4. இந்தியர்களின் மதம்

இந்தியர்களின் மதம்

11 ஆகஸ்டு 1894, Evening Transcript பத்திரிகைக் குறிப்பு

தியானம் என்பது ஒருவிதமான பிரார்த்தனை, பிரார்த்தனை என்பது தியானம். எதையும் சிந்திக்காமல் இருப்பதே மிக உயர்ந்த தியானம். எண்ணங்கள் எதுவுமின்றி ஒரு கணம் நம் மால் இருக்க முடியுமானால்கூட மாபெரும் ஆற்றல் உண்டாகும்.

நாம் அறிவு பெறுவதன் முழு ரகசியமும் மன ஒருமைப் பாட்டில்தான் அடங்கியுள்ளது.

இதயபூர்வமாக இறைவனை நேசிக்கும்போது ஆன்மா மிக உயர்ந்த நிலையில் வளர்கிறது. ஆன்மா என்பது மனிதனில் உள்ள சிந்தனைத் தத்துவம்; அதன் ஒரு செயல்பாடே மனம். கடவுளிலிருந்து மனிதனுக்கு உள்ள ஒரே பாதை ஆன்மா.

சில உணர்வுபூர்வமாக, சில உணர்வற்ற நிலையில் என்று எல்லா ஆன்மாக்களும் விளையாடுகின்றன.

உனது உயர்நிலை ஆன்மாவே குரு.

எப்போதும் மிக உயர்ந்ததையே தேடு. ஏனெனில் மிக உயர்ந்ததில்தான் நித்தியமான பேரானந்தம் உள்ளது. நான் வேட்டையாட வேண்டுமானால் காண்டாமிருகத்தை வேட்டை யாடுவேன், கொள்ளையடிக்க வேண்டுமானால் அரசனின் பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பேன். எப்போதும் உயர்ந்ததையே தேடு.

நீ சுதந்திரமானவன் என்பதை உணர்ந்துகொண்டால் நீ சுதந்திரமானவன். என் மனம் உலகின் ஆசைகளால் ஒருபோதும் கட்டுப்படவில்லை. நிரந்தரமான நீல வானம்போல் உள்ளேன் நான். அறிவு, இருப்பு, ஆனந்தம் இவற்றின் சாரம் நான்.

எதற்காக அழுகிறாய் என் சகோதரா? துன்பமோ துயரமோ உனக்கில்லை. எதற்காக அழுகிறாய் என் சகோதரா? மரணமோ நோயோ உனக்கில்லை. எதற்காக அழுகிறாய் என் சகோதரா? மாற்றமோ அழிவோ உனக்கில்லை. எதையும் சாராத தனி இருப்பு நீ.

[இங்கே சுவாமிஜி அவதூத கீதையிலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்தார்.]

கடவுள் யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரைப் பற்றி உனக்கு எப்படிச் சொல்ல முடியும்? கடவுள் யார் என்பது எனக்குத் தெரியாது, அப்போது அவரைப்பற்றி உனக்கு எப்படிச் சொல்ல முடியும்? ஆனால் என் சகோதரா நீயே அவர். நீயே அவர் என்பதை உணரவில்லையா? அவரை இங்கும் அங்கும் ஏன் தேடுகிறாய்? எதையும் தேடாதே, அதுவே கடவுள். நீ நீயாக இரு. விளக்கவோ விவரிக்கவோ முடியாத ஒருவரை, நமது இதயத்தின் ஆழங்களில் மட்டுமே உணரக்கூடிய, எல்லா ஒப்புமைகளுக்கும் எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட, நீல வானம்போல் மாற்றம் இல்லாத ஒருவரைத் தேடு. வேறு எதையும் தேடாதே.

தூயவனே! இயற்கையின் மாற்றங்கள் எதுவும் எட்டாத, எல்லா சிந்தனைகளும் கடந்த சிந்தனையை, மாற்றம் இல்லாத அசைவு இல்லாத ஒருவரை, எல்லா சாஸ்திரங்களும் யாரைப் போற்றுகின்றனவோ யாரை எல்லா ரிஷிகளும் வழிபடுகின்றனரோ அவரை மட்டுமே தேடு. வேறு எதையும் தேடாதே.

எல்லா ஒப்புமைகளையும் கடந்தது எல்லையற்ற ஒருமை. அங்கே எந்த ஒப்புமையும் சாத்தியம் இல்லை. மேலே தண்ணீர், கீழே தண்ணீர், வலது பக்கம் தண்ணீர், இடது பக்கம் தண்ணீர், சிற்றலையோ பேரலையோ எதுவும் இல்லை. எல்லாம் அமைதி, எல்லாம் ஆனந்தம். அந்த நிலை உன் இதயத்தில் உணரப்படும். வேறு எதையும் தேடாதே.

நீயே எங்கள் தந்தை, நீயே எங்கள் தாய், நீயே எங்கள் அன்பு நண்பன், உலகின் சுமையை நீயே தாங்குகிறாய். எங்கள் வாழ்க்கையின் சுமையை நாங்கள் தாங்கிக்கொள்ள எங்களுக்கு உதவுவாய். நீயே எங்கள் நண்பன், எங்கள் அன்பன், எங்கள் தலைவன், நீயே நாங்கள்.

நான்கு விதமான மக்கள் கடவுளை வழிபடுகிறார்கள். சில ருக்கு உலகின் இன்பங்கள் தேவை. சிலருக்குப் பணம் வேண்டும், சிலருக்கு மதம் வேண்டும். சிலரோ கடவுளை நேசிப்பதற்காக மட்டுமே அவரை வழிபடுகிறார்கள். அன்பிற்காக அன்பு என்பதே உண்மை அன்பு. உடல்நலமோ, பணமோ, நல்ல வாழ்க்கையோ, முக்தியோ எதுவும் எனக்கு வேண்டாம். என்னை ஆயிரம் நரகங்களுக்கு வேண்டுமானாலும் அனுப்பு, ஆனால் உன்னை அன்பிற்காக மட்டுமே அன்பு செய்ய அருள்புரி. பேரரசியான மீராபாய் அன்பிற்காக அன்பு என்ற கோட் பாட்டைப் போதித்தாள்.

எல்லையற்ற மனக்கடலில் ஒரு சிறுபகுதியே நமது மனம். இதில் கட்டுப்பட்டுவிடக் கூடாது.

ஆன்ம வளர்ச்சிக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் தேவை முதலில் மனிதப் பிறவி, இரண்டாவது மிக உயர்ந்ததை அடைவதற்கான தாகம், மூன்றாவது ஒரு மகானின் தொடர்பு. அந்த மகான் மிக உயர்ந்ததை அடைந்தவராக இருக்க வேண்டும். அவரது மனம், சொல், செயல் எல்லாம் தர்மத்தின் அமுதத்தைப் பொழிவதாக இருக்க வேண்டும். உலகிற்கு நன்மை செய்வது ஒன்றிலேயே அவர் இன்பம் காண வேண்டும். பிறரிடம் உள்ள கடுகளவு நல்லதையும் மலையளவாக அவர் காண வேண்டும். இவ்வாறு தானும் வளர்ந்து பிறரும் வளர அவர் உதவ வேண்டும். அவரே மகான்.

‘யோகம்’ என்பது மூலச்சொல். அதிலிருந்து வந்ததே Yoke எனப்படும் சொல், இதன் பொருள் இணைத்தல் என்பது ஆகும். எனவே யோகம் என்பது நம்மைக் கடவுளுடன் இணைப்பது, நம்மை நமது உண்மையான ஆன்மாவுடன் இணைப்பது என்று பொருள்படுகிறது.

அனிச்சையாக அல்லது நாம் உணராமலே இப்போது நடைபெறுகின்ற எல்லா செயல்களும் முன்பு நமது உணர் வுடன் நடைபெற்றவை. இந்த அனிச்சைச் செயல்களைப் பற்றி முழுமையாக அறிவதே நமது முதற்படி. அதாவது அவற்றிற்குப் புத்துயிர் ஊட்டுவது, அனிச்சைச் செயல்கள் அனைத்தையும் நமது விருப்பப்படிச் செய்யவைப்பது, அவற்றை உணர்வுக்குக் கொண்டுவருவது என்பதே இதன் உண்மைக் கருத்து.

பல யோகிகளால் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்த முடியும். நமது உணர்வின் ஆழங்களில் மூழ்கி, நாம் ஏற்கனவே மறந்துவிட்ட விஷயங்களை வெளியில் கொண்டுவருவது சாதாரண ஆற்றலுக்கு உட்பட்டது. இந்த ஆற்றலை நாம் வளர்க்க முடியும். எல்லா அறிவையும் நமது அகவுணர்வி லிருந்தே கொண்டுவர முடியும். இதுவே யோகம். நமது செயல் களுள் பெரும்பாலானவை அனிச்சைச் செயல்கள், அதாவது நமது உணர்வுக்குக் கீழே நடைபெறுபவை. அனிச்சைச் செயலின் இருப்பிடம் மூளையின் பின்பகுதியும், தண்டுவடத் திற்குக் கீழ்ப்ப குதியும் ஆகும்.

நமது அகவுணர்வுக்கு உள்ளே செல்வது எப்படி என்பதே கேள்வி. கடவுள், ஆன்மா, மனம், உடம்பு என்ற வரிசையில் நாம் வெளிவந்தோம். இப்போது எதிர்வரிசையில் உள்ளே செல்ல வேண்டும். முதலில் பிராணனைப் பற்றிக்கொள்ள வேண்டும், பின்னர் நரம்பு மண்டலம், பின்னர் மனம், பிறகு ஆன்மா, பிறகு கடவுள் என்ற வரிசையில் செல்ல வேண்டும். இந்த முயற்சியில் மிக உயர்ந்ததை மட்டுமே நாம் நாட வேண்டும்.

மன ஒருமைப்பாடு என்பதே நியதி. முதலில் எல்லா நரம்பு ஆற்றல்களையும், நமது உடம்பின் அணுக்கள் (Cells) ஒவ்வொன் றிலும் உள்ள எல்லா ஆற்றல்களையும் ஒருமைப்படுத்தி, நாம் விரும்புகின்ற பொருளின்மீது செலுத்துவதே முதற்படி. பிறகு இன்னும் நுண்மையான மனத்தை ஒரு மையத்தில் கொண்டு வர வேண்டும். நமது மனம் பல அடுக்குகளால் ஆனது. ஒருமைப்படுத்தப்பட்ட நரம்பு ஆற்றலைத் தண்டுவடத்தின் (சுழுமுனை) வழியாகச் செலுத்தும்போது ஓர் அடுக்கு திறக் கிறது. வழியிலுள்ள ஒரு மையத்தில் (சக்கரம் அல்லது தாமரை) அந்த ஆற்றலை ஒருமைப்படுத்தப்படும்போது மற்றோர் உலகம் விரிகிறது. இவ்வாறு அந்த ஆற்றல் மூளையின் நடுவிலுள்ள பீனியல் சுரப்பியை (Pineal gland) அடைவதுவரை ஒவ்வோர் உலகமாக விரிந்துகொண்டே போகிறது. இயங்கா ஆற்றலின் (Potential Energy) இருப்பிடம் இதுவே. செயல், செயலற்ற நிலை இரண்டிற்கும் ஆதாரம் இதுவே.

உலகின் எல்லா அனுபவங்களையும் இந்தப் பிறவியிலேயே பெற்று முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்க வேண்டும். இந்தப் பிறவியில், இந்தக் கணத்திலேயே நிறைநிலை அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொள்ள வேண்டும். எதையும் இந்தக் கணத்திலேயே செய்து முடிப்பவனிடம்தான் வெற்றி வந்துசேர்கிறது. ‘என்ன நடந் தாலும் சரி, நான் நம்பிக்கை இழக்க மாட்டேன்’ என்று கூறு பவன்தான் அதனை அடைகிறான். இந்தக் கணத்திலேயே எல்லாவற்றையும் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத் துடன் செயல்படுங்கள். கடினமாகப் போராடியும் உங்களுக்கு வெற்றி கிடைக்காவிட்டால் உங்கள்மீது தவறில்லை. உலகம் உங்களைப் புகழட்டும், அல்லது உங்கள் மீது குற்றம் சுமத்தட்டும்; உலகின் செல்வங்கள் எல்லாம் உங்கள் காலடியில் வந்து சேரட்டும், அல்லது நீங்கள் உலகிலேயே மிகவும் ஏழை யாக ஆக நேரட்டும்; மரணம் இப்போதே வரட்டும், அல்லது நூறு வருடங்கள் கழிந்து வரட்டும் – நீங்கள் எடுத்துக்கொண்ட பாதையிலிருந்து விலகாதீர்கள்.

எல்லா நற்சிந்தனைகளும் அழிவற்றவை. அவைதான் புத்தர் களையும் ஏசுநாதர்களையும் உருவாக்குகின்றன.

நியதி என்பது மனத்தில் வந்துசேர்கின்ற பல்வேறு எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழி மட்டுமே. நிகழ்ச்சிகளைக் கிரகித்து, அவற்றை ஒருங்கிணைப்பதற்கான உங்கள் வழியே நியதி. வேறுபாட்டில் ஒருமையைக் காண்பதே எல்லா நியதிகளின் நோக்கம். பௌதீக, மன, ஆன்மீக தளங் களில் மனத்தை ஒருமைப்படுத்துவதுதான் அறிவு பெறுவதற் கான ஒரே வழி. பன்மையில் ஒருமையைக் காண்பதற்காக மன ஆற்றல்களை ஒருமைப்படுத்துவதே அறிவு எனப்படுகிறது.

ஒருமையை நோக்கி இட்டுச் செல்பவை அனைத்தும் ஒழுக்கத்திற்கு உட்பட்டவை. பன்மையை நோக்கி அழைத்துச் செல்பவை அனைத்தும் ஒழுக்கக்கேடானவை. இரண்டற்ற ஒன்றை அறியுங்கள், அதுவே நிறைநிலை. எங்கும் வெளிப்பட்டு நிற்கின்ற ஒன்றே பிரபஞ்சத்திற்கு அடிப்படையாக உள்ளது; எல்லா மதங்களும், எல்லா அறிவும் இந்த மையத்தை அடைந்தே யாக வேண்டும்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 4. இந்தியர்களின் மதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s