ஞானமும் கர்மமும்
லண்ட ன், 23 நவம்பர், 1895
எண்ணத்தின் வலிமையிலிருந்து பேராற்றல் பிறக்கிறது. நுண்மையாக இருக்கும் அளவிற்கு ஒரு பொருள் ஆற்றல் மிக்க தாகிறது. எண்ணத்தின் ஆற்றல் நெடுந்தொலைவில் இருப்பவர் களின் மீதுகூடத் தாக்கம் செலுத்துகிறது. ஏனெனில் மனம் ஒன்றாகவும் அதேவேளையில் பலவாகவும் இருக்கிறது. உலகம் ஒரு சிலந்திக்கூடு, மனங்கள் சிலந்திப் பூச்சிகள்.
எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் வெளிப்பாடே இந்தப் பிரபஞ்சம். புலன்களின் வழியாகப் பார்க்கும்போது அவரே பிரபஞ்சமாகத் தெரிகிறார். இது மாயை. ஆகவே இந்தப் பிரபஞ்சம் ஒரு பொய்த் தோற்றம். சூரியன் காலையில் செந்நிறப் பந்தாகத் தோன்றுவதுபோல் இதுவும் உண்மையின் ஒரு குறையுடைய தோற்றம்; ஓர் அரைகுறை வெளிப்பாடு. இவ்வாறே எல்லா தீமைகளும் கொடுமைகளும் பலவீனங்களே; நன்மையின் குறையுடைய தோற்றங்களே.
நேர்கோட்டை எல்லையற்று நீட்டிக்கொண்டே போனால் அது வட்டம் ஆகும். நன்மையைத் தேடிச் செல்வோமானால் ஆன்மாவிடம்தான் போய் நிற்போம். எல்லா ரகசியமும் நானே, கடவுளும் நானே, உடலும் நானே, மனிதனும் நானே, இந்தப் பிரபஞ்சத்தின் கடவுளும் நானே.
மனிதனுக்கு ஒழுக்கமும் தூய்மையும் ஏன் தேவை? ஏனெனில் அது அவனது சங்கல்பத்தைத் திடம்பெறச் செய் கிறது. உண்மையான இயல்பை உணர்த்துவதன்மூலம் சங்கல்பத் திற்கு வலிமை தரும் ஒவ்வொன்றும் ஒழுக்கம். இதற்கு மாறானதை விளைவிக்கும் ஒவ்வொன்றும் ஒழுக்கமின்மை. ஒழுக்கத்திற்கான அளவுகோல் நாட்டிற்கு நாடு, மனிதனுக்கு மனிதன் மாறுபடும். சட்டங்கள், சாஸ்திரங்கள்-இவை போன்றவற்றிற்கு அடிமையாக இருக்கும் நிலையிலிருந்து மனிதன் விடுதலை பெற வேண்டும். இப்போதைய நமது சங்கல்பம் சுதந்திரமானது அல்ல. ஆனால் நாம் முக்தராகும் போது நமது சங்கல்பமும் சுதந்திரமாகிறது.
இந்த உலகத்தைத் துறப்பதே துறவு. நம்மிடம் துறவு இல்லாவிடில், புலன்கள் கோபத்தையும் துயரத்தையுமே கொண்டுவருகின்றன. ஆன்மாவும் அதைச் செயற்படுத்தும் விருப்பு வெறுப்புகளும் வெவ்வேறானவை. அவை ஒன்று சேர்ந்தால் அந்தக் கணமே மனிதன் மிருகமாகி விடுகிறான். எனவே துறவுணர்ச்சியைக் கைக்கொள்.
நான் ஒருசமயம் உடலைப் பெற்றிருந்தேன்; பிறந்தேன்; பாடுபட்டுப் போராடினேன்; இறந்தேன்-இவையெல்லாம் எத்தகைய வேதனை தரும் மனமயக்கங்கள்! ஓர் உடலில் சிறைப்பட்டு, முக்திக்காகப் புலம்பிக் கொண்டிருந்த நிலையை எண்ணிப் பார்ப்பது எத்தகைய வேதனையான ஒன்று!
துறவு வேண்டும் என்றால் நாம் எல்லோரும் தபஸ்விகள் ஆகிவிட வேண்டுமா? அப்போது மற்றவர்களுக்கு உதவி புரிபவர் யார்? துறவு என்றால் உடனே அலைந்துதிரிந்து பிச்சையேற்று நடக்க வேண்டும் என்பதல்ல. எல்லா பிச்சைக் காரர்களும் ஏசுவா என்ன? ஏழையாக இருந்தால் அவன் புனிதன் என்பது பொருள் அல்ல; பல நேரங்களில் ஏழை எதிர் மாறாகவே இருக்கிறான். துறவு என்பது மனம் சம்பந்தபட்டது. அது எப்படி வருகிறது? நான் ஒரு பாலைவனத்தில் இருந்த போது தாகம் ஏற்பட்டது. அப்போது அங்கு ஓர் ஏரி தென் பட்டது. அழகிய காட்சி நிறைந்த நிலத்தின் நடுவே அது இருந்தது. அதைச் சுற்றிலும் மரங்கள் இருந்தன; அவற்றின் நிழல் தலைகீழாக அந்த நீரில் தெரிந்தது. இந்தத் தோற்றம் வெறும் கானல்நீர் என்பது பிறகு புலனாயிற்று. இந்தக் காட்சியைத்தான் தினந்தோறும் ஒரு மாதகாலம் பார்த்து வந்தேன் என்பதையும், அன்று ஏற்பட்ட தாகத்தின் காரண மாகத்தான் அது ஒரு பொய்த் தோற்றம் என உணர்ந்தேன் என்பதையும் அதன் பிறகுதான் அறிந்தேன். மீண்டும் ஒரு மாத காலம் நான் அதைப் பார்த்தேன். ஆனால் அப்போது அதை உண்மை என்று நான் நினைக்கவே இல்லை. இவ்வாறே நாம் கடவுளை அடையும்போது, உலகம், உடம்பு இவைபோன்ற கருத்துக்கள் எல்லாம் மறைந்துபோகும். அந்தக் கருத்துக்கள் மீண்டும் தோன்றும். ஆனால் அது பொய்க் கருத்து என்பதை அப்போது நாம் உணர்ந்துவிடுவோம்.
உலக வரலாறு என்பது புத்தர், ஏசு போன்றவர்களின் வரலாறே. ஆசை இல்லாதவர்களும் பற்றற்றவர்களும்தான் உலகிற்கு மிக மேலான நன்மை செய்கின்றனர். சேரிகளில் ஏசு இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். அவர் அங்குள்ள துன்பங் களைக் காண மாட்டார்; அங்குள்ளவர்களைப் பார்த்து, ‘என் சகோதரர்களே, நீங்கள் எல்லோரும் தெய்வத்தன்மை பெற்ற வர்கள்’ என்றே கூறுவார். அவரது பணி அமைதிமயமானது. அவர் காரணங்களை நீக்கிவிடுகிறார்.
இந்தப் பணி உண்மையிலேயே ஒரு மாயை என்பதை அறியும்போது, உலகின் நன்மைக்காக உழைக்கும் திறமையை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் எவ்வளவு தூரம் அகங்கார மற்று இந்தப் பணியைச் செய்கிறீர்களோ, அவ்வளவு நல்லது. ஏனெனில் அப்போது இந்தப் பணி உணர்வுகடந்த செயலாக இருக்கும். நாம் நாடுவது நன்மையையோ தீமையையோ அல்ல. உண்மைக்கு அருகில் இருப்பவை நன்மையும் இன்பமுமே தவிர இவற்றிற்கு மாறான தீமையும் துன்பமும் அல்ல. ஒருவனது கால்விரலில் முள் தைத்தது. அதனை அவன் வேறு ஒரு முள் ளால் எடுக்கிறான். முதலில் தைத்த முள் தீமை; முள்ளை எடுத்த இரண்டாவது முள் நன்மை. நன்மைதீமைகளுக்கு அப்பாற்பட்ட அமைதி நிலையே ஆன்மா. இந்தப் பிரபஞ்சம் தேய்ந்துகொண்டே போகிறது. மனிதன் கடவுளை அணுகிக் கொண்டேயிருக்கிறான். ஒருகணம் அவன் தன் உண்மை நிலையை அடைகிறான்–கடவுள் ஆகிறான். பின்னர் இறை யாணையால் தீர்க்கதரிசியாக வருகிறான். அப்போது அவன் முன்னர் உலகம் நடுங்கி நிற்கும். உணர்வறு நிலையிலேயே (unconscious state) உழல்கின்ற ஒரு மூடன் தூங்கி, மூடனாகவே விழித்தெழுகிறான்; ஆனால் உணர்வுகடந்த நிலையை அடைந் தவன் அளவற்ற ஆற்றலுடனும் தூய்மையுடனும் அன்புடனும் மனிதக் கடவுளாக வெளிவருகிறான். இதுவே உணர்வுகடந்த நிலையின் பயன்.
போர்க்களத்திலும் நாம் ஆன்மீக சாதனை செய்யலாம். கீதை அவ்வாறே போதிக்கப்பட்டது.
மனத்திற்கு மூன்று நிலைகள் உண்டு: செயல் நிலை, மந்த நிலை, அமைதி நிலை. செயல் நிலை விரைவான அதிர்வு களாலும், மந்த நிலை மந்தமான அதிர்வுகளாலும், அமைதி நிலை மிகமிகத் தீவிரமான அதிர்வுகளாலும் குறிக்கப் படுகிறது.
தேரில் அமர்ந்திருப்பது ஆன்மா. உடம்பே தேர். புறப் புலன்களே குதிரைகள். மனமே கடிவாளம். புத்தியே சாரதி. இவ்வாறுதான் மனிதன் மாயை என்ற பெருங்கடலைக் கடக்கவேண்டும். அதற்கு அப்பாலும் அவன் செல்கிறான்; கடவுளை அடைகிறான்.
ஒருவன் தன் புலன்களுக்கு அடிமையாக இருக்கும்போது, அவன் இந்த உலகத்தைச் சார்ந்தவனாக இருக்கிறான். அவன் தன் புலன்களை அடக்கியபின் துறந்தவன் ஆகிறான்.
பலவீனமான, மந்தமான ஒருவன் மன்னிப்பது என்பது உண்மையே அல்ல, அவன் போரிடுவதே மேலானது. தேவ சேனைகளுக்கே வெற்றி பெற்றுத் தரவல்ல திறமை உங்களுக் கிருக்கும்போது நீங்கள் மன்னிப்பை வழங்குங்கள்! ‘பகைவர் களை நாம் மன்னித்துவிடுவோம்’ என்கிறான் அர்ஜுனன். சாரதியான கண்ணனோ, ‘ஞானிகளைப் போல் நீ பேசுகிறாய்; ஆனால் நீ ஞானியல்ல, கோழை’ என்கிறார். நீரில் வளரும் தாமரை இலை அந்த நீரால் நனையாமல் இருப்பதுபோல், மனிதன் உலகில் இருக்க வேண்டும். இந்த உலகம் ஒரு போர்க் களம். உங்கள் வழியை நீங்களே கண்டு, போராடி, வெளியேற வேண்டும். கடவுளைக் காணும் முயற்சிக்காகவே இந்த உலக வாழ்க்கை இருக்கிறது. துறவினால் வலிமைபெற்ற சங்கல் பத்தின் வெளிப்பாடாக உங்கள் வாழ்வு விளங்கட்டும்! –நமது மூளைமையங்களை எல்லாம் உணர்வுபூர்வமாகக் கட்டுப்படுத்த நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
முதற்படி, வாழ்க்கையை இன்பமாகக் காணல். முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டிருப்பது பேய்த்தனம். பிரார்த் தனை செய்வதைவிடச் சிரிப்பது நல்லது. பாடுங்கள்! கவலையை விடுங்கள். உங்கள் கவலையைப் பிறருக்குப் பரப்பாதீர்கள், உங் களுக்குப் புண்ணியமாகப் போகும்! சிறிது இன்பத்தையும் சிறிது துன்பத்தையும் கடவுள் விற்பதாக ஒருபோதும் நினைக் காதீர்கள். மலர்களும் படங்களும் சாம்பிராணிப் புகையும் உங் களைச் சூழ்ந்து இருக்கட்டும். மலையின் உச்சிகளை நாடிமகான் கள் சென்றது இயற்கையின் இன்பத்தை அனுபவிப்பதற்கே.
தூய்மையே இரண்டாம் படி.
மூன்றாம் படி, மனத்திற்கு முழுப் பயிற்சி அளித்தல். உண்மையை உண்மை அல்லாததிலிருந்து பிரித்து அறியுங்கள். கடவுள் ஒருவரே உண்மையானவர் என்பதை அறியுங்கள். நீங்கள் கடவுளல்ல என்று ஒருகணம் நினைத்தாலும் நீங்கள் பெரும் பயத்திற்கு ஆளாவீர்கள். ‘நானே அவன்’ என்று நினைக்கும்போது பேரமைதியும் பெருமகிழ்ச்சியும் உங்களுக்கு ஏற்படும். புலன்களை அடக்குங்கள். என்னைச் சபிப்பவனிடமும் நான் கடவுளைக் காண வேண்டும். அவன் கடவுளே, என் பல வீனத்தாலேயே அவனை நான் சபிப்பவனாகக் காண்கிறேன். ஓர் ஏழைக்கு நன்மை செய்யும்போது அவன் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறான். இறைவனை இவ்வாறு வழிபடும் வாய்ப்பை இறையருளால் உங்களுக்கு அவன் வழங்குகிறான்.
உலக வரலாறு என்பது தன்னம்பிக்கை உடைய சிலரின் வரலாறே.அத்தகைய தன்னம்பிக்கை நம்முள் இருக்கும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்துகிறது. நீங்கள் எதை வேண்டு மானாலும் செய்யலாம். எல்லையற்ற ஆற்றல் வெளிப்படும் அளவுக்கு நீங்கள் முயலாதபோதுதான் தோல்வி அடைகிறீர்கள். தன்னம்பிக்கையை இழக்கின்ற அந்தக் கணமே ஒருவன் அழி கிறான்; ஒரு நாடும் அவ்வாறே.
குறுகிய மதக் கொள்கைகளாலோ ஏமாற்றுத்தனத்தாலோ வெல்ல முடியாத ஒரு தெய்வீகம் நம்முள் இருக்கிறது.
நாகரீகம் உள்ள இடங்களில் எல்லாம் கிரேக்கர் சிலரது கருத்துக்களே நிலவுகின்றன.
தவறுகள் சில இருந்தே தீரும். கவலைப்படாதீர்கள். உங்கள் உள்நோக்கு விரியட்டும். ‘செய்தது, செய்தாகிவிட்டது. இன்னும் சற்று நல்லதாகச் செய்திருக்கலாமே’ என்று சஞ்சலப் படுவதை விடுங்கள். மனிதன் கடவுளாக இல்லையெனில் மனித குலம் தன் பிரார்த்தனைகளாலும், பாவ மன்னிப்பிற்கான அழுகைகளாலும் இதற்குள் பைத்தியமாகியிருக்கும்.
யாரும் கைவிடப்படுவதில்லை; யாரும் அழிக்கப்படுவ தில்லை. இறுதியில் எல்லாம் பூரணமாக்கப்படும். ‘என் சகோதரர்களே, முன்னேறி வாருங்கள். எல்லையற்ற தூய்மைக் கடல் நீங்கள்! கடவுளாக இருங்கள்! கடவுளாக விளங்குங்கள்!’ என்று இரவும்பகலும் சொல்லுங்கள்.
நாகரீகம் என்பது என்ன? உள்ளே இருக்கும் கடவுளை உணர்வதே. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தக் கருத்துக் களையே சிந்தியுங்கள். முக்தியை நாடுங்கள், அவ்வளவுதான். கடவுள் அல்லாத ஒவ்வொன்றையும் புறக்கணித்து விடுங்கள். கடவுளாக இருக்கும் ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இரவும்பகலும் மனத்தில் இதனைப் பதியச் செய்யுங்கள். அப் போது திரையின் கடினம் குறைந்துகொண்டே வரும்.
‘நான் மனிதன் அல்ல; தேவதூதன் அல்ல. எனக்குப் பால் வேற்றுமையோ எல்லையோ இல்லை. அறிவே நான், நானே அவன். எனக்குக் கோபமோ பகையோ இல்லை. எனக்கு இன்பமோ துன்பமோ இல்லை. மரணமோ பிறப்போ எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஏனெனில் பூரண அறிவே நான்; பேரின்பமே நான், என் ஆன்மாவாக இருக்கிற அவனே நான். நானே அவன்.’
உடம்பற்ற நிலையில் இருக்க முயலுங்கள். உங்களுக்கு உடம்பு ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை; இருக்கிறது என்பதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை. ஏழைகள், தாழ்த்தப் பட்டவர்கள், கொடுமைக்கு ஆளாகி நிற்பவர்கள், நோயாளிகள் என்று எல்லோருக்கும் இந்தத் தெய்வீக உணர்வைத் திரும்பவும் கொடுங்கள். இத்தகைய எண்ணத்தின் அலை சற்றேறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகம் எங்கும் பரவுகிறது. சிறுசிறு அலைகள் பல திசைகளிலும் தோன்றுகின்றன. ஆனால் ஒரு பேரலை எழுந்து அவற்றை எல்லாம் விழுங்கிவிட்டு, சமு தாயத்தின்மீது பரவி நிற்கிறது. இதைச் சாதிக்கின்ற பேரலை, நற்பண்பு, நல்லொழுக்கம் இவற்றின் வலிமையைத் தன் பின்னணியாகக் கொண்டுள்ளது.
கன்ஃப்யூசியஸ், மோசஸ், பிதகோரஸ்; புத்தர், ஏசு, முகமது, லூதர், கால்வின், சீக்கியர்கள் எல்லோரும், மற்றும் தியாசஃபி (Theosophy), ஆன்மவாதம் (Spiritualism) எல்லாமே மனிதனிடம் உள்ள தெய்வீகத் தன்மையையே போதிக்கின்றனர்.
மனிதன் பலவீனன் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். ஞானயோகமும் மற்ற யோகங்களைப் போன்றதுதான்.
அன்பே குறிக்கோள், அன்பு செய்ய ஒரு பொருள் தேவை இல்லை. அன்பே கடவுள். ஆகவே ஆன்ம வடிவான கடவுளை பக்தியாலும் அடையலாம். நானே அவன். நாட்டை, நகரத்தை, மிருகங்களை, இந்த உலகத்தை நேசிக்காமல் ஒருவன் எவ்வாறு வேலை செய்ய முடியும்? பன்மையில் ஒருமையைக் காண ஆராய்ச்சி வழிகோலுகிறது. நாத்திகர்களும் ஆஜ்ஞேயவாதி களும் சமுதாய நன்மைக்காகச் சேவை புரியட்டும்! அப்போது கடவுள் வருவார்.
யாருடைய நம்பிக்கையும் குலைக்காதீர்கள். இதில் மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் மதம் என்பது கொள்கைகளில் இல்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு இருக்கிறோம், எவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதில்தான் மதம் உள்ளது; அனுபூதியில்தான் மதம் உள்ளது. (Religion lies in being and becoming, in realization.)
எல்லோரும் பிறவியில் உருவ வழிபாட்டுவாதிகளே. மிக மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பவன் ஒரு மிருகம். மிகமிக உயர்ந்த நிலையில் இருப்பவன் பரிபூரணன். இவ்விருவருக்கும் இடையேயுள்ள நிலையில் இருப்பவர்கள் ஓசை, நிறம், கொள்கை, சடங்கு முதலியவைபற்றி எண்ணியே தீர வேண்டும்.
உருவ வழிபாட்டை விட்டுவிடும் நிலை உங்களுக்கு ஏற் பட்டு விட்டதா என்பதை அறிய ஒரு சோதனை: ‘நான்’ என்று சொல்லும்போது, உடம்பு உங்கள் எண்ணத்தில் வருகிறதா, இல்லையா? வருமானால் நீங்கள் இன்னும் உருவ வழிபாடு செய்ய வேண்டியவர்களே.
மதம் என்பது வெறும் சொல்ஜாலங்கள் அல்ல. அது அனுபூதி. கடவுளைப்பற்றிச் ‘சிந்தனை’ செய்வீர்களானால், நீங்கள் மூடர்களே. பாமரன் தன் பிரார்த்தனையாலும் பக்தி யாலும் தத்துவவாதியைவிட உயர்ந்த நிலையை எய்தலாம். கடவுளை அறிய எந்தத் தத்துவமும் தேவையில்லை . பிறரது நம்பிக்கையைக் குலைக்காமல் இருப்பதே நமது கடமை. மதம் என்பது அனுபூதி. எல்லாவற்றையும்விட, நேர்மையாக இருங்கள். ஒன்றைச் சார்தல் துன்பத்தையே தரும். ஏனெனில் அது ஆசைக்கு வித்து. ஏழை ஒருவன் பொன்னைப் பார்க்கிறான்; அது தனக்குத் தேவை என்ற எண்ணத்துடன் ஒன்றாகிவிடு கிறான். சாட்சியாக இருங்கள். எதிர்ச் செயலின்றி இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 8. ஞானமும் கர்மமும் |