துறவு: அதன் லட்சியமும் செயல்முறையும்
நீண்ட சொற்பொழிவுக்கான நேரமல்ல இது. ஆனால் நீங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்ற சிலவற்றை உங்களுக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன். முதலில் நாம் நமது லட்சியத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். பிறகு அதைச் செயல்முறைப்படுத்துவது எப்படி என்பதை அறிய வேண்டும். உங்களுள் துறவிகள் பிறருக்கு நன்மை செய்யவே முயல வேண்டும். ஏனெனில் துறவின் பொருளே அது தான். துறவு பற்றி நீண்ட சொற்பொழிவு நிகழ்த்த நேரமில்லை.அதன் பொருளைச் சுருக்கமாகக் கூறுகிறேன். துறவு என்பது மரணத்தை நேசித்தல் சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். துறவி மரணத்தை நேசிக்க வேண்டும். அப்படியானால் நாம் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அல்லவே அல்ல, தற்கொலை செய்து கொள்பவர்கள் மரணத்தை நேசிப்பவர்கள் அல்ல, ஏனெனில் தற்கொலைக்கு முயல்பவர்கள், ஒரு முறை தப்பி விட்டால் இரண்டாம் முறை அந்த முயற்சியில் ஈடுபடமாட்டார்கள். இது நாம் கண்கூடாகக் காணும் ஒன்று.
மரணத்தை நேசிப்பது என்றால் என்ன? நாம் இறந்தே தீர வேண்டும். அது உறுதி, அப்படியானால் ஒரு நல்ல லட்சியத்திற்காக இறப்போம். நமது செயல்கள் எல்லாம், உண்பது, உடுப்பது என்று நாம் செய்கின்ற அனைத்தும், நமது ஆன்ம தியாகத்திற்குநம்மை இட்டுச்செல்வதாக இருக்கட்டும். சாப்பிட்டு உடலை வளர்க்கிறோம் பிறரதுநன்மைக்காகத் தியாகம் செய்வதற்கு அது இல்லையென்றால் அதைப்போற்றி வளர்ப்பதில் என்ன பயன்?புத்தகங்களைப் படிப்பதன் மூலம் மனத்தைப் பண்படுத்துகிறோம். ஆனால் அதையும் உலகின் சேவைக்காகப் பயன்படுத்தாவிடில் பயன் ஒன்றுமில்லை.சுய நலத்தை வளர்ப்பதை விட உங்கள் லட்சக்கணக்கான சகோதரர்களுக்குச்சேலை செய்வதே செய்யத் தக்கது. உபநிடதத்தின் அந்த அற்புதக் குரல் உங்கள் மனத்தில் எழவில்லையா?
எங்கும் கைகள், எங்கும் கால்கள், எங்கும் கண்கள், தலைகள் வாய்கள், எங்கும் காதுகள் என்று பிரபஞ்சம் முழுவதும் அது நிறைந்திருக்கிறது.
இவ்வாறு நீ படிப்படியாக இறக்கவேண்டும். இத்தகைய மரணத்தில் சொர்க்கம் உள்ளது. எல்லா நன்மைகளும் நிறைந்துள்ளது. இதற்கு எதிர் மாறான மரணம் அனைத்து அமங்கலங்களும் தீமைகளும் நிறைந்தது.
இனி லட்சியங்களைச் செயல்முறை படுத்துவதற்கான முறைகளைப் பார்ப்போம். முதலில் நாம் அறிய வேண்டியது, சாதிக்க முடியாத லட்சியம் எதையும் நாம் எற்றுக்கொள்ளக் கூடாது என்பது தான். சாதிக்க முடியாத அளவிற்குமிக உயர்ந்த லட்சியங்கள் நாட்டைப் பலவீனப் படுத்துகின்றன. வீழ்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. பௌத்த மற்றும் சமண சீர்திருத்தங்களுக்குப் பின்னர் இது தான் நிகழ்ந்தது. அதேவேளையில் அளவுக்கு மீறிய செயல்முறைத் தன்மையும் தவறு. சிறிதளவு கூட கற்கனைத்திறன் உங்களிடம் இல்லையென்றால், உங்களை வழிநடத்த ஒரு லட்சியம் இல்லையென்றால் நீங்கள் வெறும் மிருகங்களே. எனவே நமது லட்சியத்தைத் தாழ்த்தவும் கூடாது.அதே வேளையில் அதன் செயல்முறைத் திறனை மறக்கவும் கூடாது. இரண்டு எல்லைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். நமது நாட்டின் பண்டைய கருத்து ஒரு குகையில்அமர்ந்து, தியானம் செய்து சாகவேண்டும் என்பது . பிறரை முந்திக்கொண்டு தான் மட்டும் முக்தி பெற நினைப்பது தவறு. தனது சகோதரர்களின் முக்திக்காக முயலாமல் ஒருவன் முக்தி பெற முடியாது என்பதை இன்றோ நாளையோ ஒருவன் அறிந்தே தீர வேண்டும். மிக மிக உயர்ந்த லட்சியத்துடன் மிக மிகச் சிறந்த செயல்முறைத் திறனை உங்கள் வாழ்வில் இணைப்பதற்கு முயலவேண்டும். இப்போது ஆழ்ந்த தியானத்தில் மூழ்கத் தயாராக இருக்க வேண்டும். அடுத்த கணமே இதோ (மடத்தின் தோட்டப் பகுதியைச் சுவாமிஜி சுட்டிக் காட்டுகிறார்) இந்த நிலத்தைச் சாகுபடி செய்யவும் தயாராக இருக்க வேண்டும். இப்போது சாஸ்திரங்களில் உள்ள மிக நுட்பமான விஷயங்களைத்தெளிவுபடுத்தத் தயாராக இருக்கவேண்டும். அடுத்த கணமே, இந்த நிலத்தில் விளையும் பொருட்களைச் சந்தைக்குக்கொண்டு போய் விற்று வரவேண்டும். தாழ்வான எத்தகைய வேலைகளையும் இங்கு மட்டுமின்றி எங்குமே செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
இந்த இயக்கத்தின் லட்சியம் மனிதர்களை உருவாக்குவதே என்பது தான் நீங்கள் அடுத்து நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். நமது ரிஷிகள் கூறியதைப் படித்தால் மட்டும் போதாது. அந்த ரிஷிகள் மறைந்து விட்டார்கள். அவர்களது கருத்துக்களும் அவர்களுடன் போய்விட்டன. நீங்களே ரிஷிகளாக வேண்டும். இது வரை பிறந்துள்ள மாமனிதர்களைப்போல், ஏன், அவதார புருஷர்களைப்போல் நீங்களும் மனிதர்கள் தாம். வெறும் புத்தகப் படிப்பு என்ன செய்ய முடியும்? தியானம் தான் எதைச் சாதித்து விடும்? மந்திரங்களும் தந்திரங்களும் என்ன செய்யும்? நீங்கள் உங்கள் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும். மனிதனை உருவாக்குதல் என்ற முறையை, இந்தப் புதிய முறையை நீங்கள்கைக்கொள்ள வேண்டும். விலிமையே உருக்கொண்டது போல் வலிமையும் அதே வேளையில் ஒரு பெண்ணின் இதயமும் கொண்டவனே உண்மை மனிதன். உங்களைச் சுற்றி வாழும் உயிர்களுக்காக உருகுங்கள். அதே வேளையில் உறுதியும், வளைந்து கொடுக்காத தன்மையும் உடையவராகவும் இருங்கள். அத்துடன் பணிவும் வேண்டும். இது முரண்பாடுபோல் தோன்றலாம். ஆனால் முரண்பட்டவை போல் தான்றுகின்ற இந்தக் குணங்களை உடையவராக நீங்கள் இருக்க வேண்டும்.
உங்களை விடப் பெரியவர் உங்களிடம், நதியில் குதித்து முதலையைப் பிடித்து வரும்படிச் சொன்னாலும், முதலில் அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும். பிறகு வேண்டுமானால் நீங்கள் வாதாடலாம். கட்டளை தவறாக இருந்தாலும் முதலில் கீழ்ப்படியுங்கள். பிறகு எதிர்த்து விவாதியுங்கள். கருத்து வேற்றுமை ஏற்பட்டவுடனேயே ஒரு தனிப்பிரிவை ஆரம்பிப்பது நமது மதப் பிரிவுகளின், குறிப்பாக வங்காளத்தில், ஒரு சாபக்கேடாக உள்ளது. சிறிது காத்திருக்கப் பொறுமையில்லை. உங்கள் இயக்கத்திடம் உங்களுக்கு ஆழ்ந்த மதிப்பு இருக்கவேண்டும். கீழ்ப்படியாமைக்கு இங்கே இடம் கிடையாது, கருணை காட்டாமல் தனை அதனை நசுக்கி எறியுங்கள். கீழ்ப்படியாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவர்களை வெளியேற்றி விடுங்கள். ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு இங்கே இடம் இல்லை. நீங்கள் காற்றைப்போல் சுதந்திரத்துடன் வாழ வேண்டும்.ஆனால் ஒரு செடியைப்போல், ஒரு நாயைப்போல் கீழ்படிபவர்களாகவும் இருக்க வேண்டும்.

சுவாமிஜி இரண்டாம் முறையாக 1899- ஜுன் 20-ஆம் நாள் மேலைநாட்டிற்குப் புறப்பட்டார்.அதற்குமுந்தின நாள் மாலையில் பேலூர் மடத்தில் இளந்துறவிகளும் சீடர்களும் அவரை உபசரித்து வழியனுப்பினார்கள். அப்போது சுவாமிஜி அவர்களிடம் சிறியதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் சுருக்கம் மடத்து நாட் குறிப்பில் உள்ளது. கீழே வருவது அதன் மொழிபெயர்ப்பு.
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 5 கொழும்புமுதல்அல்மோராவரை வங்காளம் சொற்பொழிவு –2 பேலூர் மடத்தில்…துறவு: லட்சியமும் செயல்முறையும்.