஒரு கடவுளும், ஒரு சாத்தானும் உள்ளனர். யூதர்களின் வாயிலாக இந்தக் கருத்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியிருக் கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இதை அடிப் படையாக வைத்தே மற்றக் கருத்துக்கள் எழுப்பப்பட்டன. ஆனால் இப்போது இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பது நமக்குத் தெரியும். முழுக்க முழுக்க நல்லதும் எதுவும் இல்லை, அதேபோல் முழுமையாகத் தீமையும் எதுவுமில்லை. ஒருவருக்கு நல்லதாக இருப்பது மற்றொருவருக்குத் தீயதாக இருக்கிறது. இன்று கெட்டதாக இருப்பது நாளை நல்லதாக இருக்கும். அதே போன்று இன்று நல்லதாக இருப்பது நாளை கெட்டதாகி விடும். ….

முதலில் கடவுள் இன-தெய்வமாக இருந்தார், பிறகு அவர் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் ஆனார். புராதன எகிப்தி யர்கள் மற்றும் பாபிலோனியர்கள் கடவுளும் சாத்தானும் உண்டு என்ற இரட்டைக் கொள்கையைப் பின்பற்றினர். அவர் களுடைய மொலாக், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்தார். சிறைப்பிடிக்கப்பட்ட தெய்வங்களெல்லாம் அவரது ஆலயத்தில் மரியாதை செய்யுமாறு பணிக்கப்பட்டார்கள்.

ஆனாலும் புதிர் அப்படியே இருக்கிறது: இந்தத் தீமை களுக்குக் காரணம் யார்? எல்லாமே நன்மைதான், நாம்தான் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்று பலர் முற்றிலுமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வைக்கோலைப் பற்றிக்கொண்டு மிதக்க எண்ணுவதே இது, மணலில் தலையைப் புதைத்துக் கொள்தே இது. ஆனாலும் நாமெல்லாம் நீதிநெறியைக் கடைப் பிடிக்கிறோம்; நீதிநெறியின் சாரமே தியாகம்தான் நான் அல்ல, நீ என்பதே. ஆயினும் அது இந்தப் பிரபஞ்சத்தின் மகத்தான நல்ல கடவுளுடன் எவ்வாறு முரண்படுகிறது! அவர் மிகவும் சுயநலமானவர்; நாம் அறிந்தவர்களுள் மிகவும் கொடியவர்; பிளேக், பஞ்சம், போர் ஆகியவைமூலம் பழிவாங்குபவர்.

நாமெல்லாம் இந்த வாழ்க்கையின் அனுபவங்களைப் பெற வேண்டும். கசப்பான அனுபவங்களிலிருந்து நாம் தப்பியோட முயலலாம், ஆனால் இன்றோ நாளையோ அவை நம்மைப் பிடித்துக்கொண்டுவிடும். எல்லாவற்றையும் எதிர்கொள்ளாத வனைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன்.

வேதங்களில் உள்ள மனுதேவனே பாரசீகத்தில் அஹ்ரி மான் என்று மாற்றப்பட்டுள்ளார். ஆகவே இந்தக் கேள்விக்குப் புராண விளக்கம் மறைந்துவிட்டது. ஆனால் கேள்விமட்டும் நிற்கிறது; பதில் இல்லை , பரிகாரம் இல்லை .

தேவியைப்பற்றிக் கூறும் பழைய வேதப் பாடல்களில் மற்றொரு கருத்து உள்ளது: ‘நானே ஒளி. சூரியனிலும் சந்திரனிலும் இருக்கும் ஒளி நானே. எல்லா உயிர்களையும் இயக்குகின்ற காற்றும் நானே.’ தேவிவழிபாடாகப் பின்னால் வளர்ச்சியுற்ற கருத்தின் கரு இது. தேவி வழிபாட்டின்மூலம் தாய்க்கும் தந்தைக்கும் நாம் வேறுபாடு காட்டவில்லை. இதனால் குறிக்கப்படும் முதல் கருத்து சக்தி என்பதுதான்-‘எல்லா உயிர்களிலும் இருக்கும் சக்தி நானே.’

குழந்தை, மிக ஊக்கம் கொண்ட ஒரு மனிதனே. அவன் சக்தியுள்ள ஒரு மனிதன் ஆகும்வரை படிப்படியாக வளர்கிறான். நன்மை-தீமை வேறுபாட்டு எண்ணம் முதலில் ஏற்படவில்லை; அந்தக் கருத்து வளர்ச்சியடையவும் இல்லை. அறிவு வளர்ந்த போது சக்தியே முதற்கருத்து என்று ஆயிற்று. ஒவ்வொரு கட்டத்திலும் தடையும் போராட்டமும் என்பதுதான் நியதி. ஆற்றல்-தடை, அகச்சக்தி-புறச்சக்தி ஆகிய இரண்டின் விளைவே நாம். ஒவ்வோர் அணுவும் செயல்படுகிறது, மனத்தின் ஒவ்வோர் எண்ணத்தையும் எதிர்க்கிறது. நாம் பார்க்கின்ற, அறிகின்ற ஒவ்வொன்றும் இந்த இரண்டு சக்திகளின் விளைவே.

கடவுளைப்பற்றிய இந்தக் கருத்து சற்று புதியது. வேதங் களில் வருணனும் இந்திரனும் பக்தர்களுக்குச் சிறந்த வரங்களை அளிக்கின்றனர். இது சாதாரண மானிடக் கருத்து, மனிதனை விடச் சற்று அதிக மானிடத் தன்மை வாய்ந்த கருத்து.

அனைத்திற்கும் பின்னால் ஒரு சக்தி இருக்கிறது என்பது புதிய கோட்பாடு. தீமையின் உருவில் இருந்தாலும் உலக ரட்சகனாக இருந்தாலும் எங்கும் சக்தி, சக்திதான். இதுதான் புதிய கருத்து. மனித-தெய்வம் என்பது பழைய கருத்து. பிரபஞ்சம்தழுவிய ஒரே சக்தி என்ற புதிய கருத்து இங்குதான் தொடங்குகிறது.

‘தீமையை அழிக்க ருத்திரன் விரும்பும்போது ருத்திரனின் வில்லை நான் வளைக்கிறேன்.’ (தேவீ ஸூக்தம், ரிக் வேதம் 10. 125)
அடுத்து கீதை இவ்வாறு கூறுவதைக் காண்கிறோம். ‘ஓ அர்ஜுனா, இருப்பது நானே, இல்லாததும் நானே; நல்லதும் நானே, தீயதும் நானே; மகான்களிடம் உள்ள சக்தியும் நானே, தீயவர்களிடம் உள்ள சக்தியும் நானே’ (9.19, 10. 4-5). ஆனால் விரைவில் உண்மை ஒட்டுப் போடப்பட்டு இணைக்கப்படுகிறது, அதனால் கருத்து தூங்கிவிடுகிறது. ‘நல்லது பலன் அளிக்கும் வரை நல்லதில் உள்ள சக்தி நானே’ (– இது ஒட்டுப்போட்டு இணைக்கப்பட்ட கருத்து.)

பாரசீக நாட்டு மதத்தில் சாத்தான்-கருத்து இருந்தது. ஆனால் இந்தியாவில் இந்தக் கருத்து இல்லை. பிற்கால நூல்கள் இந்தக் கருத்தை உணரத் தொடங்கின. தீமை இருக்கிறது, அதை மறுப்பதற்கில்லை. இந்தப் பிரபஞ்சம் உண்மை ; இது உண்மையானால் அது நன்மையும் தீமையும் கலந்தது என்பதும் உண்மை. யார் ஆண்டாலும் அவர்கள் நன்மை தீமை இரண்டின் மீதும் ஆட்சி செலுத்த வேண்டும். நம்மை வாழச் செய்கின்ற அதே சக்திதான் நம்மைச் சாகுமாறும் செய்கிறது. சிரிப்பும் அழுகையும் உறவினர்கள். உலகில் சிரிப்பைவிட கண்ணீர்தான் அதிகம். மலர்களைப் படைத்தவர் யார்? இமயத்தைப் படைத் தவர் யார்? மிகவும் நல்லவரான ஒரு கடவுள். என் பாவங்களை யும் பலவீனங்களையும் உண்டாக்கியவர் யார்? கர்மம், சாத்தான், நானேதான். இப்படிப்பட்ட சிந்தனையின் விளைவு முடமான இந்தப் பிரபஞ்சம். இயல்பாகவே இந்தப் பிரபஞ்சத்தின் கடவுளும் முடமாகவே இருப்பார்.

நன்மையும் தீமையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு தனிப்பட்ட விஷயங்கள் என்ற கருத்து, நம்மை இரக்க மில்லாத காட்டுமிராண்டிகள் ஆக்கிவிடுகிறது. விலைமகளைக் கண்டால் குலமகள் விலகி ஓடுகிறாள். ஏன்? சில விஷயங்களில் விலைமகள் குலமகளைவிட எவ்வளவோ உயர்ந்தவளாக இருக்கக்கூடும். நன்மையும் தீமையும் வேறு என்ற கருத்து உலகில் நிரந்தரமான பொறாமையையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது; மனிதர்களுக்கிடையே நல்லவர்களுக்கும், சற்று குறைந்த நல்லவர்களுக்கும் அல்லது தீயவர்களுக்கும் இடையே நிரந்தரமான தடையை ஏற்படுத்திவிடுகிறது. இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கருத்து கொடியது, கொடியதைவிடக் கொடியது. நன்மையும் தீமையும் தனித்தனி யானவை அல்ல. நன்மையில் ஒரு பரிணாம வளர்ச்சி உள்ளது, எது குறைந்த நன்மையோ அதை நாம் தீமை என்கிறோம்.

சிலர் மகான்கள், சிலர் பாவிகள். நல்லவர் தீயவர் இரு வருக்கும் சூரியன் ஒருபோலவே ஒளி கொடுக்கிறான். அவன் ஏதாவது வேறுபாடு காண்கிறானா?

கடவுள் நமது தந்தை என்ற பழைய கருத்து, இன்பங்களின் மீது கடவுள் ஆட்சி செலுத்துகிறார் என்ற இனிய எண்ணத் துடன் தொடர்புள்ளதாகும். நாம் உண்மைகளை மறுக்க விரும்புகிறோம். தீமை என்பது இல்லை , அது ஒரு பூஜ்யம். ‘நான்’ என்பது தீயது, ஆனால் ‘நான்’ என்பதுதான் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. நான் பூஜ்யமா? இப்படி என்னைக் கண்டுபிடிக்க நான் ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்; ஆனால் தோல்வியையே அடைகிறேன்.

இத்தகைய கருத்துக்கள் எல்லாம் தீமையிலிருந்து தப்பி யோடும் முயற்சிகள். ஆனால் நாம் அவற்றை எதிர்கொண்டே யாக வேண்டும். முழுவதையும் எதிர்கொள்ளுங்கள். இந்து மதம் இன்பத்திலும் நன்மையிலும் மட்டும்தான் கடவுளை நேசிப் பேன், துயரத்திலும் தீமையிலும் அவரை நேசிக்க மாட்டேன் என்று யாருக்காவது ஒப்பந்தம் எழுதிக் கொடுத்திருக்கிறோமா என்ன ?

விளக்கின் ஒளியில் ஒருவன் கள்ளக் கையெழுத்துப் போடு கிறான், மற்றொருவன் பஞ்ச நிவாரணத்திற்காக ஆயிரம் ரூபாய் காசோலை எழுதிக் கொடுக்கிறான். ஆனால் இருவர்மீதும் அந்த விளக்கின் ஒளி சமமாகவே வீசுகிறது; அது வேறுபாடு காட்டுவதில்லை. விளக்கிற்கு நன்மை தீமை தெரியாது. அதை நன்மையாகவும் தீமையாகவும் ஆக்குவது நீங்களும் நானுமே.

இந்தக் கருத்திற்கு ஒரு புதுப்பெயர் வேண்டும். அதுவே ‘அன்னை ‘, அதாவது ‘தேவி’. நெடுங்காலத்திற்கு முன்பே பெண்ரிஷி ஒருவர் தேவியாகப் போற்றப்பட்டுள்ளார். இதன் பின்னர் சாங்கியர்கள் வந்தனர். எல்லா சக்தியும் பெண்மைதான் என்று அவர்கள் கூறினர். காந்தம் நகராமல் இருக்கிறது, இரும்புத்துகள்கள் தான் நகர்ந்து செல்கின்றன.

இந்தியாவில் பெண்களின் எல்லா நிலைகளிலும் தாய்தான் உயர்ந்தவளாகக் கருதப்படுகிறாள். மனைவியைவிட உயர்ந்தவள் தாய். மனைவியும் குழந்தைகளும் ஒருவனைக் கைவிடலாம், ஆனால் தாய் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டாள். தாய் எல்லோரிடமும் ஒரேமாதிரியாக இருக்கிறாள், தன் பிள்ளையைச் சற்று அதிகமாக நேசிக்கிறாள். தாயன்பு வியாபார நோக்கம் இல்லாதது, ஒருபோதும் அழியாதது, தூயது. இத்தகைய அன்பு யாரிடம் இருக்க முடியும்? தாயிடம் மட்டுமே; மகனிடமோ, மகளிடமோ, மனைவியிடமோ அல்ல.

‘வெளிப்பட்டிருக்கும் சக்தி எல்லாம் நானே’ என்கிறாள் தேவி. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவளும் அதை அழிப்ப வளும் அவளே. அழிவுதான் படைப்பின் ஆரம்பம் என்பதைக் கூற வேண்டியதில்லை. குன்றின் உச்சிதான் பள்ளத்தாக்கின் ஆரம்பம்.

தைரியமாக இருங்கள். உண்மைகளை உண்மைகளாக எதிர்கொள்ளுங்கள். தீமையைக் கண்டு பிரபஞ்சம் முழுவதிலும் ஓடாதீர்கள். தீமை தீமைதான். அதனால் என்ன? எல்லாம் தேவியின் திருவிளையாடல். பெரிதாக அலட்டிக் கொள்வதற்கு எதுவுமில்லை. எல்லாம் வல்ல சக்தியை எது இயக்கியிருக்க முடியும்? பிரபஞ்சத்தைப் படைக்குமாறு அவளை எது தூண் டியிருக்க முடியும்? அவளுக்கு நோக்கம் எதுவும் இருந்திருக்க முடியாது. ஏன்? ஏனெனில் நோக்கம் என்பது அடையப்பட வேண்டியது. இந்தப் படைப்பு எதற்காக? வெறும் வேடிக்கை. நாம் இதை மறந்துவிட்டு, ஒருவரோடொருவர் அடித்துக் கொண்டு துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறோம். நாமெல்லாம் தேவியின் விளையாட்டுத் தோழர்கள்.

குழந்தையை வளர்ப்பதில் தாய்படும் சித்திரவதையைப் பாருங்கள். அவள் அதில் இன்பம் காண்கிறாளா? ஆம், நிச்சய மாக. சாப்பிடாமல் இருப்பதில், பிரார்த்தனை செய்வதில், காவல் காப்பதில் அவள் இன்பம் காண்கிறாள். மற்ற எதையும் விட இதை விரும்பிச் செய்கிறாள். ஏன்? ஏனெனில் இதில் சுயநலம் இல்லை .

இன்பம் வரும், நல்லது; யார் அதைத் தடுக்கிறார்? துன்பம் வருமே, அதையும் வரவேற்க வேண்டும். ஒரு காளையின் கொம்பில் கொசு ஒன்று அமர்ந்திருந்தது. சிறிதுநேரம் சென்றது. கொசுவின் மனசாட்சி அதை உறுத்தியது. அது காளையிடம் கூறியது: ‘காளையாரே, நான் நீண்ட நேரமாக இங்கே உட்கார்ந் திருக்கிறேன். ஒருவேளை அது உங்களுக்குத் தொந்தரவு கொடுத் திருக்கலாம். அதற்காக வருந்துகிறேன், இதோ போய்விடு கிறேன்’ ‘தொந்தரவா எனக்கா? இல்லை, இல்லை. வேண்டு மானால் உன் குடும்பம் முழுவதையும் கூட்டிவந்து என் கொம்பில் வசிக்கலாம்; நீ எனக்கு என்ன செய்துவிட முடியும்?’ என்றது காளை.

துன்பத்தின் விஷயத்திலும் நாம் ஏன் இதை அதனிடம் கூற முடியாது? தேவியிடம் நம்பிக்கை இருந்தால் தைரியம் தானே வரும்.

‘நானே வாழ்வு, நானே சாவு.’ அவளது நிழலே வாழ்வும் சாவும். இன்பம் அனைத்திலும் உள்ள இன்பம் அவளே. துன்பம் அனைத்திலுமுள்ள துன்பமும் அவளே. வாழ்வு வந்தால் அதுவும் அவளே, மரணம் வந்தால் அதுவும் அவளே. சொர்க்கம் கிடைத்தாலும் அவள்தான், நரகம் கிடைத்தாலும் அவள்தான். ஆகவே குதித்துவிடுங்கள். நமக்கு இதைக் காண்பதற்கான நம்பிக்கையும் இல்லை, பொறுமையும் இல்லை. தெருவில் போகும் மனிதனை நம்புகிறோம், உலகத்திலேயே நாம் நம்பாத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் கடவுள்தான். நமக்கு அனுகூலமாக இருக்கும்போது அவரை நம்புகிறோம். ஆனால் அடிமேல் அடி வாங்கியபின் சுயதேவை பூர்த்தி அடைந்து மனம் அழிந்துவிடுகின்ற காலம் வரும். நாம் செய்கின்ற ஒவ்வொன்றிலும் அகங்காரம் என்ற பாம்பு படமெடுத்து ஆடு கிறது. பாதையில் பல முட்கள் இருப்பதற்காக நாம் மகிழ வேண்டும். அவை இந்தப் பாம்பின் படத்தில் குத்துகின்றன.

கடைசியில் சரணாகதி வருகிறது. அப்போது எல்லாவற்றை யும் நாம் தேவியிடம் அர்ப்பணம் செய்ய முடியும். துன்பம் வந்தாலும் வரவேற்போம், இன்பம் வந்தாலும் வரவேற்போம். இந்த அன்பை நாம் அடையும்போது கோணலானவை எல்லாம் நேராகிவிடும். பிராமணனும், தாழ்ந்த ஜாதியினனும், நாயும் எல்லாம் சமமாகவே தெரியும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைவரையும் ஒரேமாதிரியாக நேசிக்காததுவரை, அவர்கள் மீது பாரபட்சமற்ற, குறையாத அன்பு செலுத்தாததுவரை நாம் குறைபட்டவர்களாகவே இருப்போம். அந்த அன்பு வந்தால் பன்மை எல்லாம் மறந்து, எல்லையற்ற, நிரந்தரமான ஒரே தேவியை எல்லாவற்றிலும் காண்போம்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 10. தேவி வழிபாடு 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s