நமது குருநாதரும் அவரது செய்தியும்

நமது குருநாதரும் அவரது செய்தியும்

சகோதரி நிவேதிதை 

விவேகானந்த இலக்கியம் இந்தப் பதிப்பில் நான்கு பகுதி களாக வெளிவருகின்றன இவற்றில் உலகிற்கான செய்தி மட்டும் அல்ல, இந்துமதம் தன் வாரிசுகளுக்கு வழங்கிய ஓர் உரிமைச் சாசனமும் அடங்கியுள்ளது.
பொதுவாக எல்லாம் சின்னாபின்னமாகச் சிதறி வருகின்ற நவீன யுகத்தில் இந்து மதமாகிய கப்பலுக்குத் தேவையான தெல்லாம், அது மூழ்கிவிடாமல் காப்பாற்றுகின்ற நங்கூரத்தை நாட்டுவதற்கு ஒரு பாறை; தன்னை உணர்வதற்கான ஒரு பிரமாண சாசனம். இந்த விவேகானந்த இலக்கியத்தில் அது இந்து மதத்திற்குத் தரப்பட்டுள்ளது.

வேறெங்கோ கூறப்பட்டுள்ளது போல், வரலாற்றில் முதன் முதலாக, இதோ இங்கே, இந்து மதம் மாபெரும் இந்து மனங் களுக்குப் பொதுவாக்கப்பட்டுள்ளது. வரும் யுகங்களில் முன்னோர்களின் மதம் எது என்பதுபற்றி அறிய விரும்புகின்ற இந்துவும், தன் பிள்ளைகளுக்கு அதுபற்றிக் கற்பிக்க விரும்பு கின்ற இந்துத் தாயும் தங்கள் நம்பிக்கையைத் திடப்படுத்திக் கொள்ளவும் ஒளி பெறவும் இந்த நூல்களையே நாடுவார்கள்.

ஆங்கிலம் இந்தியாவை விட்டு மறைந்த நெடுங்காலத் திற்குப் பிறகும், உலகத்திற்கு அந்த மொழியின்மூலம் அளிக்கப் பட்ட இந்த அறிவுச் செல்வம் அழியாமல் நின்று மேலை நாடு களுக்கும் கீழை நாடுகளுக்கும் பெரும் பயனை விளைவிக்கும்.
தனது கருத்துக்களை ஒருங்கிணைத்து, உருக்கொடுப்பது தான் இந்து மதத்திற்கு வேண்டியிருந்தது. உண்மையைக் கண்டு அஞ்சாத ஒரு மதம் உலகிற்குத் தேவைப்பட்டது. இந்த இரண்டும் இதோ இந்த நூல்களில் உள்ளன சனாதன தர்மமாகிய இந்துமதம் ஒருபோதும் அழியாது என்பதற்கும், பாரதம் பண்டைய காலத்தைப் போலவே இப்போதும் மகோன்னத மாக விளங்குகிறது என்னும் உண்மையை நிரூபிப்பதற்கும் இதோ இந்த இருண்ட வேளையிலும் ஒரு மகாபுருஷர் தோன்றி சமுதாயத்தின் உணர்வுகளைத் திரட்டி அதை முழக்குவதை விட வேறென்ன சான்று வேண்டும்?
தன் எல்லைகளுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும், மனித இனத்திற்கும் உயிரளிக்கின்ற ஆன்மீக உணவைக் கொண்டு செல்லும்போதுதான் இந்தியா தன் தேவை நிறைவேறியதாகக் கருதும் என்பது தெரிந்த ஒன்று. அவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல. நாட்டை உருவாக்கும் அறிவை முன்பொரு முறை சகோதர நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது. அதன் மூலம்தான் தன் கருத்துக்கள் எவ்வளவு வளம் செறிந்தவை என்பதை அது அறிந்துகொண்டது, அதன்மூலம் தானும் ஒற்றுமை எய்தியது. அந்த ஒற்றுமைதான் இன்றைய நவீன இந்து மதத்தைப் படைத்தது. ‘உலகம் முழுவதும் செல்லுங்கள். இந்தச் செய்தியை எல்லா உயிரினங்களுக்கும் வழங்குங்கள்’ என்று ஒரு குரு தம் சீடர்களுக்குக் கூறுவதை நாம் இந்தியா வில்தான் முதன்முதலில் கேட்டோம். இதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது. அதே கருத்து, அதே அன்பின் வேகம்தான் புதிய வடிவெடுத்து விவேகானந்தரின் திருவாயி லிருந்து வெளிவந்தது. மேலை நாட்டுப் பேரவை ஒன்றில், அதையே அவர் கூறினார்-

‘ஒரு மதம் உண்மையானால் மற்ற மதங்களும் நிச்சய மாக உண்மையே. இந்தக் காரணத்தால், இந்துமதம் எனக்கு எவ்வளவு உரியதோ, அதே அளவு உங்களுக்கும் உரியதாகும்.’

இதே கருத்தை அவர் விளக்குகிறார்-

‘இந்துக்களாகிய நாங்கள் பொறுத்துக்கொள்வது மட்டும் அல்ல, ஒவ்வொரு மதங்களுடனும் எங்களைப் பிணைத்தும் கொள்கிறோம். முகமதியர்களின் மசூதிகளில் தொழுகிறோம், சொராஸ்திரியர்களின் அக்கினியை வணங்குகிறோம், கிறிஸ்த வர்களின் சிலுவைக்கு முன்னே முழங்காலிடுகிறோம். மிகக் கீழான மாயமந்திரப் பிரிவுகளிலிருந்து மிக உயர்ந்த கருத்து நிலைகளுக்கு (Absolutism) இடையே உள்ள எல்லா மதங்களும் எல்லையற்ற பரம்பொருளை அறிவதற்காக, உணர்வதற்காக மனிதன் மேற்கொண்ட முயற்சிகளே என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே இந்த மலர்களைத் திரட்டி அன்பு என்னும் நாரால் தொடுத்து, அற்புதச் செண்டாக்கி நாங்கள் வழிபடுகிறோம்.’

இப்படிப் பேசும் ஒருவருடைய இதயத்திற்கு எதுவும் அயலுமல்ல, அன்னியமுமல்ல. அவருக்குத் தெரிவதெல்லாம் மனித இனமும் சத்தியமுமே.

சர்வமத மகாசபையில் விவேகானந்தர் பேசிய சொற் பொழிவைப் பற்றி என்ன சொல்வது! இந்துக்களின் மதக்கோட் பாடுகளைப்பற்றி பேச ஆரம்பித்தார் அவர். அவர் முடித்த போது இந்து மதம் உருவாக்கப்பட்டிருந்தது என்று கூறலாம். அந்தக் காலமும் சூழலும் இத்தகைய கருத்தை வெளியிடுவதற்கு ஏற்றதாக இருந்தது. அந்தச் சபையில் அமர்ந்திருந்த ஏராளமான பார்வையாளர்கள் முற்றிலுமாக மேலைநாட்டு மனப்போக்கின் பிரதிநிதிகள். சற்று முன்னேறிய மனம் படைத்தவர்களும் இருக்கவே செய்தார்கள். ஐரோப்பாவின் ஒவ்வொரு நாடும் தனது பிரதிநிதியை, அமெரிக்காவிற்கு, குறிப்பாக சர்வமத மகாசபை நடந்த சிகாகோ நகரத்திற்கு அனுப்பியிருந்தது.

மிச்சிகன் ஏரிக்கரைகளில் பாதம் பதிய, வடதிசையின் ஒளி கண்களில் நிலவ, ஆழ்ந்த சிந்தனை உடையவளாக இந்த மேற்றிசை நகர அரசி வீற்றிருக்கிறாள். அவளுடைய எல்லைக்குள் நவீன முயற்சி மற்றும் போராட்டத்தின் அதிக மான நல் அம்சங்களையும், குறைவான தீய அம்சங்களை யும் எப்போதும் காணலாம். நவீன உணர்வும், ஐரோப்பாவின் பழங்காலப் பரம்பரைச் செல்வத்தின் ஆதிக்கமும் சிறிதேனும் இல்லாத இடம் சிகாகோவின் எல்லையிலேயே இல்லை. அங்குத் ததும்பி வழிகின்ற மக்கள் வெள்ளமும், அவர்களின் ஆர்வமும் பரபரப்பும் நமக்குப் பேரளவிற்கு ஒரு குழப்பம் போல் தோன்றலாம். ஆனால் அதனுள் மிக உயர்ந்த மனித ஒற்றுமை லட்சியம் ஒன்று உருவாகி வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. காலம் கனியும்போது அந்த லட்சியம் வெளிப்பட்டுத் தோன்றவே செய்யும்.

அலையடித்துப் பரவுகின்ற ஆற்றலும் துணிச்சலும் நிறைந்து, அதேவேளையில் ஆராய்ச்சி உணர்வும் கவனமும் நிறைந்த மனங்கள் கொண்ட, இளமைத்துடிப்புமிக்க மக்கள் அங்கே விவேகானந்தரின் முன்னால் அமர்ந்திருந்தார்கள். அவருக்குப் பின்னாலோ, இதற்கு மாறாக, காலங்காலமாக அடையப்பட்ட அமைதியான ஆன்மீகக் கடல். அவருக்குப் பின்னால் இருந்த உலகம் வேதங்களின் காலத்தோடு தோன்றி யது; உபநிடதங்களால் தன்னை வளர்த்துக் கொண்டது; அதனுடன் ஒப்பிடும்போது புத்தமதம் நேற்று பிறந்ததுபோல் தோன்றுவது. அந்த உலகம் மத நம்பிக்கைகளும் பல்வேறு மதப் பிரிவுகளும் நிறைந்தது. வெப்ப மண்டலக் கதிரவனின் ஒளியில் மூழ்கியுள்ள அமைதிப் பேருலகம் அது. காலங்கால மாகத் தன் புழுதிமீது மகான்களின் பொன்னடிகள் பதிந்த உலகம் அது. சுருங்கச் சொன்னால், ஆயிரக்கணக்கான ஆண்டு களாக வளர்ந்துவருகின்ற இந்தியாவே அவருக்குப் பின்னால் நின்றது. ஆம். பல சிந்தனைகளின் ஆழங்களை அளந்து கண்டு விட்ட, பல சிந்தனைகளை மெய்ப்பித்தும்விட்ட இந்தியாவே அவருக்குப் பின்னால் நின்றது. விரிந்த பல்வேறு கால நிலை களும் சூழலும் உடைய மிகப் பரந்த நாட்டின் ஒரு மூலை யிலிருந்து மற்றொரு மூலைவரை உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானதும் அடிப்படையானதும் முக்கியமானதுமான உண்மைகளிடையே அமைந்த ஓர் ஒற்றுமையை, தனது அந்த முழுமையான ஒற்றுமையைத் தவிர மற்றதையெல்லாம் உணர்ந்துவிட்ட இந்தியாவே அவருக்குப் பின்னால் நின்றது.

சர்வமத மகாசபையின் மேடையில் அமர்ந்திருந்த காவி உடை தரித்த இந்தத் துறவி கீழ்த்திசை மற்றும் நவீன மேல் திசை ஆகிய இரண்டு சிந்தனை வெள்ளங்களும் கருத்தாறு களும் கலந்து சங்கமிக்கின்ற இடமாக அப்போதைக்கு இருந் தார். எந்தக் கட்டுக்களாலும் எல்லைப்படுத்தப்படாத அந்த மாபெரும் துறவியிடம் இந்த இரண்டு பேராறுகளும் சங்க மிக்கும்போது எழும் அதிர்ச்சியின் தடுக்க முடியாத விளை வாகத் தோன்றின இந்து மதத்தின் பொதுவான அடிப்படைகள். அங்கு விவேகானந்தரின் திருவாயிலிருந்து வெளிப்பட்டது அவரது வாழ்க்கை அனுபவங்கள் அல்ல. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் தமது குருதேவரைப்பற்றிக்கூடப் பேச வில்லை. இந்த இரண்டும் அல்ல; அவர்மூலம் பேசியது இந்தியாவின் மத உணர்வு, இந்திய மக்கள் காலங்காலமாக வகுத்துவைத்த செய்தி. இதுதான் அவரிடமிருந்து வெளிப்பட்டது.

எதிர்பார்ப்பு என்னும் பட்டொளியின் நடுப்பகலில், ததும்பும் வாலிபத்தின் சன்னிதியில் அவர் பேசினார். அங்கே பசிபிக் மாக்கடலின் மறுகரையில், பூமியின் இருள் உறைந்து கிடந்த மறுபகுதியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு நாடு, தன் சொந்த மகிமை மற்றும் ஆற்றலின் ரகசியத்தை வெளிப்படுத்துவதற்காகத் தன்னை நோக்கிவந்து சேர்ந்த அந்த விடியலின் வார்த்தைகளுக்காக ஏங்கி நின்றது.

விவேகானந்தரைத் தவிர அந்த மேடையில் அமர்ந்திருந்தவர்கள் தாங்கள் சார்ந்திருந்த தனிப்பட்ட மத அமைப்புகளின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பரப்புகின்ற நோக்கத் துடன் பேசினார்கள். ஆனால் விவேகானந்தர் பேசியதோ, இந்த அனைத்தையும் தன்னுள் கொண்ட ஒரு மதத்தைப் பற்றி. அதுதான் அவரது பெருமை. அவரது வார்த்தையிலேயே சொல்ல வேண்டுமென்றால் அவை ஒவ்வொன்றும் பல்வேறு ஆண்களும் பெண்களும் வெவ்வேறு சூழ்நிலையில், வெவ்வேறு நியதிகளின்படிச் செய்கின்ற ஒரு பயணம், ஒரு முயற்சி மட்டுமே.’ இதுதான் உண்மை , அது தவறு; இந்த நிலையில் இது உண்மை , அந்த நிலையில் அது தவறு; இந்தக் காரணத் தால் இது உண்மை , அந்தக் காரணத்தால் அது தவறு என் றெல்லாம் சொல்லாமல் இவை யாவும் ஒரே நூலில் கோர்க்கப் பட்டுள்ள முத்துக்களைப்போல் என்னில் ஒன்றுசேர்ந்துள்ளன. எங்கெல்லாம் அசாதாரணமான புனிதமும், அசாதாரணமான ஆற்றலும் எழுந்து மனித குலத்தை முன்னேற்றி, தூய்மைப் படுத்துவதைக் காண்கிறாயோ அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்’ என்று முழங்கிய ஒருவரைப்பற்றிக் கூறவே தாம் அங்கே சென்றதாக அவர் கூறினார்.

ஓர் இந்துவைப் பொறுத்தவரை ‘மனிதன் தவறிலிருந்து உண்மையை நோக்கிப் பயணம் செய்யவில்லை. உண்மை யிலிருந்தே உண்மைக்குச் செல்கிறான், அதாவது தாழ்ந்த உண்மையிலிருந்து உயர்ந்த உண்மைக்கு வருகிறான்’ என்கிறார் அவர். இந்தக் கருத்தும், முக்திக் கருத்தும் அதாவது மனிதன் தன் தெய்வத் தன்மையை உணர்ந்து தெய்வமாக வேண்டும்; மரணம் நடமாடுகின்ற உலகில் மரணமில்லா ஒரே வாழ்க்கை யாக யார் இருக்கிறாரோ, தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக் கும் உலகில் மாறாத ஒரே அடிப்படை யாரோ, எல்லா ஆன் மாக்களும் எந்த ஒரே ஆன்மாவின் மாயத் தோற்றங்களோ, அந்த ஒரே ஆன்மாவை அடையச் செய்யும்போது மட்டுமே மதம் நம்மிடம் முழுமை பெறுகிறது என்ற கருத்தும்-உலக வரலாற்றில் மிக நீண்ட, மிகவும் சிக்கலான அனுபவங்களால் மெய்ப்பிக்கப்பட்ட அபூர்வமான உண்மைகளாகும். இவையே நவீன உலகமான மேலைநாட்டிற்கு விவேகானந்தர்மூலம் இந்தியா முழங்கிய செய்திகள் என்று கொள்ளலாம்.

இந்தச் சிறிய சொற்பொழிவு அவர் இந்தியாவுக்குத் தந்த சுருக்கமான உரிமைச் சாசனமாகும். அவ்வாறு சொல்லப்பட்டதும் உண்டு. இந்துமதம் வேதங்கள்மீது நிறுவப்பட் டிருக்கிறது என்கிறார் அவர். இவ்வாறு கூறும்போது வேதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்துக்களை மாற்றி அவற்றை ஆன்மீக மயமாக்குகிறார் அவர். எவையெல்லாம் உண்மையோ அவையெல்லாம் அவருக்கு வேதங்கள். ‘வேதங்கள் என்ற சொல் எந்த நூல்களையும் குறிக்கவில்லை. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ரிஷிகளால் கண்டறியப் பட்ட ஆன்மீக உண்மைகளின் கருவூலத்தையே “வேதம்” என்ற சொல் குறிக்கிறது’ என்கிறார் அவர்.

இந்தக் கருத்தை விளக்கும்போது, சனாதன தர்மத்தைப் பற்றிய தமது கருத்தையும் வெளியிடுகிறார். ‘விஞ்ஞானத்தின் மிக நவீனமான கண்டுபிடிப்புகள் கூட எதன் எதிரொலி களாகத் தோன்றுகின்றனவோ, அந்த வேதாந்தத்தின் உயர்ந்த ஆன்மீக உண்மைகள் முதல் பல்வேறு புராணங்களுடன் கூடிய உருவ வழிபாடுகள், பௌத்தர்களின் ஆஜ்ஞேயவாதம், சமணர்களின் நாத்திக வாதம் எல்லாவற்றிற்கும் இந்துமதத் தில் இடம் உண்டு. உண்மைப் பாதையிலிருந்து விலகியதுபோல் தனி மனிதனுக்குத் தோன்றினாலும், இந்து மதத்தின் அணைப் பிலிருந்து எந்த மதத்தையோ, இனத்தையோ, உண்மை யான மத அனுபூதியையோ விலக்க முடியாது என்பது அவருடைய கருத்து.

எல்லா இந்திய மதங்களுக்கும் தாய்வீடாகத் திகழும் இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கருத்து இஷ்டதெய்வக் கருத்தாகும். ஒவ்வொருவருக்கும் தனக்குரிய பாதையை வகுத்துக் கொள்ளவும், தனக்கு விருப்பமான வழியில் கடவுளை நாடவும் அது வகை செய்கிறது. இப்படிப் பரந்த மனப் பான்மையோடு இந்துமதம் ஏந்திச் செல்கின்ற ஆன்மீகக் கொடியைவிட விசாலமான ஒரு கொடியை எந்தப் படையும் ஏந்திச் செல்ல முடியாது. இந்து மதத்தின் ஆன்மீக லட்சியம் கடவுளைக் காண்பதே. அதுபோலவே அதன் ஆன்மீக நியதியும் ஒவ்வோர் உயிரும் தன்னில் தானாக இருக்கின்ற பரிபூரண சுதந்திரமே.

இப்படி எல்லாவற்றையும் அணைத்துக் கொண்டாலும், எல்லோருக்கும் சுதந்திரம் அளித்தாலும் அவை எல்லாம் சேர்ந்தும் இந்து மதத்தின் இன்றைய பெருமைக்கு ஈடாகாது. ஏனெனில் அதன் இந்தப் பேரழைப்பும் இனிய வாக்குறுதியும் அனைத்தையும் மிஞ்சி அல்லவா நிற்கின்றன!-‘அழியாத ஆனந்தத்தின் குழந்தைகளே! செவி சாயுங்கள். உயர்ந்த உலகங்களில் உறையும் உத்தமர்களே! கேளுங்கள். எல்லா இருளுக்கும், எல்லா மாயைகளுக்கும் அப்பால் உள்ள அந்தப் பழமையானவனை நான் கண்டுவிட்டேன். அவனை அறிவதால் நீங்களும் மரணத்திலிருந்து விடுபடுவீர்கள்!’- இந்த முழக்கத்திற்கு ஈடு இணை ஏது! இந்தக் கருத்தில்தான் அனைத்தும் நிலைபெறுகின்றன, நிலைபெற்றன. இதுதான் அனுபூதிகளின் மணிமகுடம், பிற அனைத்தும் இதனுள் அடங்கியவை.

‘நம் முன் உள்ள பணி’ என்னும் சொற்பொழிவில் அவர் தாம் நிறுவப்போகும் ஒரு கோயிலுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டுமென்று ஆர்வத்துடன் வேண்டிக் கொண்டார். அந்தக் கோயிலில் எல்லோரும் சென்று வழிபடலாம். அந்தக் கோயிலின் கருவறையில் ஓம் என்ற மந்திரம் மட்டுமே இருக்கும். இதை அவர் கூறும்போது எங்களுள் சிலர், ஏற்கனவே இருப்பதான அதைவிடப் பெரிய கோயிலான இந்தியத் தாய்நாட்டின் கணநேரக் காட்சியை உணர்ந்தனர்; இந்திய மதப் பிரிவுகளுக்கு மட்டுமல்லாமல் மனித இனம் முழுவதும் அங்கே சங்கமிப்பதைக் கண்டனர்; உருவமல்லாத உருவமான, எல்லா ஒலிகளுக்கும் மேலான திருநாமமான ஓம் என்ற மந்திரத்தை வழிபடுகின்ற அந்தப் புண்ணியத் தலத்தில் எல்லாமே கலந்து இழைவதைக் கண்டனர். எல்லா வழிபாடுகளும் எல்லா மதப்பிரிவுகளும் செல்வது அங்கு நோக்கியே, அங்கு நோக்கி மட்டுமே.

பார்க்கின்ற ஒன்றிலிருந்து பார்க்காத ஒன்றுக்கு, பலவற் றிலிருந்து ஒன்றை நோக்கி, தாழ்ந்ததிலிருந்து உயர்ந்ததற்கு, உருவத்திலிருந்து உருவம் அற்றதற்கு இத்தகைய ஒரு நிலைக்கு, வேறு எதற்கும் அல்ல செல்வதுதான் முன்னேற்றம் என் பதை முழங்க இந்தியா வேறு எந்தத் தூயப் பிரிவுகளுடனும் கைகோர்த்து நிற்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது: உண்மையான கொள்கைகள் எங்கிருந்தாலும், எப்படியிருந் தாலும், அவை மகோன்னதத்திற்கான முயற்சிகள் என்ற நிலையில், இந்தியா ஒவ்வொரு கொள்கைக்கும் ஆறுதலையும் உறுதியையும் தருகிறது.

இந்துமதத்தின் பிரச்சாரகரான விவேகானந்தர் தாமாக எதையும் சேர்க்கவில்லை. அப்படிச் சேர்ந்திருந்தாரானால் அவருடைய பெருமை சிறிது குறைந்துதான் போயிருக்கும். கீதை கூறிய கண்ணனைப்போல், புத்தரைப்போல், சங்கரரைப் போல், இந்தியாவின் மற்ற ஆச்சாரியர்களைப்போல் விவேகானந்தரும் வேதங்கள் மற்றும் உபநிடதங்களிலிருந்து மேற்கோள்களை நிறைய எடுத்துக் கூறுகிறார். இந்தியா தனக் கென்று பெற்றுள்ள கருவூலத்தின் சிறப்புக்களை வெளியிடு பவராகவும் அவற்றிற்கு விளக்கம் தருபவராகவும் மட்டுமே அவர் விளங்குகிறார். அவர் போதிக்கும் உண்மைகள், அவர் பிறக்காதிருந்தாலும் உண்மைகளாகவே விளங்கியிருக்கும். ஏன், ஒருவேளை அவை இன்னும் மேலான கருத்துக்களாக இருந் திருக்கும். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் நாம் அவற்றை எளிதில் புரிந்து கொள்கின்ற நிலையிலும், அவற்றின் நவீன மான தெளிவிலும், தெளிவாகத் தெரிகின்ற விளக்கத்திலும் ஒரு குறை ஏற்பட்டிருக்கும்; அந்தக் கொள்கைகள் ஒவ்வொன்றின் இடையேயுள்ள இணைப்பும் ஒற்றுமையும் புரியாமல் போயிருக்கும். அவர் தோன்றாமல் போயிருந்தால் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அழியாமையைத் தருகின்ற ஆன்மீக உணவைக் கொண்டுசெல்கின்ற சாஸ்திரங்கள், வாதம் புரிகின்ற பண்டிதர்களின் விளங்காத சொற்போர்களாகவே நின்றுவிட்டிருக்கும்.

அவர் ஓர் அதிகாரத்துடன் போதித்தார். அது பண்டி தர்கள் காட்டும் வெறும் சொல்ஜாலம் அல்ல. அவர், தாம் போதித்தவற்றை அனுபூதியில் உணர்வதற்காக ஆன்மீக ஆழங் களில் ஆழ்ந்தார். பின்னர் ராமானுஜரைப்போல் ஆன்மீகப் பேரொளியைத் தாம் கண்டு, திரும்பி வந்து, தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக் கும் அன்னிய சமுதாயத்தினருக்கும் அந்த ரகசியங்களை முரசறைந்து தெரிவித்தார்.

அவர் போதித்ததில் எதுவுமே புதுமை இல்லை என்று சொல்வது முற்றிலும் சரியாகாது. இங்கு ஓர் உண்மையை மறக்கக் கூடாது. ‘எல்லாமே ஒன்றுதான், இரண்டாவதாக எதுவும் இல்லை’ என்ற அனுபவத்தை உள்ளடக்கிய அத்வைதத் தின் மகிமையைப் பரப்பியவர் அவர். என்றாலும் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்பவை மூன்றும் ஒரே பாதையிலுள்ள மூன்று நிலைகள் அல்லது படிகள் மட்டுமே. இந்த மூன்றினுள் அத்வைதமே லட்சியம் என்ற கருத்தையும் இந்து மதத்தில் இணைத்தவர் அவர். இந்தக் கருத்தும், இதை விட மேலான, இதைவிட எளிய ஒரு கருத்தின் பகுதிதான். பல்வேறு மனங்களால் பல்வேறு காலங்களில் காணப்படும் உண்மைதான் இப்படிப் பலவாகவும் ஒன்றாகவும் இருக்கிறது என்ற கருத்துதான் அந்த மேலான கருத்து. அதையே ஸ்ரீராமகிருஷ்ணர், ‘கடவுள் சகுணமாகவும் நிர்க்குணமாக வும் இருக்கிறார். அவர் உருவத்தையும் உருவமற்ற நிலையை யும் உள்ளடக்கியவர்’ என்று கூறினார்.

இதுதான் நமது குருநாதரான விவேகானந்தருடைய வாழ் வின் தலைசிறந்த தனிச் சிறப்பைக் காட்டுகிறது. ஏனெனில் அவர் இங்கே மேலைநாடும் கீழைநாடும் கூடுகிற இடமாக மட்டும் இல்லை; இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் பாலமாகவும் நிற்கிறார். பலவும் ஒன்றும் ஒரே உண்மைதான் என்றால் எல்லாவகையான வழிபாடுகள் மட்டு மின்றி, எல்லாவகையான செயல்களும், எல்லாவகையான போராட்டங்களும், எல்லாவகையான படைப்புகளும் இறை யனுபூதிக்கான பாதைகளாக அமைந்துவிடும். பிறகு ஆன்மீகத் திற்கும் உலகியலுக்கும் வேறுபாடில்லை. உழைப்பே பிரார்த் தனை. வெற்றிகொள்வதே துறவு. வாழ்வே ஆன்மீகம். சம் பாதிப்பதும் பாதுகாப்பதும், துறப்பதையும் தவிர்ப்பதையும் போன்ற ஒரு சாதனையே.

இந்த அனுபூதிதான் விவேகானந்தரை, கர்மயோகத்தை ஞான பக்தி யோகங்களிலிருந்து விலகியதாக அல்லாமல் அவற்றை வெளிப்படுத்துவதாகப் போதித்த மாபெரும் ஆச் சாரியராக ஆக்கியது. மனிதன் ஆண்டவனை அடைய முனி வரின் குகையும், கோயிலின் வாசலும் எப்படி உண்மையான, ஏற்ற இடங்களோ, அப்படியே தொழிற்சாலைகளும், படிப் பறைகளும், தோட்டமும், வயல்வெளியும் என்று அவர் காண் கிறார். அவரைப் பொறுத்தவரை மக்களுக்குத் தொண்டு செய்வதற்கும் இறை வழிபாட்டிற்கும், பேராண்மைக்கும் முழு நம்பிக்கைக்கும், உண்மையான அறவாழ்விற்கும் ஆன்மீகத் திற்கும் வேறுபாடில்லை. ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் அவரது போதனை எல்லாமே இந்த மையக் கருத்தின் விரிவுரைகளாகவே திகழ்கின்றன. ‘கலை, விஞ்ஞானம், மதம்இந்த மூன்றும் ஒரே உண்மையை வெளிப்படுத்தும் மூன்று வெவ்வேறு வழிகள்; ஆனால் இந்த உண்மையை அறிவதற்கு அத்வைதக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்’ என்று ஒரு முறை அவர் கூறினார்.

விவேகானந்தருக்கு இந்தக் காட்சியை வகுத்துத் தந் தவை மூன்று விஷயங்களாகும். அவற்றுள் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் அவர் பெற்ற கல்வியை முதலில் சொல்ல வேண்டும். இந்த இரண்டு இலக்கியங்களுக்கும் இடையே அமைந்த வேறுபாடுகள் இந்து சாஸ்திரங்களுக்கு அடிப் படையான அனுபூதியைப் பற்றிய தனித்த ஓர் ஆழ்ந்த பதிவை அவரிடம் ஏற்படுத்தியது. அவை உண்மைகளாக இருக்கின்ற பட்சத்தில், சிலர் தங்கள் வாழ்வில் ஒரு விபத்தாக இந்த உண்மைகளைப் பெற்றதுபோல் இந்திய ரிஷிகள் எதேச்சை யாகப் பெற்றவையாக இருக்க முடியாது என்பது தெளிவு. மாறாக, அவை ஒரு சாஸ்திரத்திற்கு அடிப்படை உண்மை ஆயிற்று; தர்க்க அறிவின் ஆராய்ச்சிக்குப் பொருளாக அமைந் தது; உண்மையை நாடுகின்ற வழியில் எத்தகைய தியாகத் திற்கும் பின்வாங்காத லட்சியமாக அமைந்தது.

தட்சிணேசுவரக் கோயிலில் வாழ்ந்து உபதேசங்கள் புரிந்தவர் விவேகானந்தரின் குருதேவரான ராமகிருஷ்ண பரமஹம்சர். அப்போது நரேன் என்று அழைக்கப்பட்ட விவேகானந்தரின் இதய உணர்ச்சியும், தர்க்க அறிவும் பழைய சாஸ்திரங்களின் உண்மைக்கு நிரூபணம் தேடியபோது, அதை இவரிலேயே காண முடிந்தது. சாஸ்திரங்கள் அரைகுறையாகக் காட்டிய உண்மை அவரில் அப்படியே இருந்தது. சமாதிதான் அவருக்கு இடையறாத அறிவை அடைகின்ற முறையாயிருந்தது. அவரது மனம் பலவற்றிலிருந்து ஒன்றை நோக்கிச் சென்று, அதில் அடிக்கடி நிலைத்தது. உணர்வுகடந்த நிலைகளில் திரட்டப்பட்ட ஞானத்தின் குரல் இடையீடின்றி அவரிட மிருந்து வந்தது. அவரை அணுகிய ஒவ்வொருவரும் தெய்வீகக் காட்சியைப் பெற்றனர். அனுபூதி பெறும் ஆர்வம் அவருடைய சீடர்களிடம் ‘கடுமையான காய்ச்சல்போல்’ வளர்ந்தது. சாஸ்திரங்களின் திரண்ட வடிவமாக அவர் திகழ்ந்தார். அது அவருக்குத் தெரியாது. ஏனெனில் அவர் அவற்றில் எதையும் படித்தவர் அல்ல. தம் குருதேவரான ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் விவேகானந்தர் வாழ்க்கையின் திறவுகோலைக் கண்டார்.

என்றாலும் அவரது பணிகளுக்கான ஆயத்தம் நிறைவுற வில்லை. இமயம் முதல் குமரிவரை அவர் நாடெங்கும் சுற்றித் திரிந்து மகான்களோடும், பண்டிதர்களோடும், சாதுக்களோ டும் சமநிலையுடன் கலந்து பழகி எல்லோரிடமிருந்தும் கற்க வேண்டியிருந்தது. எல்லோருக்கும் கற்பிக்க வேண்டியிருந்தது. எல்லோருடனும் வாழ்வதும், இந்தியா எப்படி இருந்தது எப்படி இருக்கிறது என்பதை உணரவும், எந்த முழுமையின் எளிய ஆனால் ஆழ்ந்த திரட்சி அவரது குருதேவரின் வாழ்க்கை யும் தனித் தன்மையுமோ அந்த விரிவான முழுமையைப் பரந்த முறையில் கண்டறியவும் வேண்டியிருந்தது.

எனவே சாஸ்திரங்கள், குரு, தாய்நாடு இந்த மூன்றுமே விவேகானந்தரின் நூல்களாகிய பாடல்களுக்குச் சுரங்களாக அமைந்துள்ளன. அவர் அளிக்கக்கூடிய செல்வமும் இவையே. ஆன்மீகக் கொடையாகத் தாம் அளிக்கின்ற, இந்த உலகில் உள்ள நோய் அனைத்தையும் தீர்க்கும் மருந்திற்கான அம்சங் களை அவர் பெற்றது இவற்றிலிருந்துதான்.

அவரது பணிகளின்மூலம், தன் மக்களுக்கும் உலக மக்க ளுக்கும் வழிகாட்டி உதவ, 1893 செப்டம்பர் 19-லிருந்து, 1902 ஜூலை 4 வரையில் இந்தியா அவருடைய கைகளால் ஏற்றி வைத்த ஞானதீபத்தில் எரியும் மூன்று சுடர்களும் இவைதாம். இந்த விளக்கை ஏற்றி வைத்ததற்காகவும், அவர் தமக்குப் பிறகு இந்தச் சிறந்த கருத்துக்களை விட்டுச் சென்றதற்காக வும், அவரைத் தந்த நாட்டை வாழ்த்தவும், அவரை மேலை நாட்டிற்கு அனுப்பியவர்களுக்கு வாழ்த்துக் கூறவும் எங்களில் சிலர் இன்னும் உயிருடன் இருக்கிறோம். ஆனால் அவரது செய்தியின் விரிவையும் உட்பொருளையும் முற்றிலும் உணரக் கூடிய பெரும் பேற்றை இன்னும் நாங்கள் பெறவில்லை என்றே கருதுகிறோம்.

ராமகிருஷ்ண-விவேகானந்தர்களின்
நிவேதிதை
ஜூலை 4, 1907

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s