புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள் -2

இந்தியப் பாரம்பரியங்களுடன் புதிய இந்தியா

அவர்களைவிடப் பெரிய சீர்திருத்தவாதி நான் என்பதை, சீர்திருத்தவாதிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தை; நானோ அடிமுதல் முடி வரையிலான மொத்தச் சீர்திருத்தத்தை விரும்புகிறேன். அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில்தான் இருவரும் வேறுபடுகிறோம். அவர்களுடையது அழிவுப் பாதை; என்னுடையது ஆக்கப் பாதை. நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியையே நம்புகிறேன். என்னைக் கடவுள்நிலையில் வைத்துக்கொண்டு, ‘இந்த வழியில்தான் நீங்கள் போக வேண்டும், இந்த வழியில் போகக் கூடாது’ என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன். ராமர் பாலம் கட்டும்போது, தன் பங்காக ஏதோ கொஞ்சம் மணலைப் போட்ட அந்தச் சிறிய அணிலைப் போல் இருக்கவே நான் விரும்புகிறேன். அதுதான் என் நிலை. ……

அற்புதமான இந்தத் தேசிய எந்திரம் காலங்காலமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தேசிய வாழ்க்கை என்னும் இந்த ஆச்சரியமான ஆறு நம் முன் ஓடிக் கொண் டிருக்கிறது. இது நல்லதா, எந்த வழியாக இது செல்லும் என்பது யாருக்குத் தெரியும்? (5.144)

தேசிய வாழ்க்கைக்குத் தேவையான உணவைக் கொடுங்கள், ஆனால் வளர்ச்சி அதைப் பொறுத்தது. அது வளர்வதற்கு யாரும் கட்டளையிட முடியாது. நம் சமூகத்தில் தீமைகள் அதிகமாக உள்ளன, ஆனால் அதுபோல் மற்ற ஒவ்வொரு சமூகத்திலும் தீங்குகள் இருக்கவே செய் கின்றன. … தீமையை இனம்காட்டவும் எல்லோராலும் முடியும். ஆனால் பிரச்சினையிலிருந்து விடுபட வழி காண்பவன் அல்லவா மனித குலத்தின் நண்பன்! (5.144, 147)

இந்தியாவில் எப்போதாவது சீர்திருத்தவாதிகளுக்குக் குறைவு இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? நானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்? தாது யார்? ஒளி மிகுந்த நட்சத்திரக் கூட்டங்களின் வரிசைகள்போல், ஒருவர் பின்னால் ஒருவராக வந்த இந்த முதல்தர ஆச்சாரியர்கள் எல்லாம் யார்? ….

வித்தியாசம் இதுதான்: அவர்கள் இன்றைய சீர்திருத்த வாதிகளைப்போல் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை; இன்றைய சீர்திருத்தவாதிகளைப்போல் யாரையும் சபிக்க வில்லை. வாழ்த்துக்களை மட்டுமே அவர்களுடைய உதடுகள் மொழிந்தன. அவர்கள் ஒருபோதும் நிந்திக்க வில்லை . … ‘நீங்கள் தீயவர்களாக இருந்தீர்கள், இப்போது நல்லவர்களாவோம்’ என்று அவர்கள் சொல்லவில்லை. ‘நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். இப்போது மேலும் நல்லவர்களாவோம்’ என்றே கூறினார்கள். எவ்வளவு பெரிய வித்தியாசம்!

நம் இயல்பிற்கு ஏற்பவே நாம் வளர வேண்டும். வெளிநாட்டுச் சங்கங்கள் நம்மீது திணித்துள்ள செயல்முறை களைப் பின்பற்ற முயல்வது வீண், அவ்வாறு நடக்கவும் முடியாது. அப்படி முடியாததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். வளைத்து நீட்டி, கொடுமைப்படுத்துவதன் மூலம் நம்மை மற்ற நாடுகளின் அமைப்பில் உருவாக்க முடியாது. மற்ற இனங்களின் சமூக அமைப்புகளை நான் நிந்திக்கவில்லை; அவை அவர்களுக்கு நல்லது, நமக்கு அல்ல. அவர்களுக்கு உணவாக இருப்பது நமக்கு விஷ மாகலாம். கற்க வேண்டிய முதல் பாடம் இது. தங்கள் பல் வேறு அறிவியல், மற்ற அமைப்புக்கள், மற்ற மரபுகளின் பின்னணியில் தற்போதைய அமைப்பு முறையை அவர்கள் பெற்று இருக்கிறார்கள். நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் செயல்களின் பின்னணியில் அமைந்த, நமக்குச் சொந்தமான முறையில்தான் நாம் இயல் பாகச் செல்ல முடியும். நமது சொந்தப் பாதையில்தான் சுலப மாகச் செல்ல முடியும். அதை நாம் செய்தாக வேண்டும். (5.152)

தீப்பொறி பறக்கின்ற தேச பக்தர்கள் தேவை

விளையாட்டுப் பொம்மைகளின்மீது இதயபூர்வமான அன்பு வைத்தால், அவை உயிர் பெற்றுவிடும் என்பது ஜப்பானிய சிறுமிகளின் நம்பிக்கை என்று ஜப்பானில் கேள்விப்பட்டேன். எனவே ஜப்பானிய சிறுமி ஒருபோதும் பொம்மையை உடைப்பதில்லை. …..

என் நம்பிக்கையும் இதுதான்: செல்வமிழந்த, பேறிழந்த, புத்தி மங்கிய, பிறருடைய காலடியில் மிதிபடு கின்ற, எப்போதும் உணவில்லாமல் வாடுகின்ற, கலகத்தை விரும்புகின்ற, பிறர் நலனில் பொறாமைப்படுகின்ற இந்தப் பாரத மக்களிடமும் யாராவது இதயபூர்வமான அன்பு வைத்தால் மீண்டும் பாரதம் விழித்தெழுந்துவிடும். எப்போது பரந்த மனம் கொண்ட நூற்றுக்கணக்கான ஆணும் பெண்ணும் எல்லாவிதமான போக ஆசைகளையும் உதறித் தள்ளிவிட்டு, வறுமை அறியாமை ஆகிய சுழல்களில் மேலும் மேலும் மூழ்கிக்கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களின் நன்மையை மனம் சொல் உடல் மூன்றாலும் விரும்புவார்களோ அப்போதுதான் பாரதம் விழிப்புறும். (11.15-16)

நாட்டுப்பற்று உடையவர்களாக இருங்கள். கடந்த காலத்தில் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த இந்த இனத்தை நேசியுங்கள். (5.109)

எனவே உணர்ச்சி கொள்ளுங்கள், என் எதிர்கால சீர்திருத்தவாதிகளே, வருங்கால தேச பக்தர்களே, நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா? தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பரம்பரையில் வந்த கோடானுகோடி பேர் மிருகங்களுக்கு அடுத்த நிலையில் வாழும் கொடுமையை உணர்கிறீர்களா? பட்டினியால் இன்று லட்சக்கணக்கானோர் வாடுவதையும், காலங்காலமாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் துடிப்ப தையும் உணர்கிறீர்களா? இந்த நாட்டின்மீது ஒரு கரிய மேகம் போல் அறியாமை கவிந்துள்ளதை உணர்கிறீர்களா? இந்த உணர்ச்சி உங்களை அமைதியிழந்து தவிக்கச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்களைத் தூக்கம் கெட்டு வாடச் செய் கிறதா? இந்த உணர்ச்சி உங்கள் ரத்தத்தில் கலந்து, உங்கள் நாடிநரம்புகள் தோறும் ஓடி, உங்கள் இதயத்துடிப்புடன் கலந்து துடிக்கிறதா? இது உங்களை ஏறக்குறைய பைத்திய மாகவே ஆக்கிவிட்டதா? … இதுதான் தேசப்பற்று உடையவன் ஆவதற்கு முதற்படி. வெறும் முதற்படி இது. …..

நீங்கள் உணரலாம். ஆனால் வெட்டிப்பேச்சில் உங்கள் ஆற்றல்களை வீணாக்குவதற்குப் பதிலாக, உருப்படி யான ஏதாவது வழி கண்டுபிடித்தீர்களா? அவர்களை நிந்திப்ப தற்குப் பதிலாக உதவி செய்வதற்கு, அவர்களின் துன்பங் களைத் தணிக்கின்ற சில இதமான வார்த்தைகளைக் கூறு வதற்கு, அவர்கள் நடைப் பிணங்களாகிக் கிடக்கும் கேவல நிலையிலிருந்து மீட்க ஏதாவது செயல்முறை வழி கண்டீர்களா?

அதோடும் தேசப்பற்று முடிந்து விடுவதில்லை . மலைகளையொத்த எதிர்ப்புகளை வெல்வதற்கான மனவுறுதி உங்களிடம் இருக்கிறதா? கையில் வாளுடன் இந்த உலகம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும், நீங்கள் சரி என்று நினைப்பதைச் செய்து முடிக்கின்ற தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் மனைவியும் பிள்ளைகளும் எதிர்த் தாலும், உங்கள் பணம் எல்லாம் கரைந்து போனாலும், உங்கள் பெயர் அழிந்து, செல்வம் எல்லாம் மறைந்தாலும் அதையே உறுதியாகப் பற்றிநிற்பீர்களா? அதையே உறுதி யாகத் தொடர்ந்து, உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்வீர்களா? ….

இத்தகைய உறுதி உங்களிடம் இருக்கிறதா? உங் களிடம் இந்த மூன்று விஷயங்களும் இருக்குமானால் நீங்கள் ஒவ்வொருவரும் பிறர் பிரமிக்கத்தக்க செயல்களைச் செய்வீர்கள். (5.160)

நாட்டுப் புனரமைப்பின் முன்னோடிகளுக்கு

அனல் பறக்கின்ற இளைஞர்குழு ஒன்றை ஆயத்தப் படுத்துங்கள். உங்களிடமுள்ள ஊக்கத்தீயை அவர்களிடம் செலுத்துங்கள். பிறகு படிப்படியாக இந்த அமைப்பைப் பெருக்குங்கள். (9.290)

இளைய தலைமுறையினரிடமே, நவீன தலைமுறை யினரிடமே எனது நம்பிக்கை இருக்கிறது. அதிலிருந்தே எனது தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கக்குட்டிகளைப் போல் அவர்கள் இந்த முழுப்பிரச்சினைக்கும் தீர்வு காண்பார்கள். (8.78)

என் வீர இளைஞர்களே, … அன்பு, நேர்மை, பொறுமை–இவை மூன்றும் இருந்தால் போதும், வேறு எதுவும் தேவையில்லை . வளர்ச்சி, அதாவது விரிந்து பெருகுதல், அதாவது அன்பு–இதைத் தவிர வாழ்க்கை என்பது வேறு என்ன? எனவே எல்லா அன்பும் வாழ்வு. அன்பே வாழ்வின் ஒரே நியதி. எல்லா சுய நலமும் மரணமே–இந்த உலகமோ, அல்லது மறு உலகமோ இது உண்மை. நன்மை செய்வது வாழ்வு, பிறருக்கு நன்மை செய் யாமல் இருப்பது சாவு. நமது பார்வைக்குத் தென்படுகின்ற மனித மிருகங்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இறந்த வர்கள், வெறும் பிணங்கள். ஏனெனில் என் இளைஞர்களே, அன்புடையவனைத் தவிர பிறர் வாழ்பவர்கள் அல்ல. என் குழந்தைகளே, உணர்ச்சி கொள்ளுங்கள், உணர்ச்சி கொள் ளுங்கள். ஏழைகளுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப்பட்ட வர்களுக்காக உணர்ச்சி கொள்ளுங்கள். உணர்ச்சியில் ஆழ்ந்து செல்லுங்கள். இதயமே நின்று, மூளை குழம்பி, உங் களுக்குப் பைத்தியமே பிடித்துவிடுமெனத் தோன்றும்வரை யிலும் உணர்ச்சியில் மூழ்குங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் அந்தராத்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும். பாடுபடுங்கள், பாடுபடுங்கள் கடந்த பத்து ஆண்டு களாக இதுவே எனது குறிக்கோளாக இருந்துவந்தது. பாடு படுங்கள்-இதையே இன்னும் சொல்கிறேன். என்னைச் சுற்றிலும் இருளாக இருந்தபோதும் ‘பாடுபடுங்கள்’ என் றேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும் ‘பாடு படுங்கள்’ என்று அதையே சொல்கிறேன். என் குழந்தை களே, பயம் வேண்டாம். நட்சத்திரங்கள் மின்னுகின்ற அந்தப் பரந்த வானம் இடிந்து வீழ்ந்து உங்களை நசுக்கிவிடுமோ என்று பயத்துடன் அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற் காதீர்கள். கொஞ்சம் பொறுங்கள், இன்னும் சில மணித் துளிகள்தான், அந்த வானம் உங்கள் காலடியில் கிடக்கும். பொறுங்கள்; பணத்தால் பயனில்லை, பெயரால் பய னில்லை, புகழால் பயனில்லை, கல்வியால் பயனில்லை, அன்பு ஒன்றே பயன்தருவது; துளைக்க முடியாத சுவர்களை யெல்லாம் துளைத்து முன்னேறக் கூடியது ஒழுக்கம் ஒன்றுதான். (9.406-7)

பணக்காரர்கள் என்கிறார்களே அவர்களை நம் பாதீர்கள். அவர்கள் உயிருள்ளவர்கள் அல்ல, செத்து மடிந்த வர்கள் என்றே கூறலாம். நம்பிக்கைக்கு இடமாக இருப்பது நீங்களே– ஆரவாரமற்றவர்களான, சாமானியர்களான, ஆனால் நம்பிக்கை நிறைந்துள்ள நீங்களே. இறைவனை நம்புங்கள்; பெரிய திட்டங்கள் எதுவும் தேவையில்லை, அவற்றால் ஒன்றும் நடப்பதில்லை . துயருறுபவர்களுக்காக அனுதாபம் கொள்ளுங்கள்; உதவிக்காக விண்ணை நோக்குங்கள், உதவி வந்தேதீரும்.

இதயத்தில் இந்தச் சுமையைத் தாங்கி, அறிவில் இந்தக் கருத்தை ஏற்று பன்னிரண்டு ஆண்டுகளாக நான் அலைந்துள்ளேன். செல்வந்தர், பெரிய மனிதர் என்றெல் லாம் சொல்லப்படுபவர்களின் வாசல்தோறும் போயிருக் கிறேன். ரத்தம் சொட்டும் இதயத்துடன் உதவி நாடி, உலகின் பாதியைக் கடந்து வேற்று நாடாகிய இங்கு வந்து சேர்ந் திருக்கிறேன். கடவுளின் மகிமைக்குக் குறைவில்லை . அவர் எனக்கு உதவுவார் என்பது எனக்குத் தெரியும். குளிர் காரண மாகவோ பசி காரணமாகவோ இந்த நாட்டில் (1. அமெரிக்கா; அங்கிருந்து எழுதப்பட்ட கடிதப் பகுதி இது.) நான் அழிந்து விட நேரலாம்; ஆனால் இளைஞர்களே, இந்த அனுதாப உணர்ச்சியை, ஏழை, பாமரர், ஒதுக்கப்பட்டவர் ஆகியவர் களின் நலனுக்காகப் போராடுகின்ற முயற்சியை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இப்போதே இந்தக் கணமே, பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்லுங்கள்; (சென்னை, திருவல்லிக்கேணியிலுள்ள கோயில். இது சென்னைச் சீடர்களுக்கு விவேகானந்தர் எழுதிய கடிதப் பகுதி) கோகுலத்தின் ஏழைகளும், தாழ்ந்தவர்களுமான இடையர்களுக்கு யார் தோழராகத் திகழ்ந் தாரோ, வேடனான குகனைக் கட்டித் தழுவுவதற்கும் யார் கூசிப் பின்வாங்கவில்லையோ, யார் தமது புத்தாவதாரத்தில் பிரபுக்களின் அழைப்பையெல்லாம்விட விலைமகள் ஒருத்தி யின் அழைப்பையே மேலானதாகக் கருதி ஏற்று அவளைக் காத்தாரோ அந்த இறைவனின் முன், ஆம், அந்த இறைவனின் முன் வீழ்ந்து பணிந்து, பெரியதொரு பலி செலுத்துங்கள். எந்த மக்களுக்காக அவர் அவ்வப்போது அவதரிக்கிறாரோ, எந்த மக்களை அவர் மற்றெல்லாவற்றையும்விட அதிகமாக நேசிக்கிறாரோ, அந்த வறியவர், தாழ்ந்தவர், ஒடுக்கப்பட் டோருக்காக உங்கள் முழு வாழ்க்கையைப் பலி கொடுங்கள்.

பணக்காரர், பெரிய மனிதர் என்று கூறப்படுபவர் களை எதிர்பார்க்க வேண்டாம். இதய உணர்ச்சி இல்லாத, வறட்டு அறிவு நிறைந்த எழுத்தாளர்களையோ, பத்திரிகை களில் அவர்கள் எழுதுகின்ற உயிரற்ற கட்டுரைகளையோ பொருட்படுத்தாதீர்கள். நம்பிக்கை, இரக்கம்- திட நம்பிக்கை, எல்லையற்ற இரக்கம்! வாழ்வு பெரிதல்ல, மரணம் பெரிதல்ல, பசி பெரிதல்ல, குளிர் பெரிதல்ல; இறைவனின் மகிமையைப் பாடுவோம். முன்னேறிச் செல்லுங்கள், இறைவனே நமது தளபதி. வீழ்பவர்களைத் திரும்பிப் பார்க்காதீர்கள். முன்னோக்கியே சென்று கொண் டிருங்கள், மேலும்மேலும் செல்லுங்கள். சகோதரர்களே, இவ்வாறு நாம் போய்க்கொண்டேயிருப்போம். ஒருவன் வீழ்ந்ததும் மற்றொருவன் பணியை ஏற்றுக்கொள்வான். (9.201)

தியாகமும் சேவையும்- தாரக மந்திரம்

நமது வழியை மிக எளிதாகக் கூறிவிடலாம். நமது தேசிய வாழ்வை மீண்டும் நிலைநாட்டுவதே அது. புத்தர் தியாகத்தைப் பிரச்சாரம் செய்தார், இந்தியா அதைக் கேட்டது. ஆறு நூற்றாண்டுகளில் அது மகோன்னதத்தை அடைந்தது. அதுதான் ரகசியம். தியாகமும் சேவையும்தான் இந்தியாவின் லட்சியங்கள். இந்தத் துறையில் இந்தியாவை ஊக்கப் படுத்தினால் மற்றவை தம்மைத்தாமே செம்மைப்படுத்திக் கொள்ளும். (8.83)

சுயச் சார்பும் சுய மதிப்பும்

இறை நம்பிக்கைக்கும் முன்னால் தன்னம்பிக்கை வேண்டும். நாமோ நாளுக்குநாள் தன்னம்பிக்கையை இழந்து கொண்டே இருக்கிறோம், இதுதான் பிரச்சினை என்று தோன்றுகிறது. இந்த விஷயத்தில்தான் நான் சீர்திருத்த வாதிகளை எதிர்க்கிறேன். (8.79)

இந்தச் சிரத்தைதான் நமக்குத் தேவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இந்தியாவிலிருந்து ஏறக்குறைய மறைந்தேவிட்டது. அதனால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் எது வேறுபாட்டை உண்டாக்குகிறது என்றால் இந்தச் சிரத்தை தான், வேறு எதுவும் இல்லை . ஒருவனை மகத்தானவனாக வும் மற்றொருவனைப் பலவீனனாகவும் கீழானவனாகவும் எது ஆக்குகிறது என்றால் இந்தச் சிரத்தைதான். யார் தன்னைப் பலவீனன் என்று நினைக்கிறானோ அவன் பலவீனனாகவே ஆவான் என்பார் என் குருதேவர், உண்மைதான். இந்தச் சிரத்தை உங்களுக்குள் நுழைந்தாக வேண்டும். மேலை நாட்டினரிடம் வெளிப்பட்டிருக்கின்ற பௌதீக சக்திகள் அனைத்தும் இதன் விளைவுதான். அவர்கள் தங்கள் தசை களின் ஆற்றலில் நம்பிக்கை வைத்தார்கள். நீங்கள் உங்கள் ஆன்மாவில் அத்தகைய நம்பிக்கை வைத்தால் அதன் விளைவு இன்னும் எவ்வளவு மகத்தானதாக இருக்கும்! (5.257)

தீவிரமான செயல்திறன் மற்றொரு தேவை

அந்தச் சக்தி, அந்தச் சுதந்திர தாகம், அந்தத் தன்னம் பிக்கை, அந்த அசையாத உறுதி, அந்தச் செயல்திறன், அந்த லட்சியத்தில் ஒற்றுமை, அந்த முன்னேற்றத்தில் ஆசை இவை நமக்கு வேண்டும். தொடர்ந்து பின்னோக்கிப் பார்ப் பதைச் சற்று விட்டு விட்டு, முன்னோக்கி நெடுந்தூரம் செல்லும் பரந்த பார்வை வேண்டும். தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல்துடிப்பு (ரஜஸ்) வேண்டும். (8.8)

ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு நாட்டையும் சிறப்படையச் செய்ய மூன்று விஷயங்கள் தேவை.

1. நல்லியல்பின் ஆற்றல்களில் திட நம்பிக்கை.

2. பொறாமையும் சந்தேகமும் இல்லாதிருத்தல்.

3. நல்லவர்களாக இருந்து நன்மை செய்ய முயல் கின்ற அனைவருக்கும் உதவுதல். (9.232)

ஒரு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுச் சேர்ந்து பணி யாற்றும் போக்கு நம் இயல்பில் அறவே இல்லை. ஆனால் அதைப் புகுத்தியாக வேண்டும். பொறாமையின்மையே பரம ரகசியம். உன் தோழர்களின் கருத்துக்களுக்கு விட்டுக் கொடுத்து, அவர்களை அரவணைத்துச் செல்ல முயற்சி செய். முழு ரகசியமும் இதுவே. (9.318)

ஆற்றல்களைச் சிதற விடுதல், சோம்பல், வீண் பிதற்றல்கள் இவற்றை விட்டு, தலைவர்களிடம் பணிவு காட்டுவது, பொறாமையின்மை, தீவிர விடாமுயற்சி, வற்றாத தன்னம்பிக்கை போன்ற குணங்களை ஆங்கிலேய ரிடமிருந்து கற்பது மிகவும் இன்றியமையாதது. ஓர் ஆங்கிலேயன் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துவிட்டால், எத்தனைத் துன்பங்கள் நேரிட்டாலும் அவனையே பின் பற்றுவான், அவனுக்குக் கீழ்ப்படிவான். இங்கே இந்தியா வில் ஒவ்வொருவனும் தலைவனாக இருக்க விரும்புகிறான், கீழ்ப்படிய யாருமில்லை . அதிகாரம் செலுத்து முன், கீழ்ப் படியக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது பொறாமை களுக்கோ அளவில்லை …… பொறாமை அகலாதவரையில், தலைவர்களுக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளாதவரையில், ஸ்தாபனரீதியான ஆற்றலுக்கு இடமில்லை; ஒன்றும் செய் வதற்கு இயலாத குழப்ப நிலையில் இருப்பதுபோல் சந்தைக் கூட்டமாக இருக்கலாம்; கொள்கைகளை வகுப்பதும், எது வும் செயலில் சாதிக்காதவர்களாகவும் இருக்கலாம். (6.385-6)

போதிய பரந்த மனமும் அதேவேளையில் ஆழ்ந்த நம்பிக்கையும் இங்குள்ள ஒவ்வொருவரிடமும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ….. கொள்கைவெறியரின் தீவிர மும், லௌகீகரின் பரந்த நோக்கும் வேண்டுமென்று விரும்பு கிறேன். கடல்போல் ஆழ்ந்து, எல்லையற்ற வானம் போல் விரிந்துள்ள இதயமே நமக்கு வேண்டும். உலகிலுள்ள வேறெந்த நாட்டினரைவிடவும் முற்போக்குடன் இருப்போம்; அதேவேளையில் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கை யுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்திருப்போம். (5.80)

உழைக்கும் வர்க்கத்தினர் எழுவார்கள்

மனித சமுதாயம் வரிசையாக பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்கள் என்ற நான்கு ஜாதியினரால் ஆளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையும் அதற்கான பெருமை களையும் குறைகளையும் கொண்டதாக உள்ளது.

பிராமணர்கள் ஆளும்போது, பிறந்த குலத்தைக் காரணமாகக் கொண்டு, பிராமணர்களைத் தவிர மற்ற அனை வரும் ஒதுக்கப்படுகிறார்கள். புரோகிதர்களுக்கும் அவர்களின் சந்ததிக்கும் எல்லாவித பாதுகாப்புகளும் அளிக்கப்படு கின்றன. அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த அறிவும் கிடைக்க வழி இல்லை ; அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அந்த அறிவைப் போதிப்பதற்கான உரிமையும் இல்லை. பல்வேறு விஞ்ஞானங்களின் அஸ்திவாரம் இடப்பட்டது தான் இந்தக் காலத்தின் பெருமை. புரோகிதர்கள் மனத்தைப் பண்படுத்துகின்றனர். மனத்தின்மூலமே அவர்கள் ஆள்கின்றனர்.

க்ஷத்திரிய ஆட்சி கொடுங்கோன்மையானது; கொடூர மானது. ஆனால் யாரையும் அவர்கள் பிரித்துப் பார்ப்ப தில்லை. அவர்களின் அதிகாரம் ஓங்கியிருக்கின்ற காலத்தில் தான் கலைகளும் சமுதாயப் பண்பாடும் உச்சநிலை அடைகின்றன.

வைசிய ஆதிக்கம் அடுத்து வருகிறது. மௌனமாக அமுக்கி, நசுக்கி, ரத்தத்தை உறிஞ்சும் சக்தி அதனிடம் உள்ளது. அந்த சக்தி பயங்கரமானது. அவன் வியாபாரி, ஆதலால் எல்லா இடங்களுக்கும் செல்வான்; இதன்மூலம் முந்திய இரண்டு நிலைகளிலும் சேர்த்து வைக்கப்பட்ட கருத்துக்களைப் பரப்புகிறான். இது இந்த ஆதிக்கத்தின் அனு கூலம். இவர்கள் க்ஷத்திரியர்களைவிட குறைந்த அளவே பிறரிலிருந்து பிரிந்து வாழ நினைப்பவர்கள்; ஆனால் இவர் களின் ஆதிக்கத்தின்போது பண்பாடு நலியத் தொடங்கு கிறது. (10.406)

இறுதியாக சூத்திரர்கள் அதாவது உழைக்கும் வர்க்கத் தின் ஆட்சி. பௌதீக வசதிகள் பலருக்கும் பகிர்ந்தளிக்கப் படுவதுதான் இந்த ஆட்சியின் அனுகூலம். அதன் பிரதி கூலங்கள் பண்பாடு தாழ்வுறுவதாக (ஒருவேளை) இருக்க லாம். இதில் சாதாரணக் கல்வி பேரளவில் பரவும். ஆனால் அசாதாரணமான மேதைகள் குறைந்து கொண்டே போவார்கள்…….

முதல் மூன்று காலங்களும் கடந்து விட்டன. இப் போது கடைசி காலம் வந்துள்ளது. அவர்கள் அதைப் பெற்றே யாக வேண்டும், யாரும் அதைத் தடுக்க முடியாது. (10.405)

ஒரு காலம் வரும். அப்பொழுது சூத்திரர்கள் தங்கள் சூத்திரத் தன்மையுடனேயே முக்கியத்துவம் பெறுவார்கள். அதாவது அவர்கள் வைசிய, க்ஷத்திரிய இயல்புகளைப் பெற்று வலிமையை வெளிப்படுத்துகிறார்களே, அதுபோல் அல்ல; சூத்திர இயல்பு மற்றும் வழக்கங்களுடனேயே எல்லா நாடுகளிலும் சமுதாயத்தில் ஆதிக்கத்தை அடைவார்கள். அந்த உதயத்தின் முதல் கிரணம் மேற்கு உலகில் இப்பொழுதே மெல்லமெல்லத் தோன்ற ஆரம்பித்து விட்டது, அதன் விளைவு என்னவாகுமோ என்று எல்லோரும் திகைத்து நிற்கிறார்கள். சோஷலிசம் (Socialism), அனார்கிசம், (Anarcism) Gஹிலிசம் (Nihilism) போன்ற கொள்கைகள் எல்லாம் இந்தப் புரட்சிக்கான முன்னோடிகள். (8.63)

உலகில் என்னென்ன நடக்கப் போகிறது என்பது ஒரு நிழலாட்டம்போல் என் கண்களுக்குத் தெரிகிறது; ஒரு திரை வழியாகப் பார்ப்பது போல் அவற்றை நான் காண்கிறேன். பல ஆண்டுகளாக ஆழ்ந்த கவனம் செலுத்தியதில், இறையருளால் எனக்கு இந்த ஆற்றல் வந்துள்ளது. கற்றுக் கொள்ளுங்கள், பயணம் செய்யுங்கள்- அது சாதனை. வான இயல் வல்லுனர்கள் தொலை நோக்கி வழியாக நட்சத்திரங்களின் சஞ்சாரத்தைப் பார்ப்பதுபோல் உலகின் சஞ்சாரம் என் பார்வை எல்லைக்குள் விழுகிறது. என் வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்– உழைப்பாளர் களின் எழுச்சி முதலில் ரஷ்யாவில் உண்டாகும், பிறகு சீனா வில் தோன்றும். அதன்பிறகு இந்தியா எழும். புதிய உலகை உருவாக்குவதில் அந்த இந்தியா ஒரு மிக முக்கியப் பங்கு வகிக்கும். (சுவாமி விவேகானந்தரின் இளைய சகோதரராகிய பூபேந்திர நாத் தத்தர் எழுதிய Swami Vivekananda: Patriot-Prophet (Nababharat Publishers, Calcutta, 1954, p.335) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

பிராமண காலத்தின் அறிவையும், க்ஷத்திரிய காலத் தின் பண்பாட்டையும், வைசிய காலத்தின் பகிர்ந்தளித்தல் போக்கையும், சூத்திர காலத்தின் சமத்துவ லட்சியத்தையும் சேர்த்து, அவற்றின் தீமைகளை விலக்கி ஒரு நிலையை அமைக்க முடியுமானால், அது லட்சிய நிலையாக இருக்கும். ஆனால் அது நடக்கக் கூடியதா? (10.406)

புதிய இந்தியா

புதிய இந்தியா உருவாகட்டும்! … கலப்பை ஏந்திய விவசாயிகளின் குடிசையிலிருந்து, மீனவர்களின், சக்கிலியர் களின், தோட்டிகளின் குடிசைகளிலிருந்து நவீன பாரதம் உயிர்த்தெழட்டும்! மளிகைக் கடையிலிருந்து, பலகாரக் கடையின் அடுப்புக்கு அருகிலிருந்து எழுந்து வரட்டும்! தொழிற்சாலைகளிலிருந்து, கடைகளிலிருந்து, சந்தைகளி லிருந்து தோன்றட்டும்! தோப்புகளிலிருந்து, காடுகளிலிருந்து, குன்றுகளிலிருந்து, மலைகளிலிருந்து எழுந்து வரட்டும்!

இந்த மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடக்கு முறையைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்; மௌன மாகச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக இன்று அற்புதமான பொறுமையைப் பெற்றுள்ளார்கள். தொடர்ந்து துன்பத்தை அனுபவித்து வந்த அவர்கள், இன்று, குன்றாத ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள். ஒருபிடிச் சோறு உண்டுகொண்டு, உலகையே ஆட்டிப்படைக்க அவர்களால் முடியும். அரைச் சப்பாத்தி போதும், அவர்களது ஆற்றலைத் தாங்க இந்த மூன்று உலகங்களாலும் முடியாது. ரக்தபீஜனின் (தேவீ மாஹாத்மியக் கதையில் வரும் ஓர் அசுரன். அவனது ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் அவனைப் போன்ற ஆற்றல் பெற்ற அசுரன் தோன்றுவான். எனவே அவனை அழிப்பது எளிதல்ல.) குறையாத சக்தியைப் போன்றது அவர்களுடைய சக்தி. மூவுலகிலும் காண முடியாத, நன்னடத்தை பலத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

இத்தகைய அமைதி, போதும் என்ற இத்தகைய மனம், இத்தகைய அன்பு, இத்தகைய மௌனத்தின் ஆற்றல், இத்தகைய இடையறாத உழைப்பு, பணியில் ஈடுபடும்போது வெளிப்படும் சிங்கத்தின் ஆற்றலுக்குச் சமமான ஆற்றல்இவற்றை நீங்கள் வேறு எங்கு காண முடியும்!

கடந்தகாலத்தின் எலும்புக்கூடுகளே! இதோ உங்கள் முன்பாக உங்கள் சந்ததியாகிய எதிர்கால இந்தியா நிற்கிறது. (8.335)

இந்தியா-இப்போதைய முக்கிய கவனம்

இந்தியா அழியுமா? அப்படியானால் உலகிலிருந்து ஆன்மீகம் அழிந்துவிடும், ஒழுக்க நிறைவு அழிந்துவிடும், மதத்தின்மீது கொள்கின்ற இதயபூர்வமான இனிய நல்லெண்ணம் அழிந்துவிடும், எல்லா உயர் லட்சியங்களும் அழிந்துவிடும். இவை இருந்த இடத்தில் காமமும் சுகபோக மும் ஆண் பெண் தெய்வங்களாக ஆட்சி செலுத்தும்; அங்கு பணமே புரோகிதராக இருக்கும்; புரட்டு, பலாத்காரம், போட்டி ஆகியவை வழிபாட்டு முறைகளாக இருக்கும்; மனிதன்தான் பலிப்பொருளாவான். ஆனால் அப்படிப் பட்ட காரியம் ஒருநாளும் நடக்காது. துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி, செயலாற்றும் சக்தியைவிட எல்லையற்ற மடங்கு பெரியது; வெறுப்பின் சக்தியைவிட அன்பின் சக்தி எல்லையற்ற மடங்கு ஆற்றல் மிக்கதாகும். (1.80)

மிக நீண்ட இரவு விலகுவதுபோல் தோன்றுகிறது, மிகக் கடுமையான துன்பம் கடைசியாக முடிவுக்கு வந்து விட்டதுபோல் தோன்றுகிறது, பிணம்போல் கிடந்த உடம்பு விழிப்பதுபோல் உள்ளது. இந்த நேரத்தில் ஒரு குரல் நம்மை நோக்கி வருகிறது-வரலாறும் மரபுகளும்கூட எட்டிப் பார்க்கமுடியாத இருள்செறிந்த அந்தக் கடந்தகாலத்திலிருந்து புறப்பட்டு, ஞானம், பக்தி மற்றும் கர்மமாகிய எல்லையற்ற இமயச் சிகரங்கள் தோறும் எதிரொலிப்பது போல் நம் தாய்நாடாகிய இந்தியாவின் குரல் நம்மை நோக்கி வருகிறது. மெதுவாக ஆனால் உறுதியாக மிகவும் தெளிவாக அது வருகிறது. நாளுக்கு நாள் அதன் ஒலி அதிகரித்துக்கொண்டே வருகிறது. தூங்கியவன் விழிக்கிறான்! இமயத்திலிருந்து தவழ்ந்து வரும் தென்றல் காற்றைப்போல், அது ஏறத்தாழ உயிரிழந்த நிலையில் இருக்கின்ற எலும்புகளுக்கும் தசைகளுக்கும் உயிர்த்துடிப்பைத் தருகிறது. சோம்பல் நீங்கத் தொடங்குகிறது. நமது பாரதத்தாய் நீண்ட ஆழ்ந்த தூக்கத்தி லிருந்து விழிக்கிறாள். அவள் விழித்து வருவதைக் குருடனும் குதர்க்கவாதிகளும் காண முடியாது. அவளை யாரும் தடுக்க முடியாது. இனி அவள் தூங்கப் போவதுமில்லை . புற சக்திகள் எதுவும் அவளை அடிமைப்படுத்த முடியாது. (5.48)

பண்டைக் காலத்தில் நல்ல விஷயங்கள் பல இருந் தன, ஆனால் தீய விஷயங்களும் இருந்தன. நல்ல விஷயங் களைக் காப்பாற்றி வைக்க வேண்டும். ஆனால் வருகிறதே எதிர்கால இந்தியா அது பண்டைய இந்தியாவைவிடச் சிறந்ததாக இருக்கும். (10.100)

நமது பழம்பெருமை மகத்தானது, சந்தேகமில்லை ; ஆனால் எதிர்காலம் இன்னும் மகிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். (9.406)

இந்தியா உயர்ச்சி பெறும்-உடல் பலத்தால் அல்ல, ஆன்மீக பலத்தால்; அழிவின் சின்னத்தால் அல்ல, அமைதி யென்னும் கொடியால், அன்பென்னும் கொடியால், துறவி யின் உடையால்; செல்வத்தின் சக்தியால் அல்ல, பிச்சை யேந்தும் திருவோட்டின் ஆற்றலால். (1.84)

ஆனால் இதோ என் கண்முன் காணும் வாழ்க்கை யைப்போல் தெளிவாக ஒரு காட்சியை என் முன் காண் கிறேன்–நமது புராதன அன்னை மறுபடியும் விழித்து விட் டாள்; புத்திளமையுடன், என்றுமில்லா மகிமையுடன் அவளது அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். சமாதான வாழ்த்தொலியுடன் அவளை உலகெங்கிலும் பிரகடனம் செய்யுங்கள். (1.85))

பிற நாடுகளை வென்று ஆட்சிபுரிந்த எத்தனையோ பேரரசுகள் இருந்தன. நாம்கூட எத்தனையோ நாடுகளை நம் குடையின் கீழ் ஆண்டிருக்கிறோம். ஆனால் நமது வெற்றியை மதம் மற்றும் ஆன்மீகத்தின் வெற்றி என்றே வர்ணிக்கிறார் மாமன்னரான அசோகர். இந்தியா மீண்டும் உலகை வெல்ல வேண்டும். இதுவே என் வாழ்க்கைக் கனவு. ….

நம் முன் உள்ள மகத்தான லட்சியம் இது. ஒவ்வொரு வரும் தயாராக இருக்க வேண்டும். உலகம் முழுவதையும் இந்தியா வெல்ல வேண்டும், அதற்குக் குறைந்த எதுவும் நம் லட்சியமல்ல. நாமெல்லாம் அதற்குத் தயாராவோம், அதற்காக நம் நரம்புகள் ஒவ்வொன்றையும் முறுக்கேற்று வோம். ….

ஓ இந்தியா விழித்தெழு, உனது ஆன்மீகத்தால் உலகை வெற்றிகொள்! ஆம், இந்த மண்ணில் முதலில் முழங்கியதைப்போல், அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும். பகை பகையை வெல்ல முடியாது. உலகாயதத் தையும் அதன் விளைவான எல்லா துன்பங்களையும் உலகாயதத்தால் வெற்றிகொள்ள முடியாது. படைகள் படை களை வெல்ல முயலும் போது துன்பங்கள் பெருகுவதும் மனித சமுதாயம் மிருக நிலைக்குப் போவதும்தான் நிகழ் கிறது. ஆன்மீகம் மேலை நாடுகளை வென்றாக வேண்டும்.

தாங்கள் ஒரு தேசிய இனமாக நிலைநிற்க வேண்டு மானால், அதற்குத் தேவையானது ஆன்மீகம் என்பதைப் பிற நாட்டினர் மெல்லமெல்ல அறிந்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அந்தத் தேவை யைப் பூர்த்தி செய்வது யார்? இந்தியாவின் மகத்தான ரிஷிகள் விட்டுச்சென்ற செய்திகளை உலகத்திலுள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று பரப்புவதற்கான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? இந்தச் செய்தி உலகின் ஒவ்வொரு மூலைக் கும் சென்றடைவதற்காகத் தங்கள் அனைத்தையும் தியாகம் செய்யக்கூடிய மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? உண்மை யைப் பரப்புவதற்கு அத்தகைய துணிச்சலான பெருமக்கள் தாம் தேவை. வீரமிக்க அத்தகைய செயல்வீரர்கள் வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டும், வேதாந்தத்தின் மகத்தான உண்மைகளை அங்கே பரப்புவதில் உதவ வேண்டும். இது உலகின் தேவை, இதைச் செய்யாவிடில் உலகம் அழிந்து போகும். மேலை உலகம் முழுவதுமே எரிமலையின் மீது உள்ளது, அது நாளைக்கே வெடிக்கலாம், நாளைக்கே சிதறித் தூள்தூளாகலாம். மேலை நாட்டினர் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேடினார்கள், ஆனால் நிம்மதி கிடைக்கவில்லை. இன்பக் கோப்பையின் அடிவரை குடித்துப் பார்த்தார்கள், அது வெறுமை என்பதைக் கண்டு விட்டார்கள். இந்தியாவின் ஆன்மீகக் கருத்துக்கள் மேலை நாடுகளில் ஆழமாக ஊடுருவும்படி நாம் வேலை செய்ய வேண்டிய தருணம் இதுதான்…….

நாம் வெளியே சென்றாக வேண்டும், உலகை ஆன்மீகத்தாலும் தத்துவத்தாலும் வென்றாக வேண்டும். இதைச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்; வேறு வழியில்லை . (5.125)

மிகவும் பண்டைக் காலத்தில் ஒருசமயம் இந்தியத் தத்துவம் கிரேக்க ஆற்றலுடன் சேர்ந்தபோது, அதிலிருந்து பாரசீகம், ரோம் மற்றும் பிற பெரிய நாடுகள் எழுந்தன. மாவீரன் அலெக்சாண்டரின் படையெடுப்புக்குப் பிறகு, இந்த இரு நீர்வீழ்ச்சிகளும் ஒன்றோடொன்று மோதி, பாதி உலகைக் கிறிஸ்தவ மதம் போன்ற ஆன்மீக அலைகளால் மூழ்கடித்தன. மீண்டும் இதேபோன்ற ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பட்டது, அதன் விளைவாக அரேபியா வளம் கண்டது, முன்னேறியது; தற்கால ஐரோப்பிய நாகரீகத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. நமது காலத்தில் மீண்டும் இந்த இரு பெரும் சக்திகளும் ஒன்றுசேரும் காலம் வந்துள்ளது என்று தோன்றுகிறது. இப்போது அவை சந்திக்கும் மையமாக இந்தியா உள்ளது. (8.6)

முற்றும்.

முந்திய பகுதி

பகுதி -1 புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s