இந்திய மதக் கருத்து
ப்ரூக்ளின், 30 டிசம்பர் 1894
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அளவில் பாதியே இருந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகை இருபத்தொன்பது கோடியாகும். மூன்று மதங்கள் அங்கே ஆட்சி செலுத்துகின்றன. அவை இஸ்லாம், பௌத்தம், இந்து மதங்கள். முதலாவதைச் சுமார் ஆறுகோடி பேரும், இரண்டாவதைத் தொண்ணூறு லட்சம் பேரும், கடைசியை இருபது கோடியே அறுபது லட்சம் பேரும் பின்பற்றுகின்றனர்.
இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள் வேத நூல் தொகுப்பி லுள்ள தியானமயமான, சிந்தனைமயமான தத்துவங்கள், மற்றும் நீதிநெறிக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. பிரபஞ்சம் பரப்பைப் பொறுத்தவரை எல்லையற்றது, காலத்தைப் பொறுத்தவரை என்றும் இருப்பது என்று வேதங்கள் வலியுறுத்துகின்றன. வேதங்களுக்குத் தொடக்கம் இருந்ததில்லை, முடிவும் ஒருபோதும் இருக்காது. ஆன்மாவின் சக்தி ஜடப்பொருள் தளத்தில், எல்லையற்ற பரம்பொருளின் ஆற்றல் எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில் கணக்கிலடங்காத வகைகளில் வெளிப்பட்டுள்ளன. அந்த எல்லையற்ற ஆன்மா தானே இருப்பது, என்றும் இருப்பது, மாறாதது. கழிந்து செல்லும் காலம், என்றென்றும் உள்ளதான அந்தக் கடிகாரத் தின் முகத்தில் எந்த அடையாளத்தையும் ஏற்படுத்துவதில்லை. மனித அறிவால் புரிந்துகொள்ள முடியாத, புலன்களுக்கு அப்பாற்பட்ட அந்தப் பகுதியில் இறந்தகாலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது.
மனிதனின் ஆன்மா அழியாதது என்று வேதங்கள் போதிக் கின்றன. வளர்ச்சி மற்றும் அழிவு நியதிகளுக்கு உட்பட்டது உடல். எது வளர்கிறதோ அது அழிந்தேயாக வேண்டும். ஆனால் உள்ளே இருக்கும் ஆன்மாவோ எல்லையற்றதோடும், என்றுமுள்ள வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்டது. அதற்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் ஒருநாளும் இருக்காது. இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களிடையே உள்ள முக்கியமான வித்தியாசங்களுள் ஒன்று என்னவென்றால், மனிதன் பிறப்பது தான் அவனது ஆன்மாவின் ஆரம்பம் என்று கிறிஸ்தவ மதம் சொல்கிறது; ஆனால் இந்து மதமோ மனித ஆன்மா அழிவற்ற பரம்பொருளிலிருந்து வந்தது, எப்படிக் கடவுளுக்கு ஆரம்பம் கிடையாதோ அதேபோல் ஆன்மாவிற்கும் ஆரம்பம் இல்லை என்று கூறுகிறது. அது ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவிக்குச் செல்லும்போது, ஆன்மீகத்தின் மாபெரும் பரிணாம விதிப்படி, எண்ணற்ற விதமாக வெளிப்படுகிறது; வெளிப்படும். கடைசியில் நிறைநிலையை அடைந்தபிறகு ஒரு மாற்றமும் இருக்காது.
அப்படியானால் நமக்கு ஏன் முற்பிறவிகளின் நினைவு இல்லை என்று அடிக்கடி கேட்கப்படுகிறது. அதற்கான விளக்கம் இதோ: மனக் கடலின் மேல்பாகம் மட்டும்தான் உணர்வுப் பகுதி. அதன் அடியாழங்களில் இன்பம் தருபவையும் வேதனை மிக்கவையுமான நமது எல்லா அனுபவங்களும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. மனித ஆன்மா நிலையான ஒன்றைக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறது. மனமும் உடலும், ஏன் இயற்கையின் எல்லாமே தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. மாறாத ஒன்றை, நிரந்தரமான நிறைநிலையை அடைந்துவிட்ட ஒன்றைக் காண்பதுதான் நமது ஆன்மாவின் மிக உயர்ந்த நோக்கமாக உள்ளது. அதனால்தான் மனித ஆன்மா எல்லையற்றதைத் தேடுகிறது. நம்முடைய ஒழுக்கமும், அறிவு வளர்ச்சியும் நுண்மையாகின்ற அளவுக்கு, அந்த மாறாத, அழிவற்ற ஒன்றை அடைவதற்கான ஆவலும் வலுவாக இருக்கும்.
ஐம்புலன்களால் அறியப்படாதவை எல்லாம் உண்மையில் இல்லை , மனிதன் ஒரு தனி நபர் என்று நினைப்பதே மனமயக்கம் என்று தற்கால பௌத்தர்கள் கூறுகிறார்கள். அதற்கு மாறாக, ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி நபர் என்றும், புற உலகம் அவனது மனத்தின் படைப்பு, அதற்கு வெளியில் இல்லை என்றும் லட்சியவாதிகள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு என்னவென்றால், இயற்கை என்பது சார்பின்மைசார்பு, உண்மை -லட்சியம் இவற்றின் கலப்பு என்பதாகும். நமது மனமும் உடலும் புற உலகைச் சார்ந்துள்ளன; அந்தச் சார்பு அவற்றின் தொடர்பின் தன்மையைப் பொறுத்து மாறு கிறது. கடவுள் சுதந்திரமாக இருப்பதுபோல் உள்ளுறையும் ஆன்மா சுதந்திரமாக இருக்கிறது. அது நம் மனம், உடல் இவற்றின் இயக்கங்களை, அவற்றின் வளர்ச்சிக்கேற்ப, அதிக மாகவோ குறைவாகவோ கட்டுப்படுத்தக் கூடியது.
பாம்பு மரணம் என்பது ஒரு நிலைமாற்றம், அவ்வளவுதான். மரணத்திற்குப் பின்னரும் அதே பிரபஞ்சத்தில், முன்னைய அதே நியதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறோம். அப்பாற் பட்ட நிலையை அடைந்து அழகிலும் அறிவிலும் மேலான நிலையை எய்தியவர்கள், தங்களைப் பின்தொடர்ந்து வருகின்ற ஒரு மாபெரும் படையின் முன்னால் செல்லும் காவலர்களே. மிகமிக உயர்ந்தோரின் ஆன்மாவும், மிகமிக இழிந்தோரின் ஆன்மாவும் தொடர்புடையவை, எல்லோரிலும் எல்லை யற்ற பூரணத்துவத்தின் கரு உள்ளது. இன்பநோக்கு மனப்பான்மையையும், எல்லோரிடமும் நல்லதையே பார்க்கும் பாங்கையும் நாம் வளர்க்க வேண்டும். நமது மனத்திலும் உடம்பிலும் உள்ள குறைபாடுகளை நினைத்து, நாம் உட்கார்ந்து அழுவதில் எந்த லாபமும் இல்லை. பிரதிகூலமான சூழ்நிலை களை அடக்குகின்ற வீர முயற்சியே நம் ஆன்மாவை மேலே கொண்டுசெல்லும். ஆன்மீக முன்னேற்றத்தின் விதிகளை அறிவதே வாழ்வின் குறிக்கோள். கிறிஸ்தவர்கள் இந்துக்களிட மிருந்தும் இந்துக்கள் கிறிஸ்தவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம். உலகின் அறிவொளிக்கு இரண்டுபேரும் உயர்ந்த கருத்துக்களை வழங்கியுள்ளனர்.
உண்மையான மதம் ஆக்கபூர்வமானது, எதிர்மறையானது அல்ல; தீமை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, தொடர்ந்து உயர்ந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்று உங்கள் பிள்ளைகளின் மனத்தில் பதிய வையுங்கள். மனிதர் களின் போதனைகளிலிருந்தோ, நூல்களைப் படிப்பதாலோ உண்மை மதம் வருவதில்லை; தூய்மையான வீரச் செயல்களின் காரணமாக நம்முள் உள்ள ஆன்மா விழித்தெழும்போதுதான் அது உருவாகிறது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் தான் முற்பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தைக் கூடவே கொண்டுவருகிறது. அதன் உடல் அமைப்பிலும் மன அமைப்பிலும் அந்த அனுபவத்தின் தாக்கத்தைக் காண முடியும். ஆனால் நம் எல்லோரிடமும் உள்ள சுதந்திர உணர்ச்சி, நம்மிடம் உடலையும் மனத்தையும் தவிர வேறு ஒன்று உள்ளது என்பதைக் காட்டுகிறது. உள்ளே ஆட்சி செய்யும் ஆன்மா சுதந்திரமானது, அதுதான் சுதந்திர தாகத்தை எழுப்புகிறது. நாம் சுதந்திரர்களாக இல்லாவிட்டால் உலகை எப்படி முன்னேற்ற முடியும்? மனித ஆன்மாவினுடைய செயல்பாடுகளின் விளைவே மனித முன் னேற்றம் என்று நாங்கள் சொல்கிறோம். உலகின் நிலைமையும் நம் நிலைமையும் ஆன்ம சுதந்திரத்தின் விளைவுகளே.
கடவுள் ஒருவரே என்று நாங்கள் நம்புகிறோம். அவர் நம் எல்லோருக்கும் தந்தை, அவர் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லையற்ற அன்புடன் அவர் தமது குழந்தைகளைக் காப்பாற்றுகிறார், வழி நடத்துகிறார். கிறிஸ்தவர்களைப் போலவே நாங்கள் சகுணக் கடவுளை நம்புகிறோம்; ஆனால் இன்னும் மேலே சென்று அவரே நாங்கள் என்று நம்புகிறோம். அவரது ஆளுமை எங்களில் வெளிப்பட்டுள்ளது, அவர் எங்களில் இருக்கிறார், நாங்கள் அவரில் இருக்கிறோம் என்று நம்புகிறோம். எல்லா மதங்களிலும் உண்மையின் கரு இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்து அவை எல்லாவற்றிற்கும் தலைவணங்குகிறான். ஏனெனில் விலக்குவதால் அல்ல, இணைப்பதால்தான் இந்த உலகில் உண்மையைப் பெற முடியும். மாறுபட்ட மதங்களான அழகிய மலர்களைச் செண்டாகத் தொடுத்து, அதைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க நாங்கள் விரும்பு கிறோம். வெகுமதியை எதிர்பார்த்து அல்ல, அன்பிற்காகவே கடவுளிடம் அன்பு செலுத்த வேண்டும் வெகுமதிக்காக அல்ல, கடமைக்காகக் கடமை செய்ய வேண்டும்; வெகுமதிக்காக அல்ல, அழகிற்காக அழகை வழிபட வேண்டும். இப்படி நம் இதயம் தூய்மை பெற்றதும் நாம் கடவுளைக் காண்போம். பலியிடுவதும், முழந்தாளிடுவதும், முணுமுணுப்பதும், ஓது வதும் மதம் ஆகாது. மாபெரும் வீரச் செயல்களைத் துணிந்து செய்வதற்கும், தெய்வீக நிறைநிலையைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு நம் சிந்தனைகளை உயர்த்துவதற்கும் தூண்டுமானால் இவை பயனுள்ளவைதான்.
நம் பிரார்த்தனைகளில் கடவுள் நம் எல்லோருக்கும் தந்தை என்று ஒப்புக்கொண்டுவிட்டு, தினசரி வாழ்க்கையில் மற்றவர் களை நம் சகோதரர்கள்போல் நடத்தாவிட்டால் என்ன பயன்? உயர் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்காகத்தான் நூல்கள் உள்ளன, அந்த வழியில் நாம் தளராமல் செல்லாவிட்டால் ஒரு நன்மையும் கிடையாது. ஒவ்வொரு மனித ஆளுமையையும் ஒரு கண்ணாடிக் கோளத்திற்கு ஒப்பிடலாம். ஒவ்வொன்றின் நடுவிலும் இறைவனிடமிருந்து வெளிப்படும் தூய வெள்ளொளி இருக்கிறது. ஆனால் கண்ணாடிகள் பல நிறங்களிலும், பல கனங்களிலும் இருப்பதால் வெளிவரும் கதிர்கள் பல்வேறு தோற்றங்களைப் பெறுகின்றன. எல்லா நடு ஒளிகளும் ஒரே மாதிரியானவை, ஒரே அழகைக் கொண்டவை. வித்தியாசமாகத் தோன்றுவதற்குக் காரணம் அது வெளிப்படுகின்ற புறக் கருவி களில் உள்ள குறைபாடுகளே. நாம் மேலே உயரஉயர, அந்தக் கருவி மேலும் தெளிவாக ஒளி வீசும் தன்மையை அடைகிறது.
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 2. இந்திய மதக் கருத்து |