காலச் சக்கரத்தின் ஓய்வும் சுழற்சியும்
சமநிலை இழந்த ஒரு நிலையே பிரபஞ்சம். எல்லா இயக்கங் களுமே, சமநிலை குலைந்த பிரபஞ்சம் மீண்டும் தனது சமச்சீர் நிலையை அடைவதற்காகச் செய்கின்ற போராட்டங்களே யாகும். அவை தன்னளவில் ஓர் இயக்கமாக இருக்க முடியாது. அகவுலகைப் பொறுத்தவரையில் அது எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட நிலை. ஏனெனில் எண்ணமே ஓர் இயக்கம்தான். பிரபஞ்சம் அனைத்துமே அந்த சமச்சீர்நிலையை நோக்கி விரைந்து முன்னேறுவதைக் காணும்போது, அந்த நிலையை அடைய முடியாது என்று கூற நமக்கு உரிமையில்லை. மேலும் அந்தச் சமச்சீர்நிலையில் எத்தகைய வேறுபாடுகளும் இருக்க முடியாது. அந்த நிலை ஒரே சீரானதாகவே இருக்கும். ஏனெனில் இரண்டு அணுக்கள் இருந்தால்கூட அவை ஒன்றையொன்று கவர்ந்தும் விலக்கியும் சமநிலையைக் குலைத்துவிடும். ஆகவே இந்தச் சமச்சீர்நிலை ஒருமையானது, ஓய்வுநிலையில் உள்ளது, ஒரே சீரானது.
அகவுலக மொழியில் சொல்வதானால், இந்தச் சமச்சீர் நிலை சிந்தனை அல்ல, உடம்பு அல்ல, நாம் பண்பு என்று கூறுகின்ற எதுவும் அல்ல. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் கூற முடியும்: இருப்பு, தன்னுணர்வு, ஆனந்தம் ஆகிய தன் இயல்பைத் தக்கவைத்துக் கொள்கின்ற ஒன்று அது. புறவுலகைப் போலவே இந்த நிலையும் இரண்டாக இருக்க முடியாது, ஒன்றாகத்தான் இருக்கும். நான், நீ முதலான கட்டுக்கதைகள் எல்லாம், பல்வேறு வேறுபாடுகள் எல்லாம் மறைய வேண்டும். ஏனெனில் அவை மாறுகின்ற நிலையை அதாவது மாயையைச் சேர்ந்தவை. இந்த மாறுகின்ற நிலை இப்போது ஆன்மாவில் வந்துள்ளது என்றும், ஆன்மா அதற்குமுன் சுதந்திர நிலையில் ஓய்வு நிலையில் இருந்ததையே இது காட்டுகிறது என்றும், தற்போதைய வேறு பாட்டு நிலையே உண்மைநிலை என்றும், ஒரேசீரான நிலை என்பது பண்படாத நிலை என்றும், அந்தப் பண்படாத நிலை யிலிருந்தே இந்த மாறுகின்ற நிலை தோன்றியது என்றும், மீண்டும் வேறுபாடற்ற நிலைக்குச் செல்வது சீர்கேடே என்றும் கூறலாம். ஒரேசீரான நிலை, பலபடித்தான நிலை ஆகிய இரண்டு நிலைகளே நிகழ்கின்றன; அவையும் காலம் முழு வதிலும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்று நிரூபிக்க முடியுமானால் மேற்கூறிய வாதம் சிறிதாவது மதிப்புப் பெறும். ஆனால் ஒரு முறை நிகழ்ந்தது திரும்பத்திரும்ப நிகழ்ந்தே தீரும். ஓய்வைத் தொடர்ந்து மாற்றம் ஏற்படுகிறது, அதன் விளைவு பிரபஞ்சம். ஆனால் அந்த ஓய்விற்கு முன்பு பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன; இந்த மாறுதல்களும் வேறு ஓய்வுகளால் பின் தொடரப்படும். ஓய்வு நிலை ஒன்று இருந்ததாகவும், பின்னர் வந்த மாறுதல் நிலை இனி என்றென்றும் தொடரும் என்றும் கருதுவது கேலிக்குரியது. ஓய்வு நிலை, இயக்க நிலை என்று மாறிமாறி வருவதையே இயற்கையில் ஒவ்வோர் அணுவும் காட்டுகின்றன.
இரண்டு ஓய்வுக் காலங்களுக்கு இடையே உள்ள காலமே ஒரு கல்பம். ஆனால் இந்தக் கல்ப ஓய்வு முற்றிலும் ஒரேசீரான தாக இருக்க முடியாது; அப்படியிருந்தால் எதிர்கால வெளிப்பாட்டிற்கு ஒரு முடிவு ஏற்பட்டதாக ஆகியிருக்கும். இப்போதுள்ள மாறுகின்ற நிலை, இதற்கு முன்பிருந்த ஓய்வு நிலையுடன் ஒப்பிடும்போது மிகவும் முன்னேற்றம் அடைந் துள்ளதாகக் கூறுவதும் வெறும் அபத்தமே. ஏனெனில் அது உண்மையானால் இனி வரப்போகும் ஓய்வு நிலை காலத்தால் மிகவும் வளர்ச்சி பெற்றதாகவும், இன்னும் நிறைவானதாகவும் அல்லவா இருக்கும்!
இயற்கையில் முன்னேற்றமோ விலகிச் செல்வதோ இல்லை. அது திரும்பத்திரும்பப் பழைய உருவங்களையே காட்டுகிறது. உண்மையில் நியதி என்ற சொல்லின் பொருள் இதுவே. ஆனால் ஆன்மாக்களைப் பொறுத்தவரை முன்னேற்றம் இருக்கிறது. அதாவது ஆன்மாக்கள் தங்கள் இயல்பை நெருங்குகின்றன; ஒவ்வொரு கல்பத்திலும் அவற்றுள் ஏராளமானவை இவ்வாறு சுற்றிச் சுழல்வதிலிருந்து விடுபடுகின்றன. ஆனால் தனி ஆன்மாக்கள் என்பவை பிரபஞ்சம் மற்றும் இயற்கையின் ஒரு பகுதி, அவை திரும்பத்திரும்ப வரும்போது ஆன்மாக்களும் வரவே செய்யும், தனி ஆன்மாக்களுக்கு எவ்விதச் சுதந்திரமும் இல்லை, அவ்வாறு ஆன்மா சுதந்திரம் பெற வேண்டுமானால் பிரபஞ்சமே அழிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லலாம். இதற்கு விடை என்னவென்றால், தனி ஆன்மா என்பது மாயை யின் தோற்றம், இயற்கையைவிட அது பெரிய உண்மையல்ல என்பதுதான். உண்மையில் இந்தத் தனி ஆன்மா நியதிகளுக்குக் கட்டுப்படாத பிரம்மமே, அறுதிப் பரம்பொருளே.
இயற்கையில் உண்மையென்று இருப்பவையெல்லாம் பிரம்மமே; மாயை ஏற்றப்பட்டதன் (Superimposition) காரண மாக அது இவ்வாறு பலவிதமாக அல்லது இயற்கையாகத் தோற்றமளிக்கிறது. மாயை என்பது ஒரு தோற்றம், ஆதலால் அது உண்மை என்று கூற முடியாது; ஆனால் அதுதான் இந்தத் தோற்றங்களை எல்லாம் உண்டாக்கவும் செய்கிறது. வெறும் தோற்றமான மாயை எப்படி மற்ற தோற்றங்களை உண்டாக்க முடியும்? நமது பதில் இது: உண்டாக்கப்பட்டவை அறியாமை யாக இருந்தால் அவற்றை உண்டாக்கியதும் அவ்வாறுதானே இருக்க வேண்டும்? அறிவு எப்படி அறியாமையை உண்டாக்க முடியும்?
எனவே அறியாமை, அறிவு(சார்பறிவு) என்ற இரு வழி களில் மாயை செயல்படுகிறது; இந்த அறிவு, அறியாமையை அழித்த பின்பு தானும் அழிகிறது. இந்த மாயை தன்னைத் தானே அழித்துக்கொண்ட பிறகு எஞ்சியிருப்பது எதுவோ, அதுவே பிரம்மம், சச்சிதானந்த சாரம். இயற்கையில் உண்மை யென்று இருப்பவையெல்லாம் இந்த பிரம்மமே. கடவுள், உயிர், ஜடம், அதாவது கடவுள், தன்னுணர்வுள்ள ஆன்மாக்கள், உணர்வற்ற பொருட்கள் என மூன்றுவிதமாக இயற்கை நமக்குத் தோற்றமளிக்கிறது. இவையெல்லாம் உண்மையில் பிரம்மமே, மாயையால் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. கடவுள்காட்சி தான் மிக உயர்ந்ததும், உண்மைக்கு மிக நெருங்கியதும் ஆகும். சகுணக் கடவுள்-கருத்தே மனிதனால் கொள்ள முடிந்த மிக உயர்ந்த கருத்து. எவ்வாறு இயற்கைக்குக் கூறப்பட்ட பண்பு களெல்லாம் உண்மையோ, அவ்வாறே இறைவனுக்குக் கூறப் பட்ட பண்புகளும் உண்மை . எனினும் சகுணக் கடவுள் மாயை யின்மூலமாகக் காணப்படும் பிரம்மமே என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது.
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 6. காலச் சக்கரத்தின் ஓய்வும் சுழற்சியும் |