இந்து மதம்
ப்ரூக்ளின், 3 டிசம்பர் 1894; Brooklyn Standard Union என்ற பத்திரிகையில் வெளிவந்த சொற்பொழிவுச் சுருக்கம்
கற்பதுதான் எனது மதம். உங்கள் பைபிளுடன் ஒப்பிட்டுப் படிக்கும்போது நான் என் வேதத்தை நன்றாகப் படிக்க முடிகிறது; எனது மதத்தில் உள்ள இருட்டான தீர்க்க தரிசனங்கள், உங்கள் தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களுடன் ஒப்பிடும்போது ஒளியுடன் விளங்குகின்றன. உண்மை எப் போதும் பிரபஞ்சம்தழுவியதாகவே உள்ளது. உங்கள் அனைவர் கைகளிலும் ஐந்து விரல்கள் இருக்கும்போது, என் கையில் மட்டும் ஆறு விரல்கள் இருந்தால், என் விரல்கள் இயற்கையின் நியதி என்று நினைக்க மாட்டீர்கள்; அவை அசாதாரண மானவை, நலம் குறைந்தவை என்றுதான் நினைப்பீர்கள். மதத் தின் விஷயமும் இதுதான். ஒரு மதம் மட்டுமே உண்மையானது, மற்றவை எல்லாம் பொய் என்றால், அந்த ஒரு மதம் நோய் பிடித்தது என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஒரு மதம் உண்மை என்றால் மற்ற மதங்களும் உண்மைதான். ஆகவே இந்து மதம் உங்களுக்கும் சொந்தம், எனக்கும் சொந்தம். இந்தியாவில் உள்ள இருபத்தொன்பது கோடி மக்களில் இருபது லட்சம் பேர்தான் கிறிஸ்தவர்கள், ஆறு கோடிப்பேர் முகமதி யர்கள், மற்ற அனைவரும் இந்துக்கள்.
புராதனமான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தை உருவாக்கினார்கள். ‘வித்’ என்றால் ‘அறிவது’ என்று பொருள். அதிலிருந்துதான் வேதம் என்ற சொல் உருவானது. பல நூல்களில் தொகுப்பே வேதங்கள். எல்லா மதங்களின் சாரமும் இந்த நூலில் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்; ஆனால் அவற்றில் மட்டும்தான் உண்மை இருக்கிறது என்பது எங்கள் கருத்து அல்ல. ஆன்மா அழிவற்றது என்பதை அவை போதிக்கின்றன. ஒரு சமச்சீர்நிலையை, மாறாத ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்னும் ஆசை ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இயல்பாகவே இருக்கிறது. மாறாத ஒன்றை இயற்கையில் நாம் காண முடியாது. ஏனெனில் இந்தப் பிரபஞ்சம் எண்ணற்ற மாறுதல்களின் தொகுதி என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல. ஆனால் அதை வைத்துக் கொண்டு, மாறாதது எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருவது, பௌத்தர்களின் தென் பிரிவினரும் சார்வாகர்களும் செய்த தவறைச் செய்வதாகும். எல்லாம் ஜடப்பொருள்தான், மனம் என்று ஒன்றும் கிடையாது, எல்லா மதங்களுமே ஏமாற்று வித்தை, ஒழுக்கம் நற்பண்பு போன்றவை எல்லாம் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்று சார்வாகர்கள் கருதினர்.
மனிதன் ஐம்புலன்களால் கட்டப்பட்டவன் அல்ல என்று வேதாந்தத் தத்துவம் கற்பிக்கிறது. புலன்களுக்கு நிகழ்காலம் ஒன்றுதான் தெரியும்; எதிர்காலமோ இறந்தகாலமோ தெரியாது. ஆனால் நிகழ்காலம் என்று ஒன்று இருந்தால் இறந்தகாலமும் எதிர்காலமும் இருக்க வேண்டும். இவை மூன்றும் காலத்தின் நிர்ணயங்கள். புலன்களுக்கு அப்பால் உள்ள, காலத்தைச் சார்ந் திருக்காத, இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்காலத் தில் இணைப்பதான ஒன்று இல்லாவிட்டால் நிகழ்காலமும் நமக்குத் தெரியாமல் போயிருக்கும்.
அப்படி எதையும் சாராத, சுதந்திரமானது எது? நம் உடம்பு அல்ல, ஏனெனில் அது புற நியதிகளைச் சார்ந்தது; நம் மனம் அல்ல, ஏனெனில் அதில் உள்ள எண்ணங்கள் ஏதோ காரணத்தினால் உண்டான சேர்க்கைப் பொருள். அது நமது ஆன்மாதான். இந்த உலகம் தனித்ததும் சார்ந்ததும் கலந்தது; சுதந்திரமும் அடிமைத்தனமும் கலந்தது. ஆனால் இவற்றின் ஊடே சுதந்திரமானதும், அழிவில்லாததும், பரிசுத்தமானதும், பரிபூரணமானதும், புனிதமானதுமான ஆன்மா பிரகாசிக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. அது சுதந்திரமானதாக இருந் தால் அழிய முடியாது. ஏனெனில் அழிவு என்பது ஒரு மாற்றமே தவிர வேறல்ல; அது புற நியதிகளைப் பொறுத்தது. சுதந்திரமான தாக இருந்தால் அது பரிபூரணமாக இருக்க வேண்டும். ஏனெனில் பரிபூரணமற்ற தன்மை ஒரு நியதி; எனவே அது இன்னொன்றைச் சார்ந்தது. இந்த அழிவற்ற, பரிபூரண ஆன்மா மிக உயர்ந்த கடவுளிலும் மிகத் தாழ்ந்த மனிதனிலும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். அவர்களிடையே உள்ள வேறுபாடு இந்த ஆன்மா வெளிப்படும் அளவைப் பொறுத்தது மட்டுமே.
ஆன்மா ஏன் ஓர் உடலில் உறைய வேண்டும்? என்னை நானே பார்க்க வேண்டுமானால் கண்ணாடி ஒன்று வேண்டும் அல்லவா? அதுபோல்தான் ஆன்மா உடம்பில் பிரதிபலிக்கிறது. இந்த ஆன்மாவே கடவுள். ஒவ்வொரு மனிதனிலும் பூரண தெய்வீகம் உள்ளது, ஒவ்வொருவரும் இந்தத் தெய்வீகத்தை விரைவிலோ தாமதித்தோ வெளிப்படுத்தியேயாக வேண்டும். நான் ஓர் இருட்டறையில் இருந்தால் அதை எவ்வளவுதான் கண்டனம் செய்தாலும் இருள் விலகாது, ஒரு தீக்குச்சியைக் கொளுத்த வேண்டும். அதுபோல் எவ்வளவுதான் முனகினாலும் அழுதாலும் பூரணமற்ற உடல் பூரணமாகி விடாது. எனவே உங்கள் ஆன்மாவை அழையுங்கள், உங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள் என்று வேதாந்தம் போதிக்கிறது. ‘நீங்கள் தெய்வீகமானவர்கள்; மதம் என்பது ஓர் ஆக்கபூர்வமான காரியம், எதிர்மறையான அபத்தம் அல்ல; கொடுமையில் புலம்பிக் கொண்டிருப்பதல்ல, விரிவும் வெளிப்பாடுமே அது’ என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
ஒவ்வொரு மனிதனின் நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுடைய இறந்தகாலத்தினால் பாதிக்கப்படுகின்றன, இறந்தகாலத்தின் விளைவுதான் நிகழ்காலம் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. பாரம்பரியத்தினால் வந்தது என்று சொல்ல முடியாத சில அனுபவங்களுடன் எப்படி ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறது? எப்படி ஒருவன் நல்ல பெற்றோர் களுக்குப் பிறந்து, நல்ல கல்வி பெற்று, நல்ல மனிதன் ஆகிறான்? எப்படி இன்னொருவன் தீய பெற்றோர்களுக்குப் பிறந்து, இறுதியில் தூக்குமேடை ஏறுகிறான்? கடவுளைச் சம்பந்தப்படுத் தாமல் இந்த வேறுபாடுகளை எப்படி விளக்குவீர்கள்? கருணைக் கடலான பிதா தன் குழந்தையை ஏன் துயரத்தை விளைவிக்கும் சூழ்நிலையில் வைக்க வேண்டும்? பின்னால் அவர் சரிக்கட்டி விடுவார் என்று சொல்வது விளக்கமாகாது அவரிடம் இனாம் தரப் பணம் எதுவுமில்லை . இதுதான் என்னுடைய முதல் பிறவி என்றால் என் சுதந்திரம் என்னாவது? பழைய பிறவியின் எந்த அனுபவமும் இல்லாமல் பிறப்பதானால் என் பாதை பிறரது அனுபவங்களைக் கொண்டதாகத்தானே அமையும். என் விதியை நான் உருவாக்க முடியாவிட்டால் நான் சுதந்திரன் அல்ல. ஆகவே இந்தப் பிறவியில் என் துன்பங்களுக்கு நான்தான் பொறுப்பு என்று ஒப்புக்கொள்கிறேன், முற்பிறவிகளில் செய்த தவறுகளை இந்தப் பிறவியில் சரிசெய்து விடுவேன் என்றும் சொல்கிறேன். ஆன்மாவுக்குப் பல பிறவிகள் உள்ளன- எங்கள் தத்துவம் இது. இன்னொரு பிறவியின் அனுபவத்துடன் இப்போது பிறந்திருக்கிறோம்; இந்தப் பிறவியில் நமது நலமும் கேடும் முந்தைய பிறவியின் வினைப்பயன். இந்த வாழ்க்கையில் செய்கின்ற வினைகளின் பலன் அடுத்த பிறவியை நிர்ணயிக் கிறது. இவ்வாறு நாம் தொடர்ந்து முன்னேறி கடைசியில் நிறைநிலையை அடைகிறோம்.
பிரபஞ்சத்தின் தந்தையான, எல்லையற்றவரான, எல்லாம் வல்லவரான கடவுளை நாங்கள் நம்புகிறோம். ஆனால் நம் ஆன்மா கடைசியில் நிறைநிலையை அடையுமானால் அதுவும் எல்லையற்றதாக ஆக வேண்டும். ஆனால் எல்லையற்ற, நிபந்தனைகளற்ற இரண்டுபேர் இருக்க முடியாது. ஆகவே ஒரு சகுணக் கடவுளை ஏற்றுக் கொள்கிறோம், அந்தக் கடவுள் நாமே.
ஒவ்வொரு மதமும் இந்த மூன்று நிலைகளிலும் இருக்கிறது. முதலில் கடவுள் எங்கோ தொலைவில் இருக்கிறார் என்று நினைக்கிறோம்; பிறகு அவரை நெருங்குகிறோம், அவர் எங்கும் நிறைந்தவர் என்று கற்பிக்கிறோம், இதன்மூலம் நாம் அவரில் வாழ்வதை உணர்கிறோம். இறுதியில் நாமே அவர் என்பதைப் புரிந்து கொள்கிறோம். கடவுளைப் புறப்பொருளாகக் கொள்வது உண்மைக்குப் புறம்பானதல்ல; சொல்லப்போனால் கடவுளைப் பற்றிய ஒவ்வொரு கருத்தும் உண்மை , அதனால் ஒவ்வொரு மதமும் உண்மை; ஏனெனில் ஒவ்வொன்றும் பயணத் தின் வெவ்வேறு நிலைகள். வேதம் கண்ட பூரணமான இலக்கே இந்தப் பயணத்தின் குறிக்கோள். மிகத் தாழ்ந்த காட்டுமிராண்டி மதங்களிலிருந்து, மிகஉயர்ந்த அறுதிநிலைக் கருத்து வரையில் உள்ள எல்லாமே எல்லையற்ற பரம்பொருளை உணர்ந்து அறிவதற்காக ஆன்மா செய்கின்ற முயற்சிகள், ஒவ்வொரு மதமும் அதனதன் பிறப்பையும் சூழ்நிலையையும் பொறுத்ததாக உள்ளது. முன்னேற்றப் பாதையில் அவை யாவும் ஒவ்வொரு படியைக் குறிக்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். அதனால் இந்துக்களாகிய நாங்கள் மற்ற மதங்களைச் சகித்துக்கொள் வது மட்டும் அல்ல, ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறோம்; முகமதியரின் மசூதியில் தொழுகிறோம், சொராஸ்டிரியரின் அக்கினிக்கு முன்னால் வணங்குகிறோம், கிறிஸ்தவரின் சிலுவைக்கு முன்னால் முழந்தாளிடுகிறோம். இந்த மதங்களான மலர்களை அன்பு நூலால் தொடுத்து, வழிபாட்டிற்கான ஓர் அற்புதமான மாலை அமைக்கின்றோம்.
நான் கடவுள் என்றால், என் ஆன்மா அந்தக் கடவுள் உறையும் கோயில்; எனது ஒவ்வோர் அசைவும் அவருடைய வழிபாடு-பிரதிபலனைக் கருதாமலும், தண்டனைக்கு அஞ்சாமலும், அன்பிற்காகவே அன்பு மலர வேண்டும்; கடமைக் காகக் கடமை திகழ வேண்டும். ஆகவே எங்கள் மதம் விரிவைச் சுட்டி நிற்கிறது; விரிவு என்றால் வெறும் சொற்களை முணு முணுப்பதல்ல, மண்டியிட்டுத் தொழுவதுமல்ல; அது அனுபூதி, நிறைநிலை. மனிதன் தெய்வமாக வேண்டும்; தெய்வீகத்தை மேன்மேலும் உள்ளே உணர்ந்து இடைவிடாது முன்னேற வேண்டும்.
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 1. இந்து மதம் |