புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள் – 1


எதையும் அழிக்காதீர்கள்

முதலில், ‘எதையும் அழிக்காதீர்கள்’ என்ற கோட் பாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு மனித குலத்தை வேண்டு வேன். அழிவுப் பிரச்சாரம் செய்கின்ற சீர்திருத்தவாதிகள் உல கிற்கு எந்த நன்மையும் செய்வதில்லை. எதையும் உடைக் காதீர்கள், கீழே இழுக்காதீர்கள்; மாறாக ஆக்குங்கள். முடிந் தால் உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் கையைக் கட்டிய படி, நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கள். உதவி செய்ய முடியாவிட்டாலும் தொந்தரவு செய்யாதீர்கள்…. ஒருவன் எந்த நிலையில் இருக்கிறானோ, அந்த நிலை யிலிருந்து அவனை உயர்த்த முயல வேண்டும். ….

நீங்களும் நானும் என்ன செய்ய முடியும்? ஒரு குழந்தைக்குக்கூடப் போதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? முடியாது. குழந்தை தனக்குத்தானே போதித்துக் கொள்கிறது. (4.338)

சக்தியின் ஊற்று-மக்கள்

சமுதாயத் தலைமை, அறிவு வலிமை உள்ளவர் களிடமோ, தோள் வலிமை உள்ளவர்களிடமோ, பண வலிமை உள்ளவர்களிடமோ யாரிடம் இருந்தாலும் சரி, அதன் அடித் தளம் மக்களே. சமுதாயத் தலைவர்கள் எவ்வளவு தூரம் இந்தச் சக்தி மையத்திலிருந்து விலகி நிற்கிறார்களோ, அவ்வளவு தூரம் வலிமை குறைந்து விளங்குவார்கள். ……

சுயநலமே சுயநலமின்மையைக் கற்றுத் தருகின்ற முதல் ஆசிரியர். தன் சொந்த நன்மைகளைப் பாதுகாப்ப தற்காகத்தான், சமுதாய நன்மைகளை ஒருவன் முதலில் கவனிக்க ஆரம்பிக்கிறான். சமுதாயத்தின் நலனில்தான் தனி நபரின் நலன் இருக்கிறது. எப்படித்தான் முயன்றாலும் பல ரின் ஒத்துழைப்பின்றிப் பல வேலைகள் நடைபெறாது, தற்காப்புகூட இயலாத காரியம் ஆகிவிடும். (8.65)

சமுதாயத்தின் வாழ்வில்தான் தனிமனித வாழ்வு அடங்கியுள்ளது. சமுதாயத்தின் இன்பத்தில்தான் தனி மனித இன்பம் அடங்கியுள்ளது. சமுதாயம் இல்லாவிட்டால் தனிமனிதன் இருப்பது முடியாதது; இது அழியாத உண்மை , இந்த அடித்தளத்தில்தான் உலகமே இயங்குகிறது. எல்லை அற்றதான சமுதாயத்துடன் ஒன்றி, அதன் இன்பத்தில் இன்பம் காண்பதும், அதன் துன்பத்தில் துன்புறுவதுமாக மெள்ளமெள்ள முன்னேறுவதுதான் தனிமனிதனின் ஒரே கடமை . (8.58)

பாரதத் திருநாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரே!

பாரதத் திருநாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரே, நீங்கள் அமைதியாக உழைத்து வருவதன் காரணமாக அல்லவா பாபிலோனியா, பாரசீகம், அலெக்சாண்டிரியா, கிரீஸ், ரோம், வெனிஸ், ஹினோவா, பாக்தாத், சமர்க்கண்ட், ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், ஹாலந்து, இங்கிலாந்து ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக ஆதிக்கமும் வளமும் பெற்று உயர்ந்தன! ஆனால் நீங்கள்? உங்களைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்! …

உங்கள் முன்னோர்கள் சில தத்துவ நூல்களை எழுதினர்; சில காவியங்களை உருவாக்கினர்; சில கோயில் களையும் கட்டிவிட்டனர்-அப்பப்பா, இதற்காகத் தான் நீங்கள் இவ்வளவு அலட்டிக் கொள்கிறீர்கள்! விண்ணதிரக் கோஷம் இடுகிறீர்கள்! ஆனால் யார் ரத்தம் சிந்தி உலகின் முன்னேற்றங்கள் அனைத்தையும் உருவாக்கி னார்களோ அவர்களின் பெருமையைப் பேச யார் இருக்கிறார்கள்? உலகை வென்றவர்களாகிய மத வீரர்களை, போர் வீரர்களை, காவிய வீரர்களை உலகம் கண்டுகொள் கிறது; போற்றிப் பாராட்டுகிறது. ஆனால் எந்த முணு முணுப்பும் இன்றி இரவும் பகலும் தங்கள் வீடுகளில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் நமது தொழிலாளர் களை யாரும் கவனிப்பதில்லை; உற்சாகப் படுத்துவ தில்லை. ஒவ்வொருவரும் அவர்களை வெறுக்கின்றனர். ஆனாலும் எல்லையற்ற பொறுமையுடனும் அன்புடனும் தளராத ஊக்கத்துடனும் செயல்படுகின்றார்களே, இது வீரம் இல்லையா? மகத்தான பணி கையில் கிடைத்தால் பலரும் வீரத்தைக் காட்ட முடியும். கைதட்டவும் பாராட்டவும் பலர் இருந்தால் கோழைகூட மகத்தான தியாகம் செய்யத் தயாராக இருப்பான், கடைந்தெடுத்த சுயநலமியும் பற்றற்றவன் ஆவான். ஆனால் பார்க்கவோ கேட்கவோ யாரும் இல்லாவிட்டாலும், மிகச்சிறிய வேலைகளில்கூடத் தன்னலமின்மையையும் கடமை யுணர்வையும் வெளிப்படுத்துபவன் இருக்கிறானே, அவன் தான் பேறு பெற்றவன். அழுத்தி நசுக்கப்பட்டுக் கிடக் கின்ற பாரதத்தின் உழைக்கும் வர்க்கத்தினரே, நீங்கள் இவ்வாறுதான் செயல்படுகிறீர்கள். உங்களை வணங்கு கிறேன்! (8.372-3)

பாமர மக்களை முன்னேற்றுதல்

‘பாமர மக்களின் மத உணர்வுக்கு ஊறு செய்யாமல் அவர்களை உயர்த்துதல்’- இந்தக் குறிக்கோளை உங்கள் முன் வைத்துக் கொள்ளுங்கள். நாடு குடிசைகளில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள். ஒரு நாட்டின் விதியை நிர்ணயிப்பதில்லை, பாமர மக்களின் நிலைமையைப் பொறுத்தது அது. உங்களால் அவர்களை உயர்த்த முடியுமா? தங்களிடம் இயல்பாக உள்ள ஆன்மீகப் பண்பை இழக்காமல், தாங்கள் இழந்த தனித்துவத்தை அவர்களுக்கு நீங்கள் மீண்டும் பெற்றுத் தர முடியுமா? (9.228)

சாதாரண மக்களைப் புறக்கணித்ததே நமது தேசியப் பெரும்பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். பாமர மக்களுக்குச் சிறந்த கல்வி அளிக்கப்பட வேண்டும், உணவளிக்கப்பட்டுப் பரிபாலிக்கப் பட வேண்டும்; அதுவரை எந்த அரசியலும் பயன் தராது. அவர்கள் நமது கல்விக்காக வரி தருகிறார்கள், நமது கோயில் களைக் கட்டுகிறார்கள். இவற்றிற்குப் பிரதியாக அவர் களுக்குக் கிடைப்பது உதைகள்தான். சொல்லப்போனால் அவர்கள் நமது அடிமைகளாகவே உள்ளனர். இந்தியா விற்குப் புத்துயிரளிக்க வேண்டுமானால், அவர்களுக்காக நாம் பாடுபட வேண்டும். (8.78)

நமது புனிதப் பணியை ஆதரவற்றவர்களும், ஏழை களும் படிக்காதவர்களுமாகிய குடியானவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் செய்ய வேண்டும். முதலில் இவர் களுக்கு வேண்டியதைச் செய்துவிட்டு பிறகு நேரமிருந்தால் உயர்மக்களுக்காக, பணி செய்வோம். அந்தக் குடியானவர் களும் தொழிலாளர்களுமான மக்கள் நமது அன்பினால் நம் வசப்படுவார்கள். … ‘உத்தரேதாத்மனாத்மானம்- தன் முயற்சியாலேயே தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்’ என்பது எல்லா விஷயங்களிலும் உண்மை . … அவர்கள் தங்கள் உண்மை நிலையை அறிந்து, உதவியையும் முன் னேற்றத்தையும் நாடுகின்ற போது, உங்கள் பணி தனது விளைவை ஏற்படுத்தி விட்டதையும், அது சரியான வழியில் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். … குடியானவர்களும் தொழிலாளிகளும் உயிரற்றவர்கள்போல் இருக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவி செய்து, சொந்த வலிமையை இவர்கள் திரும்பப் பெறுமாறு மட்டும் செய்துவிட்டு, தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும்படி அவர்களை விட்டுவிட வேண்டும். (11.269)

மதத்தின் குற்றம் அல்ல

ஓ, இந்தியாவில் ஏழைகளையும் தாழ்ந்தவர்களையும் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதை எண்ணியபோது என் இதயம் எவ்வளவு வேதனைப்பட்டது தெரியுமா? அவர் களுக்கு வாய்ப்பில்லை, தப்ப வகையில்லை, முன்னேற வழியில்லை. அங்கே ஏழைக்கோ, தாழ்ந்தவனுக்கோ, பாவிக்கோ நண்பர்கள் இல்லை , உதவுபவர்கள் இல்லை . … நாளுக்குநாள் அவர்கள் அதோகதியில் ஆழ்ந்து வருகின்றனர். … சென்ற சில ஆண்டுகளின் சிந்தனைச் சிற்பிகள் இதை உணர்ந்தார்கள்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள், குற்றத்தை இந்து மதத்தின்மீது சுமத்தினார்கள். எனவே நிலைமையைச் சீராக்க அவர்களுக்குத் தோன்றிய ஒரே வழி உலகத்திலேயே மகோன்னதமான இந்து மதத்தை நசுக்கிவிடு வதுதான். நண்பர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள், இறையருளால் நான் ரகசியத்தைக் கண்டுபிடித்துள்ளேன். குற்றம் மதத்தைச் சார்ந்ததல்ல. ஏனெனில் எல்லா உயிர்களும் நமது சொந்த ஆன்மாவின் பல வடிவங்களே என்றுதான் நமது மதம் நமக்குப் போதிக்கிறது. இந்தத் தத்துவத்தைச் செயல் முறைப்படுத்தாததும், அனுதாப உணர்ச்சி இல்லாததும், இதயம் உருகாததுமே நமது குறை. …… இந்த நிலைமையை அகற்றியே தீரவேண்டும்–மதத்தை அழிப்பதால் அல்ல; இந்து மதத்தின் மகத்தான போதனைகளைப் பின்பற்று வதன்மூலமும், அதன் இயல்பான முதிர்ச்சியாகிய பௌத்த மதத்தின் அற்புதமான அனுதாப உணர்ச்சியை அதனுடன் இணைத்துக் கொள்வதாலுமே அதைச் செய்ய வேண்டும். (9.197)

வளர்ச்சியின் முதல் நிபந்தனை சுதந்திரம். நமது முன்னோர் ஆன்மீக விஷயங்களுக்கு எல்லா சுதந்திரமும் அளித்தனர், அதன் பயனாக மதம் வளர்ச்சி கண்டது. ஆனால் உடம்பை எல்லாவிதமான பந்தத்திற்கும் உள்ளாக்கி வைத் தனர், அதனால் சமூகம் வளராமல் போயிற்று. மேலை நாட்டில் இதற்கு நேர்மாறான நிலைமை-இங்கு சமூகத்திற்குச் சகல சுதந்திரமும் உண்டு, மதத்திற்குச் சுதந்திரம் எதுவும் இல்லை . இன்று மேலைநாட்டில் மதத் திற்கும், அதேபோல் கீழை நாட்டில் சமூக அமைப்பிற்கும் உள்ள தளைகள் தளர்ந்து வீழ்ந்து வருகின்றன. …..

சமூகமுன்னேற்றத்தின் மூலமாகவே ஒவ்வொரு துளி ஆன்மீகப் பண்பையும் பெற விரும்புகிறது மேலைநாடு. கீழைநாடோ, ஒவ்வொரு துளிச் சமூக ஆற்றலும் ஆன்மீகத் தின்மூலமாக வந்து சேர வேண்டு மென்று விரும்புகிறது. இதனால்தான் நவீனச் சீர்திருத்தவாதிகளுக்கு, இந்தியாவின் மதத்தை முதலில் நசுக்கி எறியாமல் சீர்திருத்தத்திற்கு வேறு எந்த வழியும் காண முடியவில்லை . அவ்வாறே முயன்றனர், ஆனால் வெற்றி பெறவில்லை . ஏன் தெரியுமா? அவர்களுள் ஒருவரும் தங்கள் சொந்த மதத்தைக் கற்கவில்லை ; மதங் களுக்கெல்லாம் தாய்மதமான அதனைப் புரிந்துகொள்வதற் கான பயிற்சியை ஒருபோதும் பெறவில்லை. இந்து சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால் மதத்தை ஒழிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்பதே எனது முடிவு. இப்போதைய சமூக நிலைமைக்குக் காரணம் மதம் அல்ல; தகுந்த முறையில் அது சமூகத்தில் செயல்படுத்தப் படாததுதான் காரணம். நமது புராதன நூல்களிலிருந்து ஆதாரம் காட்டி இதை என்னால் நிரூபிக்க முடியும், ஒவ் வொரு வார்த்தையையும் நிரூபிக்க முடியும். நான் போதிப்பது இதைத்தான்; வாழ்நாள் முழுவதும் போராடி நாம் நிறைவேற்ற வேண்டுவதும் இதுவே. (9.383)

கடந்தகால இந்தியாவை அறிந்துகொள்ளுங்கள்

கடந்த காலத்திலிருந்துதான் எதிர்காலம் உருவாகிறது. எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு திரும்பிப் பாருங்கள். பின்னால் உள்ள வற்றாத அந்த ஊற்றுக் களிலிருந்து நன்றாகப் பருகுங்கள். அதன்பின்னர் முன்னே பாருங்கள். பீடுநடை போட்டுச் செல்லுங்கள். பாரதத்தை முன்பிருந்ததைவிட ஒளிமயமானதாக, சிறப்பானதாக, உன்னதமானதாக உருவாக்குங்கள். நம் முன்னோர்கள் மகத்தானவர்களாக இருந்தார்கள். முதலில் அதை நினைத்துப் பார்க்க வேண்டும்; நாம் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறோம், நமது ரத்தக் குழாய்களில் ஓடுகின்ற ரத்தம் எது என்பதை அறிய வேண்டும், … முன்னைவிடச் சிறப்பானதொரு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். (5.218)

ஓயாமல் கடந்தகாலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களை இன்று எல்லோரும் குறை கூறு கிறார்கள். இவ்வாறு கடந்தகாலத்தைப்பற்றி ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருப்பதுதான் இந்தியாவின் துயரங்களுக் கெல்லாம் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு நேர்மாறானதுதான் உண்மை என்று எனக்குப் படுகிறது. பழங்காலத்தை மறந்திருந்ததுவரை, இந்த நாடு உணர்ச்சியற்ற நிலையில் மயங்கிக் கிடந்தது. கடந்தகாலத்தைப்பற்றி அறிய ஆரம்பித்தார்களோ இல்லையோ, ஒவ்வொரு திசையிலும் ஒரு புத்துயிர் பரிமளிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தக் கடந்த காலத்திலிருந்துதான் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்; இந்தக் கடந்தகாலம்தான் எதிர்காலமாக மாறும். …..

எனவே இந்துக்கள் தங்கள் பழங்காலத்தைப்பற்றி அறிகின்ற அளவிற்கு அவர்களின் எதிர்காலம் பிரகாசிக்கும். கடந்த காலத்தை ஒவ்வொருவரின் கவனத்திற்கும் கொண்டு வருபவர் இந்த நாட்டிற்குச் சிறந்த நன்மை செய்பவர். நமது புராதன மக்களின் சட்டங்களும் பழக்கவழக்கங்களும் தவறானவையாக இருந்ததால் இந்தியாவிற்கு வீழ்ச்சி ஏற்பட வில்லை; அவர்கள் கண்ட முடிவுகளை முறைப்படி செயல் முறைப்படுத்தாததுதான் வீழ்ச்சிக்குக் காரணம். (10.126)

நமது உபநிஷதங்களிலும் நமது சாஸ்திரங்களிலும் நமது புராணங்களிலும் புதைந்து கிடைக்கின்ற அற்புதமான உண்மைகளை அந்த நூல்களிலிருந்து கொண்டு வர வேண் டும், ஆசிரமங்களிலிருந்து வெளியே கொண்டு வர வேண் டும், காடுகளிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும், குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்திலிருந்து கொண்டு வர வேண்டும். அந்த உண்மைகள் வடக்கிலிருந்து தெற்குவரை, கிழக்கிலிருந்து மேற்குவரை, இமயம் முதல் குமரிவரை, சிந்து முதல் பிரம்மபுத்திராவரை நெருப்பைப்போல் பரவு மாறு நாடு முழுவதும் அவற்றைப் பறைசாற்ற வேண்டும். இதுவே நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் வேலை. (5.155)

மேலோரை மதியுங்கள்

முதலில் மகாபுருஷர்களின் வழிபாட்டைக் கொண்டு வர வேண்டும். அழியாத அந்த உண்மைப் பொருளை உணர்ந்த அந்த மகான்களை, அனுமன், ராமகிருஷ்ணர் போன்ற தெய்வ புருஷர்களை லட்சிய புருஷர்களாக மக்கள் முன் வைக்க வேண்டும். இங்கு ராமருடையவும் அனுமனுடையவும் வழிபாட்டை உங்களால் கொண்டுவர முடியுமா? … சிங்கக் குரலில் கீதையை முழங்கிய கண்ண னின் வழிபாட்டைப் பரப்புங்கள். சக்தி வழிபாட்டைக் கொண்டு வாருங்கள்…. இப்போது தேவைப்படுவதெல்லாம் மகா தியாகம், மகா நிஷ்டை , மகா தைரியம் இவையே. இவற்றுடன் சுய நலம் துளியும் கலவாத சுத்த புத்தியின் துணையுடன், தீவிர முயற்சியில் ஈடுபட்டு எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி அறிந்துகொள்வதே நமது இப்போதைய தேவை. (6.160)

மதத்திற்கு ஊறு செய்ய வேண்டாம்

‘பாமர மக்களின் மத உணர்விற்கு ஊறு செய்யாமல் அவர்களை உயர்த்துதல்’- இந்தக் குறிக்கோளை உங்கள் முன் வைத்துக்கொள்ளுங்கள். … தாங்கள் இழந்த தனித் துவத்தை அவர்களுக்கு நீங்கள் மீண்டும் பெற்றுத் தர முடி யுமா? சமத்துவம், சுதந்திரம், செயல்திறன், ஆற்றல் இவற் றில் மேலைநாட்டினருள் தலைசிறந்த மேனாட்டினராக இருந்து, அதேவேளையில் மதப் பண்பாட்டிலும் இயல் புணர்ச்சிகளிலும் முழுமையான இந்துவாகவும் இருக்க உங்களால் முடியுமா? இதைச் செய்தேயாக வேண்டும், செய்தே தீர்வோம். (9.228-9)

இந்து சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால் மதத்தை ஒழிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்பதே எனது முடிவு. இப்போதைய சமூக நிலைமைக்குக் காரணம் மதம் அல்ல; தகுந்த முறையில் அது சமூகத்தில் செயல்படுத்தப்படாததுதான் காரணம். (9.383)

மதத்தில்தான் இந்தியாவின் உயிர் இருக்கிறது. தங்கள் முன்னோர்களின் இந்தப் பெரும்சொத்தை இந்துக்கள் மறக் காதவரை, அவர்களை அழிக்கக்கூடிய சக்தி இந்த உலகில் எதுவும் கிடையாது. (10.125)

ரத்தம் புஷ்டியாகவும் தூய்மையாகவும் இருக்கு மானால் நோய்க் கிருமிகள் எதுவும் அந்த உடம்பில் வாழ முடியாது. நமது ஜீவ ரத்தம் ஆன்மீகம். அது தெளிவாக ஓடுமானால், புஷ்டியாக, தூய்மையாக, உத்வேகத்துடன் ஓடு மானால் எல்லாம் சரியாக இருக்கும். அந்த ரத்தம் தூய்மை யாக இருக்குமானால் அரசியல், சமுதாயம், மற்ற பொருளா தாரக் குறைபாடுகள் எல்லாம் சீராக்கப்பட்டுவிடும், ஏன், நாட்டின் வறுமைகூட தீர்க்கப்பட்டுவிடும். (5.221)

ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டியதைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அதைப் போலவே ஒவ்வொரு நாடும். பல காலத்திற்கு முன்பே நாம் நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்து விட்டோம், அதை நாம் பின்பற்றியாக வேண்டும். அதோடு, நாம் தேர்ந்தெடுத்தது ஒன்றும் மோச மானது அல்ல. ஜடப்பொருள் அல்லாமல் ஆன்மாவை, மனிதன் அல்லாமல் இறைவனைச் சிந்திக்க விரும்பியது அத்தனை மோசமான ஒன்றா? மறுவுலகத்தில் திட நம்பிக்கை, இந்த உலகத்தில் தீவிர வெறுப்பு, தியாகத்தின் அபரிமித ஆற்றல், கடவுளிடம் அசையா நம்பிக்கை, அழியா ஆன்மாவில் மாறா நம்பிக்கை- எல்லாம் உங்களிடம் உள்ளது. உங்களுள் யாராலாவது அதை மறுத்து விலக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன், உங்களால் முடியாது. சில மாதங்கள் உலகாயதம்பற்றி பேசுவதன்மூலம் நீங்கள் ஓர் உலகாயதவாதியாக மாறிவிட்டதாக என்னை நம்ப வைக்க முயலலாம். ஆனால் உண்மையில் நீங்கள் எப்படிப்பட்ட வர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்கள் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றால், சிறந்த ஆத்திகர்களாக என்னைத் தொடர்ந்து வருவீர்கள். உங்கள் சொந்த இயல்பை நீங்கள் எப்படி மாற்ற முடியும்? (5.154-5)

இந்தியாவில் ஒவ்வொரு முன்னேற்றமும் மத எழுச்சி யைத் தொடர்ந்தே வர முடியும். சமுதாயக் கருத்துக்களாலோ, அரசியல் கருத்துக்களாலோ மூழ்கடிக்குமுன் இந்தியாவை ஆன்மீகக் கருத்துக்களால் நிரப்புங்கள். (5.155)

இந்து தனது மதத்தைக் கைவிடக் கூடாது. ஆனால் மதத்தை அதற்கான எல்லைகளுக்குள் வைத்துக்கொண்டு, சமுதாயம் வளர்வதற்கான சுதந்திரத்தை அளிக்க வேண்டும். இந்தியச் சீர்திருத்தவாதிகள் அனைவரும் ஒரு பெருந்தவறைச் செய்தனர்: புரோகிதத்துவத்தின் அக்கிரமங்கள், சீரழிவு போன்ற அனைத்திற்கும் காரணம் மதமே என்று கருதி, தகர்க்க முடியாத அந்தக் கோட்டையை இடித்துத் தள்ளப் புறப்பட்டனர். விளைவு? தோல்வி. புத்தரிலிருந்து ராம் மோகன்ராய் வரையிலும் ஒவ்வொருவரும், ஜாதியை ஒரு மத அமைப்பு என்று கொள்கின்ற தவறுக்கு உள்ளாயினர்; அந்தக் தவறின் காரணமாக மதம், ஜாதி இரண்டையுமே தகர்க்க முற்பட்டனர், தோல்வியைத் தழுவினர். (9.216)

நல்லதற்கோ கெட்டதற்கோ, நமது ஆதார சக்தி முழு வதும் மதத்தில்தான் ஒருமுனைப்படுத்தப் பட்டுள்ளது என்பது தெளிவு. … நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிர மாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது. நல்லதற்கோ கெட்டதற்கோ இந்தியச் சூழ்நிலை மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது. நல்ல தற்கோ கெட்டதற்கோ நாம் இந்த மத லட்சியங்களின் நடுவிலே பிறந்து வளர்ந்திருக்கிறோம், அவை நம் ரத்தத் தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற ஒவ்வொரு துளி யிலும் சிலிர்ப்பை ஊட்டி, நம் உடம்போடு ஒன்றிப்போய் இருக்கிறது; நம் வாழ்வின் ஆதார சக்தியாக ஆகியிருக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கின்ற பேராறு தனக்கென்று உண்டாக்கிக் கொண்ட கால்வாயை நிரப்பாமல் பாய முடியுமா? கங்கை மீண்டும் பனி மலைகளுக்குள் திரும்பிச் சென்று புதிய பாதையில் பாய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதுகூட ஒருவேளை முடிகின்ற காரியமாக இருக்கலாம். ஆனால் தன் தனிப் பண்பான மத வாழ்க்கையை விட்டு விட்டு, அரசியல் அல்லது அதுபோன்ற வேறு ஏதாவது ஒன்றைத் தன் பாதையாக ஏற்றுக் கொள்வது இந்தியாவால் முடியாத காரியம். நீங்கள் வேலை செய்ய வேண்டுமானால், இயன்ற அளவு எதிர்ப்பு குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில் அத்தகைய ஒரு பாதை மதம்தான். இந்தியாவில் இதுதான் வாழ்க்கை வழி, இதுதான் வளர்ச்சிக்கான வழி. மதப் பாதையைப் பின்பற்றியே இந்தியா முன்னேற்றம் கண்டிருக்கிறது. (5.85)

மற்ற எதுவும் தேவையில்லை என்று நான் சொல்ல வில்லை; அதாவது அரசியலோ சமூக முன்னேற்றங்களோ தேவையற்றவை என்பதல்ல நான் சொன்னதன் பொருள். நான் சொல்வதெல்லாம், மதம் முதன்மையானது, மற்றவை யெல்லாம் அதற்கு அடுத்தபடி என்பதுதான். இந்திய மனம் மற்ற எதைவிடவும் மதத்தைச் சார்ந்தது. (5.223)

இந்தியாவில் சமூகச் சீர்திருத்தம்கூட, அது ஒருவரது வாழ்வை எவ்வாறு மேலும் ஆன்மீகமயமாக்கும் என்பதை விளக்கித்தான் போதிக்கப்பட வேண்டும்; அரசியலைப் போதிக்க வேண்டுமானால், தேசம் வேண்டுகின்ற ஒரே விஷயமான ஆன்மீகத்தை அது எவ்வளவு தூரம் வளப் படுத்தும் என்பதை விளக்கிக் காட்டுவதன்மூலமே செய்ய வேண்டும். (5.154)

மதத்தால் மட்டும் இயலாது

முதலில் உணவு, பின்னர் மதம். (5.395)

இப்போதுள்ள இந்து சமூகம் ஆன்மீக உணர்வு உள்ள வர்களை மட்டும் கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது; மற்றவர்களை மீள முடியாதபடி நசுக்கித் தள்ளிவிடுகிறது. ஏன் இப்படி இருக்க வேண்டும்? உலகையும், நிலையற்ற அதன் போகங்களையும் ஒருசிறிது அனுபவிக்க விரும்பு பவர்கள் எங்கு போவது? நமது மதம் எப்படி அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறதோ, அவ்வாறே நமது சமுதாயமும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலில் நமது மதத்தின் உண்மைகளைப் புரிந்துகொண்டு, பிறகு அவற்றைச் சமுதாயத்தில் செயல்படுத்துவதன்மூலம் இதைச் செய்ய வேண்டும். மெதுவாக ஆனால் உறுதியாக ஆற்ற வேண்டிய பணி இது. (9.384)

என்றாலும், மிக உயர்ந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கான பக்குவம் பெறாத சகோதரர்களுக்கு, அவர் களின் தேவைகளுக்கு ஏற்ப தீவிரம் குறைக்கப்பட்ட சிறிது உலகாயதம் ஒருவேளை நன்மையைத் தரலாம். அவர்கள்மீது உயர் உண்மைகளைத் திணிக்கக் கூடாது. சமீப காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமூகத்திலும் இந்தத் தவறே செய்யப்பட்டு வருகிறது. உயர் உண்மைகளை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் இல்லாதவர்களிடமும் அவை Fணிக்கப்படுகின்றன. இப்படித் திணிப்பது தவறு என்ற உண்மை நன்றாகப் புரிந்துகொள்ளப் படுகின்ற இந்தியாவில் மிகவும் வேதனை தருகின்ற அளவில் இது நடைபெறகிறது. என் வழி உங்கள் வழியாக இருக்க வேண்டியதில்லை . (5.53)

ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டுமானால் உலகாயத நாகரீகம் ஏன், ஆடம்பரம்கூட அவசியமானது தான். சோறு வேண்டும், சோறு வேண்டும்; இங்கே ஒருபிடி சோறு கொடுக்க மாட்டாராம், சொர்க்கத்தில் நித்தியானந்தத் தைத் தருவாராம்-இத்தகைய ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழை களுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், புரோகிதத்துவத்தின் கொடுமைகளை அகற்ற வேண்டும். புரோகிதக் கொடுமை வேண்டாம், சமுதாயக் கொடுமை வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் சோறு இன்னும் அதிகம் வேண்டும், இன்னும் அதிகமான வாய்ப்புகள் வேண்டும்! (9.408)

சோஷலிசம், அது இது என்று எந்தப் பெயரிலாவது அழையுங்கள், மக்களால் ஆளப்படுகின்ற ஏதோ ஒன்று நடைமுறையில் இருப்பதை ஒவ்வொன்றும் காட்டுகிறது. பொருட்தேவைகளைப் பெறுதல், குறைந்த நேர வேலை, எதிர்ப்பின்மை, போரின்மை, அதிக உணவு முதலியவற்றை மக்கள் நிச்சயமாக விரும்புவார்கள். மதத்தின்மீது, மனிதனின் நல்லியல்பின்மீது நிறுவப்படாத இந்த நாகரீகமோ, எந்த நாகரீகமோ நிலைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? (6.370)

பெண்கள் முன்னேற்றம்

முதலில் பெண்களை முன்னேற்றியாக வேண்டும்! பாமரர்களை விழிப்புணர்த்தியாக வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டிற்கு நன்மை வர முடியும். (6.51)

பெண்களுக்குத் தர வேண்டிய, முறையான மதிப்பைக் கொடுத்ததாலேயே எல்லா இனங்களும் மகத்தான நிலையை அடைந்துள்ளன. எந்த நாடு, எந்த இனம், பெண்களை மதிக்கவில்லேயோ அவை ஒருபோதும் சிறந்த நிலையை அடைந்ததில்லை ; அடையவும் செய்யாது. (6.225)

கல்வி–முதல் தேவை

கல்வி, கல்வி, கல்வி ஒன்றே காரணம். ஐரோப்பாவில் பல நகரங்களின் வழியே யாத்திரை செய்தபோது அங்கு வாழ்கின்ற ஏழைகளுக்கு உள்ள வசதிகளையும் கல்வியையும் கண்டேன். அப்போதெல்லாம் நம் ஏழைகளை நினைத்துப் பார்த்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன? கல்வி என்ற விடையே நான் கண்டது. கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது, தன்னம் பிக்கையின் வலிமையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழு கிறது. நம்முள் இருக்கும் ஆன்மாவோ மெல்லமெல்ல செயலிழந்து கொண்டிருக்கிறது. (11.21-22)

நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பினருக்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது; அவர்கள் இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வது….. அவர்களுக்குக் கருத்துக்களை அளிக்க வேண்டும்; தங்களைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியுமாறு அவர்களின் கண்கள் திறக்கப்பட வேண்டும்; பிறகு அவர்கள் தங்கள் உயர்வைத் தாங்களே தேடிக் கொள்வார்கள். ஒவ்வொரு நாடும், ஒவ் வோர் ஆணும், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உயர்வைத் தாங்களே தேடிக்கொள்ள வேண்டும். கருத்துக்களை அவர் களுக்குக் கொடுங்கள்- வேண்டிய உதவி அது ஒன்றே. மற்றவையெல்லாம் அதன் விளைவாகத் தொடர்ந்து வந்தே தீரும். ரசாயனப் பொருட்களைச் சேர்த்து வைப்பது நமது வேலை, படிகமாதல் இயற்கை நியதிக்கு ஏற்பத் தானாகவே நிகழும். அவர்களின் மூளையில் கருத்துக்களைப் புகுத்துவது நமது கடமை, பிறவற்றை அவர்கள் செய்துகொள்வார்கள். இந்தியாவில் செய்ய வேண்டியது இதுதான். (9.301)

தன் பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளத்தக்க ஆரோக்கியமான, ஆற்றல் மிக்கதான பொதுமக்கள் கருத்தை உருவாக்க நீண்ட, மிக நீண்ட காலமாகும். அதுவரையில் நாம் காத்திருக்கத்தான் வேண்டும். எனவே சமூகச் சீர்திருத்தம் என்ற பிரச்சினையை அணுகிப் பார்த்தோமானால் அது, சீர்திருத்தம் தேவைப்படுபவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வியில்தான் முடியும். அவர்களை முதலில் உருவாக்குங்கள்…. ஏதோ சிலவற்றைத் தீமை என்று நினைக் கின்ற ஒரு சிலரால் நாட்டை முன்னேற்ற முடியாது. …. முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள். … ஆகையால் சமுதாயச் சீர்திருத்தத்திற்குக்கூட முதலில் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வி அளிப்பதுதான். அந்தக் காலம் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். (5.148)

சாதாரண மக்களிடையே கல்வியும் அறிவும் பரவிய தற்கு ஏற்ப நாடும் முன்னேறுவதை நான் கண்முன் காண் கிறேன். ஆணவம் அரச ஆணை இவற்றின் துணையுடன், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் எல்லா கல்வியும், புத்திநுட்பமும் உடைமையாக்கப் பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். நாம் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமானால் நாமும் அந்த வழியில் செல்ல வேண்டும்; அதாவது சாதாரண மக்களிடையே கல்வியைப் பரப்ப வேண்டும். (11.21)

தமக்குத் தாமே உதவுவதற்கான கல்வி

தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது. நமது பணி முக்கியமாக கல்விப் பணியாக இருக்க வேண்டும்; ஒழுக்கம், கல்வியறிவு இரண்டையும் அது புகட்ட வேண்டும். (11.74)

பலமுகப் பரிமாண கருத்துப் பரிமாற்றம் — கட்டாயம் தேவை

கொடுப்பதும் எடுப்பதுமே நியதி. எனவே இந்தியா மீண்டும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமானால், தனது பொக்கிஷங்களை வெளியே கொண்டுவந்து, உலக நாடுகளுக் கெல்லாம் அவற்றை வாரி இறைக்க வேண்டும்; பதிலாக மற்றவர்கள் தருவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இது மிகவும் அவசியம். விரிவது வாழ்வு, சுருங்குவது சாவு. அன்பு வாழ்வு, பகை சாவு. மற்ற இனத் தினரை வெறுக்கத் தொடங்கிய அன்றே நாம் சாகத் தொடங்கிவிட்டோம். மீண்டும் நாம் விரியாமல், அத்தகைய வாழ்வை மேற்கொள்ளாமல் இருப்போமானால், நமது அழிவை எதனாலும் தடுக்க முடியாது.

எனவே உலகின் எல்லா இனத்தினருடனும் நாம் கலந்துபழக வேண்டும். வெறும் மூட நம்பிக்கை மூட்டை களாக, சுயநலப் பொதிகளாக உள்ள, ‘நானும் அனுபவிக்க மாட்டேன், உன்னையும் அனுபவிக்க விடமாட்டேன்’ என்பதை வாழ்க்கையின் ஒரே நோக்கமாகக் கொண்டுள்ள நூற்றுக்கணக்கானோரைவிட அயல்நாடுகளில் பயணம் செய்கின்ற ஒவ்வோர் இந்துவும் தனது நாட்டிற்கு நன்மையே செய்கிறான். (9.405)

மிலேச்சன் என்ற சொல்லை உருவாக்கி, பிறருடன் தொடர்பைத் துண்டித்தபோதே இந்தியாவின் அழிவு உறுதி யாகிவிட்ட து. (9.396)

இந்தியாவின் துன்பத்திற்கும் வீழ்ச்சிக்குமான முக்கிய காரணங்களுள் ஒன்று, அது தன்னைக் குறுக்கிக் கொண்ட தாகும்; முத்துச்சிப்பி தன் வாயை இறுக்கமாக மூடிக் கொள் வதுபோல், தன்னிடமுள்ள செல்வங்களையும் பொக்கிஷங் களையும் பிற இனத்தினருக்குத் தர மறுத்ததாகும்; ஆரிய இனத்திற்கு வெளியில் தாகத்தால் தவிக்கின்ற பிற நாடு களுக்கு, உயிர்ச் சக்தியளிக்கின்ற உண்மைகளைத் தர மறுத்த தாகும். நாம் வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை, சென்று பிற இனங்களையும் நம்மையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் இல்லை -நமது வீழ்ச்சிக்கு இது ஒரு மிக முக்கியமான காரணம். (5.253)

எனவே நாம் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும். கொடுத்தலும் வாங்கலுமே வாழ்க்கையின் ரகசியம். நாம் எப்போதுமே வாங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? மேலைநாட்டினரின் காலடியில் உட்கார்ந்து எல்லாவற்றையும், மதத்தைக்கூட அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா? எந்திரங்கள் பற்றி அவர்களிட மிருந்து கற்றுக் கொள்ளலாம், வேறு பலவற்றையும் அவர் களிடமிருந்து கற்கலாம். ஆனால் நாமும் அவர்களுக்குச் சில வற்றைக் கற்றுத் தர வேண்டும், அது நமது மதம், நமது ஆன்மீ கம்.

முழுமையானதொரு நாகரீகத்திற்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது; அதற்கான அருஞ்செல்வங்கள் இந்தியா விலிருந்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. இந்த இனத்தின் ஈடிணையற்ற பாரம்பரியமான ஆன்மீகத்திற்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் துன்பங்களையும் சீரழிவுகளையும் சந்தித்த பின்ன ரும் நம் நாடு நெஞ்சோடு அணைத்துக் காப்பாற்றிக் கொண் டிருக்கின்ற அந்தப் புதையலுக்காக உலகம் காத்துக் கொண் டிருக்கிறது. நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ள அற்புதப் புதையலுக்காக வெளிநாடுகள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாது. இங்கோ நாம் வெறும் பேச்சுக்களிலும் சண்டை சச்சரவுகளிலும் புனிதமானவற்றை ஏளனம் செய்வதிலும் கேலி செய்வதிலும் காலத்தை வீணடிக்கிறோம். புனிதமானவற்றைக் கேலி செய்வது என்பது ஏறக்குறைய நமது தேசியத் தீமையாகவே மாறிவிட்டது. இந்தியாவில் நமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருக்கின்ற அமுதத்தின் ஒரு சிறு துளியைப் பருகுவதற் காக நம் நாட்டின் எல்லைக்கு வெளியே லட்சக்கணக் கானோர் எவ்வளவு பசித்துடிப்புடன், எவ்வாறு கைகளை நீட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி நாம் சிறிதே அறிவோம்.

எனவே நாம் வெளிநாடுகளுக்குச் சென்றாக வேண்டும். அவர்கள் தரக்கூடிய ஏதாவதைப் பெற்றுக் கொண்டு, பதிலாக நாம் அவர்களுக்கு ஆன்மீகத்தை அளிக்க வேண்டும். ஆன்மீகத்தின் அற்புத சாம்ராஜ்யத்தை அவர் களுக்கு அளித்து, அதற்குப் பதிலாக லௌகீகத்தின் அற்புத சாம்ராஜ்யத்தை நாம் பெற்றுக் கொள்வோம். நாம் எப் போதுமே மாணவர்களாக இருக்கக் கூடாது, ஆசிரியர்களாக வும் இருக்க வேண்டும். சமத்துவம் இல்லாமல் நட்பு இல்லை . ஒருவர் எப்போதும் ஆசிரியராகவும் மற்றொருவர் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்தபடியும் இருந்தால் சமத்துவம் ஏற்பட முடியாது. ஆங்கிலேயர்கள் அல்லது அமெரிக்கர்களோடு நீங்கள் சமமாக இருக்க விரும்பினால், அவர்களிடம் கற்றுக் கொள்வதைப் போல் நீங்கள் அவர் களுக்குக் கற்றுத் தரவும் வேண்டும். வரப்போகின்ற நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு உலகத்திற்குக் கற்றுத் தரவும் நம்மிடம் ஏராளமாக உள்ளன. (5.255)

மேலைநாட்டு விஞ்ஞானத்துடன் வேதாந்த ஞானம் வேண்டும். பிரம்மச்சரியம் என்பது மூலமந்திரமாக வேண்டும். சிரத்தை, தன்னம்பிக்கை இவை வேண்டும். … நமக்கு இப்போது வேண்டியது என்ன தெரியுமா? அன்னிய ரின் கட்டுபாடுகள் இன்றி, நமது பல்வேறு துறை அறிவு களுடன் ஆங்கிலமும் விஞ்ஞானமும் கற்பதே. தொழிற் கல்வி வேண்டும். தொழில்வளம் பெருகுவதற்கான எல்லா வற்றையும் செய்ய வேண்டும். மக்கள் வேலை தேடி அலை வதை விட்டுவிட்டு கைத்தொழிலில் ஈடுபட்டு நாலு காசு சம்பாதிக்கத் தகுதி உடையவர்களாக வேண்டும். (6.295,297)

சமத்துவம், சுதந்திரம், செயல்திறன், ஆற்றல் இவற் றில் மேலைநாட்டினருள் தலைசிறந்த மேனாட்டினராக இருந்து, அதேவேளையில் மதப் பண்பாட்டிலும் இயல் புணர்ச்சிகளிலும் முழுமையான இந்துவாகவும் இருக்க உங்களால் முடியுமா? (9.228-9)

சங்கங்களை உருவாக்குதல் மற்றும் புற நாகரீகம் பற்றிய மேலை நாட்டுக் கருத்துக்கள் நம் நாட்டினுள் புகுந்து ஊடுருவிச் சென்றுள்ளது. அவைகளை நாம் ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். அதுபோலவே இந்திய ஆன்மீகமும் தத்துவமும் மேலை நாடுகளில் வெள்ள மாகப் பாய்ந்துள்ளது. மேலை நாடுகளிலிருந்து வருகின்ற ஒருவிதமான உலகாயதம் போன்ற அந்த நாகரீகத்தை நம்மால் தடுக்க முடியாததைப்போல், இந்தியாவின் ஆன்மீக வெள்ளத்தையும் மேலை நாட்டால் தடுக்க முடியாது. சிறிது உலகியல் நமக்கு நல்லது, அவ்வாறே மேலை நாட்டிற்குச் சிறிது ஆன்மீகம் நல்லது. இவ்வாறு சமநிலை பிறழாமல் காக்கப்படுகிறது. மேலை நாடுகளிலிருந்தே நாம் எல்லா வற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, மேலை நாட்டினர் ஒவ்வொன்றையும் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ கிடையாது. (5.76-77)

சாதாரண ஏழையின் வாழ்க்கைகூட அவனுக்குச் சிறிதும் பயனில்லாத ஆன்மீக மற்றும் ஒழுக்க விதிகளால் கட்டி நெருக்கப் பட்டுள்ளது. உங்கள் கைகளை விலக்கிக் கொள்ளுங்கள்! அவன் வாழ்க்கையைக் கொஞ்சம் அனுபவிக் கட்டும். அதன்பிறகு அவன் தன்னை உயர்த்திக்கொள்வான்; தானாகவே அவனிடம் துறவு தோன்றும்.

மேலை நாட்டினர் இந்த வகையில் ஏதோ சிறிது நமக்குப் போதிக்கலாம். ஆனால் இவற்றைக் கற்றுக் கொள்வ தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் மேலைநாட்டுக் கருத்துக்களின்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுள் பலரது வாழ்க்கை பெரும்பாலும் தோல்வியாகவே உள்ளது. இதைச் சொல்வதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

இந்தியாவில் நமது பாதையில் இரண்டு தடைகள் உள்ளன. ஒன்று பழங்கால வைதீகம், மற்றொன்று தற்கால ஐரோப்பிய நாகரீகம். இரண்டுமே அளவை மீறினால் அபாயம் விளைவிக்கக் கூடியவை, ஒன்றை விட்டால் மற் றொன்றினால் நேரும் அபாயம் பெருகும். இந்த இரண்டுள் பழங்கால வைதீகத்தையே நான் தேர்ந்தெடுப்பேன். (5.54)

இப்படிச் செய்வதில் ஓர் ஆபத்து இருக்கத்தான் செய் கிறது. மேலைநாட்டு இயல்பு என்னும் பெருவெள்ளம் நாம் பல காலம் அரும்பாடுபட்டுச் சேர்த்து வைத்துள்ள விலை மதிக்க முடியாத செல்வங்களை அடித்துக் கொண்டுபோய் விடுமோ என்ற பயம் இருக்கிறது. அதன் வேகமான சுழலில் அகப்பட்டு பாரத நாடுகூட தன்னை மறந்து, உலக இன்பங் களை அடையப் போராடுகின்ற போர்க்களமாக மாறி விடுமோ என்னும் பயமும் இருக்கிறது. மேலும், சாத்திய மல்லாத, நடைமுறைக்கு ஒவ்வாத, மேலைநாட்டு வழிகளை நாம் பின்பற்றத் தொடங்கி, நமது தேசிய வழக்கங்களையும் லட்சியங்களையும் மறந்து, இந்த வாழ்க்கையில் நாம் எது விலைமதிக்க முடியாதது என்று நினைக்கிறோமோ அதையும் இழந்து, மறுமையையும் இழந்து விடுவோமோ என்ற பயமும் உள்ளது. (8.10)

இந்த ஆபத்துக்களைத் தவிர்க்க, பாமர மக்கள்வரை எல்லோரும் தங்கள் பரம்பரைச் சொத்து எது என்பதைத் தெரிந்து அதைக் கண்டு கொண்டிருக்கும் அளவிற்கு நமது சொந்த சொத்தை எப்போதும் நம் கண்முன் வைத்திருக்க வேண்டும். இதற்கு நாம் முயல வேண்டும். அதேவேளையில் தைரியமாக நம் கதவுகளைத் திறந்து, வெளியிலிருந்து வருகின்ற எல்லா வெளிச்சத்தையும் உள்ளே புக அனுமதிக்க வேண்டும். உலகின் நான்கு பக்கங்களிலிருந்தும் வெளிச்சத் தின் கதிர்கள் வந்து பரவட்டும், மேலை நாட்டின் ஒளி வெள்ளம் வந்து பாயட்டும். அதனால் என்ன? பலவீன மானவை, அக்கிரமமானவை எல்லாம் அழியத்தான் செய் யும். அவற்றை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது? போனால் போகட்டும். அதனால் நமக்கு என்ன இழப்பு? எது உறுதியாக இருக்கிறதோ, உயிரூட்டுகிறதோ அது அமரத் துவம் பெற்றது. அதை யார் அழிக்க முடியும்? (8.10-11)

நாம் வேறு ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த உலகத்திடமிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருக்கிறதா? ஆம்; உலகப் பொருட்களைப் பற்றிய அறிவு, சங்கங்களின் சக்தி, அதிகாரங்களைக் கையாளும் திறமை, சங்கங்களை உருவாக்குகின்ற திறமை, குறைந்த சக்தி யைச் செலவழித்து அதிக பலன்களை அடையும் திறமை— இவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக் கிறது. இவற்றை ஒருவேளை மேலை நாட்டிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

ஆனால் உண்பதும் உடுப்பதும் குடித்துக் களிப்பது மான லட்சியத்தை இந்தியாவில் யாராவது உபதேசித்தாலும், உலகியல் வாழ்க்கையை ஆன்மீகத்திற்குள் புகுத்த நினைத் தாலும் அவன் பொய்யன். இந்தப் புனித பூமியில் அவனுக்கு இடம் இல்லை ; அவனது பேச்சைக் கேட்கவும் இந்திய மனம் விரும்பாது. (5.52-3)

‘என் கருத்து என்ன தெரியுமா? வேதாந்தத்தின் மிக உன்னதமான ரகசியங்களை மேலைநாடுகளுக்கு உபதேசிப் பதன்மூலம் அந்த மகத்தான நாடுகளின் நல்லெண்ணத்தை யும் மதிப்பையும் பெற்று, நாம் அவர்களுக்கு என்றென்றும் ஆன்மீக குருவாக இருப்போம். அவர்கள் எல்லா பௌதீக விஞ்ஞானங்களிலும் நமக்கு ஆசிரியர்களாக விளங்கு வார்கள். இதை மறந்து, என்றைக்கு நம் நாட்டினர் ஆன்மீகத்தை அவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, மதத் தைக் கற்பதற்காக அவர்கள் காலடியில் அமர்கிறார்களோ, அன்றைக்கு, ஏற்கனவே சீரழிந்துள்ள இந்த நாடு, என்றென் றைக்குமாக அழிந்து நாசமாகிவிடும். ”எங்களுக்கு இதைக் கொடுங்கள், அதைக் கொடுங்கள்” என்று இரவு பகலாக அவர்களின் முன் அழுவதால் எதுவும் வராது. அதற்குப் பதிலாக, நாடுகளுக்கிடையே மதிப்பும் நல்லெண்ணமும் நிறைந்த இத்தகைய கொடுக்கல்-வாங்கல் உறவு வளருமா னால் இதுபோன்ற கூச்சல்களுக்கு இடமில்லை. அனைத்தை யும் அவர்கள் தாமாகவே செய்வார்கள். இவ்வாறு இரண்டு நாடுகளுக்கிடையே வளரும் மதத் தொடர்பாலும், வேதாந் – தத்தைப் பெருமளவில் பரப்புவதாலும் இந்த நாடும் மேலை நாடுகளும் அதிக நன்மை அடையும். இதனுடன் ஒப்பிடும் போது, அரசியல் விஷயங்கள் இரண்டாம் பட்சமாகவே எனக்குத் தோன்றுகிறது. மேற்சொன்ன காரியத்தை நடைமுறைப் படுத்துவதற்காக நான் என் வாழ்வையே அர்ப் பணம் செய்வேன், வேறு ஏதாவது வழியில் இந்தியா விற்கு நன்மை செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினால், நல்லது, உங்கள் வழியிலேயே நீங்கள் செல்லுங்கள்.’ (6.6-7)

புற இயற்கையை வெல்வதை இந்தியா ஐரோப்பா விடமிருந்தும், அக இயற்கையை வெல்வதை ஐரோப்பா இந்தியாவிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். அப் போது இந்துக்கள், ஐரோப்பியர்கள் என்ற பிரிவு போய், அகத்தையும் புறத்தையும் வென்ற லட்சிய மனித இனம் தோன்றும். நாம் மனிதனின் ஒரு பக்கத்தை வளர்த்தோம், அவர்கள் மற்றொரு பக்கத்தை வளர்த்தார்கள். இந்த இரண்டின் சேர்க்கைதான் தேவை. (6.386)

தொடரும்…

தொடர்ச்சி பகுதி -2

புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள்.

One thought on “புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள் – 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s