நமது கோட்பாடு

நமது கோட்பாடு

மதுரையில் – மானாமதுரையிலிருந்து பிப்ரவரி 2- ஆம் நாள் மதுரை வந்தார் சுவாமிஜி. அங்கே ராமநாதபுர மன்னரின் மாளிகை ஒன்றில் தங்கினார். மதுரை இந்துக்கள் சுவாமிஜிக்கு ஒரு வெல்வெட் உறையில் வரவேற்புரைப் பத்திரம் அளித்தனர்.

வணக்கத்திற்குரிய சுவாமி ஜி.

மதுரை இந்துக்களாகிய நாங்கள், புராதனமானதும் புண்ணியமிக்கதும் ஆகிய எங்கள் நகருக்கு உங்களை இதய பூர்வமாக வரவேற்கிறோம். உலகின் பந்த பாசங்களைத் துறந்து, மனித குலத்தின் ஆன்மீக முன்னேற்றத்தை மனத்தில் கொண்டு தியாக சீலத்துடன் விளங்குகின்ற நீங்கள் இந்து சன்னியாசிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறீர்கள். இந்து மதத்தின் உண்மையான சாரம் நியதிகளாலோ சடங்குகளாலோ கட்டுப்பட்டது அல்ல; மாறாக, துன்புற்றவர்களுக்கு எளியவர்களுக்கும் சாந்தியையும் சமாதானத்தையும் அளிக்கவல்ல ஒரு நுண்ணிய தத்துவம் அது என்பதை உங்கள் வாழ்விலேயே நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.

ஒவ்வொருவரின் தகுதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப அனைவரையும் உயர்த்த வல்லதான தத்துவத்தையும் மதத்தையும் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் போதித்து அவர்களை வியப்படையச் செய்திருக்கிறீர்கள். தங்கள் உபதேசங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளில் நிகழ்ந்தன. அதேவேளையில் அவை இந்த நாட்டிலும் ஆர்வத்துடன் ஏற்கப் பட்டன; மேலை நாட்டிலிருந்து வந்து இங்கே வளர்ந்து வருகின்ற உலகாயதத்தின் வளர்ச்சியைப் பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளன. இந்தியா இன்னும் வாழ்கிறது, ஏனெனில் பிரபஞ்சத்தின் ஆன்மீக நியதியில் அதற்கென்று ஒரு செய்தி உள்ளது. கலியுகத்தின் இறுதியில் தங்களைப் போன்ற ஒரு மகான் தோன்றியுள்ளது. இன்னும் பல மேலோர்கள் தோன்றி இந்தப் பணியை நிறைவேற்றுவார்கள் என்பதையே குறிக்கிறது. கல்விக்குப் பெயர் பெற்றதும்,சுந்த ரேசுவரருக்கு உகந்த தலமும், யோகிகளின் துவாதசாண்ட சேத்திரமும் ஆகிய மதுரை, பிற நகரங்களுக்கு எவ்விதத்திலும் பின்தங்காத வகையில் தங்கள் திருப்பணிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறது. தங்களுக்கு நீண்ட ஆயுளும் எல்லா வல்லமையும் நன்மையும் கிடைக்கட்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

சுவாமிஜியின் பதிலுரை;

நான் உங்களோடு பல நாட்கள் தங்கி, உங்கள் அவைத்தலைவர் விரும்பியது போல், நான்கு ஆண்டுகளாக மேலை நாட்டில் நான் செய்த பணிகளையும் பெற்ற அனுபவத்தையும் விளைவுகளையும் உங்களிடம் கூறுவதற்கு எனக்கும் விருப்பம்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதுக்களுக்கும் உடம்பு என்ற ஒன்று உள்ளது. கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற பயணம் மற்றும் சொற்பொழிவுகளின் காரணமாக, இந்த மாலையில் நான் உங்கள் முன் நீண்டதொரு சொற்பொழிவை நிகழ்த்த முடியாமல் போய்விட்டது. எனவே நீங்கள் மிகுந்த அன் போடு அளித்த கனிவான வரவேற்புக்கு நன்றி மட்டும் தெரிவித்துக்கொண்டு, மற்றவைகளை, வாய்ப்பும் கிடைத்து, என் உடல்நிலையும் நன்றாகுமானால் எதிர் காலத்தில் எப்போதாவது பேசுகிறேன். இப்போது சுருக்கமாகக் கூறுவதைவிட அப்போது பல விஷயங்களைப்பற்றி நாம் பேச முடியும்.

உங்களுக்கு நன்கு தெரிந்த வரும் சான்றோருமாகிய ராமநாதபுரம் அரசரின் விருந்தினனாக மதுரையில் தங்கியிருக்கின்ற என் மனத்தில் ஓர் எண்ணம் மேலெழுந்து தோன்றுகிறது. சிகாகோவிற்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலில் என் மனத்தில் எழுப்பியவரும் அதற்காகத் தம் இதயம் நிறைந்த உதவியையும் செல்வாக்கையும் எப்போதும் எனக்கு அளித்தவரும் மன்னரே என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.எனவே உங்கள் வர வேற்புரையில் என்னைப் பாராட்டிய பாராட்டுக்களில், கணிசமான பகுதி தென்னிந்தியாவின் அந்த உன்னத மனிதரையே சாரும். அவர் அரசராவதற்குப் பதிலாக ஒரு துறவியாகி இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்; அவர் அதற்கு முற்றிலும் தகுதியானவர்.

உலகத்தின் எந்தப் பகுதியிலாவது ஒரு பொருள் உண்மையாகத் தேவைப் படுமானால், அதை அளிக்கின்ற ஒன்று, வழியை அறிந்து, புதிய உயிருணர்வுடன் அதைக் கொண்டு வந்து தருகிறது. பௌதீக உலகத்திலும் அதைப் போலவே ஆன்மீக உலகத்திலும் இது உண்மையாக இருக்கிறது. உலகத்தின் ஒரு பகுதியில் ஆன்மீகம் தேவைப்பட்டு, அதே நேரத்தில் அது மற்ற எந்தப் பகுதியிலாவது இருக்கவும் செய்யுமானால், அதைப் பெறுவதற்கு நாம் மனப்பூர்வமாக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேவைப்படுகின்ற இடத்தில் அது வந்துசேர்ந்து குலைந்த சமநிலையைச் சீர்செய்து விடுகிறது. மனித இன வரலாற்றைப் பார்த்தால், கடந்த காலத்தில் ஒரு முறை இருமுறை அல்ல, மீண்டும் மீண்டும் உலகத்திற்கு ஆன்மீகத்தை வழங்குவது இந்தியாவின் பணியாக இருந்து வந்துள்ளது.மிகப்பெரிய வெற்றிகளாலோ, வாணிப ஆதிக்கத்தாலோ உலகின் பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு, மனித இனம் முழுவதும் ஒன்றுபடும்போது, ஒவ்வொரு நாடும் தன் பங்கைச் செலுத்த வேண்டியுள்ளது. அரசியல், சமுதாயம், ஆன்மீகம் என்று ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு உள்ளது.ஒட்டுமொத்த மனித அறிவிற்கு இந்தியாவின் பங்கு ஆன்மீகமும் தத்துவமும் ஆகும். இதைப் பாரசீக சாம்ராஜ்யம் தோன்றுவதற்கு மிக முன்பே ஒருமுறை இந்தியா வழங்கியது. இரண்டாவது முறையாக பாரசீக சாம்ராஜ்ய காலத்தின் போது வழங்கியது. மூன்றாவதாக, கிரேக்கப் பேரரசு உச்ச நிலையில் இருந்தபோது வழங்கியது. இப்போது நான்காவது முறையாக, ஆங்கிலேயர்கள் உச்ச நிலையில் இருக்கின்ற இந்தக் காலத்தில் மீண்டும் ஒரு முறை அதே காரியம் நிறைவேறப் போகிறது.

அமைப்புக்களை உருவாக்குதல் மற்றும் புற நாகரீகம் பற்றிய மேலை நாட்டுக் கருத்துக்கள் நம் நாட்டினுள் புகுந்து ஊடுருவிச் சென்றுள்ளது. அவைகளை நாம் ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். அது போலவே இந்திய ஆன்மீகமும் தத்துவமும் மேலை நாடுகளிலிருந்து வருகின்ற ஒரு விதமான உலகாயதம் போன்ற அந்த நாகரீகத்தை நம்மால் தடுக்க முடியாததைப் போல், இந்தியா வின் ஆன்மீக வெள்ளத்தையும் மேலை நாட்டால் தடுக்க முடியாது. சிறிது உலகியல் நமக்கு நல்லது, அவ்வாறே மேலை நாட்டிற்குச் சிறிது ஆன்மீகம் நல்லது. இவ்வாறு சமநிலை பிறழாமல் காக்கப்படுகிறது.

மேலை நாடுகளிலிருந்தே நாம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, மேலை நாட்டினர் ஒவ்வொன்றையும் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ அல்ல. ஆனால் காலங்காலமாக இருந்து வருகின்ற, நாடுகளின் ஒருங்கிணைப்பு, லட்சிய உலகம் ஆகிய கனவுகளை நனவாக்குவதற்காக ஒவ்வொரு நாடும் தங்களிடம் உள்ளதை எதிர்கால சந்ததியருக்குக் கொடுத்தேயாக வேண்டும். இத்தகைய லட்சிய உலகம் எப்போதாவது உருவாகுமா என்பது எனக்குத் தெரியாது; சமுதாயம் என்றாவது நிறைநிலையை அடையுமா என்பதும் சந்தேகமே. அது வருகிறதோ இல்லையோ, ஆனால் நாம் ஒவ்வொருவரும் அது நாளைக்கே வரப் போகிறது, அது நம் உழைப்பால்

மட்டுமே வர முடியும் என்ற எண்ணத் தோடு உழைக்க வேண்டும் . எல்லோரும் தங்கள் பங்கைச் செய்துவிட்டார்கள், உலகம் நிறைநிலையை அடைவதற்கு எஞ்சியிருப்பது, நான் செய்ய வேண்டிய வேலை மட்டுமே என்று நாம் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு இதுவே.

தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி கொள்கைவெறியை வளர்க்கிறது, சில நேரங்களில் அந்த வெறி எல்லை கடந்து போய்விடுகிறது. மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மூட நம்பிக்கை நிறைந்த பழமையான வைதீகமாகிய மலைக்கும், உள்ளீடற்ற, சீர்திருத்தம் என்று சொல்லப்படுகின்ற, மேலை நாட்டு வளர்ச்சியின் அடித்தளம் முழுவதிலும் ஊடுருவிப் பாய்ந்திருக்கின்ற ஐரோப்பாவின் உலகாயதம் என்னும் ஆழ்கடலுக்கும் இடையே நமக்குரிய பாதையை நாம் கண்டாக வேண்டும்.

ஆன்மீகம், லௌகீகம் இரண்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் நம்மால் மேலை நாட்டினராக ஆக முடியாது. எனவே அவர்களைக் காப்பியடிப்பது பயனற்றது. ஒரு வேலை நீ அவர்களைக் காப்பியடிப்பதாகவே வைத்து கொள்வோம். அந்தக் கணமே நீ செத்து விடுவாய், அதன்பின் உனக்கு வாழ்கை என்பதே இல்லாமல் போவிடும். இரண்டாவதாக, அது முடியாத காரியமும் ஆகும். காலத்துடனேயே தோன்றி, யுகயுகங்களாக மனித வரலாற்றைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது ஆறு ஒன்று. அதனைத் தடுத்து நிறுத்தி, பின்னோக்கித் தள்ளிக் கொண்டு போய், இமாலயப் பனிப் படலங்களில் சேர்த்துவிட எண்ணுகிறீர்களா? ஒரு வேளை அதுகூட முடிகிற காரியமாக இருக்கலாம். ஆனால் உங்களால் ஐரோப்பியமயமாக முடியாது. சில நூற்றாண்டுகளாக மட்டுமே உள்ள தங்கள் நாகரீகத்தைத் தூக்கி எறிவது ஐரோப்பியர்களால் முடியாமலிருக்கும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பிரகாசிக்கும் நமது பண்பாட்டைத் தூக்கி எறிவது சாத்தியம் என்றா நினைக்கிறீர்கள்? அது முடியாது.

ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராம தேவதைகளையும், மூடநம்பிக்கையில் தோய்ந்த சாதாரணமான பழக்க வழக்கங்களையும்தான் நாம் மதம் என்று அழைத்து பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. வட்டாரப் பழக்கங்கள் கணக்கற்றவை, ஒன்றுக்கொன்று முரணானவை. இவற்றுள் நாம் எதை ஏற்றுக் கொள்வது, எதை த்தள்ளுவது? உதாரணமாக, ஒரு பிராமணன் இறைச்சி உண்பதைக் கண்டால் தென்னிந்திய பிராமணன், குலைநடுங்கிப் போய்விடுவான், ஆனால் அதையே வட இந்திய பிராமணன் மிகவும் பெருமைக்குரியதாக, புனிதமானதாகக் கருதுகிறான் – யாகத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகளைப் பலியிடுபவன் அவன். இப்படி உங்கள் பழக்கம் சிறந்தது என்று நீங்கள் சொன்னால், தங்கள் பழக்கங்களே சிறந்தவை என்று காட்ட பலர் தயாராக உள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள பழக்க வழக்கங்கள் பல்வேறானவை. ஆனால் அவை வட்டார வழக்கங்களே. இந்த வட்டார வழக்கங்கள்தாம் நமது மதத்தின் சாரம் என்றே பாமர மக்கள் எண்ணிவருகிறார்கள். இது பெருந்தவறாகும்.

இதைக் கடந்து சென்றால் இன்னும் பெரிய பிரச்சினை உள்ளது. நமது சாஸ்திரங்கள் இரண்டு வகையான உண்மைகளைக் கூறுகின்றன. ஒன்று, மனிதனின் அழியாத இயல்பை அடிப் படையாகக் கொண்டது; இறைவன் ஆன்மா, இயற்கை – இவற்றுக்கிடையிலான மாறாத உறவைப்பற்றி ஆராய்கிறது. மற்றொன்று, வட்டாரச் சூழ்நிலைகள், காலச் சூழ்நிலைகள், குறிப்பிட்ட அந்தக் காலத்தின் சமுதாய அமைப்புகள் முதலியவற்றைப் பற்றிய தாக உள்ளது. முதல்வகை உண்மைகள் பெரும்பாலும் நமது சாஸ்திரங்களான .
வேதங்களில் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது வகை, ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் கூறப்படுகின்றன.எல்லா காலங்களுக்கும் வேதங்களே இறுதியான லட்சியம், முடிவான அதிகாரம் உள்ளவை என்பவை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எதிலாவது புராணங்கள் வேதங்களிலிருந்து மாறுபடுமானால் புராணத்தின் அந்தப் பகுதியை இரக்கமின்றி ஒதுக்கிவிட வேண்டும்.

இந்த ஸ்மிருதிகள் அனைத்திலும் கூறப்படும் போதனைகள் வெவ்வேறாக உள்ளன என்பது நமக்குத் தெரியும். இது தான் வழக்கம், இந்த யுகத்தில் இதைத்தான் பின்பற்ற வேண்டும். என்று ஒரு ஸ்மிருதிகூறுகிறது. மற்றொரு ஸ்மிருதியோ இது தான் இந்த யுகத்தின் நடைமுறை என்கிறது. இது சத்திய யுகத்தில் பழக்க வழக்கங்களாக இருக்க வேண்டும், இது கலியுகத்தில் வழக்கங்களாக இருக்க வேண்டும் என்று இன்னொரு ஸ்மிருதி சாதிக்கின்றது.

மனிதனின் இயல்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நிரந்தர உண்மைகள் மகத்தான கொள்கைகளுள் ஒன்றாகும். மனிதனின் இயல்பை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் மனிதன் வாழும்வரை இந்த உண்மைகளும் மாறவே மாறாது. அவை எல்லா காலங்களுக்கும் உரியவை, எல்லா இடங்களுக்கும் பொதுவானவை, உலகம் தழுவியவை. ஆனால் ஸ்மிருதிகள் பொதுவாக வட்டாரச் சூழ்நிலைகளையும், அங்கு நிலவுகின்ற பல்வேறான சூழ்நிலைகளின் காரணமாக எழுகின்ற கடமைகளைப் பற்றியுமே கூறுகின்றன. இவை கால ஓட்டத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. ஆனால் ஏதோ ஒரு சிறிய சமுதாய வழக்கம் மாறுவதால் உங்கள் மதமே அழிந்துவிடப் போவதில்லை, அப்படி ஒரு போதும் நடக்காது. இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.அந்தப் பழக்க வழக்கங்கள் ஏற்கனவே மாறிக் கொண்டிருப்பவை என்பதை மறக்காதீர்கள். மாட்டிறைச்சி தின்னாத பிராமணன், பிராமணனே அல்ல என்று கருதப்பட்ட காலம் ஒன்று முன்பு இதே இந்தியாவில் இருந்தது. சன்னியாசியோ அரசனோ அல்லது யாராவது மகானோ வீட்டுக்கு வந்தால் ஆடும் காளையும் கொல்லப்பட்ட விவரங்களையும், ஆனால் பயிர்த்தொழில் செய்யும் இன மாகிய நாம், மிகச்சிறந்த காளைகளைக் கொல்வது இறுதியில் நம் இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்டதையும் நாம் வேதங்களில் படிக்கிறோம். எனவே பசு வதைக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன ; அந்த வழக்கம் நிறுத்தப்பட்டது. கொடிய வழக்கங்கள் என்று இப்போது நாம் கருதுகின்ற பல பழக்கங்கள் முன்பு சமுதாயத்தில் நிலவியதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் பார்க்க முடிகிறது. காலப்போக்கில் வேறு விதிகளை உருவாக்க நேர்ந்தது. இந்த விதிகளும் காலப்போக்கில் மறையும். உடனே புதிய விதிகள் தோன்றவும் செய்யும்.எனவே வேதங்கள் எல்லா காலங்களிலும் ஒன்றே. அவை நிலையானவை ஸ்மிருதிகள் காலத்திற்குக் காலம் மாறுபவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

காலம் செல்லச்செல்ல ஸ்மிருதிகளில் கூறப்பட்ட விதிகள் மறைந்து கொண்டே போகும். மகான்கள் வருவார்கள்.அவர்கள் சமுதாயத்தை மாற்றி,இன்னும் நல்ல பாதைகளிலும் காலத்திற்குத் தேவையான கடமைகளிலும் வழிகளிலும் சமுதாயத்தைச் செலுத்துவார்கள். இத்தகைய நிலை இல்லையெனில் சமுதாயம் வாழ்வது என்பது முடியாமல் போய்விடும் . இவ்வாறு நம்முடைய வழியை இந்த இரண்டு ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதன் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கான போதிய பரந்த மனமும் அதே வேளையில் ஆழ்ந்த நம்பிக்கையும் இங்குள்ள ஒவ்வொருவரிடமும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன், எதையும் விலக்காமல் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது என்பதையே நான் குறிப்பிடுகிறேன். கொள்கைவெறியரின் தீவிரமும் லௌகீகரின் பரந்த நோக்கும் வேண்டுமென்று விரும்புகிறேன். கடல்போல் ஆழ்ந்து, எல்லையற்ற வானம் போல் விரிந்துள்ள இதயமே நமக்கு வேண்டும். உலகிலுள்ள வேறெந்த நாட்டினரைவிடவும் முற்போக்குடன் இருப்போம்; அதேவேளையில் நாம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்திருப்போம். எவ்வாறு இப்படி இருப்பது என்பது இந்துக்களுக்குத் தான் தெரியும்.

இதை தெளிவான வார்த்தைகளில் சொல்வதென்றால், நாம் ஒவ்வொன்றிலும் முக்கியம் மற்றும் முக்கியமற்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமானவை என்றும் இருப்பவை. முக்கியமற்றவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுபவை; அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீக்கப்பட்டு, முக்கிய மானவற்றால் நிரப்பப்படவில்லை என்றால், கட்டாயமாக அவை ஆபத்தானவையாகிவிடும். உடனே நீங்க ளெல்லாம் எழுந்து நின்று, உங்கள் பழங்கால வழக்கங்களையும் அமைப்புகளையும் தூற்ற வேண்டும் என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள்.நான் சொல்வது அது அல்லவே அல்ல. அவற்றுள் மிகவும் தீய ஒன்றைக் கூட நிந்திக்காதீர்கள், எதையும் தூற்றாதீர்கள். இன்று மிகக் கொடிய ஒன்றாகத் தோன்றுகின்ற பழக்கங்கள், கடந்த காலத்தில் வாழ்வை வளப்படுத்திய பழக்கங்களாக இருந்திருக்கும். அவற்றை நாம் நீக்க நேருமானால் கூட சபித்துக் கொண்டே நீக்கக் கூடாது. நம் இனம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக, கடந்த காலத்தில் அவை செய்த மகத்தான காரியங்களுக்காக அவைகளை வாழ்த்தியும் அவைகளிடம் நன்றியுணர்வுடனும் நீக்க வேண்டும்.

நமது சமுதாயங்களின் தலைவர்கள் ஒரு போதும் படைத்தலைவர்களோ அரசர்களோ அல்ல, மாறாக ரிஷிகளே என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். ரிஷிகள் என்பவர் யார்? உபநிடதங்கள் ரிஷி என்று அழைக்கின்ற ஒருவர் சாதாரண மனிதர் அல்ல ;அவர் மந்த்ர த்ரஷ்டா; அவர் ஆன்மீகத்தை நேருக்கு நேர் காண்பவர். அவரைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பது வெறும் புத்தகப் படிப்பல்ல; கற்பனைகளோ வாதங்களோ அல்ல; வெற்றுப் பேச்சும் அல்ல; மாறாக, புலன்களைக் கடந்த உண்மைகளை நேருக்கு நேர் காண்பது அதாவது உண்மை அனுபூதியே. இது தான் ரிஷித்தும் என்பது.

ரிஷித்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட யுகத்திற்கோ காலத்திற்கோ நெறிக்கோ ஜாதிக்கோ சொந்தமானதல்ல. உண்மை உணரப்பட வேண்டும் என்கிறார் வாத்ஸ்யாயனர். எனவே நீங்கள், நான் மற்றும் இங்குள்ள ஒவ்வொருவருமே ரிஷிகளாவதற்காக அழைக்கப்பட இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு நம்பிக்கை வேண்டும்.நாம் அனைவரும் உலகத்தை அசைப்பவர்களாக மாறியாக வேண்டும், ஏனெனில் எல்லாம் நம்மிடமே உள்ளது. ஆன்மீகம் என்பதை நாம் நேருக்கு நேராகக் கண்டாக வேண்டும், அனுபவிக்க வேண்டும், அதன் மூலம் அது பற்றிய நமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் ரிஷித்துவமாகிய அந்தப்பேரொளியில் திளைக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் மகத்தானவர்களாக இருப்போம். அப்பொழுது நம் உதடுகளிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இணையற்ற பாதுகாப்பை அள்ளி வழங்குவதாக இருக்கும். அப்பொழுது யாரையும் நிந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல், யாரையும் திட்ட வேண்டிய தேவையே இல்லாமல், இந்த உலகத்தில் யாருடனும் சண்டையிடும் அவசியமும் இல்லாமல் நம் முன்னர் தீமைகள் தாமாகவே மறைந்து போகும். சொந்த முக்திக்காகவும் பிறரது முக்திக்காகவும் இங்குள்ள ஒவ்வொருவரும் அத்தகைய ரிஷித்துவத்தை அடைய கடவுள் நமக்கு உதவுவாராக


மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 5 கொழும்புமுதல்அல்மோராவரை தமிழ்நாடு சொற்பொழிவு  மதுரையில் பேசியது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s