4. நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல்
மனிதனின் வெளிப் பொறிகள் அமைந்துள்ள இந்த உடல் தூலவுடல் எனப் படுகிறது. சம்ஸ்கிருதத்தில் இதை ஸ்தூல சரீரம் என்பர். இதற்குப் பின்னால் தான் புலன், மனம், புத்தி, நான்- உணர்வு என்ற தொடர் அமைகிறது. இவையும் உயிர்ச் சக்திகளும் இணைந்த ஒன்றே நுண்ணுடல் அல்லது சூட்சும சரீரம். இந்தச் சக்திகள் மிக நுட்பமான அணுக்களால் ஆனவை. எத்தகைய தீங்கு ஏற்பட்டாலும் இந்தஉடம்பு அழியாத அளவுக்கு அவை நுட்பமானவை. எந்தவிதமான கேடும், அதிர்ச்சியும் சூட்சும உடலைப் பாதிப்பதில்லை.
நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப் பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப் பிக்கப் படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான்- உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை செய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்து விடும். இந்தத் தூல வுடல் அறிவற்றது. நுண்ணுடலும் அது போன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப் பொருளால் ஆக்கப் பட்டுள்ளது.
இந்த நுண்ணுடலின் ஒரு பகுதி மனம், ஒரு பகுதி புத்தி, நான் பகுதி நான்- உணர்வு.ஆனாலும் இவற்றில் எந்த ஒன்றும் ” அறிபவன்” ஆக முடியாது. இவற்றுள் எதுவும் பார்ப்பவனாக , சாட்சியாக, யாருக்காக அறிவுச் செயல் நடக்கிறதோ அவனாக, நடக்கும் செயலைப் பார்ப்பவனாக ஆக முடியாது. மனத்திலும் புத்தியிலும் நான்- உணர்விலும் ஏற்படும் இயக்கங்கள் எல்லாம் இவை அல்லாத வேறு யாருக்காகவோ தான் இருக்க வேண்டும். இவை நுட்பமான ஜடப் பொருள் அணுக்களால் ஆனவை.ஆதலால் தன்னொளி உடையவையாக இருக்க முடியாது. இவற்றின் ஒளி இவற்றிற்குச் சொந்தமானதாக இருக்க முடியாது. எடுத்துக் காட்டாக, இந்த மேஜையை எந்த ஜடப் பொருளும் உருவாக்கி யிருக்க முடியாது. எனவே இவற்றிற்கெல்லாம் பின் னால் யாரோ ஒருவர் இருக்க வேண்டும். இவரே எல்லா தோற்றங்களுக்கும் உண்மைக் காரணமானவர். உண்மையாகவே எல்லாவற்றையும் அனுபவிப்பவர். இவரையே வடமொழியில் ஆத்மன் என்கிறார்கள். இவரே மனிதனின் உண்மை ஆன்மா.
மேற்கோள்கள்:- எழுந்திரு! விழித்திரு! பகுதி 3 | ஞானயோகம் | I. வகுப்புச் சொற்பொழிவுகள் | அ. ஆரம்பநிலைப் பாடங்கள் | 4. ஆன்மா, இயற்கை, இறைவன்.
உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்துகொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை; மனமும் அத்தகையதே. எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது; என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மை களை வற்புறுத்தி நிற்கிறது. மிகவும் தடித்த அஞ்ஞானம் என்ற போர்வைகளையும் ஊடுருவி இந்த ஆன்மாவின் அழிவின்மை யும், ஆனந்தமும், அமைதியும், தெய்வீகமும் பிரகாசித்து, நாம் இவற்றை உணரும்படிச் செய்கின்றன. ஆன்மாதான் உண்மை மனிதன். அவன் பயமும் அழிவும் பந்தமும் அற்றவன்.
வெளிச் சக்தி எதுவும் பாதிக்க முடியாதபோது, எந்த மாறுதலையும் உண்டாக்க இயலாதபோதுதான் சுதந்திரம் என்பது இருக்க முடியும். எல்லா நியதிகளுக்கும், எல்லா எல்லைகளுக்கும், எல்லா விதிகளுக்கும், காரண காரியம் எல்லா வற்றிற்கும் அப்பால்தான் சுதந்திரம் என்பது இருக்க முடியும். எனவே எந்த வகை மாறுதலுக்கும் உட்படாததுதான் சுதந்திர மாகவும் அழிவற்றதாகவும் இருக்க முடியும். இருக்கின்ற இது தான் அதாவது மனிதனது உண்மைத் தத்துவம்தான் ஆன்மா. இது மாறுதல் இல்லாதது; கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. எனவே இதற்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை.
மேற்கோள்கள்:- எழுந்திரு! விழித்திரு! பகுதி 4 | மதம் | II. மதம்: தத்துவமும் மன இயலும் | 2. ஆன்மா அழிவற்றதா?.
ஒவ்வொரு மனித ஆளுமையையும் ஒரு கண்ணாடிக் கோளத்திற்கு ஒப்பிடலாம். ஒவ்வொன்றின் நடுவிலும் இறைவனிடமிருந்து வெளிப்படும் தூய வெள்ளொளி இருக்கிறது. ஆனால் கண்ணாடிகள் பல நிறங்களிலும், பல கனங்களிலும் இருப்பதால் வெளிவரும் கதிர்கள் பல்வேறு தோற்றங்களைப் பெறுகின்றன. எல்லா நடு ஒளிகளும் ஒரே மாதிரியானவை, ஒரே அழகைக் கொண்டவை. வித்தியாசமாகத் தோன்றுவதற்குக் காரணம் அது வெளிப்படுகின்ற புறக் கருவி களில் உள்ள குறைபாடுகளே. நாம் மேலே உயரஉயர, அந்தக் கருவி மேலும் தெளிவாக ஒளி வீசும் தன்மையை அடைகிறது.
மேற்கோள்கள்:- எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 | I. உலக மதங்கள் | இந்து மதம் | 2. இந்திய மதக் கருத்து.