நம் முன் உள்ள பணி

நம் முன் உள்ள பணி

9 பிப்ரவரி 1897 அன்று காலை திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம்

காலம் போகப்போக வாழ்க்கை என்னும் பிரச்சினை ஒவ்வொரு நாளும் ஆழமானதாகவும் அகன்றதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அதன் உண்மையும் சாரமும் எது என்பது வேதாந்த உண்மை முதலில் கண்டுபிடிக்கப் பட்ட அந்த நாளிலேயே போதிக்கப்பட்டது – அது ஒருமை, வாழ்க்கையின் ஒருமை. பிரபஞ்சத்திலுள்ள ஓர் அணுக்கூடத் தனியே இயங்க முடியாது, அது தன்னுடன் இந்த உலகம் முழுவதையும் இழுத்துக்கொண்டு தான் இயங்க வேண்டும். உலகம் முழுவதும் தொடர்ந்து வராமல் எந்த முன்னேற்றமும் ஏற்பட முடியாது. நாடு, இனம் போன்ற குறுகிய கண்ணோட்டத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகிக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு கருத்தும் விரிந்துவிரிந்து உலகம் முழுவதையும் தன்னுள் கொள்ளத்தக்க அளவு விரிய வேண்டும். ஒவ்வொரு லட்சியமும் விரிந்து மனித குலம், இல்லை இல்லை, உயிர்க்குலம் முழுவதையும் உள்ளடக்கும் படி விரிய வேண்டும். அப்படி இல்லாததால் தான் நம் நாடு கடந்த சில நூற்றாண்டுகளாகத் தன் பண்டைய பெருமையை இழந்துவிட்டிருக்கிறது. இந்த இழிநிலைக்கான காரணங்களுள் ஒன்று நமது குறுகிய கண்ணோட்டமாகும்; நமது செயல்களின் எல்லை குறுகிவிட்டதாகும்.

ஒரே இனத்திலிருந்து இரண்டு விசித்திரமான நாடுகள் எழுந்தன. அவை நிலைபெற்றது வெவ்வேறான சூழ்நிலையிலும் இயற்கை அமைப்பிலும் ஆகும். வாழ்க்கை ப் பிரச்சினைகளையும் அவை தங்களுக்கே உரிய தனி வழிகளிலேயே தீர்க்க முனைந்தன. புராதனமான இந்து மற்றும் கிரேக்க இனங்களையே நான் குறிப்பிடுகிறேன். வடதிசையில் பனி படர்ந்த இமயமலை, சம நிலத்தில் பொங்கும் கடல்போல் சுற்றிலும் பாய்ந்த நன்னீர் ஆறுகள், உலகின் எல்லை வந்துவிட்டதோவென நீண்டு பரந்து கிடந்த அடர்ந்த காடுகள்- இவையெல்லாம் நாற்புறமும் கட்டுப்படுத்தியபோது இந்திய ஆரியனின் பார்வை அகமுகமாகியது. இதனுடன் அவனது இயல்பான உள்ளுணர்ச்சி, கூர்த்த நுண்ணறிவு, அவனைச் சுற்றிச் சூழ்ந்து கிடந்த இயற்கையழகு- இவையெல்லாம் சேர்ந்து அவனைத் தனக்குள்ளேயே மூழ்குகின்ற சிந்தனையாளனாக மாற்றின. சொந்த மனத்தை ஆராய்வது இந்தோ- ஆரியனின் மகத்தான நோக்கமாக இருந்தது. மாறாக, கிரேக்கர்கள் இயற்கை எழில் கொஞ்சித் தவழும் கிரேக்கத் தீவுகளில் குடியேறினார்கள். சூழ்ந்து கிடந்த இயற்கை, அவர்கள் மனத்தில் நுண்ணுணர்வுகளைவிட அழகுணர்ச்சியையே தட்டியெழுப்பியது; அது எல்லையற்றுப் பரந்து கிடந்தாலும் எளிமை நிரம்பியதாக இருந்தது. எனவே அவர்கள் மனம் புறத்தை நாடியது, புறவுலகை ஆராய விழைந்தது.

இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தியாவிலிருந்து, பகுத்தறிவும், விஞ்ஞானங்களும், கிரீஸிலிருந்து பொதுமைப்படுத்தும் விஞ்ஞானங்களும் தோன்றின. இந்துவின் மனம் தன் சொந்த வழியிலேயே சென்று அற்புதமான பலன்களைக் கண்டது. இன்றும்கூட இந்துவின் வாதத் திறமையும் அவனது மூளையின் மாபெரும் ஆற்றலும் ஈடிணையற்றதாகவே உள்ளன. போட்டி என்று வருமானால் நம் இளைஞர்கள் உலகிலுள்ள எந்த இளைஞர்களையும் வெல்வார்கள் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் இந்தத் தேசிய வலிமை இன்று ஒடுங்கிவிட்டது. ஒரு வேளை முகமதியர் இந்தியாவை வெல்வதற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த வீழ்ச்சி நேர்ந்திருக்கலாம். அப்போது நமது இந்தத் தேசியப் பண்பைக் குறித்து அவ்வளவு ஆரவாரம் செய்யப்பட்டது, அதுவே அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

அந்த வீழ்ச்சியின் அடையாளங்களை, இந்தியாவின் கலை, இசை, விஞ்ஞானம் என்று ஒவ்வொன்றிலும் நாம் இன்றும் காண முடிகிறது. இன்றைய கலையில் பரந்த நோக்கு இல்லை, ஒழுங்கு இல்லை, நுண்ணுர்வுகளின் வெளிப்பாடு இல்லை, வெறும் பகட்டும் ஆடம்பரமும் மேலோங்கிய ஒரு நிலைமை தற்போது உள்ளது. இந்த இனத்தின் தனித்தன்மை அழிந்துபோய் விட்டதைப் போல் தோன்றுகிறது. இசையிலும் அதுபோலவே. புராதன இசைமரபில் இருந்தது போன்ற, ஆன்மாவைக் கிளர்ந்தெழச் செய்கின்ற கருத்துக்கள் இல்லை, தன் சொந்த அமைப்பில் நின்று அற்புதமான இசைவு எழுப்பக்கூடிய ராகங்கள் இல்லை. ஒவ்வொரு ராகமும் தன் தனித்தன்மையை இழந்துவிட்டது. தற்கால இசை, ராகங்களின் வெறும் கலப்படமாகவும் குழப்பக் கலவையாகவுமே உள்ளது. இசையின் தரம் தாழ்ந்து விட்டதையே இது காட்டுகிறது. உங்கள் லட்சியக் கருத்துக்களை ஆராய்ந்தால் அங்கும் இதே நிலைமைதான் – தனித்தன்மையை இழந்து, வெறும் வார்த்தை ஜாலங்களாக மாறிவிட்ட நிலைமை. உங்கள் சிறப்புத் துறையான மதத்திலோ மிகவும் பயங்கரமான வீழ்ச்சியே தென்படுகிறது. தண்ணீரை வலது கையால் குடிப்பதா, இடது கையால் குடிப்பதா என்பன போன்ற அதிமுக்கியமான பிரச்சினைகளை விவாதிப்பதில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சுறு சுறுப்பாக ஈடுபட்டிருந்த ஓர் இனத்திடமிருந்து வேறு நாம் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? நாட்டின் மிகச் சிறந்த மேதைகள், நூற்றாண்டுகளாகச் சமையலறையைப் பற்றியும், நான் உங்களைத் தொடலாமா, நீங்கள் என்னைத் தொடலாமா, அப்படித் தொட்டுவிட்டால் என்ன பிராயச்சித்தம் என்பது பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்த இனத்திற்கு அதைவிடப் பெரிய சீரழிவு வேறென்ன வேண்டும். வேதாந்தக் கருத்துக்களும், இதுவரை பூமியில் போதிக்கப்பட்டவற்றுள் நிகரற்றவையான இறைவன், ஆன்மா பற்றிய அதிநுண்மையான மகத்தான கோட்பாடுகள் ஏறக்குறைய தொலைந்துவிட்டது போல்தான். ஏதோ காடுகளில் முடங்கி, ஒரு சில துறவியரால் அவை காக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மீதிப் பகுதியினர், ஒருவரை ஒருவர் தொடுவது, உடை, உணவு போன்ற அதிமுக்கியமான விஷயங்களை விவாதிப்பதில் காலத்தைக் கழிக்கின்றனர்.

மிகக் கீழானவனும் மிக உயர்ந்தவனுக்குச் சிலவற்றைக் கற்பிக்க முடியும். முகமதியர்களின் ஆக்கிரமிப்பு சந்தேகமின்றி, நமக்குப் பல நல்லவற்றைத் தந்துள்ளது, ஆனால் நம் இனத்திற்கு அதனால் உத்வேகத்தைத் தர முடியவில்லை. நல்லதற்கோ கெட்டதற்கோ அதன்பிறகு ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தனர். ஆக்கிரமிப்பு என்பதே கெட்டதுதான். ஏனெனில் ஆக்கிரமிப்பு ஒரு தீமை, அன்னிய அரசாங்கம் ஒரு தீமை. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் சிலவேளைகளில் தீமைமூலமும் நன்மை வரவேசெய்கிறது. ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பினால் விளைந்த நன்மை இதுதான்; இங்கிலாந்து, இல்லை இல்லை, ஐரோப்பா முழுவதுமே இப்பொழுது பெற்றிருக்கின்ற நாகரீகத்திற்காக கிரீஸிற்கு நன்றி சொல்ல வேண்டும். ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொன்றின் மூலமும் கிரீஸ்தான் பேசுகிறது. ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு பொருளும் கீரீஸின் முத்திரையையே கொண்டுள்ளது. ஐரோப்பியர்களின் விஞ்ஞானமும் கலையும் கிரேக்கர்களுடையதே. இன்று புராதன கிரேக்கன் புராதன இந்துவை இந்திய மண்ணில் சந்திக்கிறான். இவ்வாறு நிதானமாக அமைதியாக உத்வேகம் மிக்கச் சூழ்நிலை வந்து சேர்ந்துள்ளது. இந்தச் சக்திகள் ஒன்றுசேர்ந்துதான், நாம் நம்மைச் சுற்றிக் காண்கின்ற விசாலமானவையும், உயிர்த் துடிப்பைத் தருபவையுமான மறுமலர்ச்சி இயக்கங்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளன. வாழ்வு பற்றிய மேலும் தாராளமான விரிந்த கருத்து நம் முன் உள்ளது. முதலில்நாம் சற்று குழம்பி, எல்லாவற்றையும் குறுக்கிக் கொள்ள முயன்றோம். ஆனால் இன்று நம்மைச் சுற்றி இயங்கி வருகின்ற மறுமலர்ச்சி இயக்கங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பரந்த கோட்பாடுகள் எல்லாமே நமது பழைய நூல்களில் உள்ள கருத்துக்களைத் தர்க்க ரீதியில் வெளிப்படுத்தும் முயற்சியே என்பதை அறிந்து விட்டோம். நம் சொந்த முன்னோர்கள் கொண்டிருந்த அடிப்படைக் கருத்துக்களைக் கட்டுக்கோப்பான தர்க்க ரீதியில் வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளே அவை. பரந்த மனப்பான்மை பெறுவது, பிற நாடுகளுக்குச் செல்வது, மற்றவர்களோடு கலப்பது, நம் கருத்துக்களை உலகம் தழுவியதாக அமைப்பது இவையே நம் லட்சியத்தின் எல்லை. ஆனால் எப்போதுமே நாம் நமது சாஸ்திரங்களின் திட்டங்களுக்கு மாறாக, நம்மை மேலும் மேலும் சிறு சிறு கூட்டமாக ஆக்கிக் கொள்வதற்கே முயன்று கொண்டிருக்கிறோம்; மற்றவர்களோடு பழகுவதிலிருந்து விலகி வருகிறோம்.

இதனால் பல அபாயங்கள் நேர்ந்துள்ளன. நாம் தான் உலகத்திலேயே சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அது அவற்றுள் மிக மோசமான ஒன்று. நான் இந்தியாவை நேசிக்கிறேன், தேசப் பற்றுடையவன் நான், முன்னோர்களிடம் மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனாலும் நாம் பிற நாடுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை எவ்வளவோ உள்ளன என்று நினைப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. பிறருடைய காலடியில் அமர நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் நமக்கு மகத்தான பாடங்களைப் போதிக்க முடியும். இதை மறக்கக் கூடாது.

நமது சமுதாயச் சட்டங்களை அமைத்தவராகிய மனு, இழிந்த குலத்தில் பிறந்தவரிடமிருந்தாயினும் சிறிது நல்லறிவு பெற்றுக் கொள்ளுங்கள். மிகத் தாழ்ந்த பிறவியாளருக்கும் சேவை செய்து சொர்க்கம் செல்லும் பாதையை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறார். எனவே மனுவின் உண்மையான பிள்ளைகளான நாம் அவரது கட்டளைக்குப் பணிந்து, இந்த வாழ்வு மற்றும் மறு வாழ்வு பற்றிய பாடங்களை நமக்கு போதிக்க கூடிய யாரிடமிருந்தேனும் கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உலகத்திற்கு மகத்தானதொரு பாடத்தை நாம் போதிக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. இந்தியாவிற்கு வெளியே உள்ள உலகின் தொடர்பு இல்லாமல் நாம் வாழ முடியாது; வாழ முடியும் என்று நினைப்பது முட்டாள்தனம். அதற்கான தண்டனையாகத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த அடிமை வாழ்வை அனுபவிக்கிறோம்.

நாம் எதையும் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை, நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளைக் கவனிக்கவில்லை.- இந்திய மனத்தின் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கியக் காரணம். அதற்கான தண்டனையை நாம் பெற்றுவிட்டோம், இனியும் அவ்வாறு இருக்க வேண்டாம். இந்தியர்கள் வெளியே போகக் கூடாது என்பது போன்ற முட்டாள்தனமான கருத்துக்கள் சிறுபிள்ளைத் தனமானவை. அத்தகைய கருத்துக்களின் தலையில் ஓங்கி அடிக்க வேண்டும். நீங்கள் பிற நாடுகளில் எந்த அளவிற்குப் பயணம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது, உங்கள் நாட்டிற்கும் நல்லது. இதை நீங்கள் கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், இன்று நீங்கள் உங்களை ஆள விரும்பும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அடிமையாக அவைகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கமாட்டீர்கள். வாழ்வின் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற முதல் அடையாளம் – விரிவடைதல். நீங்கள் வாழ வேண்டுமானால் கட்டாயம் விரிவடைய வேண்டும். நீங்கள் விரிவடையாமல் நிற்கின்ற அந்தக் கணமே மரணம் உங்கள் தலைக்கு வந்துவிட்டது; ஆபத்து அருகில் வந்துவிட்டது.

நான் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் சென்றேன். அதற்காக நீங்கள் என்னைக் கனிவுடன் பாராட்டினீர்கள்.நான் போகத்தான் வேண்டும் ஏனெனில் அதுதான் நம் தேசிய வாழ்வினுடைய விரிவின், மறு மலர்ச்சியின் முதல் அடையாளம், தன்னுள் விரிந்து மலர்ந்த இந்தத் தேசிய வாழ்க்கை, இங்கிருந்து என்னை வெளிநாடுகளுக்குத் தூக்கி எறிந்தது.ஆயிரக்கணக்கானோர் இவ்வாறே தூக்கி எறியப்படுவர். என் வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள் – இந்த நாடு வாழ்ந்தாக வேண்டுமென்றால் இது நடந்தாக வேண்டும். தேசிய வாழ்வின் மகத்தான மறுமலர்ச்சியின் அடையாளமான விரிவின் மூலமாக, அதாவது நம் மனம் இவ்வாறு விரிவடைந்து, நாம் மேலைநாடுகளுக்குச் செல்வதன் மூலமாக, மனித சமுதாயத்தின் பொதுவான வளர்ச்சிக்கு நமது பங்கை அளிக்க முடியும், உலகின் பொதுவான வளர்ச்சிக்கு நமது கொடையை வழங்க முடியும்.

வாழ வேண்டுமானால் ஒவ்வொரு நாடும் நிச்சயம் எதையாவது கொடுத்தேயாக வேண்டும். உயிர் கொடுத்தால் உயிர்பெறலாம். நீங்கள் ஒன்றைப் பெற்றால் மற்றவர்க்கு வழங்குவதன் மூலம் அதற்கான விலையை அளிக்க வேண்டும். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் என்பது நிதரிசனமான உண்மை. அது எப்படி? அறிவிலிகள் எதையாவது நினைத்து விட்டுப் போகட்டும், நாம் வாழ்ந்து வருவதற்கான காரணம் நாம் வெளியுலகிற்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். மதம், தத்துவம் , ஞானம், ஆன்மீகம் இவையே உலகிற்கு இந்தியா வழங்கும் கொடை. மதம் பிற நாடுகளுக்குச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தப் படைகளின் அணிவரிசைகள் தேவையில்லை. ரத்த வெள்ளங்கள் மூலம் ஞானமும் தத்துவமும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதில்லை ரத்தம் பீறிடக் கிடக்கின்ற மனித உடம்புகளின் மீது அணிவகுத்து ஞானமும் தத்துவமும் செல்வதில்லை. வன்முறையின் துணையோடு அவை செல்வதில்லை அமைதி, அன்பு ஆகிய இறகுகளை விரித்தே அவை செல்கின்றன. எப்போதும் இப்படித்தான் நடந்து வந்துள்ளது. மேலும் இது புதிதான ஒரு விஷயமும் அல்ல. இந்துக்கள் எப்போதும் தங்கள் நாடாகிய நான்கு சுவர்களுக்குள்ளேயே இருந்தார்கள் என்று உங்களுள் யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறானதாகும். நீங்கள் பழைய நூல்களைப் படிக்கவில்லை, இந்த நாட்டு மக்களின் வரலாற்றைச் சரியாகப் படிக்கவில்லை.

எனவே நாம் கொடுத்தாக வேண்டியிருந்தது. நான் லண்டனில் இருந்தபோது ஓர் ஆங்கிலேய இளம்பெண் என்னிடம், இந்துக்களாகிய நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒரு நாட்டைக்கூட நீங்கள் இதுவரை வெல்ல வில்லையே? என்று கேட்டாள். வீரமும் தீரமும் உடைய க்ஷத்திரியர்களான ஆங்கிலேயர்களுக்கு இந்தக் கேள்வி சரிதான். ஒருவனை மற்றவன் வெல்வதுதான் அவர்களைப் பொறுத்தவரை பெருமைக்கு உரியது. இது அவர்களின் கண்ணோட்டத்தில் சரியானது. ஆனால் நம் கண்ணோட்டம் இதற்கு மாறானது. இந்தியாவின் பெருமைக்கான காரணம் என்னவென்று என்னையே நான் கேட்டுக்கொண்டால், நாம் எப்போதும் யாரையும் வெல்லாததே , என்றுதான் பதில் சொல்வேன். அதுதான் நமது பெருமை. சிலவேளைகளில் அரைகுறை ஆசான்கள் சிலர், நமது மதத்தைப்பற்றி, அது பிறரை வெல்கின்ற மதமாக இல்லை என்று குறை கூறுவதை நீங்கள் தினமும் கேட்கிறீர்கள். அவர்கள் கூறுகின்ற குறைதான் என்னைப் பொறுத்தவரையில் நமது நிறை. நமது மதம் பிற மதங்களைவிட உண்மையாக இருப்பதற்கான காரணம், அது எப்போதும் யாரையும் வெற்றி கொள்ளவில்லை.அது ஒருபோதும் ரத்தம் சிந்தவில்லை; அதன் உதடுகளிலிருந்து வாழ்த்துச் சொற்களே, அமைதியும் அன்பும் கனிவும் நிறைந்த வார்த்தைகளே எப்போதும் வந்தன. இங்கு, இங்கு மட்டும் தான் சகிப்புத் தன்மைபற்றிய லட்சியங்கள் முதலில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இங்கு மட்டும்தான் சகிப்புத் தன்மை, அனுதாபம் முதலியவை செயல்படுத்தப்பட்டன. மற்ற எல்லா நாடுகளிலும் இவை வெறும் கொள்கை அளவில்தான் இருக்கின்றன. இங்கு, இங்கு மட்டுமே இந்துக்கள் முகமதியர்களுக்கு மசூதிகளையும், கிறிஸ்தவர்களுக்குச் சர்ச்சுகளையும் கட்டுகிறார்கள்.

எனவே நம்முடைய செய்தி பலமுறை வெளியுலகிற்குச் சென்றிருக்கிறது. ஆனால் நிதானமாக அமைதியாக பிறர் தெரிந்து கொள்ளாதவகையில் சென்றிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொன்றும் இவ்வாறே நடைபெறுகிறது. இந்திய சிந்தனையின் ஒரு பண்பு அதன் மௌனம், அதன் அமைதி. அதே வேளையில் வன்முறையின் மூலம் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாத மாபெரும் ஆற்றல் அதன் பின்னால் இருக்கிறது. அமைதியாகப் பிறர் மனத்தை வசீகரிப்பதே எப்போதும் இந்தியச் சிந்தனையின் தன்மை.

வெளிநாட்டினர் நம் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினால், முதலில் அவர்களுக்கு அது சலிப்பை அளிப்பதாக உள்ளது. பிற நாட்டு இலக்கியங்களைப் போல், உடனடியாக மனத்தை எழுச்சி பெறவோ கிளர்ச்சி பெறவோ செய்யும் தன்மை அவற்றில் இல்லை. ஐரோப்பாவின் சோக காவியங்களை நமது சோக காவியங்களுடன் ஒப்பிடுங்கள். முன்னது முழுக்கமுழுக்கச் செயல் வேகம் நிறைந்தது, படிக்கும்போது உங்கள் கிளர்ச்சியைத் தூண்டுகிறது. ஆனால் படித்து முடித்த மறுகணமே எல்லாம் போய்விடுகிறது. உங்கள் மூளையிலிருந்து மொத்தமாகக் கழுவப்பட்டுவிடுகிறது. இந்தியச் சோக இலக்கியங்களோ ஒருவித மயக்கும் சக்தி உடையது, அமைதியானது, இதமானது; நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால் , உங்களை அவை அப்படியே வசீகரித்துவிடும், உங்களால் நகர முடியாது, நீங்கள் கட்டப்படுவீர்கள். நம் இலக்கியங்களைத் தைரியமாகத் தொடுபவர்கள் அந்தப் பந்தத்தை உணர்கிறார்கள்; என்றென்றைக்குமாக அதில் கட்டப்பட்டு விடுகிறார்கள்.

மெல்லென பனி பெய்கிறது, அதை யாரும் காண்பதில்லை, கேட்பதுமில்லை எனினும் அழகிய ரோஜாக்களை அது எவ்வளவு அற்புதமாக மலரச் செய்து விடுகிறது! ! சிந்தனையுலகத்திற்குத் தன் நன்கொடையையை இந்தியா வழங்கியதும் இவ்விதமே. மௌனம் யாரும் அறிய முடியாததுதான், எனினும் விளைவுகளைத் தருவதில் எல்லாம் வல்லது. உலகச் சிந்தனையையே அது மாற்றி உள்ளது. ஆனால் இது எப்போது நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. இந்திய சாஸ்திரங்களை எழுதியவர்களின் பெயர்களை உறுதி செய்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது ! என்று என்னிடம் ஒரு முறை சொன்னார்கள் .அதுதான் இந்தியாவின் கொள்கை என்று நான் சொன்னேன். பிறர் எழுதியதிலிருந்து தொண்ணூறு சதவீதத்தைத் திருடி, பத்து சதவீதம் சொந்தக்கருத்தையும் சேர்த்து, முன்னுரையில் மட்டும், இவை என் சொந்தக் கருத்துக்கள் என்று எழுதுகின்ற தற்கால எழுத்தாளர்கள் போன்றவர்கள் அல்ல, பழங்கால இந்திய எழுத்தாளர்கள்.. மனித குலத்தின் இதயத்தில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற அந்த மாபெரும் சிந்தனையாளர்கள். தங்களை ஆசிரியர் என்று அறிவித்துக் கொள்ளாமல் நூல்களை மட்டும் எழுதுவதில் திருப்தி கண்டார்கள். அந்த நூல்களைச் சந்ததிக்கு விட்டுவிட்டு அமைதியாக மறைந்து போனார்கள். நமது தத்துவங்களை எழுதியவர் யார்? நமது புராணங்களை எழுதியவர்கள் யார் ? யாருக்குத் தெரியும்? அத்தனைபேரும் பொதுப் பெயர்களான வியாசர், கபிலர் போன்ற பெயர்களின் கீழ் மறைந்து போனார்கள் . அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் உண்மையான குழந்தைகள், அவர்கள் கீதையை உண்மையாகப் பின் பற்றுபவர்கள்; வேலை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு, அதன் பலனில் இல்லை” என்ற மகத்தான ஆணையை நடைமுறையில் வாழ்ந்து காட்டியவர்கள்.

இவ்வாறு இந்தியா உலகின் மீது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை நிறைவேற்றப்பட வேண்டும். கருத்துக்கள் எவ்வாறு பரவும் ? வியாபாரத்திற்கான சரக்குகள்போல், அவையும் மற்றவர்களால் உண்டாக்கப்பட்ட வழியில்தான் செல்ல முடியும். சிந்தனைகளும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்குப் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். எப்போதெல்லாம் உலக வரலாற்றில் பெரியசாம்ராஜ்யங்கள் தோன்றி, உலக நாடுகளை வென்று அவற்றை இணைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த இணைப்புப் பாதை வழியாக இந்தியக் கருத்துக்கள் பாய்ந்து, ஒவ்வோர் இனத்தின் ரத்தத்திலும் கலந்துள்ளது. பௌத்தர்கள் தோன்று முன்னரே, இவ்வாறு இந்தியச் சிந்தனைகள் உலக நாடுகளுள் ஊடுருவிச் சென்றதற்கான ஆதாரங்கள் ஓவ்வொரு நாளும் கிடைத்தவண்ணம் உள்ளன. புத்த மதத்திற்கு முன்னாலேயே சீனா, பாரசீகம் மற்றும் கீழைத் தீவுகளில் வேதாந்தம் பரவி இருந்திருக்கிறது. பின்னர் கிரீஸின் மகத்தான சிந்தனைகள் கீழ்த்திசை உலகின் பல்வேறு பகுதிகளை இணைத்த போது இந்தியச் சிந்தனைகள் மறுபடியும் பரவத் தொடங்கின. இன்று தன் நாகரீகத்தைப் பற்றி இவ்வளவு பெருமையடித்துக் கொள்கின்ற கிறிஸ்தவ மதம், இந்தியச்சிந்தனைகளுடைய சின்னஞ்சிறு துணுக்குகளின் சேர்க்கையே தவிர வேறல்ல. நமது மதம் எவ்வளவு மகிமை வாய்ந்தது தெரியுமா! எவ்வளவோ பெருமை வாய்ந்த புத்த மதம் இருக்கிறதே, அது நம் மதத்தின் வெறும் ஒரு துடுக்குக் குழந்தை மட்டுமே! கிறிஸ்தவமதமோ நமது சில சிந்தனைத் துனுக்குகளை இணைத்து ஒட்டுபோடப்பட்ட ஒரு போலி மட்டுமே.

இந்தச் சுற்றுக்களில் ஒன்று மறுபடியும் வந்துள்ளது. இங்கிலாந்தின் மகத்தான ஆற்றல் உலகத்தின் பல்வேறு பகுதிகளை இணைத்திருக்கிறது. ஆங்கிலேயரின் பாதைகள் ரோமப் பேரரசின் பாதைகளைப்போல் நிலங்களில் ஓடுவதுடன் மட்டும் திருப்தி அடைய வில்லை, அவர்கள் கடலின் உள்ளேயும் எல்லா திசைகளிலும் நுழைந்துள்ளார்கள். எல்லா கடல்களிலும் இங்கிலாந்தின் பாதைகள் செல்கின்றன. உலகத்தின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் புதிய தூதனைப்போல் மிக அற்புதமான காரியங்களைச் செய்கிறது.

இந்தச் சூழ்நிலையிலும் இந்தியா மீண்டும் உணர்ச்சி பெற்றெழுந்து, உலக நாகரீகத்தின் வளர்ச்சிக்குத் தன் பங்கைத் தரத் தயராக இருப்பதைக் காண்கிறோம். அதன் விளைவாகத்தான், ஏதோ இயற்கையே வற்புறுத்தி அனுப்பியதுபோல் நான் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று பிராச்சாரம் செய்ய நேர்ந்தது. காலம் கனிந்திருப்பதை உணர வேண்டும். ஒவ்வொன்றும் நல்ல சகுனமாகவே காணப்படுகிறது. இந்தியத் தத்துவம் மற்றும் ஆன்மீகச் சிந்தனைகள் மீண்டும் வெளியே சென்று உலகை வெல்ல வேண்டும். எனவே நம் முன் உள்ள பிரச்சினை பரிமாணத்தில் நாளுக்குநாள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. நாம் நமது நாட்டை மறுமலர்ச்சி பெறச் செய்தாக வேண்டும், அது ஒன்றும் பெரிய காரியம் அல்ல; நான் ஒரு கற்பனாவாதி, இந்து இனம் உலகம் முழுவதையும் வெல்ல வேண்டும் என்பதே என் ஆவல்.

பிற நாடுகளை வென்று ஆட்சிபுரிந்த எத்தனையோ பேரரசுகள் இருந்தன. நாம் கூட எத்தனையோ நாடுகளை நம் குடையின் கீழ் ஆண்டிருக்கிறோம். ஆனால் நமது வெற்றியை மதம் மற்றும் ஆன்மீகத்தின் வெற்றி என்றே வர்ணிக்கிறார் மாமன்னரான அசோகர். இந்தியா மீண்டும் உலகை வெல்ல வேண்டும். இதுவே என் வாழ்க்கைக் கனவு. இங்கே எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இத்தகைய கனவைக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்தக் கனவு நனவாகும்வரை ஓயாதீர்கள்.

முதலில் நமது நாட்டைச் சரி செய்வோம், பிறகு உலகைச் சீர்படுத்த முயற்சிக்கலாம் என்று உங்களிடம் சிலர் கூறலாம். ஆனால் நான் தெளிவான மொழியில் உங்களுக்குச் சொல்கிறேன்: பிறருக்காக வேலை செய்யும்போது தான் நீங்கள் சிறப்பாக வேலை செய்கிறீர்கள். உங்களுக்காக நீங்கள் சிறப்பாகப் பணியாற்றியது எப்போது? எப்போது நீங்கள் பிறருக்காக உழைத்தீர்களோ, அப்போதுதான்; உங்கள் கருத்துக்களைக் கடல்களுக்கு அப்பாலும் எடுத்துச்சென்று அன்னிய மொழிகளிலும் பரப்புவதற்கு முயன்றபோதுதான். மற்ற நாடுகளுக்கு ஒளியைத் தருகின்ற அத்தகைய முயற்சி எந்த அளவிற்கு உங்கள் நாட்டிற்கும் உதவும் என்பதற்கு, இங்கே கூடியுள்ள கூட்டமே சான்று. நான் இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் போகாமல் என் கருத்துக்களை இந்தியாவிற்குள் மட்டும் கூறியிருந்தால், இப்போது ஏற்பட்டுள்ளதில் நாலில் ஒரு பங்கு பலன்கூட விளைந்திருக்காது. நம் முன் உள்ள மகத்தான லட்சியம் இது. ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். உலகம் முழுவதையும் இந்தியா வெல்ல வேண்டும், அதற்குக் குறைந்த எதுவும் நம் லட்சியமல்ல. நாமெல்லாம் அதற்குத் தயாராவோம், அதற்காக நம் நரம்புகள் ஒவ்வொன்றையும் முறுக்கேற்றுவோம்.

அன்னியர் வரட்டும், படைகளைக் கொண்டுவந்து குவிக்கட்டும். பொருட்படுத்த வேண்டாம். இந்தியாவே நீ எழு!
உன் ஆன்மீகத்தின் மூலம் உலகத்தை வெற்றிகொள்! ஆம், இந்த மண்ணில் முதலில் முழங்கியதைப் போல், அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும். பகை பகையை வெல்ல முடியாது. உலகாயதத்தையும் அதன் விளைவான எல்லா துன்பங்களையும் உலகாயதத்தால் வெற்றிக்கொள்ள முடியாது. படைகள் படைகளை வெல்ல முயலும்போது துன்பங்கள் பெருகுவதும் மனித சமுதாயம் மிருக நிலைக்குப் போவதும்தான் நிகழ்கின்றது. ஆன்மீகம் மேலை நாடுகளை வென்றாக வேண்டும்.

தாங்கள் ஒரு தேசிய இனமான நிலைநிற்க வேண்டுமானால், அதற்குத் தேவையானது ஆன்மீகம் என்பதைப் பிற நாட்டினர் மெல்ல மெல்ல அறிந்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது யார்? இந்தியாவின் மகத்தான ரிஷிகள் விட்டுச்சென்ற செய்திகளை உலகத்திலுள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று பரப்புவதற்கான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? இந்தச் செய்தி உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைவதற்காகத் தங்கள் அனைத்தையும் தியாகம் செய்யக்கூடிய மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? உண்மையைப் பரப்புவதற்கு அத்தகைய துணிச்சலான பெருமக்கள்தாம் தேவை. வீரமிக்க அத்தகைய செயல் வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் வேதாந்தத்தின் மகத்தான உண்மைகளை அங்கே பரப்புவதில் உதவ வேண்டும். இது உலகின் தேவை, இதைச் செய்யாவிடில் உலகம் அழிந்துபோகும். மேலை உலகம் முழுவதுமே எரிமலையின் மீது உள்ளது, அது நாளைக்கே வெடிக்கலாம், நாளைக்கே சிதறிக் தூள் தூளாகலாம். அவர்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேடினார்கள், ஆனால் நிம்மதி கிடைக்க வில்லை. இன்பக் கோப்பையின் அடிவரை குடித்துப் பார்த்தார்கள், அது வெறுமை என்பதைக் கண்டுவிட்டார்கள். இந்தியாவின் ஆன்மீகக் கருத்தக்கள் மேலை நாடுகளில் ஆழமாக ஊடுருவும்படி நாம் வேலை செய்ய வேண்டிய தருணம் இதுதான். அதனால் சென்னை இளைஞர்களே! இதை நினைவில் கொள்ளுமாறு நான் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன். நாம் வெளியே சென்றாக வேண்டும், உலகை ஆன்மீகத்தாலும் தத்துவத்தாலும் வென்றாக வேண்டும். இதைச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்; வேறு வழியில்லை. இந்தியச் சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும். நம் தேசிய வாழ்வுக்கு, விழிப்புற்ற சக்தி பெற்ற தேசிய வாழ்விற்கான நிபந்தனை இதுவே.

ஆனால் ஆன்மீகச் சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும் என்று நான் கூறியதன் உண்மையான பொருளை மறந்துவிடக் கூடாது. உயிருணர்வு அளிக்கக் கூடிய கோட்பாடுகளையே நான் ஆன்மீகச் சிந்தனைகள் என்று குறிப்பிட்டேன். அவற்றை வெளியுலகில் பரப்ப வேண்டுமே தவிர, நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற மூட நம்பிக்கைகளை அல்ல.அந்த மூட நம்பிக்கைகளை ஒரேயடியாக இந்த மண்ணிலிருந்தே பிடுங்கி ஏறிய வேண்டும். அவை மீண்டும் தலையெடுக்கவே கூடாது. இந்த மூட நம்பிக்கைகள்தான் நம் இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம், நம் மூளையைப் பலவீனப்படுத்துவதும் இவைதான். உயரிய கருத்துக்களைச் சிந்திக்கும் திறனற்ற, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்த, சுறுசுறுப்பை இழந்த, கண்டகண்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்துத் தன்னைத்தானே பாழ்படுத்திக் கொள்கின்ற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இங்கே இந்தியாவில் பல்வேறு அபாயங்கள் நம் கண்முன் உள்ளன. அவற்றுள் ஒன்று வடிகட்டின உலகாயதம்; மற்றொன்று அதற்கு நேர் எதிரான வடிகட்டின மூட நம்பிக்கை. இரண்டையும் நாம் தவிர்த்தாக வேண்டும். இன்றைய மனிதன் மேலைநாட்டு அறிவு பெற்றவுடனே தன்னை எல்லாம் தெரிந்தவனாக எண்ணிக்கொள்கிறான்; நமது புராதன ரிஷிகளைப் பார்த்து கேலிச் சிரிப்புச் சிரிக்கிறான். அவனுக்கு இந்துச் சிந்தனை எல்லாம் வெறும் குப்பை, தத்துவம் எல்லாம் குழந்தையின் வெறும் உளறல், மதம் என்பது முட்டாள்களின் மூட நம்பிக்கை.

இதற்கு மாறாக இன்னொருவன் இருக்கிறான். அவன் கல்வியறிவு பெற்றவன். ஆனால் ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுதான் சரி என்று சாதிப்பவன் அவன் . சகுனத்திற்கும் கூட அது இது என்று விளக்கங்கள் தருகின்ற மற்றோர் எல்லையை நோக்கி ஓடுகிறான் அவன். விசித்திரமான தனது இனம் ஆகட்டும், விசித்திரமான தனது குட்டி தேவதைகள் ஆகட்டும். விசித்திரமான தனது கிராம வழக்கம் ஆகட்டும் – இவை பற்றிய ஒவ்வொரு மூட நம்பிக்கைக்கும் தத்துவ விளக்கம் தேவையா, இல்லை உவமான உவமேயங்களுடன் விளக்கம் தேவையா, எல்லாம் அவனிடம் உண்டு. இன்னும் என்னென்ன விளக்கங்கள் வைத்திருக்கிறானோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராமத்தின் மூட நம்பிக்கையும் அவனுக்கு வேத விதி. அவனைப் பொறுத்தவரை, அவைகளைப் பின்பற்றுவதைச் சார்ந்து தான் தேசிய வாழ்க்கையே இருக்கிறது. இத்தகையவர்களிடமும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை உடைய முட்டாள்களாக இருப்பதைவிட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாத்திகனிடம் உயிர்த்துடிப்பு இருக்கிறது, அவனிடம் நீங்கள் ஏதாவது நல்லதை உருவாக்க முடியும். ஆனால் மூட நம்பிக்கை மட்டும் நுழைந்து விடுமானால் சிந்திக்கும் திறன் போய்விடுகிறது, மூளை மழுங்கி விடுகிறது. வாழ்க்கை சீரழிவுப் பாதையில் போக ஆரம்பித்து விடுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்து விடுங்கள். துணிச்சலான வீரம் மிக்கவர்களே இப்போதுநமக்குத் தேவை. நமது தேவையெல்லாம் ரத்தத்தில் வேகம், நரம்புகளில் வலிமை, இரும்பை ஒத்த தசைகள், எஃகை ஒத்த நரம்புகள். பலவீனப் படுத்துகின்ற வளவளகொளகொள கருத்துக்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. இவை எல்லாவற்றையும் தவிர்த்து விடுங்கள்.

ரகசிய வித்தைகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். மதத்தில் மர்மத்திற்கு இடமில்லை. வேதாந்தத்திலோ,வேதங்களிலோ, சம்ஹிதைகளிலோ, புராணங்களிலோ, மர்மமாக ஏதாவது இருக்கிறதா? மதத்தைப் போதிக்க பழங்கால ரிஷிகள் எந்த ரகசிய சங்கங்களை வைத்திருந்தார்கள்? மகத்தான உண்மைகளை மனித குலத்திற்கு அளிப்பதற்காக அவர்கள் மாய ஜாலமோ மந்திர ஜாலமோ செய்ததாக எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா? மர்ம வித்தைகளை நாடுவதும் சரி, மூட நம்பிக்கைகளும் சரி இரண்டுமே பலவீனத்தின் அடையாளங்கள். சீரழிவின் அடையாளங்கள்; மரணத்தின் அடையாளங்கள். அவற்றை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வலிமையாக இருங்கள், உங்கள் சொந்தக் கால்களில் நில்லுங்கள். மகத்தான, மிகவும் அதிசயப்படத்தக்க விஷயங்கள் இருக்கின்றன. இயற்கையைப் பற்றிய நமது கருத்துக்கள் செல்கின்றவரை, அவைகளை நாம் இயற்கையைக் கடந்தவை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அவற்றுள் எதுவுமே மர்மமானதில்லை. மத உண்மைகள் மர்மமானவை என்றோ, பனி மூடிய இமயத்தில் இருக்கின்ற ஏதோ ரகசிய சங்கங்களின் சொத்துக்கள் என்றோ இந்த மண்ணில் ஒரு போதும் உபதேசிக்கப் பட்டதில்லை. நான் இமயமலைகளில் இருந்திருக்கிறேன், நீங்கள் அங்கே இருந்ததில்லை. இங்கிருந்து அது பல நூறு மைல்கள் தொலைவில் உள்ளது. நான் ஒரு துறவி, கடந்த பதினான்கு ஆண்டுகளாக பயணம் செய்தபடியே இருக்கிறேன். இத்தகைய ரகசிய சங்கங்கள் எதுவும் அங்கு எங்குமே இல்லை. இந்த மூட நம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாத்திகர்களாகி விடுங்கள், அது உங்களுக்கும் நல்லது, உங்கள் இனத்திற்கும் நல்லது. ஏனென்றால் அதன் மூலம் நீங்கள் வலிமை பெறுவீர்கள். ஆனால் இவையோ, சீரழிவையும் மரணத்தையும் தவிர எதுவுமல்ல. வலிமை வாய்ந்த மனிதர்கள் இந்த மூட நம்பிக்கைகளில் காலம் கழிப்பதும், கேடுகெட்ட இந்த மூட நம்பிக்கைகளை விளக்குவதற்குக் கதைகளைக் கண்டுபிடிப்பதில் நேரம் முழுவதையும் செலவழிப்பதும் மனித குலத்திற்கே அவமானம் ! தைரியமாக இருங்கள், எல்லாவற்றையும் இப்படி விளக்க முயலாதீர்கள். நம் உடம்பில் புண்களும் ரணங்களும் இருக்கலாம். இவற்றை அகற்ற வேண்டும், வெட்ட வேண்டும், அழித்துவிட வேண்டும். அதுபோல் நம்மிடம் பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்பது உண்மை. அவை நமது மதத்தையோ ,நமது தேசிய வாழ்க்கையையோ, நமது ஆன்மீகத்தையோ அழித்துவிடாது. மதத்தின் ஒவ்வொரு கோட்பாடும் பாதுகாப்பாகவே இருக்கிறது. இந்த ரணங்களை எவ்வளவு சீக்கிரம் அகற்றுகிறோமோ, அந்த அளவுக்கு இந்தக் கோட்பாடுகளும் மகத்தான பெருமையோடு ஒளி வீசும். அந்தக் கோட்பாடுகளை உறுதியாகப் பற்றுங்கள்..

ஒவ்வொரு மதமும் தன்னை உலகம் தழுவிய மதம் என்றே உரிமை பாராட்டுவதை நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன்- அப்படி ஒன்று இருக்கவே முடியாது. அப்படி ஒன்று இருந்து அத்தகைய உரிமை கொண்டாட இயலும் என்றால், அது நமது மதமாக மட்டுமே இருக்கமுடியும், வேறு எந்த மதமாகவும் இருக்க முடியாது. ஏனென்றால் மற்ற மதங்கள் ஒவ்வொன்றும் மனிதர்களை, ஒருவரையோ சிலரையோ நம்பியிருக்கிறது. அந்த மதத்தினர் வரலாற்று மனிதராகக் கருதுகின்ற ஒருவரைச் சுற்றியே அந்த மதங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தங்கள் மதத்திற்கு வலிமை என்று அவர்கள் நினைக்கின்ற அது உண்மையில் பலவீனமாகும். ஏனென்றால் வரலாற்று மனிதராகத் கருதப்படுபவர் வரலாற்று மனிதர் அல்ல என்று நிரூபித்துவிட்டால் போதும், அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட மதம் அப்படியே சிதறிப்போகும். இந்த மதங்களை உருவாக்கியவர்களின் வாழ்க்கையில் இப்பொழுதே பாதி உடைந்து நொறுங்கி விட்டன., மறுபாதியை ப் பற்றியோ தீவிரமான சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்த நிலையில் இவர்களின் வார்த்தைகளை மட்டுமே அத்தாட்சியாகக் கொண்ட அந்ந மத உண்மைகள் எல்லாம் காற்றில் கரைந்து மறைகின்றன.

நமது மதத்தில் அவதார புருஷர்கள் எண்ணற்றோர் உள்ளனர். ஆனாலும் நமது மத உண்மைகள் அவர்கள் யாரையும் நம்பி இருக்கவில்லை. கிருஷ்ணரின் பெருமை அவர் கிருஷ்ணராக இருந்தார் என்பதில் இல்லை, வேதாந்தத்தின் மகத்தான ஆச்சாரியராக இருந்தார் என்பதிலேயே உள்ளது. அவர் அப்படி வேதாந்த ஆச்சாரியராக இல்லாதிருந்தால், புத்தரின் பெயர் இந்தியாவிலிருந்து மறைந்து போனதைப்போல் அவரது பெயரும் அழிந்திருக்கும். இவ்வாறு நமது சார்பு எப்போதும் கோட்பாடுகளிடமே தவிர தனி மனிதர்களிடம் அல்ல.

அவதார புருஷர்கள் என்பவர்கள் கோட்பாடுகளின் திரண்ட வடிவமாக அவற்றை வாழ்ந்துகாட்ட வருபவர்களே தவிர வேறல்ல. கோட்பாடுகள் இருக்குமானால், பின்பற்ற ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர் வருவார்கள். கோட்பாடு பாதுகாப்பாக இருக்குமானால் புத்தரைப் போன்றோர் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் பிறப்பார்கள். கோட்பாடுகள் அழிந்து போகுமானால், மறக்கப்படுமானால், வரலாற்று மனிதர் என்று சொல்லப்படுகின்ற ஒருவரைப் பற்றிக் கொண்டு தேசிய வாழ்க்கை முழுவதுமே இயங்க நேருமானால் அந்த மதத்தின் நிலை, அந்தோ பரிதாபம்! அதற்கு ஆபத்தே வந்து சேரும்.

நமது மதம் ஒன்றுதான் தனி மனிதர்களைச் சார்ந்திருக்கவில்லை. அதே வேளையில், லட்சக்கணக்கான மனிதர்களுக்கு அதில் இடமும் உண்டு, இன்னும் எத்தனையோ பேரை நுழைப்பதற்குப் போதுமான இடமும் நமது மதத்தில் உள்ளது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கோட்பாடுகளின் விளக்கமாக இருக்க வேண்டும். இதை நாம் மறக்கக் கூடாது. நமது இந்தக் கோட்பாடுகள் பத்திரமாக உள்ளன; அதைப் பத்திரமாகப் பாதுகாப்பதும் காலங்காலமாக அதில் சேரும் மலினங்களிலிருந்து அதைப் பேணுவதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடைமையாகும்.

திரும்பத்திரும்ப எத்தனையோ முறை நமது இனம் சீரழிவுகளுக்கு உள்ளானபோதும் இந்த வேதாந்தக் கோட்பாடுகள் ஒரு சிறிதும் மாசுபடாமல் இருப்பது ஆச்சரியம்தான். எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் யாருக்கும் அவைமீது சேற்றை வாரி இறைக்கும் துணிச்சல் இல்லை. உலகிலேயே மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டவை நமது சாஸ்திரங்களே, பிற மத நூல்களுடன் ஒப்பிடும்போது இவைகளில் இடைச் செருகல்கள் இல்லை, மூலப்பாடத்தை மாற்றும் சித்திர வதைகள் இல்லை, முக்கியக் கருத்துக்களின் சாரத்தை அழிக்கும் வேலையும் இல்லை. தோன்றிய காலத்தில் இருந்ததைப்போல் அப்படியே இருந்தவாறு, அது மனித மனங்களை லட்சியத்தை நோக்கி , குறிக்கோளை நோக்கி ச்செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நூல்களுக்கு பல்வேறு உரையாசிரியர்கள் உரை எழுதியிருக்கிறார்கள், மகத்தான ஆச்சாரியர்கள் உரை எழுதியிருக்கிறார்கள், மகத்தான ஆச்சாரியர்கள் பிரச்சாரம் செய்துள்ளார்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நெறிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்றுக்கொன்று முரணானவைபோல் தோன்றுகின்ற கருத்துக்களையும் இந்த வேதங்களின் காணலாம். சில பகுதிகள் முற்றிலுமாக துவைதக் கருத்தைக் கூறுகின்றன, மற்றவை அத்வைதத்தைக் மட்டுமே கூறுகின்றன. துவைத உரையாசிரியர்கள் வேறு வழி தெரியாமல், அத்வைதப் பகுதிகளை அப்படியே அமுக்க விரும்புகிறார்கள். மத போதகர்களும் புரோகிதர்களும் அவைகளுக்கு துவைதப் பொருள் கூற விரும்புகின்றனர். அத்வைத உரையாசிரியர்களோ துவைதப் பகுதிகளை அதுபோல் செய்ய விரும்புகின்றனர். இது வேதங்களின் தவறு அல்ல. வேதங்கள் முழுவதுமே துவைதபரமானவை என்று நிரூபிக்க முயல்வது முட்டாள் தனம். வேதங்கள் முழுவதையும் அத்வைதமாகக் காட்ட முயல்வதும் அதைப் போன்ற முட்டாள் தனமே. வேதங்கள் துவைதமாகவும் அத்வைதமாகவும் உள்ளன.

புதிய கருத்துக்களின் துணையில் அதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவை இறுதியான லட்சியத்திற்கு அழைத்துச் செல்கின்ற இருவேறு கொள்கைகள். மனத்தின் படிப்படியான வளர்ச்சிக்கு துவைதம், அத்வைதம் இரண்டும் தேவை. அதனால் தான் வேதங்கள் இரண்டையும் உபதேசிக்கின்றன.மனித இனத்தின் மீது கொண்ட கருணையின் காரணமாக வேதங்கள் உயர் லட்சியத்தை அடைய பல்வேறு படிகளைக் காட்டியுள்ளன. குழந்தைகளைக் குழப்புவதற்காக வேதங்கள் பயன்படுத்துகின்ற ஒன்றுக்கொன்று முரணான வீண் வார்த்தைகள் அல்ல அவை. அவை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்தவர்களுக்கும் தேவையானவையே.

நமக்கு உடம்பு இருக்கும்வரை, உடம்பும் நாமும் ஒன்றே என்ற கருத்தில் நாம் மயங்கியிருக்கும் வரை,நமக்கு ஐம்புலன்கள் உள்ளதுவரை, அவற்றால் வெளியுலகை உணரும்வரை சகுணக் கடவுள் அவசியமே. இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கும் வரை, மகத்தான ஆச்சாரியரான ராமானுஜர் நிரூபித்ததுபோல், இறைவன்,இயற்கை, ஜீவாத்மா போன்ற கருத்துக் களையும் ஏற்றேயாக வேண்டும். முக்கோணத்தின் ஒரு பக்கத்தை ஏற்றால், அதை முழுவதுமாக ஏற்றுக்கொண்டே தீர வேண்டும்; நம்மால் அதைக் தவிர்க்க முடியாது. எனவேபுறவுலகைக் காணும்வரை சகுணக் கடவுளையும் ஜீவாத்மாவையும் மறுக்க முயல்வது சுத்தப் பைத்திக்காரத்தனம்.

ஆனால் ரிஷிகளின் வாழ்வில் சில வேளைகளில், மனம் தன் எல்லைகளைக் கடந்து சென்றது போலாகிறது, மனிதன் இயற்கைக்கு அப்பால் செல்கிறான், அதை அடைய முடியாமல் வார்த்தைகளும் மனமும் எந்த இடத்திலிருந்து திரும்புகின்றனவோ என்று சுருதிகள் சொல்கின்றதே, வார்த்தைக்கும் மனத்திற்கும் எட்டாதது” அந்த இடத்தையும் கடந்து செல்கிறான். அங்கே கண்கள் பார்க்க முடியாது, காதுகள் கேட்க முடியாது, அதை அறிந்தோம் என்றும் சொல்ல முடியாது. அறியவில்லை என்றும் சொல்ல முடியாது , அங்கே மனித ஆன்மா எல்லா எல்லைகளையும் கடக்கிறது. அப்பொழுது, அப்பொழுது மட்டுமே மனித ஆன்மாவில் அத்வைத உணர்வு ஒளிர்கிறது . நானும் பிரபஞ்சம் முழுவதும் ஒன்று, நானும் பிரம்மமும் ஒன்றே. இந்த நிலையை ஞானத்தாலோ தத்துவத்தாலே மட்டும்தான் நாம் அடைய முடியும் என்பதல்ல. அதன் சில அம்சங்களை பக்தியின் வலிமை யாலும் பெற முடியும். பாகவதத்தில் இதற்கு சான்று உள்ளது. கோபியரைவிட்டு கண்ணன் பிரிந்து சென்று விட்டான் அவனுடைய பிரிவுத் துயரால் கோபியர் துடிக்கின்றனர், கண்ணனைப் பற்றிய நினைவு அவர்கள் மனத்தில் அவ்வளவு ஆழமாகப் பதிந்த ,அவர்கள் தங்கள் உடம்பையே மறந்துவிட்டார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களே கிருஷ்ணன் என்று நினைத்து, தங்களையே கிருஷ்ணனாக அலங்கரித்துக் கொண்டு, கிருஷ்ணன் விளையாடுவதைப்போல் விளையாடினார்கள். எனவே ஒன்றாகும் இந்த நிலை பக்தியின் மூலமாகவும் வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

பழைய காலத்தில் பாரசீக சூஃபி கவிஞர் ஒருவர் இருந்தார். அவர் தமது பாடல் ஒன்றில் கூறுகிறார்:

நான்என் காதலியிடம் வந்தேன், கதவு மூடியிருந்தது.

நான் கதவைத் தட்டினேன், உள்ளிருந்து ஒரு குரல் வந்தது-

யார் அங்கே?

நான்தான் என்றேன், கதவு திறக்க வில்லை.

மறுமுறை கதவைத் தட்டினேன். அதே குரல்,யார் அங்கே? என்று கேட்டது.

நான் இன்னார் என்று சொன்னேன். கதவு திறக்கப்படவில்லை

மூன்றாவது முறையும் நான் கதவைத் தட்டினேன்

அதே குரல் கேட்டது: யார் அங்கே?

என் அன்பே, நீயேதான் நான் என்றேன்,

கதவு திறந்தது.

எனவே பல படிகள் இருக்கின்றன. பழைய உரையாசியர்களுக்கு இடையே சச்சரவுகள் இருந்தாலும், நாம் சண்டையிட வேண்டியதில்லை. அந்த உரையாசிரியர்கள் அனைவரும் நம்மால் மதிக் கப்பட வேண்டியவர்கள். அறிவிற்கு எல்லை எதுவும் இல்லை. முற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி எல்லாம் அறிகின்ற தன்மை என்பது யாருக்கும் தனிப்பட்ட சொத்தாக இருக்கவில்லை. அன்று மகான்களும் ரிஷிகளும் இருந்தார்கள் என்றால், இன்றும் பலர் இருந்தாக வேண்டும். அன்று வியாசர்களும் வால்மீகிகளும் சங்கரர்களும் இருந்தார்கள் என்றால், நீங்கள் ஒவ்வொருவரும் ஏன் ஒரு சங்கரராகக் கூடாது ? இது நமது மதத்தின் நினைவில்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியக் கருத்தாகும். பிற எல்லா மத சாஸ்திரங்களுக்கும் தெய்வப் பேருணர்வே பிரமாணமாகக் கூறப்படுகிறது, ஆனால் இந்தப் பேருணர்வு ஏதோ சிலருக்கு மட்டுமே ஏற்படும், உண்மைகள் அவர்களின் மூலம் தான் சாதாரண மக்களுக்கு வந்தன. மற்ற அனைவரும் அதற்கு அடிபணிந்தாக வேண்டும். நாசரேத்தின் ஏசுவிற்கு அவ்வாறு உண்மை உதித்தது, நாம் அனைவரும் அவருக்கு அடிப்பணிய வேண்டும். மந்திரத்தைத் தரிசித்த, சிந்தனைகளை நேரில் கண்ட இந்திய ரிஷிகளிடம் உண்மை மலர்ந்தது. அந்த உண்மைகள் எதிர்காலத்தில் எல்லா ரிஷிகளிடமும் தோன்றும். வாய்ச்சொல் வீரர்களிடமோ, புத்தகப் புழுக்களிடமோ, பண்டிதர்களிடமோ, மொழி வல்லுனர்களிடமோ அந்த உண்மை தோன்றுவதில்லை. சிந்தனைகளை நேரில் காண்கின்ற ரிஷிகளிடம் மட்டுமே அது தோன்றும். அதிகமான பேச்சாலோ மிகவுயர்ந்த அறிவாலோ சாஸ்திரங்களைப் படிப்பதாலோ ஆன்மாவை அடைய முடியாது . பாருங்கள் இதை நம் சாஸ்திரங்களே கூறுகின்றன . உலகத்தில் உள்ள வேறு எந்த மதத்தின் சாஸ்திரத்திலாவது, நமது சாஸ்திரங்கள் சொல்வது போல் இவ்வளவு தைரியமாக அந்த சாஸ்திரங்களையே படிப்பதால் கூட, நீங்கள் ஆன்மாவை அடைய முடியாது என்று கூறப்பட்டுள்ளதா? மனம் திறந்து சொல்லுங்கள்.

சர்ச்சுக்குப் போவதோ, நெற்றியில் சின்னங்களை இட்டுக் கொள்வதோ, விசித்திரமாக உடை அணிந்து கொள்வதோ மதம் ஆகிவிடாது. வானவில்லின் அத்தனை வண்ணங்களையும் நீங்கள் உங்கள் மீது தீட்டிக் கொள்ளலாம்; ஆனால் உங்கள் இதயம் திறக்கவில்லை என்றால், நீங்கள் கடவுளை உணரவில்லை என்றால் எல்லாமே வீண். அக வண்ணம் மட்டும் ஒருவனுக்கு இருக்குமானால் அவனுக்குப் புற வண்ணங்கள் எதுவும் தேவையில்லை. உண்மையான ஆன்மீக அனுபூதி என்பது இதுதான் . மதச் சின்னங்கள் மற்றும் அது போன்ற எல்லாம் நமக்கு உதவுமானால் அந்த அளவிற்கு நல்லது,அந்த அளவிற்கு அதை வரவேற்கலாம். நாம் இதை மறக்க க்கூடாது. ஆனால் அவை வீழ்ச்சி அடையக்கூடியவை. உதவுவதற்குப் பதிலாக நம்மைச் சீரழிக்கவும் செய்யும்.பொதுவாக மனிதன் இந்தப் புறச் சடங்குகளையே மதமாகக் கொள்கிறான். கோயிலுக்குப் போவது ஆன்மீக வாழ்வாகி விடுகிறது, புரோகிதருக்கு ஏதோ கொடுத்துவிட்டால் அதுவும் ஆன்மீக வாழ்வு. இத்தகைய எண்ணங்கள் ஆபத்தானவை, அழிவை விளைப்பவை; அவை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். புறப் புலன்களால் பெறும் அறிவுகூட மதம் ஆகாது என்று நம் சாஸ்திரங்கள் திரும்பத்திரும்பக் கூறுகின்றன.

மாறாக ஒன்றை நாம் உணருமாறு எது செய்கிறதோ, அதுதான் மதம். ஒவ்வொருவருக்குமான மதம் அதுவே. யார் மனத்தைக் கடந்த உண்மையை உணர்கிறாரோ, தன் சொந்த இயல்பிலேயே யார் ஆன்மாவை உணர்கிறாரோ, யார் கடவுளை நேருக்கு நேர் காண்கிறாரோ, எல்லாவற்றிலும் கடவுளை மட்டுமே காண்கிறாரோ அவரே ரிஷி. நீ ஒரு ரிஷியாகாதவரை, உனக்கு ஆன்மீக வாழ்க்கை இல்லை. நீங்கள் ரிஷியான பிறகே உங்களுக்கு ஆன்மீகம் என்பது ஆரம்பமாகிறது. இப்போது செய்வதெல்லாம் அதற்குத் தயார்படுத்துவதற்கான முயற்சிகளே. அதன் பிறகே உங்களிடம் ஆன்மீகம் என்பது தோன்றுகிறது. இப்பொழுது நீங்கள் செய்வதெல்லாம் அறிவுப் பயிற்சியும் உடம்பை வதைக்கின்ற முயற்சிகளுமே.

எனவே முக்தியை விரும்புகின்ற ஒவ்வொருவரும் ரிஷிநிலை வழியாகச் சென்றாக வேண்டும், மந்திரத்தை நேருக்கு நேர் தரிசிக்க வேண்டும், கடவுளைக் காண வேண்டும் என்பதைக் தெளிவாக, ஆணித்தரமாக நமது மதம் கூறியிருக்கிறது. இதுவே முக்தி. நமது சாஸ்திரங்கள் இட்டுள்ள கட்டளை இதுவே. இந்த நிலையை அடைந்துவிட்டால் சாஸ்திரங்களின் கருத்துக்களை நாமாகவே எளிதில் அறிந்துகொள்ள முடியும் ; அவற்றின் பொருளை நாமே புரிந்துகொள்ள முடியும்; நமக்கு எது தேவையோ அதை ஆராய்ந்து, நாமே உண்மையைப் புரிந்துகொள்ள இயலும். இதுதான் செய்யப்பட வேண்டியது.

அதேவேளையில் பழங்கால ரிஷிகள் செய்துள்ள பணிகளுக்காக அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் அளிக்க வேண்டும். அவர்கள், அந்தப் புராதன ரிஷிகள் மகத்தானவர்கள். நாம் அவர்களை விட மகத்தானவர்களாக வேண்டும். அவர்கள் கடந்த காலத்தில் மாபெரும் காரியங்களைச் செய்தார்கள். நாம் அவர்களைவிட மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும். பழங்கால இந்தியாவில் நூற்றுக்கணக்கான ரிஷிகள் இருந்தார்கள், நம்மிடையே லட்சக்கணக்கான ரிஷிகள் வேண்டும்; நிச்சயமாக வரத்தான் போகிறார்கள். இதை நீங்கள் எவ்வளவு விரைவாக நம்புகிறீர்களோ, அந்த அளவிற்கு இந்தியாவிற்கும் நல்லது, உலகத்திற்கும் நல்லது.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களை வீரர்கள் என்று நம்பினால் வீரர்கள் ஆவீர்கள், ரிஷிகள் என்று நம்பினால் நாளைக்கே ரிஷிகளாவீர்கள். உங்களை எதனாலும் தடுக்க முடியாது. ஒன்றுக்கு ஒன்று முரணானவை போலவும் சண்டையிடுபவை போலவும் தோன்றுகின்ற நமது மதப் பிரிவுகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு கோட்பாடு இருக்குமானால், அது, எல்லா பெருமையும் ஆற்றலும் தூய்மையும் ஆன்மாவில் ஏற்கனவே இருக்கிறது என்பதுதான். ராமானுஜர் மட்டுமே இந்த ஆன்மா அவ்வப்போது சுருங்கவும் விரியவும் செய்கிறது என்கிறார். சங்கரரின் கருத்துப்படி, இந்த ஆன்மா மாயைக்கு உட்படுகிறது.

இந்த வேறுபாடுகளைப் பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். ஆன்மாவில் ஆற்றல் இருக்கிறது என்ற உண்மையை எல்லோரும் ஏற்றக்கொள்கிறார்கள்; அது வெளிப்படாதிருக்கலாம், வெளிப்பட்டிருக்கலாம், ஆனால் அது அங்கே இருக்கிறது இதை எந்த அளவு விரைவாக நம்புகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது. எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள்.நீங்கள் பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள். இப்போது நம்மில் பெரும்பாலானோரும் எண்ணிக் கொண்டிருப்பது போல், நீங்கள் அரைப் பைத்தியங்கள் என்று நம்பாதீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியும். எல்லா ஆற்றலும் ஆன்மாவில் இருக்கிறது. எழுந்திருங்கள்! உங்கள் உள்ளிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள்.


மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 5 கொழும்புமுதல்அல்மோராவரைசென்னைசொற்பொழிவு -2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s