இந்தியாவிற்கே திருப்புமுனையாக அமைந்த ஒரு சந்திப்பு

சுவாமி விவேகானந்தர் மற்றும் ஜேம்ஷெட்ஜி டாடா

‘டாடா’ என்னும் மிகப் பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஜேம்ஷெட்ஜி டாட்டா ஒரு முறை ஜெர்மனிக்கு EMPRESS என்னும் கப்பலில் சென்று கொண்டிருந்தார்

அன்று கப்பலில் உள்ள அவருடைய முதல் வகுப்பு அறைக்கு வெளியே வந்து ஒரு முறை நின்று காற்று வாங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது கப்பலின் கீழ் தளத்தில் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டது. என்ன ஏது என்று விசாரித்தார். வீரத் துறவி சுவாமி விவேகானந்தரும் இதே கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருக்கும் விபரம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

 சுவாமிஜி மீது பெருமதிப்பு வைத்திருப்பவர் டாட்டா. எனவே கீழே சென்று சுவாமிஜியை பார்த்து விஷ் செய்துவிட்டு வரலாம் என்று சென்றார்.

சுவாமிஜிக்கும் தொழிலதிபர் டாட்டாவை பற்றி தெரியும். அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார்.

பேச்சுவாக்கில் தான் ஜெர்மனிக்கு சென்றுகொண்டிருக்கும் விஷயத்தை சுவாமிஜியிடம் டாட்டா தெரிவித்தார்.

“இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகள் என்னிடம் சாக்கு பைகளில் உள்ளது. இவற்றை ஜெர்மனிக்கு எடுத்து சென்ரறுகொண்டிருக்கிறேன்.”

“ஓ… அப்படியா…”

“ஆம்… இந்த மாதிரிகளில் எவற்றில் இரும்பு தாது கிடைக்கிறது என்று அங்குள்ள பரிசோதனைக்கூடத்தில் கொடுத்து கண்டுபிடிக்கவேண்டும் என்பதே என் நோக்கம்!”

சுவாமிஜி சொன்னார், “நல்லது சார்… ஆனால், இவற்றில் இரும்புத் தாது இருப்பது தெரிந்தால் கூட ஜெர்மானியர்கள் உங்களிடம் அதை சொல்வார்கள் என்று நம்புகிறீர்களா? ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்… ஒரு வலிமையான – இரும்பு போன்ற கனிம வளம் நிறைந்த – பொருளாதார தன்னிறைவு பெற்ற – இந்தியாவை பார்க்க எந்த ஐரோப்பிய நாடும் விரும்பாது. ஜெர்மனி மட்டுமல்ல வேறு எந்த ஐரோப்பிய நாட்டுக்கு நீங்கள் சென்றாலும் உங்களுக்கு உண்மையை மறைத்துவிடுவார்கள்”

ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளுடன் பழகியிருப்பதால் சுவாமிஜி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்பது டாட்டாவுக்கு தெரியாமல் இல்லை.

சுவாமிஜி தொடர்ந்தார்… “ஏன் நீங்கள் இந்தியாவிலேயே உலகத் தரம் வாய்ந்த ஒரு ஆராய்ச்சி கூடத்தை / கல்வி நிறுவனத்தை நிறுவக்கூடாது? ஏன் இந்தியாவிலேயே உள்ள திறமையான இளைஞர்களை இதற்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடாது? அவர்களை கொண்டே நீங்கள இதே பரிசோதனையை இங்கேயே செய்யலாமே… உங்களுக்கு இதை சாத்தியப்படுத்துவது ஒன்று பெரிய விஷயம் அல்லவே…”

டாட்டா கனத்த மௌனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

சுவாமிஜி தொடர்ந்தார்…. “இப்போது வேண்டுமானால் இது செலவு பிடிக்கக்கூடிய அர்த்தமற்ற ஒன்றாக தோன்றலாம்…. ஆனால் நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்த்தால் லாபகரமானது. உங்களுக்கு பல ஐரோப்பிய பயணங்களை மிச்சம் செய்யக்கூடியது. அதுமட்டுமல்ல பலரிடம் சந்தேகம் காரணமாக MULTIPLE OPINIONS வாங்க வேண்டிய அவசியமில்லாமல் உண்மையை நீங்களே விரைவாக அறிந்துகொள்ளலாம்.”

தான் சொல்வதை மறுப்பில்லாமல் ஏற்றுகொள்ளும் மனநிலையில் டாட்டா இருக்கிறார் என்பதை யூகித்த சுவாமிஜி, “நீங்கள் வேண்டுமானால், மைசூர் மகாராஜா சாமராஜேந்திர உடையாரை ஒரு முறை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசுங்கள். அவர் நிச்சயம் இதற்கு உதவுவார். எனது சிக்காகோ உலக சமய மாநாட்டு பயணத்திற்கு கூட பெருமளவு உதவியவர் அவர்!” என்றார்.

பயணம் முடித்து இந்தியா திரும்பிய டாட்டாவின் மனதில் விவேகானந்தர் கூறிய வார்த்தைகள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தன.

தொடர்ந்து மைசூர் மகாராஜாவை சந்திக்க சென்றார். மைசூர் மகாராஜா இவரை ஏமாற்றவில்லை. மகாராஜா அந்த திட்டத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்குவதாக கூறி அந்த கல்வி / ஆய்வு நிறுவனம் அமைக்க சுமார் 371 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார்.

தொடர்ந்து பல ஆண்டுகள் பலவித தடைகளை தாண்டி (அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்) இறுதியில் 1909 ஆம் ஆண்டு அந்த நிறுவனம் நிறுவப்பட்டது. அது தான் இன்று உலக பிரசித்த பெற்ற ஆராய்ச்சி நிறுவனமாக விளங்கும் INDIAN INSTITUTE OF SCIENCE ஆகும்.

வரலாற்று தகவல் : இதை ஆங்கிலத்தில் முகநூலில் படித்தோம். இதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டி பல தகவல்களை ஆராயவேண்டியிருந்தது. இறுதியில் இதில் கூறப்படும் அனைத்தும் உண்மை என்று அறிந்துகொண்டோம். தேடலின் மகுடமாக, நமது மக்கள் ஜனாதிபதி மறைந்தும் வாழும் டாக்டர்.கலாம் அவர்கள் கூட இது தொடர்பாக 1.10.2004 அன்று கொல்கத்தாவில் ராமகிருஷ்ண மிஷனின் கலாச்சாரச் சின்ன நினைவகமாகத் திறந்து வைத்து நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய அறிவியல் கழகத்தின் வெப்சைட்டுக்கும் சென்று தகவலை உறுதிப் படுத்திக்கொண்டோம். இதற்கு உதவிய மன்னர் சாம்ராஜ உடையார் மற்றும் அவருக்கு பின்னர் வந்த கிருஷ்ணராஜ உடையார் இருவரும் தான் என்று அறியப்படுகிறது. முதலாமவர், ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு பின் வந்தவர் அதை செயல்படுத்தினார்.

1893 ஆம் ஆண்டு சுவாமிஜி, டாட்டா அவர்களின் மனதில் தூவிய ஒரு நல்ல விதை 1909 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டு, இன்று விருட்சமாகியிருக்கிறது.

 நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். சற்று அவகாசம் எடுத்துக்கொண்டால் கூட.

Article Source

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s