7. தெய்வீக ஞானச் செய்தி

தெய்வீக ஞானச் செய்தி

1.பந்தம் 2. நியதி 3. பரம்பொருளும் முக்தியும்

1. பந்தம்

 1. ஆசை எல்லையில்லாதது, அதை நிறைவேற்றுவதில் எல்லையுண்டு. ஒவ்வொருவரிடமும் உள்ள ஆசைகளுக்கு அளவில்லை, அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆற்றல் வெவ்வேறு விதமாக இருக்கிறது. எனவே வாழ்க்கையில் சிலர் பிறரைவிட அதிக வெற்றி பெறுகின்றனர்.
 2. இந்தக் கட்டுப்பாட்டுத் தளையை விலக்கிக் கொள்ளவே நாம் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண் டிருக்கிறோம்.
 3. இன்பம் தருபவற்றை மட்டும்தான் நாம் விரும்புகிறோம்; துன்பம் அளிப்பவற்றை அல்ல.
 4. நாம் விரும்பும் பொருட்கள் இன்பத்தையும் துன்பத்தை யும் ஒருங்கே தருகின்ற கலவையாக உள்ளன.
 5. பொருட்களில் உள்ள துன்பப் பகுதிகளை நாம் பார்ப்ப தில்லை, அல்லது நம்மால் பார்க்க முடிவதில்லை. இன்பப் பகுதியால் மட்டுமே நாம் கவரப்படுகிறோம். இன்பப் பகுதியைப் பற்றும்போது, நம்மை அறியாமலே துன்பப் பகுதியையும் சேர்த்து இழுக்கிறோம்.
 6. நமக்கு இன்பம் மட்டுமே வரும், துன்பம் உடன் வராது என்று சிலவேளைகளில் வீணாக நம்புகிறோம். ஆனால் அப்படி ஒருபோதும் நடப்பதில்லை.
 7. நமது ஆசைகளும் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக் கின்றன; இன்று பெரிதாக நினைக்கும் ஒன்றை நாளையே புறக் கணிப்போம். தற்காலத்தில் இன்பமாக இருப்பது எதிர்காலத்தில் துன்பமாக மாறிவிடுகிறது. அதைப்போலவே நாம் இப்போது நேசிப்பதைப் பின்னர் பகைக்கிறோம். இவ்வாறே எல்லாம்.
 8. துன்பம் கலவாத இன்பம் ஒன்றையே எதிர்கால வாழ்வில் நாம் பெற முடியும் என்று வீணாக நம்புகிறோம்.
 9. எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் தொடர்ச்சி. ஆதலால் அத்தகைய இன்ப வாழ்வு என்பது நடக்க முடியாத காரியம்.
 10. பொருட்களால் இன்பம் பெற யார் முயன்றாலும், அது அவனுக்குக் கிடைக்கும்; ஆனால் அந்த இன்பத்துடன் துன்பத்தையும் அவன் ஏற்றாக வேண்டும்.
 11. மாற்றம் அல்லது மரணம் என்ற உண்மையின் காரணத் தால், பொருட்களால் ஏற்படும் இன்பம் எல்லாம் காலப் போக்கில் துன்பத்தையும் தந்தே தீரும்.
 12. எல்லா பொருட்களுக்கும் முடிவு மரணம், உணரப்படு கின்ற பொருட்கள் எல்லாம் மாறுபவை.
 13. ஆசைகள் பெருகப்பெருக இன்பத்தின் ஆற்றலும் வளர் கிறது, அதனுடன் கூடவே துன்பத்தின் ஆற்றலும் வளர்கிறது.
 14. உயிரினம் நுண்ணியதாகும் அளவிற்கு அதன் கலாச்சார மும் உயர்ந்ததாக இருக்கும்- இன்பத்தை நுகரும் ஆற்றல் எவ்வளவு தீவிரமாக இருக்குமோ, துன்பத்தின் கொடுமையை யும் அவ்வளவு ஆழமாக அனுபவிக்கவே வேண்டும்.
 15. பௌதீக இன்பங்களைவிட மன இன்பங்கள் மிகவும் உயர்ந்தவை. அதுபோல் உடல் துன்பங்களைவிட மனத் துயரங்கள் மிகவும் ஆழமானவை.
 16. தொலைதூர எதிர்காலத்தைப் பார்க்கும் எண்ணத்தின் ஆற்றலும், கடந்தகாலத்தில் நடந்ததை நிகழ்காலத்தில் நினைவுக்குக் கொண்டுவருகின்ற ஞாபக சக்தியும் நம்மை வானுலகத்தில் வசிக்குமாறு செய்கின்றன; அதேவேளையில் அவை நம்மை நரகத்திலும் வசிக்கச் செய்கின்றன.
 17. இன்பம் தரும் பொருட்களை ஏராளம் சேமித்து வைக் கின்ற ஒருவன், பொதுவாக, அவற்றை அனுபவிக்க முடியாத அளவிற்குக் கற்பனைத்திறன் இல்லாதவனாக இருப்பான். மிகுந்த கற்பனைத் திறன் படைத்தவனோ இழந்ததை நினைத்து வருத்தமும், இழந்து போய்விடுமே என்ற அச்சமும், அவற்றி லுள்ள குறைபாடுகளை உணர்வதுமாக இன்பத்தை அனுபவிக்க மாட்டான்.
 18. துன்பத்தை வெல்வதற்காகப் போராடுகிறோம், அதில் வெற்றியும் பெறுகிறோம்; அதன்கூடவே புதிய துன்பங்களையும் உண்டாக்கிக் கொள்கிறோம்.
 19. நாம் வெற்றி பெறுகிறோம், தோல்வி நம்மை நிலை குலையச் செய்கிறது. நாம் இன்பத்தை நாடுகிறோம், துன்பம் நம்மை நாடி வருகிறது.
 20. நாம் செய்வதாகக் கூறுகிறோம், ஆனால் செய்விக்கப் படுகிறோம். வேலை செய்வதாகக் கூறுகிறோம், ஆனால் வற்புறுத்தப் படுகிறோம். வாழ்வதாகச் சொல்கிறோம், ஆனால் ஒவ்வொரு கணமும் செத்துக் கொண்டிருக்கிறோம். நாம் கும்பலில் இருக்கிறோம். நாம் ஓரிடத்தில் நிற்க முடியாது, ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அப்படி ஓடுவது ஒன்றும் பிரமாதமான புகழ்ச்சிக்கு உரியதல்ல. அவ்வாறு துரத்தப்படாத நிலைமையில் நாம் இருப்போமானால், கடுகளவு இன்பத்திற்காக இவ்வளவு துன்பத்தையும் துயரத்தையும் நாம் அனுபவிக்கச் செய்ய எத்தனை புகழ்மொழிகளாலும் முடியவே முடியாது. அந்தக் கடுகளவு இன்பம் என்பதும்கூட, ஐயோ, பெரும்பாலும் வெறும் நம்பிக்கையே!
 21. நமது துன்பநோக்குத் தன்மை அசைக்க முடியாத உண்மை. நமது இன்பநோக்குத் தன்மையோ மெலிந்த ஊக்கம்; கடினமான காரியத்தையும் மிகமிக நல்லதாகச் செய்ய வல்லது அது.

2. நியதி

 1. நியதி என்பது ஒருபோதும் நிகழ்ச்சியிலிருந்து வேறான தல்ல. அவ்வாறே கோட்பாடு என்பது மனிதனிலிருந்து வேறானதல்ல.
 2. ஒவ்வொரு நிகழ்ச்சியும் தன் எல்லைக்குள் செயல்படு கின்ற விதம் அல்லது சமத்துவ நிலையே நியதி.
 3. நிகழ்ச்சிகளில் நடைபெறுகின்ற மாற்றங்களைத் தொகுத்தும் சேர்த்தும்தான் நாம் நியதிபற்றிய அறிவைப் பெறுகிறோம். இந்த மாற்றங்களுக்கு அப்பால் நாம் நியதியைக் காண்பதில்லை. நிகழ்ச்சியும் நியதியும் வேறானவை என்று காண்பது வெறும் மனக் கருத்து, வார்த்தைஜாலம் என்பதைத் தவிர வேறல்ல. நியதி என்பது ஒவ்வொரு மாற்றத்திலும், அதன் எல்லைக்கு உட்பட்ட ஒரு பகுதி; அதன் ஆதிக்கத்திற்கு உட் பட்ட பொருட்களின் ஒரு தன்மை. பொருட்களில் ஆற்றல் உள்ளது. ஒரு பொருளைப்பற்றி நாம் அறிந்துள்ள கருத்தின் ஒரு பகுதியாக அந்த ஆற்றல் விளங்குகிறது. வேறு ஒரு பொருள் மீது அந்த ஆற்றல் செயல்படும்போது ஒரு குறிப்பிட்ட முறையில் விளைவு ஏற்படுகிறது. இதைத்தான் நியதி என்கிறோம்.
 4. பொருட்களின் உண்மை நிலையில்தான் நியதி இருக் கிறது. அந்தப் பொருட்கள் ஒன்றோடொன்று எப்படிச் செயல் படுகின்றன என்பதைத்தான் நியதி விளக்குமே தவிர அவை எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைக் கூறாது. தீ சுடாம லிருப்பதும், நீர் நனைக்காமலிருப்பதும் நல்லதுதான். ஆனால் தீ சுட்டே தீரும், நீர் நனைத்தே தீரும்-இது நியதி. இது சரி யான நியதி என்றால் சுடாத நெருப்பு நெருப்பல்ல, நனைக்காத நீர் நீரல்ல.
 5. ஆன்மீக நியதிகள், ஒழுக்க நியதிகள், சமுதாய நியதிகள், தேச நியதிகள்–இவை தற்போதைய ஆன்மீக அளவைகள், மனிதப்பண்பு அளவைகள் என்பவற்றின் பகுதிகளாகவும், அத்தகைய நியதிகளால் கட்டுப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு அளவைகளின் காரணமாக ஏற்படும் நிகழ்ச்சிகளின் தவறாத அனுபவமாகவும் இருக்குமானால் அவையெல்லாம் நியதிகளே.
 6. நாம் நியதிகளால் ஆக்கப்படுகிறோம், நாமும் நியதிகளை உருவாக்குகிறோம். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒரு மனிதன் தவறாமல் செய்யும் செயல்களில் காணப்படுகின்ற பொதுமையே, அந்தக் குறிப்பிட்ட நிலைக்கான நியதியாகும். மாறாமல் பொதுவாக எங்கும் நிகழ்கின்ற மனிதச் செயலே தனி மனிதனுக்கு நியதியாக இருக்கிறது. இந்த நியதியிலிருந்து யாரும் தப்ப முடியாது. ஒவ்வொரு மனிதனும் செய்கின்ற செயல்களின் தொகுப்பே பிரபஞ்சம்தழுவிய நியதி. இந்தத் தொகுப்பு, அல்லது பொதுமை, அல்லது எல்லையற்றது ஒவ் வொரு தனிமனிதனையும் உருவாக்குகிறது; அதன் செயல்மூலம் தனிமனிதன் அந்த நியதியைக் காக்கிறான். இந்த அர்த்தத்தில் நியதி என்பது பொதுமைக்கு மற்றொரு பெயராகும். பொதுமை தனிமனிதனை ஆதாரமாகக் கொண்டுள்ளது; தனிமனிதன் பொதுமையை ஆதாரமாகக் கொண்டுள்ளான். எல்லையற்றது என்பது எல்லையுள்ள பல சேர்ந்தது. எண்ணிக்கையாலான இத்தகைய ஒரு எல்லையற்றதை நினைத்துப் பார்ப்பது கடினமே என்றாலும், செயல்முறைக்கு மிகவும் பயன்படுகின்ற உண்மை அது. ஒரு நியதி, ஒரு முழுமை, ஓர் எல்லையற்றது என்ற நிலையில் அதை அழிக்க முடியாது; இனி, எல்லையற்ற ஒன்றின் ஒரு பகுதியை அழிப்பது என்பதும் சாத்தியம் அல்ல; அதனுடன் எதையும் சேர்க்கவோ, அதிலிருந்து எதையும் கழிக்கவோ முடியாது. எனவே எல்லையற்றதன் ஒவ்வொரு பகுதியும் எப்போதும் நிலைத்திருக்கும்.
 7. உடல் எந்தப் பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளதோ, அந்தப் பொருட்களைப் பற்றிய நியதிகள் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டன; அந்தப் பொருட்கள் கால எல்லையைக் கடந்து நிலைத்திருக்கின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது. நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதனின் உடம்பி லிருந்த மூலப் பொருட்கள் இன்றும் ஏதோ ஓரிடத்தில் நிலைத் திருக்கிறது என்று நிரூபித்துள்ளனர். ஒருமுறை வெளிப்படுத்தப் பட்ட எண்ணங்களும் பிற மனங்களில் வாழவே செய்கின்றன.
 8. உடலுக்கு அப்பாலுள்ள மனிதனைப்பற்றிய ஒரு நியதியைக் கண்டுபிடிப்பதுதான் சிரமமான காரியம்.
 9. ஆன்மீக நியதிகளும் ஒழுக்க நியதிகளும் அனைவருக்கு மான வழிமுறை அல்ல. நீதிநெறி, ஒழுக்க நியதி, ஏன், தேசிய நியதிகள் கூட கடைப்பிடிக்கப்படுவதைவிட மீறப்படுவதே அதிகம். அவை நியதிகள் என்றால் அவற்றை மீற முடியுமா?
 10. இயற்கை நியதிகளை யாராலும் எதிர்த்துச் செல்ல முடியாது. மனிதன் ஒழுக்க நியதிகளையும் தேசிய நியதிகளையும் மீறுகிறான் என்று ஏன் நாம் எப்போதும் குறை கூறகிறோம்?
 11. ஒரு நாட்டிலுள்ள பெரும்பாலோரின் சங்கல்பத் திரட்சியே அந்த நாட்டின் நியதிகள், சட்டங்கள். அவ்வாறு அவை இருக்க வேண்டும் என்பது ஆசையே தவிர, உண்மையில் அவை அந்த நிலையில் இல்லை.
 12. பிறருடைய சொத்துக்களை யாரும் திருடக் கூடாது என்பது லட்சிய நியதி. ஆனால் உண்மை நியதி என்னவென்றால் பலர் அவ்வாறு திருடுகிறார்கள் என்பதுதான்.
 13. இவ்வாறு இயற்கை நியதி என்று நாம் சொல்வதிலுள்ள நியதி என்ற சொல், நீதிநெறி மற்றும் பொதுவாக மனிதச் செயல்பாடுகளைக் குறிக்கப் பயன்படும்போது பல்வேறு வகை யாக பொருள்கொள்ளப் படுகிறது.
 14. உலகின் நீதிநெறிகளைப் பகுத்து ஆராய்ந்து, பொருட் களின் உண்மையான நிலைமையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டு நியதிகள் மிகமிக உயர்ந்து விளங்கு கின்றன. ஒன்று, நம்மிலிருந்து ஒவ்வொன்றையும் விலக்குகின்ற நியதி. இது ஒவ்வொன்றிலிருந்தும் நம்மைப் பிரிக்கிறது; மற்ற அனைவரது இன்பத்தையும் அழித்தாவது தன்னலத் திற்கு வழிசெய்கிறது. மற்றொன்று தன்னலத் தியாக நியதி. இது நாம் நம்மைப்பற்றி எதுவும் சிந்திக்காமல் பிறர்நலத்தை மட்டுமே சிந்திக்குமாறு செய்கிறது. இந்த இரண்டு நியதி களும் இன்பத்தைத் தேடும் முயற்சியிலிருந்தே தோன்று கின்றன. ஒன்று, பிறருக்குத் தீமை விளைப்பதில் இன்பம் காண்பது, இன்பத்தைப் புலன்களில் மட்டுமே காண்பது. மற்றது பிறருக்கு நன்மை செய்வதில் இன்பம் காண்பது, இன்பத்தைப் பிறரது புலன்களின்மூலம் உணர்வதுபோன்ற ஒரு நிலை. மாமனிதர்களிடமும் சான்றோர்களிடமும் இரண்டாவது நியதி மேலோங்கி நிற்கிறது. என்றாலும் இந்த இரண்டு நியதி களும் ஒன்றுசேர்ந்தே செயல்படுகின்றன. ஏறக்குறைய எல்லோரிலும் இவை இரண்டும் கலந்தே இருக்கின்றன, ஏதாவது ஒன்று மேலோங்கி நிற்கலாம். ஒருவன் திருடுவது ஒருவேளை தான் விரும்பும் ஒருவருடைய நன்மைக்காக இருக்கலாம்.

3. பரம்பொருளும் முக்தியும்

ஓம் தத் ஸத்- இருப்பு-அறிவு-ஆனந்தம்.
i. உண்மையாக ஒன்று மட்டுமே இருக்கிறது. மற்றவை அனைத்தும் உண்மையான அந்த ஒன்றைப் பிரதிபலிப்பதால் இருப்பதாகக் கொள்ளப்படுகின்றன.

ii. அது ஒன்றே அறிவது. அது ஒன்றே உணர்வொளியாகிய தன்னொளி உடையது. பிற எல்லாம் அதனிடம் இருந்து பெற்ற ஒளியால் ஒளிர்கின்றன. பிற எல்லாம் அதன் அறிவைப் பிரதிபலிப்பதால் அறிகின்றன.

iii. அது ஒன்றே ஆனந்தம். ஏனெனில் எந்தத் தேவையும் அதில் இல்லை. அது எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது, எல்லாவற்றின் சாரம்.

அது ஸத்-சித்-ஆனந்தம்.

iv. அதற்குப் பகுதிகள் இல்லை , குணங்கள் இல்லை , இன்பதுன்பம் இல்லை. அது ஜடப்பொருளும் இல்லை, மனமும் இல்லை. அது தன்னிகரற்றது, எல்லையற்றது. தனக்கென்று எந்த உருவமும் இல்லாமல் ஒவ்வொரு பொருளிலும் கலந்து நிற்கின்ற ஆன்மா அது. பிரபஞ்சத்தின் எல்லையற்ற நான்-உணர்வு அது.

V. என்னிலும் உன்னிலும் ஒவ்வொன்றிலும் இருக்கின்ற உண்மை அது-எனவே ‘நீ அதுவாக இருக்கிறாய்’-தத்வமஸி.

 1. உருவமற்ற அந்தப் பரம்பொருளையே இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கி, காத்து, அழிக்கும் கடவுளாக மனம் கருதுகிறது. அவரே இந்தப் பிரபஞ்சத்தின் நிமித்த காரணமாக வும், உபாதான காரணமாகவும் இருக்கிறார். பிரபஞ்சத்தை ஆள்பவர் அவர். வாழ்க்கை , அன்பு, அழகு இவற்றின் உன்னத வடிவமாகத் திகழ்கிறார் அவர்.

i. அறுதிப் பரம்பொருளின் மிக உயர்ந்த வெளிப்பாடே ஈசுவரன். அந்த ஈசுவரன் உலகை ஆள்பவர், மிகவும் மேலானவர், எல்லாம் வல்லவர், பிராண வடிவினர்.

ii. அறுதி அறிவு தனது மிக உயர்ந்த வெளிப்பாட்டில் இறைவனின் எல்லையில்லா அன்பாகத் தோன்றுகிறது.

iii. அறுதி ஆனந்தம் இறைவனின் எல்லையற்ற அழகாக வெளிப்படுகிறது. ஆன்மாவை மிக அதிகம் கவர்பவனாக இருக்கிறான் இறைவன்.

சத்யம்-சிவம்-சுந்தரம்.

அறுதி உண்மை , பிரம்மம், சச்சிதானந்தம் என்றெல்லாம் அழைக்கப்படுவதே உருவமற்ற எல்லையற்ற பரம்பொருள்.

மிகமிகத் தாழ்ந்தது முதல் மிகமிக உயர்ந்ததுவரையுள்ள உயிரினங்கள் எல்லாமே தங்கள் அளவுக்குத் தக்கவாறு (உயர்ந்த உயிர்களில்) சக்தியாகவும், (உயர்ந்த அன்பில்) கவர்ச்சியாகவும், (உயர்ந்த இன்பத்தில்) சமச்சீர்நிலையை அடைவதற்கான போராட்டமாகவும் வெளிப்படுகின்றன. இந்த மிகவுயர்ந்த சக்தி-அன்பு-இன்பம் என்பதன் மிக உயர்ந்த வெளிப்பாடு ஒரு நபர், ஒரு தனி நபர். அவர் பிரபஞ்சத்தின் அன்னை , தெய்வங் களுக்கெல்லாம் தெய்வம். அவர் எங்கும் நிறைந்தவர், ஆனால் பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர்; ஆன்மாக்களுக்கெல் லாம் ஆன்மா, ஆனால் ஒவ்வோர் ஆன்மாவிலிருந்தும் வேறு பட்டவர். அவர் பிரபஞ்சத்தை ஈன்ற காரணத்தால் அதன் தாயாக உள்ளார்; எல்லையற்ற அன்புடன் வழிகாட்டுகிறாள், இறுதியில் தன்னிடமே அனைத்தையும் ஒடுக்கிக் கொள்கிறாள். அவளது ஆணையால் சூரியனும் சந்திரனும் ஒளிர்கின்றன, மேகங்கள் மழை பொழிகின்றன, மரணம் இந்தப் பூமியில் நடைபோடுகிறது.

எல்லா காரணகாரியச் செயல்களுக்கும் உரிய ஆற்றலாக அவள் இருக்கிறாள். ஒவ்வொரு காரணமும் தவறாமல் தனது காரியத்தை விளைவிப்பதற்கான ஆற்றலை வழங்குகிறாள். நியதி என்பது அவளது சங்கல்பம், சங்கல்பம் மட்டுமே. அவள் தவறு செய்ய மாட்டாள், எனவே அவளது சங்கல்பமாகிய இயற்கை நியதிகளை ஒருபோதும் மாற்ற முடியாது. கர்மநியதி அல்லது காரணகாரிய நியதியின் உயிர்நாடியாக அவளே இருக்கிறாள். ஒவ்வொரு செயலுக்கும் உரிய பலனைத் தருபவள் அவளே. அவள் காட்டும் வழியில், நாம் நமது கர்மங்களுக்கு ஏற்ப நமது பிறவிகளை உருவாக்குகிறோம்.

இந்தப் பிரபஞ்சத்தின் நோக்கமும் குறிக்கோளும் சுதந்திரமே. அந்தத் தாயின் உதவியால் நாம் அந்தச் சுதந்திரத்தை அடைவதற்கான முயற்சியின் முறைகளாக அந்த இயற்கை நியதிகள் இருக்கின்றன. சுதந்திரத்தை அடைவதற்காக இந்தப் பிரபஞ்சம் எங்கும் நடக்கின்ற முயற்சி, முக்தியில் நாட்டமாக மனிதனிடம் உச்சநிலை அடைகிறது.

செயல், வழிபாடு, ஞானம் என்ற மூன்று வழிகளால் அந்த முக்தியை அடையலாம்.

 1. செயல்–தொடர்ந்து, இடையீடின்றி பிறருக்கு உதவுவது, பிறரை நேசிப்பது.

ii. வழிபாடு-பிரார்த்தனை, இறைவனின் மகிமையைப் போற்றுதல், தியானம் முதலானவை.

iii. ஞானம்–தியானத்தைத் தொடர்கின்ற ஒன்று.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 7. தெய்வீக ஞானச் செய்தி 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s