ஆன்மாவும் இயற்கையும்
ஆன்மாவை ஜடமாக உணர்வதல்ல, ஆன்மாவை ஆன்மாவாக உணர்வதே மதம்;
மதம் என்பது ஒரு வளர்ச்சி. ஒவ்வொருவரும் அதைத் தாமே அனுபவிக்க வேண்டும். மனிதனைக் காப்பதற்காக ஏசு நாதர் இறந்ததாகக் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். உங்களைப் பொறுத்தவரை அது ஒரு கோட்பாடு. அந்தக் கோட்பாட்டில் நம்பிக்கை வைப்பதில்தான் உங்கள் நற்கதி அடங்கியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை எந்தக் கோட்பாடு ஆனாலும் சரி, அதற்கும் முக்திக்கும் சம்பந்தம் இல்லை. விரும்பும் கோட் பாட்டை ஒருவன் நம்பலாம், அல்லது, எதையுமே நம்பாமலும் இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஏசு வாழ்ந்திருக்கட்டும், வாழாமல் இருக்கட்டும்; அதனால் உங்களுக்கு என்ன வரப் போகிறது? எரியும் புதரில் மோசஸ் கடவுளைக் கண்டார் என்பதால் உங்களுக்கு என்ன வந்தது? மோசஸ் கடவுளை எரிகின்ற புதரில் கண்டது, நீங்கள் கடவுளைக் காண உதவுமா? அவ்வாறு உதவுவதாக இருந்தால் மோசஸ் சாப்பிட்டார் என்பதே உங்களுக்குப் போதுமே, நீங்கள் சாப்பிடுவதை நிறுத்தி விடலாமே! இது அர்த்தமற்றது என்றால் முன்னதும் அர்த்த மற்றது. கடந்தகாலத்தில் வாழ்ந்த ஆன்மீகச் செல்வர்களின் வரலாறு எல்லாம், நாமும் அவ்வாறு செய்ய, அதாவது ஆன்மீகத்தை நாமே அனுபவித்துப் பார்ப்பதற்கு நம்மைத் தூண்டுவனவே தவிர வேறு எந்தவகையிலும் நமக்கு உதவுபவை அல்ல. ஏசுவோ, மோசஸோ, மற்ற எவரோ செய்தவை எல்லாம் நம்மை அவ்வாறு செய்யத் தூண்டுகின்றன; வேறு எந்தவகை யிலும் நமக்கு உதவுபவை அல்ல.
ஒவ்வொருவருக்கென்றும் சிறப்பியல்பு ஒன்று உள்ளது. அவன் அதையே பின்பற்ற வேண்டும். அதன்மூலமாகவே அவன் முக்திக்கான தன் பாதையைக் காண வேண்டும். இயற்கை யில் உனக்கான அந்தப் பாதை எது என்பதைக் கூறி, அதில் உன்னை வழிநடத்திச் செல்லத் தக்கவராக உன் குரு இருக்க வேண்டும்; உன் முகத்தைப் பார்த்தவுடனேயே நீ எந்தப் பாதைக்கு உரியவன் என்பதை அறிந்து, அதை உனக்குக் காட்டக் கூடியவராக இருக்க வேண்டும். ஒருபோதும் நீ மற்றவருடைய பாதையைப் பின்பற்ற முயல்வது கூடாது. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடைய பாதை அல்ல. உனது பாதையைக் கண்டுவிட்டால், நீ உன்னுடைய கைகளைக் கூப்பிக் கொண்டால் போதும்; அந்த வேகமே உன்னை முக்திக்கு இழுத்துச் செல்லும். ஆகையால் அந்தப் பாதையைக் கண்ட பிறகு ஒருபோதும் அதிலிருந்து பிறழாதே. உன் பாதையே உனக்கு மிகச் சிறந்தது. ஆனால் அதுவே மற்றவர்களுக்கும் சிறந்த வழி என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
உண்மையான ஆன்மீகவாதி ஆன்மாவை ஆன்மாவாகக் காண்பான்; ஜடப்பொருளாகக் காண மாட்டான். ஆன்மாவே இயற்கையை இயக்குகிறது. அதுவே இயற்கையில் உள்ள மெய்ப் பொருள். ஆகையால் செயல்பாடு என்பது இயற்கைக்குச் சொந்தமானது, ஆன்மாவுக்குச் சொந்தமானது அல்ல. ஆன்மா என்றும் ஒரே தன்மையது, மாறாதது, என்றும் உள்ளது. ஆன்மாவும் ஜடப்பொருளும் உண்மையில் ஒன்றே. ஆன்மா ஜடப்பொருள் ஆவதில்லை; ஜடப்பொருளும் ஆன்மா ஆவ தில்லை. ஆன்மா செயலற்றது. அது ஏன் செயல்புரிய வேண்டும்? அது சும்மா இருக்கிறது, அது போதும். அது சுத்த உண்மையாக விளங்குவது, செயல் அதற்குத் தேவையில்லை.
நீ நியதிக்குக் கட்டுப்பட்டவன் அல்ல. உன் இயல்பிலேயே அது உள்ளது. மனம் இயற்கையைச் சார்ந்தது, ஆகையால் நியதிக்குக் கட்டுப்பட்டது. இயற்கை முழுவதும் நியதியால் கட்டுப்பட்டது, தன் சொந்தச் செயலினால் எழுந்த ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டது. இந்த நியதியை ஒருபோதும் மாற்ற முடியாது. இயற்கையின் ஒரு நியதியை உங்களால் தகர்க்க முடியுமானால் அந்தக் கணமே இயற்கை யாவும் அழிந்துவிடும், அதன்பிறகு இயற்கை என்பதே இருக்காது. முக்தி பெறுபவன் இயற்கை நியதியை மீறிவிடுகிறான், அவனிடமிருந்து இயற்கை மங்கி மறைந்துவிடுகிறது; அதன்பிறகு அவன்மீது இயற்கை ஆதிக்கம் செலுத்த முடியாது. ஒவ்வொருவரும் நியதியை மீறலாம், ஆனால் அது ஒரே ஒரு முறைதான், அதிலும் அது நிரந்தரமான மீறலே. மீறியவனுக்கு அதன்பிறகு இயற்கையின் தொல்லை எதுவும் இல்லை.
ஒப்பிட்டுப் பார்க்கும்போது அரசாங்கங்கள், சங்கங்கள் முதலியவை எல்லாம் தீயவையே. எல்லா சங்கங்களும் தவறான சில பொது விதிகளின்மீதே அமைக்கப்படுகின்றன. ஒரு இயக்கத் தில் சேர்ந்த உடனேயே அதற்கு வெளியில் உள்ள அனை வரையும் வெறுக்க ஆரம்பித்துவிடுகிறாய். நீ ஓர் இயக்கத்தில் சேரும்போது உனக்கே எல்லை வகுக்கிறாய், உன்னுடைய சுதந்திரத்தை நீயே கட்டுப்படுத்திக் கொள்கிறாய். மிக மேலான சுதந்திரமே மிக மேலான நன்மை. மனிதர்கள் இந்தச் சுதந்திரத்தை நோக்கிச் செல்ல உதவுவது நமது நோக்கமாக இருக்க வேண்டும். நன்மை வளரவளர செயற்கைத்தனமான நியதிகள் குறையும். அத்தகைய நியதிகள் உண்மையில் நியதிகளே அல்ல. அவை நியதிகளானால் அவற்றை மீற முடியாது. நியதி என்று சொல்லப்படுகின்ற இவற்றை மீற முடிவதிலிருந்தே இவை நியதிகள் அல்ல என்பது தெளிவாகிறது. நியதி என்பது மீற முடியாத ஒன்று.
ஓர் எண்ணத்தை அடக்கும்போது, அது மனக்கண்ணுக்குத் தெரியாமல் தற்காலிகமாக அழுத்தி வைக்கப்படுகிறது, அவ்வளவுதான். ஆனால் விசைச் சுருள்கம்பியை அமுக்கி வைப்பதுபோல் அது அடங்கிக் கிடக்கிறது, விட்டால்போதும், ஒரு கணத்தில் துள்ளி வெளியே வந்துவிடுகிறது, அடக்கி வைத்ததால் அதிக சக்தி பெற்று, நீண்ட காலத்தில் செய்யக் கூடியதைச் சிலகணங்களில் செய்து முடிக்கும் விதத்தில் தோன்றுகிறது.
தினையளவு இன்பம் ஒவ்வொன்றும் பனையளவு துன்பத்தைக் கொண்டுவருகிறது. ஒரு நேரத்தில் இன்பமாக வெளிப்படுவதும், மற்றொரு நேரம் துன்பமாக வெளிப் படுவதும் ஒரே சக்திதான். ஒருவகை உணர்ச்சிகள் நின்றவுடன், மற்றொருவகை உணர்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. ஆனால் நல்ல முதிர்ச்சி அடைந்த மனிதர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு வகைப்பட்ட சிந்தனைகள்-ஏன், நூறுவிதமான சிந்தனைகள் கூடச் செயல்படலாம்.
மனம் என்பது தன் இயல்புப்படி செயல்படுகின்ற ஒன்று. மனத்தின் செயல் என்பது படைப்பு. எண்ணம் சொல்லா கிறது; சொல் செயல்வடிவம் பெறுகிறது. மனத்தினாலும் உடலினாலும் ஆகக்கூடிய இந்தப் படைப்புகள் எல்லாம் நின்றுவிட வேண்டும். அப்போதுதான் மனம் ஆன்மாவைப் பிரதிபலிக்கும்.
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 9. ஆன்மாவும் இயற்கையும் |